புதன், 5 அக்டோபர், 2016

4. நவராத்திரி / Navaraathiri

நவராத்திரி

            செந்தமிழ்ச்சைவர்கள் உண்மை, அறிவு, இன்பமாய் விளங்கும் கடவுளை உருவம், அருவுருவம், அருவம் என்ற மூன்று நிலைகளில் வழிபடுகின்றனர். விநாயகன், அம்பாள், முருகன், சிவன் என்று உருவ வடிவிலும், சிவலிங்கம், வேல், தீ போன்ற அருவுருவ நிலையிலும் அறிவுக்கறிவாய் உண்மை அடியார்களின் அறிவில் அருவமாயும் இறைவனை நம்மவர் வழிபடுகின்றனர். இப்படி உருவ வடிவிலும் அருவுருவ வடிவிலும் அருவ வடிவிலும் சிவம் என்கின்ற பரம் பொருள் தன் திருவருளையே மேனியாகக் கொண்டு வருகிறது என்று சித்தாந்த சைவநூல்கள் கூறும். இறைவன் திருவருளே சக்தியாக அல்லது அம்பாளாக வருகிறது. இதைத் தான் சித்தாந்த சாத்திர நூலான சிவஞான சித்தியார் "அருளது சக்தியாகும் அரன் தனக்கு" என்று குறிப்பிடும்.

            தமிழர் பண்பாட்டில் பெண்களுக்கு உயரிய இடம் கொடுத்திருக்கின்றார்கள். நதிகளுக்கெல்லாம் காவரி, கங்கை, யமுனை, சரசுவதி என்று பெண்களின் பெயரைச் சூட்டினார்கள். பிறந்த மண்ணிற்குத் தாய்நாடு என்று பெயரிட்டனர். பிறந்தவுடன் பேசும் மொழிக்குத் தாய்மொழி என்று பெண்ணையொட்டியே பெயரிட்டனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல இறைவன் திருவருளைத் தாயாகப் பெண்ணாக, அம்பாளாக வடிவம் கொடுத்து வழிபட்டனர். எனவேதான் குழந்தையானாலும் சரி, சிறுமியானாலும் சரி, பருவப் பெண்ணானாலும் சரி, மனைவியானாலும் சரி, தாயானாலும் சரி, வயதான மூதாட்டியானாலும் சரி, எவ்வயது பெண்ணாக இருந்தாலும் அவர்களைத் தமிழர்கள் "அம்மா" என்றே அழைத்தார்கள்.

            இறைவன் திருவருள் அம்பாளாகச் சக்தியாக ஒன்பது நிலைகளில் நவசக்திகளாக இறங்கி வருவதை உணர்த்துவதே நவராத்திரி. பரம்பொருளாயுள்ள சிவம் உயிர்களுக்கு அருள்புரிவதற்காக ஒன்பது நிலைகளில் இறங்கி வருவதைச்  சித்தாந்த சைவம் நவந்தரும் பேதம் என்று குறிப்பிடும். இப்படிச் சிவம் இறங்கி வருகின்றபோது சிவத்தின் பெயரும் அச்சிவத்தின் திருவருளாய்ச் சக்தியாய் விளங்கும் அம்பாளின் பெயரும் வேறுபடுகிறது. அதாவது இறைவன் பரசிவமாய் இருக்கையில் அவன் சக்தி பராசக்தியாகவும், இறைவன் பரநாதாமாய் இதுக்கையில் அவன் சக்தி பரவிந்து எனவும், இறைவன் சதாசிவமாய் இருக்கையில் அவன் சக்தி மனோன்மணி எனவும், இறைவன் மகேசுவரனாய் இருக்கையில் அவன் சக்தி மகேசுவரி எனவும், இறைவன் உருத்திரனாய் இருக்கையில் அவன் சக்தி உமை அல்லது துர்க்கை எனவும், இறைவன் திருமாலாய் இருக்கையில் அவன் சக்தி திருமகள் அல்லது இலட்சுமி என்றும், இறைவன் பிரமனாய்  இருக்கையில் அவன் சக்தி கலைமகள் அல்லது சரசுவதி என்றும் ஒன்பது நிலைகளில் விளங்கி நின்று அருளுகிறது.

            இறைவனின் திருவருள் ஒன்பது சக்திகளாக வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில் தோன்றி அருளினாலும் அவை அனைத்தும் ஒன்றே என்பதைச்,

" சக்தியாய் விந்து சக்தியாய்ம்னோன்மணி தானாகி
ஏத்துறு மகேசையாகி உமை திரு வாணியாகி
வைத்துறும் சிவாதிக்கு இங்ஙன் வரும் சக்தி ஒருத்தியாகும்
எத்திறம் நின்றானீசன் அத்திறம் அவளும் நிற்பள்"

என்று சிவஞான சித்தியார் குறிப்பிடும். இதன்வழி இறைவன் ஒருவன் என்றும் அவன் திருவருளும் ஒன்றே என்றும் புலப்படும். அது எப்போதும் சிவத்தினின்று வேறுபடாது என்று நன்குப் புலப்படும். மேலும் பரம்பொருளான சிவத்தை வழிபடடால் மேற்கண்ட  அனைத்து தேவியர்களின் திருவருளும்  கிட்டும் என்பதை,

"சினமலி கரியுரி செய்த சிவன்
உறைதரு திருமிழலையை மிகு
தனமனர் சிரபுர நகர் இறை
தமிழ் விரகனது உரை ஒருபதும்
மனமகிழ்வொடுபயில் பவர், எழில்
மலர்மகள், கலைமகள், சயமகள்,
இனமலி புகழ்மகள் இசைதர
இருநில நிடைஇனிது அமர்வரே"

என்று தமது திருவீழிமிழலைப் பதிகத்தில் தமிழ்ஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். இப்படித் தாயாக இறங்கி வந்து அருளும் இறைவனின் திருவருளை நினைப்பித்துக் கொள்வதே நவராத்திரி விழாவாகும். மேலே கூறப்பட்ட ஒன்பது சக்திகளில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த மலைமகள் (துர்க்கை), அலைமகள் (இலட்சுமி), கலைமகள் (சரசுவதி) ஆகியோருக்கே விழா எடுக்கின்றோம். இறைவன் திருவருள் உயிர்களுக்கு ஆன்மவீரம், அருட்செல்வம், ஆன்ம அறிவு என்பனவற்றை அவன் பெருங்கருணையால் வழங்கி நம் அறியாமையை வென்று அவன் திருவடிக்கு ஆளக்கிக் கொண்டிருக்கிறான் என்பதனை உணர்த்துவதே நவராத்திரி விழா.

            எனவேதான், நவராத்திரி விழாவின்போது அம்பிகையை மூன்று நாட்களுக்குத் மலைமகளாகவும், மூன்று நாட்களுக்குக் திருமகளாகவும்மூன்று நாட்களுக்குக் கலைமகளாகவும் வடிவம் அமைத்து வழிபடுகின்றோம். அவள் அருளட்சியின் எல்லா உலகங்களும் உயிர்களும் இயங்குகின்றன என்பதை விழாக்காலங்களில் கொலுவைத்து உணர்த்துகின்றோம். மூன்று படிகள் கொண்ட கொலுவில் மூவுலகையும் ஆள்பவளாகவும், ஐந்து படிகள் கொண்ட கொலுவில் ஐம்பூதங்களையும் வென்று அருள்பவளாகவும், ஏழு படிகளி கொண்ட கொலுவில் ஏழு வகைப் பிறவி உயிர்களையும் ஆளுகிறாள் எனவும் ஒன்பது கொலுவில் ஒன்பது துளைகளை உடைய இவ்வுடம்பையைம் உயிரையும் அவளே ஆளூகிறாள் என்பதையும் உணர்ந்து கொள்கிறோம்.

     அவன் கொலுவீற்றிருக்கும் கொலுபீடத்தின் முன்பு முளைப்பயிர்களை (நவதாணியம்) விதைத்து வளரவிடுவதும் அவன் திருவருளால்தான் பயிர்களும்  தாவரங்களும் விளைகின்றன என்பதை உணர்த்துவதற்காகத்தான். கொலுவில் வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு உயிரினங்களின் பொம்மைகளும் அவரின் அருளாட்சியிலேயே உயிர்களின் அறியாமை நீக்கப்படிகின்றன என்று உணர்த்தப்படுவதாகும். கொலுவின் ஆக மேற்படியில் அவனை அமர்த்தியிருப்பது உயிர்களின் அறியாமையை வென்று அரசரை போன்று  கொலு வீற்றிருகின்றார் என்று உணர்த்துவதே ஆகும். அவர் நம் அறியாமையை வெல்வதையே மகிஷி என்ற அசுரனை வெல்வதைப் போன்று புராணத்தில்  தத்துவமாய்க் கூறி வெற்றிப் பெற்ற பத்தாவது நாளாக விஜயதசமி என்றும் அம்புபோடும் நாளாகவும் கொண்டாடுகின்றோம்.

நவராத்திரி உணர்த்தும்  உண்மை

துர்கைவீரம்

     நவராத்திரி காலங்களில் முதல் மூன்று நாட்களுக்கு அம்மனை துர்கையாக அல்லது மலைமகளாக வழிபட்டு ஆன்மவீரத்தை வேண்டுகின்றோம். ஆன்ம வீரம் என்பது எவ்வேளையிலும் தனக்கு வருகின்ற துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும் பிறருக்கு துன்பம் செய்யாது தன்னைத் தற்காத்துக் கொள்வதே ஆகும். எச்சூழலிலும் தான் கொண்ட வாழ்வியல் நெறியிலிருந்து பிரளாது கொண்ட கொள்கைக்காக உயிரையும் விட சித்தாமாய் இருப்பவர்களே உண்மையான ஆன்ம வீரர்கள். இப்படி பட்டவர்களே நம் சித்தாந்த சைவம் காட்டும் அறுபத்து மூன்று  நாயன்மார்கள். இல்வாழ்வில் வாழ்ந்த நம் நாயன்மார்கள் தம் மனைவி, மக்கள், சுற்றத்தார் ஏழை எளியவர்கள், அறிமுகமில்லாத அடியவர்கள் அனைவருக்கும் இனிமையாய் எத்துன்பமும் மனத்தாலும், வாக்காலும் , காயத்தாலும் செய்யாது அவற்றை வென்றனர் இதனையே நவராத்திரியின் மூன்று நாட்களுக்கு நாம் மலைமகளிடம் வேண்ட வேண்டும். இவ்வான்ம வீரத்தை கெடுக்கும் தீக்குணங்களை வெல்வதே அன்றைய தினங்களில் நாம் சிந்திக்க வேண்டியது.

திருமகள்- செல்வம்

       அம்மையைத் திருமகளாக வழிபடும் அடுத்து மூன்று நாட்களுக்கு அத்தாயிடம் பொருட்செல்வத்தையும் அருட் செல்வத்தையும் வேண்ட வேண்டும். வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவது போல இவ்வுலக வாழ்விற்கும் பொருள் செல்வமும் அவ்வுலக வாழ்விற்கு அருட்செல்வமும் இன்றியமையாததாக உள்ளது. எனவே திருமகள் விழாவில் நல்ல தொழில்  முன்னேற்றமும் நல்ல முறையில் பணம் ஈட்டலும் , மனைவி மக்களை வைத்துக்  காப்பாற்றலும் இந்த வாழ்வும் வசதியும் சிக்கனமான வாழ்வும் பிறருக்கு உதவக் கூடிய மனப்பாங்கும் வர வேண்டும் என்று அம்பாளை அல்லது திருமகளை வேண்ட வேண்டும். மேலும் பொருள் செல்வத்தை குறித்து நின்று விடாது அருள் செல்வம் தேடும் ஆர்வமும் வேண்டும் என்று அம்பாளை வேண்ட வேண்டும். மெய்ப்பொருள் நாயனாரைப் போன்று  தமக்குக் கிட்டும் செல்வத்தைக் கொண்டு நற்காரியங்கள் புரிந்து, வீன் விரயமின்றி  அருட்புகழ் தேடுவதை திருமகளிடம் வேண்ட வேண்டும். அறச்சாலைகள் அமைத்தல் சமயப் பணிகளுக்குக் கொடுத்தல் நம் மொழி பண்பாட்டினைக் இயக்கச் செலவிடுதல், ஆதரவற்றவருக்கு உதவுதல் போன்ற அருட்குணத்தைக் கொடு என்று திருமகளிடம் வேண்டுதல் வேண்டும்.

கலைமகள்கல்வி

            நவராத்திரியின் இறுதி மூன்று நாட்களுக்கு அம்மையை கலைமகளாக வழிபட்டு ஆன்ம அறிவை வேண்டுகின்றோம். ஔவை பிராட்டி குறிப்பிட்டது போல பிச்சை ஏற்கும் நிலை வந்தாலும் கற்பதை விடக்கூடாது என்று அம்மையை  வேண்ட வேண்டும்.தான் கல்வி கற்றிருப்பது மட்டுமல்லாமல் தன் மனைவி தன்  பிள்ளைகளைக் கல்வியில் சிறந்து விளங்கச் செய்வேன் என்று நாம் உறுதிகொள்ள வேண்டும். கல்வியே நம்மை உயர்த்தும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ள வேண்டும். தத்தம் பிள்ளைகளைக் கல்வியில் உயர்த்த எவ்வாரேனும் பாடுபடுவேன் என்று உறுதிகொள்ள வேண்டும். தவிர உலகக் கல்வி மட்டுமல்லாது இதரக் கல்வி கற்பதற்கு ஆர்வத்தையும்  மனத்திடத்தையும் கொடு என்று அம்மையை வேண்டிக் கொள்ள வேண்டும். சமய வகுப்புக்கள், திருமமுறை ஓதுதல், சமய சொற்பொழிவுகள் கேட்டல், சமய விழாக்களில் கலந்து கொள்வதோடு அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை மேற்கொள்ள உறுதி பூணுதல், பிள்ளைகளுக்குத் தவறாமல் சமயக் கல்வியைப்  புகட்டுதல், நன்னெறிப் பண்புகளைப் போதித்தல் ஆகிய பண்புகளைக் கொடுத்தருள வேண்டும் என்று கலைமகளைத் துதிக்க வேண்டும்.

விஜயதசமி

            மேற்கூரியவற்றை எல்லாம் ஒன்பது நாட்களும் கடும் விரதமாக அல்லது உறுதியான உறுதிப்பாட்டோடு சிந்தித்து தெளிந்து பின்பற்ற முற்படுவோமானால் பத்தாவது நாளான விஜயதசமியன்று அம்பாள் மகிஷாசூரனை வெற்றி கொண்டதுபோன்று நாம் நம் அறியாமையைத்  தீக்குணங்களை   வெற்றி  கொண்டவர்களாக  ஆவோம்.  அறிவு  சிறக்கும்,  இதையொட்டியே           விஜயதசமியன்று இசை, கலை, பரதம் போன்று கல்விக் கேள்விகளை அந்நாட்களில் ஆரம்பித்தார்கள். நவராத்திரியின் உண்மைப் பொருளை அறிந்து , சிந்தித்து, வாழ்வில் அதைக் கடைபிடித்து வாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோமாக!

இன்பமே! எந்நாளும் துன்பமில்லை.

திருச்சிற்றம்பலம்
 திருமுறைச் செம்மல் . தர்மலிங்கம்  அவர்கள்