வியாழன், 7 ஜூலை, 2016

18. சீரார் பெருந்துறை நம் தேவன்/ Siraar Perunthurai Nam thevan

18. சீரார் பெருந்துறை நம் தேவன்

            உயிர்களால் கற்பனையும் செய்து பார்க்க இயலாதவனாய் இருக்கின்ற பெருமான் உயிர்களின் மீது கொண்ட பெரும் பரிவினால் திருக்கோயில் தோறும் அமைக்கப் பெறுகின்ற திருவடிவங்களில் இருந்து தனது திருவருளை வாறி வழங்குகின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். இதனை, “மூலப்பண்டாரம் வாறி வழங்குகின்றான் வந்து முந்துமினேஎன்று குறிப்பிடுவார். தமிழ்ச் சைவர்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பதனை முறையாகக் கொள்ள வேண்டும் என்று குறிக்கப் பெற்று இருக்கின்றது. இதனை, “மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர், வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமேஎன்று தாயுமானவ அடிகள் குறிப்பிடுவார். சைவநெறி குறிப்பிடுகின்ற முறையான பெருமானின் திருவடிவம், சிவஆகம விதிப்படி முறையாக அமைக்கப் பெற்று சைவநெறிப்படிப் பூசனை நடைபெறுகின்ற திருக்கோயில், சிவஆகம முறைக்கு ஏற்றவாறு அமைந்த திருக்கோயில் நீர்நிலை ஆகியவற்றை முறையாகக் கொண்டு வழிபடுகின்றவருக்குப் பெருமானே சிவகுருவாகத் தோன்றி அருள்மொழிக் கூறி ஆளாகக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்று குறிப்பிடுகின்றார் தாயுமானவ அடிகள்.

       இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றை முறையாகக் கொண்டு, அமைச்சராய் இருப்பினும் சைவநெறியில் வழுவாது நின்ற மணிவாசகப் பெருமானுக்குத் திருப்பெருந்துறைத் திருக்கோயிலின் குருந்த மர நிழலில் பெருமானே குருவாக வந்து அருள்மொழி கூறி அவரை ஆட்கொண்ட சீர்மை உடைய, நம் எல்லோருக்கும் பெருமானாகியவனின் திருவடிகளை வணங்குகின்றேன் என்பதனை, “சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றிஎன்று  சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமானே ஆசானாக வந்து அமர்ந்த திருக்கோயில் திருப்பெருந்துறை என்பதனால் அதன் சிறப்பினையும் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

      செவ்வி உடைய உயிர்களுக்குச் சிவபெருமான் மானுட சட்டைத் தாங்கி ஆசானக வந்து அருள்செய்வான் என்ற சித்தாந்த சைவ உண்மை நிகழப்பெற்றத் திருக்கோயிலான திருப்பெருந்துறை இன்றைய வழக்கில் ஆவுடையார் கோயில் என்று வழங்கப் பெறுகின்றது. தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குப் பக்கத்தில் இத்திருக்கோயில் உள்ளது. ஊரின் பெயர் பெருந்துறை. திருக்கோயிலின் பெயர் ஆவுடையார் கோயில். திருக்கோயிலின் பெயரான ஆவுடையார் கோயில் என்பதே இன்று ஊருக்கும் பெயராக வழங்கப்பெறுகின்றது.

     அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து சிவஆசான் வடிவில் பெருமான் ஆட்கொண்டு, அவரை மணிவாசகராக ஆக்கிய சிறப்பு மிக்க தலம் இது. மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணிய பூமி இதுவாகும். இத்திருக்கோயில், பெருமானின் கட்டளைப்படி மணிவாசகரால் கட்டப்பெற்றது. இத்தலம் அதன் கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்றது. பண்டைய நாளில் சிற்பிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதும்போது ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைப் போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதனைக் குறிக்கும் வகையில், “ஆவுடையார் கோயில் கொடுங்கைகள் நீங்கலாகஎன்று எழுதும் வழக்கம் இருந்ததாகக் குறிப்பிடுவர். இத்திருக்கோயிலில் பெரிய கனமுடைய கருங்கல்லை, மெல்லியதாக இழைத்து, பல மடிப்புக்களாக அமைத்துள்ள கலைத் திறம், தமிழர்களின் அறிவுத் திறத்திற்கும் தமிழர்களின் சிற்பக்கலைத் திறத்திற்கும் சான்று பகர்வதாய் உள்ளது என்பர்.

     இத்திருக்கோயிலில் உள்ள பெருமானை ஆத்மநாதர் என்றும் உடனுறை அம்மையை யோகாம்பாள் என்றும் குறிப்பிடுவர். இத்திருக்கோயிலின் தலமரம் குருந்தமரம், புனித நீர்நிலை திருத்தமரம் பொய்கை. உலக உயிர்கள் பிறவிப்  பெருங்கடலை நீந்தி வீடுபேறு பெறுவதற்குத் துணையாக, பெரும் துறையாக, தளமாக இத்திருக்கோயில் விளங்குவதனால் பெருந்துறை என்று பெயர் பெற்றது என்பர். திருவாசகத்தில் உள்ள 51 பகுதிகளுள் 20 பகுதிகள் இத்தலத்தில் பாடப்பெற்றவை. அவை சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தப்பத்து, உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாய நான்மறை என்பனவாம்.

            சிவன்கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி இருக்கும் என்பர். சில மேற்கு நோக்கியும் இருக்கும் என்பர். இத்திருக்கோயில் தெற்கு நோக்கி உள்ளது குறிப்பிடத் தக்கதாகும். சிவன் திருக்கோயில்களில் வழக்கமாகப் பெருமான் அருவுருவ வடிவான சிவலிங்கம் அல்லது சிவக்கொழுந்து வடிவில் தோற்றம் அளிப்பார். இத்திருக்கோயிலில் மட்டும் பெருமான் அருவநிலையில் தோற்றம் அளிக்கின்றார். ஆவுடையார் என்றால் உயிர்களை ஆளாகக் கொள்பவர் என்று பொருள். ஆவுடையார் கருவறையில் சதுரபீடம். அதன் மேலே சிவக்கொழுந்தின் தண்டு அல்லது பாணம் இல்லை. பீடத்தின் மேலே தண்டிற்குப் பதில் பொன்னிலான குவளை சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னால் உள்ள திருவாசியில் 27 விண்மீன்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. இத்திருக்கோயிலில் அம்மைக்கும் வடிவு அருவம்தான். நூறு இதழ் தாமரைப் பீடத்தில் திருவடிகள் மட்டுமே பொன்னாலான யந்திர வடிவாக உள்ளன.

                     இத்திருக்கோயிலில் நவகோள்களுக்குத் தனி வழிபாட்டு இடம் இல்லை. தூண் ஒன்றில் நவகோள்களின் வடிவங்களும் 27 விண்மீன்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் நவகோள்களுக்குத் தனி வழிபாட்டு இடம் அமைக்கப்பெறுவது காலத்தால் பின்னால் வந்தது என்பதனை இது உணர்த்தி நிற்கின்றது. பெருமான் இத்திருக்கோயிலில் சிவ ஆசான் வடிவில் இருப்பதனால் இத்திருக்கோயிலில் பெருமானின் ஆசான் வடிவாகிய தென்முகக் கடவுள் வடிவம் (தட்சினாமூர்த்தி) தனியாக இல்லை!

     இத்திருக்கோயிலில் மணிவாசகர் குருந்த மரத்தடியில் சிவஆசானிடம் அருள்மொழி கேட்ட இடம் அரிதாய் அமைந்துள்ளது. கல்லில் வடித்துள்ள குருந்தமரம், கீழே இறைவன் ஆசான் வடிவில் அமர்ந்து இருக்க, எதிரில் மணிவாசகர் பணிவோடு இருந்து அருள்மொழி கேட்ட நிலை வடிக்கப்பட்டுள்ளது. திருப்பெருந்துறையைப் போன்று அருளாளர்கள் அருள் பெற்ற, திருமுறைப் பாடல்கள் பாடப்பெற்றத் திருமுறைத் திருத்தலங்கள் 276 உள்ளன. தமிழ்ச் சைவர்கள் இத்திருத்தலங்களைத் தேடிச் சென்று வழிபட்டால், அருளாளர்களின் வரலாறும் இறைவன் அவர்களுக்காக நிகழ்த்திய அருள் நிகழ்ச்சிகளும் அவ்வருளாளர்களின் வாழ்த்தும் சைவநெறியின் சீர்மையும் பெருமானின் திருவருளும் நம்மை மேலும் சைவநெறியில் சிறக்கச் செய்யும்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!