வியாழன், 7 ஜூலை, 2016

17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்/ Maya Pirapu Arukkum Mannan

17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்

ஒரு பிறவியில் தான் கற்றக் கல்வியானது அப்பிறவிக்குகு மட்டும் அல்லாமல் ஒருவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பதனை, “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப் புடைத்து என்பார் உலகப் பேராசான் திருவள்ளுவர். இதனால் பிறவி என்பது உண்டு என்பதும் அது பல என்பதும் உண்மை என்று நிறுவப்படுகின்றது. உயிர்கள், கரு, முட்டை, வியர்வை, கிழங்கு என்ற நான்கு வழியில் தோன்றி, வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழு வகைப் பிறப்புக்கு உட்படுகின்றன என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.

இவ்வாறு 8400 000 உயிர் வகைகளாகப் பிறப்பெடுக்கும் உயிர்கள் எண்ணில் அடங்காப் பிறவிகள் எடுக்கின்றன என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். இதனை, “எழுகடல் மணலை அளவிடின் அதிகம், எனது இடர் பிறவி அவதாரம் என்று அருணகிரிப் பெருமான் குறிப்பிடுவார். ஏழு கடல் மணலின் எண்ணிக்கையை விட தமது பிறவியின் எண்ணிக்கைக் கூடுதலானது என்று அருணகிரியார் குறிப்பிடுவார். இத்தகைய எண்ணிக்கை அற்றப் பிறவிகளில் மாந்தப் பிறவி கிடைத்தற்கு அரிதிலும் அரிது என்பதனை, “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பர். ஓர் அறிவு உடைய தாவரங்கள் முதல் ஆறு அறிவு உடைய மாந்தர் வரையில் உள்ள பிறவிகளில், மாந்தர் பகுத்தறிவு உடையவர்களாக இருப்பதனால் மாந்தப் பிறவியே சிறப்புடையது என்பர்.

மணிவாசகர் அருளிய திருவாசகம் எனும் தேனில் ஒரு துளியாகத் தித்திக்கும் சிவபுராணத்தில், “மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி என்று மணிவாசகர் குறிப்பிடுவார். இதில் பிறவி நிலையற்றது என்றும் அது அறுக்கப்பட வேண்டியது என்றும் அதனை அறுக்கின்ற ஆற்றலை உடைய தலைவன் சிவபெருமான் ஒருவனே என்றும் அத்தகைய தலைவனின் திருவடிகளை வணங்குகின்றேன் என்றும் குறிப்பிடுகின்றார். பிறவி துன்பமானது என்பதனை, “எனது இடர் பிறவி அவதாரம் என்று அருணகிரியார் குறிப்பிடுவார். பிறவியில் இருந்து விடுபட வேண்டும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவன் அடிசேரா தார் என்பார் ஐயன் திருவள்ளுவர். இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க இயலாது என்பார். மேலும் அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவருக்கு அல்லாமல் மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க இயலாது என்பதனை, “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால், பிறவாழி நீந்தல் அரிது என்பார் ஐயன் திருவள்ளுவர்.

பிறப்பு பொருளையும் இன்பத்தையும் தருவது. ஆனால் நிலையில்லாதது என்று திருவள்ளுவரோடு ஒருமித்தக் கருத்தினைச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு பிறவியிலும் அப்பிறவிக்கு ஏற்பப் பெருமான் உடல், கருவிகள், உலகம், நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றை உயிர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றான் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்களின் வினைப் பயனுக்கு ஏற்பவும் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பவும் இறைவனே ஒவ்வோர் உயிருக்கும் உடல்களைக் கொடுக்கின்றான் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இதில் வானவர் முதல் தாவரம் வரை உள்ள எழு வகைப் பிறப்புகளுக்கும் உட்படும் அனைத்து உயிர்களுக்கும் முழுமை பெற்ற உடல்களாகவோ குறையுடையனவாகவோ பெருமானே அளிக்கின்றான் என்று சைவம் குறிப்பிடுகின்றது.

மாந்தருக்குரிய உடல்களில் ஊனமுற்றவர்களாகவோ, வலிமை மிக்கவர்களாகவோ, பருமனாகவோ, மெலிவாகவோ, அழகாகவோ, வெளுப்பாகவோ, கருப்பாகவோ உடல்களைப் பெருமானே அளிக்கின்றான். இத்தகைய உடல்கள் நிலையானவை என்றும் அவற்றைக் கொண்டு செருக்கித் திரிவதோ அல்லது அயர்வுற்றுத் திரிவதோ தவறு என்று சைவம் குறிப்பிடுகின்றது. பல்வேறு பிறவிகளில் கொடுக்கப்படும் உடல்கள் உயிர் அறிவு விளக்கம் பெற்றுப் பிறவியை அறுத்துப் பெருமானின் திருவடியை அடைவதற்குத் தற்காலிகமாகக் கொடுக்கப் பட்டது என்பதனாலேயே, “காயமே இது பொய்யடா, காற்றடைத்த வெறும் பையடா என்று குறிப்பிடப்படுகின்றது. இதனையே மாயப் பிறப்பு என்றார் மணிவாசகர்.

ஒவ்வொரு பிறவியிலும் உயிர்களுக்குக் கொடுக்கப்படும் உடல்களுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ள கருவிகள் நிலையில்லாதவை என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமான் கொடுத்திருக்கும் நிலையில்லாத ஆற்றலுடைய மனம், அறிவுக் கருவிகள், செயல் கருவிகள் அனைத்தும் நிலையில்லாதவை. ஆதலால் அவற்றைக் கொண்டு செருக்கித் திரிதல் கூடாது என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பிறவியிலும் உயிர்களுக்குக் கொடுக்கப்படும் உலகங்களும் நிலையில்லானவே என்று மணிவாசகர் நினைவூட்டுகின்றார். கிராமம், ஊர், மாநிலம், நாடு, வானுலகம் என்றும் பணக்கார நாடு, ஏழ்மையான நாடு என்றும் பட்டணம் என்றும் கிராமம் என்றும் தாங்கள் வாழும் இடத்தைக் கொண்டு பலர் மார்தட்டிக் கொள்வதுண்டு. இவை அனைத்தும் நிலையில்லாதவை என்றும் பெருமானின் திருவடியை அடைந்து வாழ்வதே நிலையான வாழ்வுலகு என்றும் குறிப்பிடுகின்றார் மணிவாசகர்.

ஒவ்வொரு பிறவியிலும் பெருமான் அளிக்கின்ற நுகர்ச்சிப் பொருள்களும் நிலையில்லாதவை என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுகின்றார். அல்லும் பகலுமாக உழைத்துச் சேமித்து வைக்கும் செல்வம், பொருள் போன்றவை நாம் இறக்கும் நாளில் நம்மை விட்டு மாயமாகி விடும் என்கின்றார். இதனையே, “காது அற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே என்பார் பட்டினத்து அடிகள். எனவே வாழும் காலத்தில் நம்மிடம் இருக்கும் செல்வம், பொருள் போன்றவை நிலையானவை என்றும் அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டும் அவற்றினால் செருக்குக் கொண்டும் வாழ்வது அறியாமை என்றும் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

பொருளும் செல்வமும் மட்டும் அல்லாது பெருமான் நமக்கு அளித்துள்ள உறவுகளான பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, மக்கள், உற்றார் உறவினர் போன்றவையும் நிலையில்லாதது என்று மணிவாசகர் வலியுறுத்துகின்றார். ஒவ்வொரு பிறவியிலும் வெவ்வேறு பெற்றோர், வெவ்வேறு மனைவி, மக்கள் மற்றும் வெவ்வேறு உற்றார் உறவினர் நமக்கு வந்து கொண்டே இருப்பர். அவர்களில் ஒருவரும் இறக்கும் நாளில் நமக்குத் துணை வருவார் இல்லை! பெருமானே நமக்கு இறுதியில் துணை வருவான் என்கின்றார் மணிவாசகர். இதனையே, “உற்றார் யார் உளரோ உயிர்கொண்டு போம்பொழுது, குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யார் உளரோ என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். எனவே நம் உறவுகளிடத்தில் அன்பு காட்டுவதும் அவர்களைக் காப்பதுமான பொறுப்பு நமக்கு இருப்பினும் அது உலக மயமான வாழ்க்கையே! நிலையில்லாத இவ்வுலக மயமான வாழ்க்கையைத் துணையாகக் கொண்டு நிலையான வாழ்க்கையான இறையுலக வாழ்க்கையை வெற்றிக் கொள்ள வேண்டும் என்பதே மணிவாசகரின் குறிப்பாகும்.

உறுதியாகத் திரண்டு மீண்டும் மீண்டும் வரும் அலைகள் கரையை அடைகின்ற போது உடைந்து மாயம் ஆவது போல நிலையானதும் உறுதியானதும் போன்ற பிறவி மீண்டும் மீண்டும் வந்து கொண்டேதான் இருக்கும். இதனையே, “பிறவி அலையாற்றினில் புகுதாதே என்று அருணகிரியார் பெருமானிடம் வேண்டுவார். இத்தகைய பிறவித் துன்பத்தை நீக்க வேண்டும். உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வராமல் இருக்க வேண்டும். அவ்வாறு வராமல் இருப்பதனைச் செய்யக் கூடியவன் சிவபெருமான் ஒருவனே! பிறப்பிற்கும் இறப்பிற்கும் உட்படாத அப்பெருமானே உயிர்களின் பிறவியை அறுக்க வல்லவன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

நிலையில்லாத மாயப் பிறவியினைக் கொண்டு நிலையான பேரின்பப் பெருவாழ்வினைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளை மறவாது நாளும் மெய்நெறி வாழ்க்கையை எண்ணி வாழ்வோம், பெருவாழ்வு பெறுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக