திங்கள், 3 அக்டோபர், 2016

9. ஆடியும் அம்மையும் / Aadiyum Ammaiyum

சிவ சிவ
திருமுறை

ஆடியும் அம்மையும்

ஆடி அடிகோலாதே, கூனி குடி போகாதேஎன்ற வழக்கு தமிழர்களிடையே பண்டை தொட்டு இருந்து வரும் வழக்காகும். ஆடித் திங்களில் திருமணங்கள் நிகழ்த்தப் பெருவதில்லை என்பது தமிழர் தம் வழக்கமாகும். இதற்குக் கரணியம் ஆடித் திங்கள் வழிபாட்டிற்கு உரிய திங்கள் என்பதே ஆகும். தை அல்லது சுறவம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் முதல் திங்கள் ஆகும். ஆடித் திங்கள் ஆறாவது திங்களாகும். கதிரவனின் வடசெலவு அல்லது உத்தர அயணம் என்பது தைத் திங்களில் தொடங்கி ஆணித் திங்கள் வரை நிகழ்ந்து, ஆடித் திங்கள் முதல் மார்கழி வரை தெற்குச் செலவு அல்லது தக்கிண அயணமாக இருப்பதனால், ஆடித் திங்களை ஓர் ஆண்டின் அரைப் பகுதியின் முடிவாக எண்ணினர். ஓர் ஆண்டின் முதல் அரை பகுதியைச் சிவனாகவும் அடுத்த அரைப் பகுதியை அம்மை அல்லது சத்தியாக எண்ணினர். இதனாலேயே ஆடித் திங்கள் அம்மைக்கு உரிய திங்களாகக் குறிக்கப் பெறுகின்றது. அம்மை சிவபெருமானின் திருவருளே என்பது சித்தாந்த சைவக் கொள்கை. அதனால் அம்மைக்கு இயற்றப்படுகின்ற வழிபாடுகளும் தமிழ்ச் சைவர்களைப் பொருத்த மட்டில் சிவனுக்குச் செய்யும் வழிபாடே ஆகும்.

            ஆடித் திங்களில் இறைவனின் திருவருள் உயிர்களுக்குச் செய்யும் உதவிகளை எண்ணி விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர் நம் முன்னோர். அவ்வடிப்படையில் ஆடித் திங்களில், ஆடிப் பூரம், ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி சுவாதி என்று பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு விழாக்கள் நிறைந்த இவ்வாடித் திங்களில் இல்ல நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டால், இவ்விழாக்க்களைச் செவ்வனே செய்யவும் இவ்விழாக்களில் கலந்து கொள்ளவும் இயலாது என்றே அவற்றைத் தவிர்த்தனர். ஆடித் திங்களில் திருமணங்களை வைத்துக் கொண்டால், திருமணப் பணிகள் இறைவழிபாட்டிற்குத் தடையை ஏற்படுத்தும் என்று எண்ணினர். வீடு கட்டத் துவங்கினால் திருவிழாக்களில் கருத்தைச் செலுத்த இயலாது என்று எண்ணினர். இதனாலேயே, “ஆடி அடிகோலாதே என்றும் கூனி குடி போகாதேஎன்றும் வழக்கு வந்தது என்பர். தவிர, தமிழகத்தில் ஆடித் திங்கள் பலத்த காற்று வீசுகின்ற பருவத்தை உடைய திங்கள் என்பர். இக்காலத்தில் வீடு கட்டும் பணிகள் கடினமானதும் பாதுகாப்பு அற்றதும் என்பதனால் அவ்வாறு கூறினர் என்பர்.

            ஆடித் திங்களில் திருமணம் செய்து கொண்டால் திருவிழாக்களில் கலந்து கொள்ள இயலாது என்பது ஒருபுறம் இருக்க, திருமணம் செய்து கொண்டவர்கள் ஆடித் திங்களில் கூடுவதனைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். ஆடித் திங்களில் இணையர்கள் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பது தெளிவு. தமிழ் நாட்டுத் தட்ப வெப்பப் பருவப்படி சித்திரைத் திங்கள் வெப்பம் மிகுந்த திங்கள் ஆகும். முன்பு காலத்தில் வெம்மையின் மிகுதியினால் ஏற்படும் அம்மை நோய் பெரும்பாலும் சித்திரைத் திங்களிலேயே ஏற்பட்டுள்ளது. தாய், சேய் ஆகிய இருவரின் நலத்தையும் கருத்தில் கொண்டு இதனைத் தவிர்க்கவே ஆடித் திங்களில் புதிதாய்த் திருமணம் முடிந்த மனைவியை அவளின் தாயார் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் வழக்கமும் தமிழர் வழக்கத்தில் இருந்து வந்து உள்ளது. தமிழ் நாட்டின் பருவ நிலையைத் தழுவிய சில வழக்குகள் தமிழர் வாழ்வியலில் இடம் பெற்று இருந்தது இன்றளவும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றது. மலேசியத் திருநாட்டிலும் ஆடித் திங்களில் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதும் ஆடித் திங்களில் மனைவியைத் தாயார் வீட்டிற்கு அனுப்பி வைப்பதும் ஆடித் திங்களில் வீடு வாங்குதலோ அல்லது புதுமனைப் புகுவிழா செய்வதோ இல்லை என்பதும் தமிழ் நாட்டு வழக்கத்தினைப் பின்பற்றியே செய்யப்படுகின்றது.

            உழவுத் தொழிலையே பெருவாறியாகச் செய்த பண்டைத் தமிழர், மழையை நம்பி வாழ்ந்தனர். மழையை மாரி என்றனர். தங்களின் உழவு தொழிலுக்கும் அன்றாட வாழ்விற்கும் உயிர் நாடியாகிய விளங்கிய மழை அல்லது மாரியை இறைவனின் திருவருளாகவே எண்ணினர். மழையை இறைவனின் திருவருளான அம்மையாக எண்ணி, அம்மழையை மாரியம்மன் என்றனர். முத்து முத்தாக மழை பெய்தததினால் முத்து மாரியம்மன் என்றனர். கரிய மேகம் திரண்டு மழை பெய்வதனால் கருமாரியம்மன் என்றனர். அம்மாரியம்மனுக்குத் திருவடிவங்கள் அமைத்துக் கோயில்களும் கட்டினர். ஆண்டிற்கு ஒரு முறை பொங்கல் இட்டு விழா நடத்தினர். இவ்விழாவினை ஆடித் திங்களிலேயே செய்தனர். இதனை ஆடித் திங்களிலே வருகின்ற பூர விண்மீன் நாளில் செய்திருக்கின்றனர். ஆடித் திங்களில் பூர விண்மீன் நாளில் இறைவனின் திருவருள், அம்மையாக, மாரியம்மனாக வந்து உயிர்களுக்கு அருள் செய்வதாக எண்ணினர். கிராமத் தேவதையாகத் தமிழர் வைத்து வணங்கிய மாரியம்மன் பரம்பொருள் வழிபாடான சிவவழிபாடோடு இணைக்கப் பட்டபோது ஆடிபூரம் எனும் பெருவிழாவாக இறைவனின் திருவருள் அம்மையாகத் தோன்றிய நாளாகக் குறிக்கப் பெறுகின்றது. வயல்களிலும் கிராமங்களிலும் மாரியம்மன் திருவிழாவாகக் கொண்டாடப்பட்ட இவ்விழாவே மலேசியத் திருநாட்டிற்கு நம் முன்னோர் வந்து தோட்டப் புறங்களில் தங்கி இருந்தபோது அவ்விழாவினைத் தோட்டத்து ஆண்டுத் திருவிழாவாகக் கொண்டாடினர்.

            சித்திரைத் திங்களில் மழை குறைந்து வெப்பம் மிகுவதை அம்மையின் சீற்றம் என்று எண்ணிய உழவு சார்ந்த மக்கள் அம்மை நோய் ஏற்படுவது திருவருள் அம்மையின் சீற்றத்தினால் என்று எண்ணினர். அதனால் அம்மை நோய்க்கு மருந்தாகும் வேப்பிலையை மாரியம்மனின் திருவிழாக்களில் இணைத்துக் கொண்டனர். மாரியம்மனின் திருவடியில் வைத்த வேப்பிலை அம்மை நோயை விரைவில் போக்கிவிடும் என்று எண்ணினர். அதனால் வேப்பிலை மரத்தை மாரியம்மனுக்கு நிகராக வைத்துப் பாதுகாத்தனர். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாதவர் பின்பு வேப்பிலை மரத்திற்கு இரவிக்கை அணிவித்துச் சீலை உடுத்தி, அதற்கு முன்பாகச் சூலத்தை நட்டு வைத்து, வேப்பிலை மரத்தை மாரியம்மன் என்றே ஆக்கி விட்டனர். இதுவே பின்பு நம்மவர் பலரை வேப்பிலை மரத்தை மாரியம்மனாக வழிபடும் நிலைக்கு ஆளாக்கி விட்டிருக்கின்றது. வெப்பத்தினால் ஏற்படும் அம்மை நோயைப் போக்குவதற்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் வேப்பிலையோடு களி, கூழ் போன்ற குளிச்சியையும் உட்டத்தையும் கொடுக்கும் உணவு வகைகளையும் பயன்படுத்தும் வழக்கம் நம்மவர்களிடையே இருந்துள்ளது. இதனாலேயே ஆடிப் பூர மாரியம்மன் திருவிழாக்களில் கூழ் ஊற்றும் வழக்கமும் தமிழர்களிடையே நிலவி வருகின்றது.

            ஆடித் திங்களில் வருகின்ற ஆடிப் பெருக்கு எனும் விழாவும் தமிழ் நாட்டு வழக்கிலேயே அமைவதுதான். மழையை மாரியம்மனாக எண்ணி வழிபட்ட நம் முன்னோர், அம்மழை நீர் திரண்டு பாய்கின்ற காவிரி ஆற்றினையும் அம்மையாக அவளின் திருவருளாக எண்ணினர். “முன்னி அவள் சுரக்கும் இன்னருளே மழை ஏலோர் எம்பாவாய்என்று மணிவாசகரும் மழையைச் சிவபெருமானின் திருவருளாக, திருவருள் அம்மையாகத் திருவெம்பாவையில் குறிப்பிடுவார். அவ்வடிப்படையில் ஆடித் திங்களில் காவிரி ஆறு பெருக்கெடுத்து வருகின்ற நாளை ஆடிப்பெருக்கு என்று விழா எடுத்துக் கொண்டாடினர். காவிரியின் நீர் பெருக்கு எடுத்து வருவது அம்மையின் திருவருள் பெருகி அவர்களுக்கு அருள் வழங்க வருவதாய் எண்ணினர். அதுபோது குடும்பத்தோடு காவிரி ஆற்றின் படுகைக்குச் சென்றனர்.

            காவிரி தாய்க்குப் படைப்பதற்காகப் பல்வேறு உணவு வகைகளைச் சமைத்து எடுத்துச் சென்று காவிரி அன்னைக்குப் படைத்து தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். புதிதாகத் திருமணம் புரிந்து கொண்ட இணையரை அம்மைக்கு அறிமுகம் செய்வதாய் எண்ணி அவர்களைக் காவிரிப் படுகையில் வழிபாடு இயற்றச் செய்தனர். திருமணத்தின்போது அணிந்த மாலைகளைச் சேவித்து வைத்திருந்து அன்றைய தினம் அவற்றைக் காவிரி ஆற்றில் விட்டனர். இதன்வழி புதிதாய்த் திருமணம் செய்த இணையரின் திருமணத்தை அருள் அம்மை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு எல்லா நலன்களையும் வழங்க வேண்டும் என்று வழிபட்டனர். தமிழ் நாட்டில் இருந்து மலேசியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் இவ்வடிப்படையில் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப இவ்வழிபாட்டை மேற்கொண்டனர். காவிரி ஆறு இல்லாத சூழலில் அந்தந்த இடத்தில் உள்ள ஆறுகள் அல்லது எல்லா ஆறுகளும் கலக்கும் இடமாகிய கடற்கரைகளில் இவ்வழிபாடுகளைச் செய்தனர்.

            திருவருள் அம்மையைப் போற்றுகின்ற இந்த ஆடித் திங்கள் விழாக்கள் இயற்கையை ஒட்டியதாகவும் சித்தாந்த சைவக் கொள்கையை ஒட்டியதாகவும் இருக்க, திருவருள் அம்மையின் உயர்வினையும் சைவ சமயத்தின் சீர்மையையும் சீர்குழைக்கும்படியான கருத்துகளும் நிலவவே செய்கின்றன. ஆடிப் பூரம் என்பது திருவருள் அம்மை பருவம் எய்திய நாள்(வயதிற்கு வந்த நாள்) என்பதும் ஆடிப் பெருக்கு என்பது காவிரி ஆறு மசக்கை அல்லது கருவுற்று இருக்கும் காலம் என்பதும் சைவத்திற்கு முரணானவை என்பதனைத் தெளிதல் வேண்டும். உருவகமாகவும் தத்துவமாகவும் சொல்லப்படும் இறைவனின் திருவருளான அம்மை, பருவம் எய்துவது என்பதும் கருவுறுவது என்பதும் எவ்வகையில் பொருந்தும்? பெண்ணாக உருவகம் செய்யப்பட்ட திருவருள் அம்மை நம்மைப் போன்ற மாந்த நிலையைக் கடந்தவள். சாதாரண பெண்களின் இயல்புகளைத் திருவருள் அம்மைக்கு ஏற்றி அவளின் உயர்வினைக் குறைக்காது, உண்மைச் சமயத்தை அறிந்து அவளை வழிபடுவோம். அம்மையைத் தனிக்கடவுளாகப் போற்றுவது தமிழ்ச் சைவர் மரபு அல்ல என்பதனைத் திருமுறைகள் பறைசாற்றி நிற்கின்றன. உமை அம்மையைச் சிவனின் ஒருபாகமாக வைத்து வழிபடுவதே சிவனடியார்களின் கொள்கையாக இருந்துள்ளது. சிவபெருமானைக் குறிப்பிடுகையில் உமையொரு பாகன் என்றே அருளாளர்கள் போற்றி மகிழ்கின்றனர். சிவலிங்கத்திலே ஒரு பகுதி அம்மையாகவும் நடவரசர் வடிவிலே இடப்பகுதி அம்மையாகவும் வடித்து வழிபடுவதே தமிழ்ச் சைவர்களின் கொள்கையாகும். அம்மையைச் சிவத்திடம் இருந்து பிரிக்காது, அம்மையைச் சிவபெருமானின் திருவருளாக எண்ணி வழுத்தி இறவா வாழ்வு பெறவேண்டும் என்பதே சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களின் துணிபு. உண்மைச் சமயத்தைத் தெளிந்து பின்பற்றுவோம், வளம் பெறுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக