திங்கள், 3 அக்டோபர், 2016

6. முன்னோர்க்குச் செய்யும் புண்ணியம் / Munnorkku Seiyum Punniyam

சிவ சிவ
திருமுறை

முன்னோர்க்குச் செய்யும் புண்ணியம்

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம், பாவ புண்ணியத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. “என்ன பாவம் செய்தேனோ, இதையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கின்றது! என்று துன்பம் வருகின்றபோது பலர் சலித்துக் கொள்வதும், “புண்ணியவான் கொடுத்து வைத்தவன், எல்லாம் நினைத்தபடி நடக்கின்றதுஎன்று பாராட்டுவதும் தமிழர் தம் அன்றாட வழக்கில் இடம்பெறுவதனைக் கேட்கின்றோம். இதனால் பாவம், புண்ணியம் என்ற கொள்கை தமிழரிடையே வேரூன்றிவிட்ட ஒன்று என்று தெரிகின்றது. இதனையே வினைக்கொள்கை என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. வினைக் கொள்கை என்பது செயலைக் குறிப்பதாய் உள்ளது. இது நல்வினை, தீவினை என்று இரண்டாகக் குறிக்கப்படுகின்றது. தனக்கும் பிற உயிர்களுக்கும் பயன் தரக்கூடிய நல்லனவற்றைச் செய்வதனை நல்வினை என்றும் தனக்கும் பிற உயிர்களுக்கும் கேட்டினை விளைவிக்கக் கூடிய செயல்களைத் தீவினை என்றும் சைவம் குறிப்பிடுகின்றது. வினை அல்லது செயல், மனம், வாக்கு, காயம் என்பவற்றால் நிகழ்வது.

மனத்தினால் தனக்கும் பிற உயிர்களுக்கும் பயன்தரக்கூடிய நல்ல எண்ணங்களை நல்வினை என்றும் மனத்தினால் தனக்கும் பிற உயிர்களுக்கும் தீமையை விளைவிக்கக் கூடிய தீய எண்ணங்களை எண்ணுவது தீவினை என்றும் குறிப்பிட்டனர். வாயிலிருந்து வெளிப்படும் சொற்களினால் தனக்கும் பிற உயிர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் நற்சொற்களைச் சொல்வது நல்வினை என்றும் வாயிலிருந்து வெளிப்படும் சொற்களினால் தனக்கும் பிற உயிர்களுக்கும் தீமையை உண்டாக்கும் தீய சொற்களைச் சொல்வதைத் தீவினை என்றும் குறிப்பிட்டனர். உடலில் உள்ள புற உறுப்புக்களைக் கொண்டு செய்யும் செயலினால் தனக்கும் பிற உயிர்களுக்கும் செய்யும் நல்ல செயல்களை நல்வினை என்றும் அதே உறுப்புக்களினால் தனக்கும் பிற உயிர்களுக்கும் செய்யும் தீய செயல்களைத் தீவினை என்றும் குறிப்பிடுவர்.

இவ்வாறு மனம், வாக்கு, காயத்தினால் செய்த நல்வினை, தீவினையின் பயனாக விளையும் விளைவுகளையே நல்வினைப்பயன், தீவினைப்பயன் என்று குறிப்பிட்டனர். வினையைக் கருமம் என்றும் நல்வினைப் பயனைப் புண்ணியம் என்றும் தீவினைப் பயனைப் பாவம் என்றும் வடமொழியில் குறிப்பிடுவர். இதனாலேயே, பிடிக்காத ஒரு செயலை ஒருவர் செய்யும் போதும் காணும்போதும் பேசும்போதும், “கருமம், கருமம்!” என்று வடமொழியில் சிலர் நொந்து கொள்வதனைக் காணலாம். இதனால் ஒருவருக்குத் தீவினைப் பயன் வந்து சேரும் என்று குறிப்பிடுவதோடு மட்டும் அல்லாமல், இத்தகைய ஒன்றைக் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் செய்வதற்கும் தீவினைப்பயன் வழிவகுத்து விட்டதே என்று தன்னைத் தானே நொந்து கொள்வதாயும் அமைகின்றது. இதன் வழி நாம் முன்பு செய்த பாவம் புண்ணியம் அல்லது நல்வினைப் பயன், தீவினைப் பயன் நம்மை வந்து அடைகின்றது என்ற சித்தாந்த சைவக் கொள்கை சைவர்கள் அறிந்த ஒன்றாகவே தமிழர் வழக்கில் இருக்கின்றது என்பதனை உணரலாம்.

நன்றும் தீதும் பிறர் தர வாராஎன்பதும் இந்நல்வினை, தீவினைக் கொள்கை பற்றியதே ஆகும். “வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்என்பதும் சித்தாந்த சைவத்தின் வினைக்கொள்கையின் அடிப்படையிலேயே விளங்குகின்றது. ஊழ்வினை என்பதும்ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்என்பதுவும் இவ்வடிப்படையிலேதான் என்பது தெளிவு. இந்த அரிய வினைக்கொள்கையை மிகவும் எளிமையாக, “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்என்றும் நம் முன்னோர் குறிப்பிட்டு வைத்துள்ளனர். இதன்வழி, அவரவர் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அவரவர் அவற்றினால் ஏற்படும் வினைப்பயனை நுகர்ந்தே தீர்வர் என்பது தெளிவாகின்றது. முற்பிறவியில் கோவலன் செய்த தீவினைப் பயனால் கண்ணகியைத் தம் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு வாழ்ந்த பிறவியில், சிலம்பை விற்கச் சென்ற இடத்தில் கொலைகளப்பட்டான் என்று சிலப்பதிகாரம் நமக்கு வினைக்கொள்கையை  அறிவுறுத்துகின்றது.

ஒருவர் செய்த பாவத்தின் பயனை அல்லது தீவினைப் பயனைப் பிறர் ஏற்றுக் கொள்வது என்பதோ அல்லது பிறர் அதனைக் கழிக்க முடியும் என்பதோ இயலாத ஒன்று. அதே போன்று பிறர் செய்த புண்ணியத்தின் பயனை அல்லது நல்வினைப் பயனைப் பிறர் பெறுவதோ அல்லது அதனை நுகர்வது என்பதோ இயலாத ஒன்று என்பது தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையின்படி இயலாத ஒன்றாகும். இறந்த நம் முன்னோர்க்காகப் பிள்ளைகள் நன்றி உணர்வால் செய்யும் நற்செயல்கள் அவர்களுக்குச் சென்று சேரும் என்றால் பிள்ளைகள் செய்யும் தீச்செயல்களின் பயனும் இறந்தவர்களுக்குச் சென்று சேர்வதாய் அமையும். இது நன்றும் தீதும் பிறர் தர வாரா என்ற கொள்கைக்கு மாறானதாகும். எனவே இது உண்மைக்குப் புறம்பானது என்று புலப்படுகின்றது. உயிரோடு இருக்கின்றவர்கள், இறந்த நம் முன்னோர் செய்த நற்பணிகளை நினைவில் இருத்தி, நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்களின் பிறந்த நாட்களிலோ, நினைவு நாட்களிலோ, ஏழை எளியவருக்கு உணவு அளித்தல், உடை அளித்தல், வேண்டிய உதவிகளைச் செய்தல் போன்ற நற்செயல்களைச் செய்தனர். பெரிய அளவில் உணவிடுதல் அல்லது பெரிய உதவிகளைச் செய்ய இயலாவிட்டாலும் தங்களால் இயன்ற அளவு பறவைகள், பூச்சிகள், புழுக்கள் போன்ற சிற்றுயிர்களுக்காவது உணவு அளிக்கும் நற்செயல்களைச் செய்வதற்கு அவை வாழும் நீர்நிலைகளுக்குச் சென்று அங்கு உணவிடும் வழக்கத்தை ஏற்படுத்தினர். இத்தகைய நாட்களில் யாராவது வறியவர் ஒருவருக்கு உணவு அளிக்கும் வழக்கத்தினையும் ஏற்படுத்தினர்.

இவ்வழக்கம் இன்று தவறான பின்னணியில் இடம்பெற்று வருகின்றது. இறந்தவர்களை எண்ணிச் செய்யப்படுகின்ற வழிபாடுகள் அல்லது புண்ணியச் செயல்கள் இன்று அதன் அடிப்படை நோக்கிலிருந்து விலகி இருக்கின்றது. இறந்தவர், பிதிர் உலகம் என்று குறிக்கப்படும் ஆவிகள் உலகத்திலோ, சொர்க்கத்திலோ, நரகத்திலோ, அல்லது கயிலாயத்திலோ பசியால் வாடிக்கொண்டிருப்பது போலவும் அவர்களுக்கு நாம் இங்கிருந்து உணவு அனுப்பி வைப்பது போலவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இறந்தவருக்காகத் திருக்கோயிகளிலும் நீர்நிலைகளிலும் இன்று உணவைப் படைப்பதும் நீரில் விடுவதும்  நடைபெற்று வருகின்றது. இன்னும் சிலர் தேவர்கள் பறவைகள் வடிவில் வந்து உணவை உண்டு மகிழ்ந்து பின் இறந்தவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்வர் என்று தேவர்களுக்கு உணவு படைக்கின்றனர். இன்னும் சிலர் இறந்தவரே பறவைகள் வடிவில் வந்து உணவை உண்டு செல்வதாகவும் நம்புகின்றனர். இன்னும் சிலர் ஏழை எளியவருக்கு உணவு கொடுத்தால் அது இறந்துபோன தங்கள் முன்னோருக்கு அது நல்வினைப் பயனாய் அல்லது புண்ணியமாய் அமையும் என்றும் நம்புகின்றனர்.

இறந்தவர்களுக்காக அவர்களின் உறவுமுறைகள் இத்தகைய வழிபாடுகளை ஏழு தலைமுறைக்குச் செய்யாவிட்டால் இறந்தவர்கள் துன்பப்படுவார்கள், அதனால் நமக்குத் தீவினைப்பயன் அல்லது பாவம் வந்து சேரும் என்று சிலர் அச்சுறுத்தப் பலர் அதனை நம்பி அஞ்சுகின்றனர். இன்னும் சிலர் இறந்த முன்னோர் மீது கொண்ட அன்பினாலும் நன்றிப் பெருக்காலும் முன்னோருக்கு நன்மை செய்வதாய் எண்ணிச் செய்கின்றனர். உண்மையில் இறந்தவர்களின் உயிர் மறுபிறவிக்கோ, ஆவி உலகிற்கோ, சொர்க்க நரகிற்கோ, இறை உலகிற்கோ செல்லும்போது நாம் அளிக்கும் இவ்வுலக உணவு நுண் உடல் பெற்றுவிட்ட அவ்வுயிர்களுக்கு வேண்டுவது இல்லை! பருவுடல் கொண்ட நம் போன்றோருக்குத்தான் உடலில் உயிர் தங்குவதற்கு உணவு வேண்டுவதாய் உள்ளது. ஒளி உடம்பும் நுண் உடம்பும் பெற்று மேற்குறிப்பிட்ட உலகங்களில் நிற்கும் நம் முன்னோர்க்கு நாம் அளிக்கும் உணவு போய்ச் சேர்வது கிடையாது என்று சித்தாந்த சைவம் தெளிவுறுத்துகின்றது. இறந்த முன்னோர்க்காக நாம் செய்யக் கூடியது  அவர்கள் உயிரோடு இருக்கும்போது பெற்றிருந்த நற்பெயரைத் தொடர்ந்து நிலைநிறுத்த அவர்கள் மேற்கொண்டிருந்த நற்செயல்களைத் தொடர்ந்து செய்வதுதான். நம் முன்னோர் நம்மைப் பேணி வளர்த்து ஆளாக்கியமைக்காக அவர்களின் நினைவு நாட்களில் அவர்களுக்கு நல்லருளை வழங்கி அவர்களை மேல்நிலைக்கு ஆளக்க வேண்டும் என்று சிவபெருமானை வழிபடுவதே முன்னோருக்கு நாம் செய்யும் உண்மை கைமாறு ஆகும்.

இறந்தவர்களை மகிழ்விப்பதற்காகப் பலர் இன்று நூறு, ஆயிரம் என்று செலவு செய்வதும் அதற்காகப் பல சடங்குகள் அல்லது செயல்முறைகளைச் செய்வதும் அதற்கென திங்கள் தோறும் குறிப்பிட்ட நாளில் நீண்ட நேரம் செலவு செய்து இறந்தவர்களை வழிபாடு செய்வதும் தவறானது என்று உண்மைச் சைவம் குறிப்பிடுகின்றது. இறந்தவர்களுக்காக இறந்த அன்று இறந்த உடலுக்குச் செய்த நீராட்டுதல், திருநீறு அணிவித்தல், திருமுறை ஓதுதல், கொள்ளிக் குடம் உடைத்தல், கொள்ளி வைத்தல், சாம்பலை நீரில் கரைத்துத் தலை முழுகுதல் ஆகிய அனைத்துமே நமக்கும் இறந்தவர் உயிருக்கும் உள்ள உறவை முறித்து, இறந்தவரின் உயிரை இறை உலகிற்கு அனுப்பி, அவ்வுயிரை மேற்குறிப்பிட்டுள்ள ஏதாவது ஓர் உலகில் உயிர்அமைதி (ஆத்ம சாந்தி) பெறுவதற்காகத்தான் என்பதனைப் பலரும் உணர்வதில்லை. தவிர கருமக்கிரியை எனப்படும் பதினாறாம் நாள் வழிபாட்டில் அவ்வுயிருக்கு மேலும் இறைநினைவை ஏற்படுத்தி, இனிமேலும் உணவு, உடை, அணிகள் போன்றவற்றின் மீது விருப்பம் அறவே ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் அனைத்து செயல்முறைகளையும் செய்கின்றோம். அவ்வாறு உயிரை அமைதி செய்த பின்பு, திங்கள் தோறும் ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இருபத்து ஐந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியென எவ்வாறு நாம் அவர்களுக்கு உணவு படைக்க முடியும்? இது நம் சைவ சமயக் கொள்கைக்கு முரணானது என்பதனைத் தெளிதல் வேண்டும்.

இறந்த நம் முன்னோர் சிவஉலகம் அல்லது சிவனின் திருவடிகளை(சிவபதம்) அடைந்து அமைதியுற வேண்டும் என்பதே சித்தாந்த சைவர்களின் இறைக்கொள்கை. இறை உணர்வோடு இறை உலகிலோ அல்லது பிற உலகிலோ இருக்கின்ற நம் முன்னோரை உலகில் இருக்கின்ற நாம் அவர்களுக்கு உணவு கொடுத்தல், அவர்களை வருந்தி அழைத்தல், அவர்களை வழிபடுவது என்பதனைச் செய்வோமானால் அவர்களின் உயிர் அமைதி அடையாது, இறை உணர்வு நீங்கி மேலும் அல்லல் உறும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். முன்னோருக்காக நாம் செய்யக் கூடிய மிகச் சிறந்த நல்வினை அல்லது புண்ணியம் இறைவனை வழுத்துவதே ஆகும்.

நன்றும் தீதும் பிறர் தர வாராஎனும் உண்மையை உணர்ந்து, நம் முன்னோர் உயிரோடு வாழும்போது செய்த நற்பணிகளைத் தொடர்ந்து, மன, வாக்கு, காயத்தினால் நல்வினைகள் செய்வதே சிறந்த புண்ணிய வாழ்க்கையாகும். நாம் செய்த நல்வினைத் தீவினைப்பயனே நாம் இறந்த பின்பு நம்மோடு வரும், நம் பிள்ளைகளும் பிறரும் நமக்காகச் செய்யும் நல்வினைப் பயனும் தீவினைப்பயனும் நம்மை வந்து சேரா என்பதனை உணர்ந்து வாழ்வைச் செம்மை செய்வோம், உண்மைச் சைவர்களாய் வாழ்வோம்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக