செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

1.1 தைப்பூசத்தை மீட்டு எடுப்போம் Thaipusaththai Meeddu Eduppom

சிவ சிவ

தைப்பூசத்தை மீட்டு எடுப்போம்

                “மண்ணில் பிறந்தார்பெரும் பயன் மதிசூடும், அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல், கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டுஆர்தல்என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதாய்த் தெய்வச் சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுவார். இவ்வுலகில் மாந்தர்களாகப் பிறந்தவர்கள் பெறக்கூடிய அரிய பேறுகளில் இறையடியார்களுக்கு உணவு அளித்து அவர்கள் மகிழ்ச்சியோடு உண்டுப் பசியாறுவதனைக் காண்பதுவும் பெருமானின் திருவிழாச் சிறப்பினைக் கண்ணாறக் கண்டு இன்புறுதலும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவை இரண்டும் ஒருங்கே ஒரே இடத்தில் கிடைக்கப் பெறுவது தைப்பூசத் திருவிழாவில் ஆகும்.
            பெருமானுக்குத் திருவிழா நடைபெறுகின்றபோது இயற்றப் பெரும் வழிபாடுகள் இறை அன்பை மேலிடச் செய்பவை. எனவேதான், “தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்என்று திருஞானசம்பந்தர் திருமயிலைப் பதிகத்தில் குறிப்பிடுவார். இறையன்பு உணர்வோடு பெண்கள் தைப்பூசப் பெருவிழாவினைக் கொண்டாடுவதனைப் பார்க்கும் பேற்றினைப் பெறாமல் இள அகவையிலேயே இறந்து போனாயே பூம்பாவை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார். இதனால் தைப்பூசப் பெருவிழாவினைக் காண்பது கிடைத்தற்கரிய ஒன்று என்று புலப்படுகின்றது. இதன்வழித் தைப்பூசத் திருவிழா இறையன்பினை மேலிடச் செய்வதற்கே நடத்தப் பெறுகின்றது என்று தெளிவாகின்றது.
            சிவபெருமானின் அறிவு வடிவாக முருகனைக் கொண்டுப் போற்றி வழிபடும் தமிழ்ச் சைவர்கள், சுறவம் எனும் தைத்திங்களில் வரும் கொடிறு எனும் பூச விண்மீன் நாளில் தைப்பூசத்தினைக் கொண்டாடி மகிழ்கின்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்தில் தைப்பூசத் திருவிழா சிவன் கோவில்களில் கொண்டாடப் பெற்றிருகின்றது என்ற செய்தியினைத் திருஞானசம்பந்தரின் திருமயிலைத் திருப்பதிகத்தின் வழி அறிய முடிகின்றது. இக்காலத்தில் தைப்பூசம் என்பது முருகன் கோவில்களில் மட்டும் நடத்தப் பெறுகின்ற திருவிழாவாகத் தோற்றம் அளிப்பினும் தமிழ்ச் சைவர்கள் அதனைச் சைவ விழாவாக, சிவனுக்குரிய விழாவாகவே எண்ணிக் கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழ்ச் சைவர்களைப் பொறுத்த மட்டில் சிவனும் முருகனும் வேறு அல்ல! சிவனின் மற்றொரு வடிவமே முருகனின் வடிவம் என்ற கொள்கையை உடையவர்களாக உள்ளனர். இதனால் தைப்பூசத் திருவிழா முழுக்க முழுக்கச் சைவ விழா என்பதில் தமிழ்ச் சைவர்களுக்குக் கிஞ்சிற்றும் ஐயமில்லை என்றாகின்றது.
            தைப்பூசம் என்றாலே நம் கண்முன் நிழலாடுவது காவடியும் தேர் வீதி உலா செல்வதும்தான். முன்பு காலத்தில் மன்னர்கள் நகர் வலம் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு அறியும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். மக்கள் மன்னர்களை மரியாதையுடனும் அன்புடனும் வரவேற்றுத் தங்களின்  குறைகளை மன்னர்களிடம் எடுத்துக் கூற, மன்னர்கள் அவர்களின் குறைகளைப் போக்கினார்கள் என்ற செய்தியினை அறிய முடிகின்றது. இந்த அடிப்படையிலேயே திருவிழாக் காலங்களில் பெருமானின் தேர் வீதி உலா வருகின்றது. உலக உயிர்களுக்கு எல்லாம் தலைவனான பெருமான் தேரிலே அமர்ந்து அடியவர்களின் குறைகளைக் கேட்டு அருள் பாலிப்பதாகத் தேர் வீதி உலா செல்வதனை நம் முன்னோர் ஏற்படுத்தி உள்ளனர். உற்சவ மூர்த்தி என்று வடமொழியில் அழைக்கப் பெறும் திருவிழா வழிபாட்டுத் திருவடிவங்கள் ஐம்பொன்னால் வடிக்கப்பட்டவை. இவை திருக்கோவிலில் பூசனையில் சொல்லப்படும் மந்திர ஆற்றலை உள்வாங்கி வைத்திருப்பவை. இத்தகையத் திருவடிவங்களைத் தேரில் வைத்து உலா கொண்டு வருவதனால் அத்திருவடிவங்களில் உள்ள மந்திர ஆற்றல் மக்களைப் போய்ச் சேரும் என்ற நோக்கிலேயே தேர் வீதி உலா வருவதனைச் செய்து இருக்கின்றனர். தங்கம், வெள்ளி போன்றவை மந்திர ஆற்றலை உள்வாங்கி வைத்திருந்து பின் அவற்றை வெளிப்படுத்தக் கூடியவை என்பதனால்தான், தங்கத் தேர், வெள்ளித் தேர் என்று தேர் இழுக்கும் வழக்கத்தினை ஏற்படுத்தினர்.
            இவ்வாறு தைப்பூசத் திருவிழாவின் போது புறப்படும் தேரில் அமர்ந்து வரும் பெருமானை அன்போடு எதிர்கொண்டு வணங்குவதும் அப்பெருமானின் திருவருளைப் பெறுவதும் இன்றியமையாதது ஆகும். தமிழ்ச் சைவர்களின் சமயத்தையும் பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் முறையான ஆடைகளை அணிந்து, சைவ சமயச் சின்னங்களை அணிந்து, உள்ளம் பெருமானின் திருவருளை வேண்டி நிற்க, வாய்கள் பெருமானின் திருப்பெயர்களையோ, பெருமானின் புகழையும் அவனின் பேர் அருள் திறத்தையும் உணர்த்தும் திருமுறைகளையோ ஓதிக் கொண்டுப் பெருமானின் தேர் வீதி உலாவில் கலந்து கொள்வதே முறையாகும்.
            தேர் வீதி உலா செல்லும்போது அறைகுறை ஆடைகளையும் வழிபாட்டிற்குப் பொருத்தம் இல்லாத உடைகளையும் அளவுக்கு மீறிய அணிகளையும் ஒப்பனைகளையும் செய்து கொண்டு, மற்றவர் இறை உணர்வைச் சிதற வைக்கும்படி ஆண்களும் பெண்களும் வலம் வருவது தவறு என்று மனதில் கொள்ளல் வேண்டும். இறை சிந்தனையோடு செல்ல வேண்டிய தேர்த்திருவிழாவில் மதுவைக் கையில் ஏந்திக் கொண்டும் புகைப் பிடித்துக் கொண்டும் உணவுப் பொருட்களை உண்டுக் கொண்டும் சினிமாப் பாடல்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் செல்வது பெரும் இறைக் குற்றம் ஆகும் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். தைப்பூசத் தேர்த் திருவிழாவில் பெருமானின் தேருடன் நடந்து செல்பவர்கள் வீண் அரட்டை அடித்துக் கொண்டு செல்வதும் கைப்பேசிகளைக் கொண்டுப் பாடல்களைக் கேட்டுக் கொண்டும் பேசிக் கொண்டும் செல்வதும் தேர்த் திருவிழாவின் புனிதத்திற்கும் நோக்கத்திற்கும் முரணானது என்பதனைத் தெளிதல் வேண்டும்.
            பெருமானின் தேர் வீதி உலா வருகின்ற போது நம் பாரம்பரிய நடனங்களை ஆடுகின்றவர்கள், முறையான ஆடைகளை அணிந்து, பாலுணர்வு நடனங்களைத் தவிர்த்து, நல்லுணர்வும் மன அமைதியும் இறை உணர்வும் மேலோங்கச் செய்யும் நடனங்களை நடனக் குழுக்கள் நிகழ்த்த வேண்டும். ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாகத் திருமுறைகள் ஓத, திருவைந்து எழுத்து மந்திரங்கள் ஒலிக்க, மங்கல இசை முழங்க, இறையன்பு பெருக்கோடு பெருமானின் தேர் வீதி உலா செல்வதனை அனைவரும் உறுதி செய்தல் வேண்டும். அன்றைய தினத்தில் உண்மையாக இறைவனை வழிபட வேண்டும் என்று வருபவர்க்கு இது பேருதவியாக இருக்கும். அதே வேளை பிற சமயத்தவரும் பிற இனத்தவரும் நம் சமயத்தின் மீதும் நம் பண்பாட்டின் மீதும் இனத்தின் மீதும் மரியாதை கொள்ள வழி வகுக்கும்.
            தைப்பூசத் திருவிழாவில் காவடி ஏந்துதல் பெரும் இடத்தைப் பெற்றுள்ளது. காவடி ஏந்தி வருதல் என்பது இடும்பன் என்ற ஒரு முருக அடியாரின் வரலாற்றோடு தொடர்பு உடையதாய் உள்ளது. மலையின் மேல் இருந்த முருகப் பெருமானுக்குக் கவட்டைக் குச்சியில் ஒரு புறம் பாலும் மறுபுறம் நீரும் கட்டி, மலைமேல் தூக்கிச் சென்றுப் பெருமானுக்கு இடும்பன் நாள் தவறாது திருமஞ்சனம் செய்து வழிபட்டான் என்பர். இடும்பனின் இறையன்பைப் பாராட்டி ஒரு தைப்பூச நன்னாள் அன்று பெருமான் இடும்பனுக்கு அருள் புரியவே, நாமும் இடும்பனைப் போன்று அருள் பெறவே காவடி ஏந்துகின்றோம். இதன் வழி, தைப்பூசத்தன்று பெருமானுக்குத் திருமஞ்சனப் பொருட்களைச் சேர்ப்பித்து, அவனை வழிபட்டு, இறையுணர்வை மேலிடச் செய்வதே முதன்மையானது என்று புலப்படுகின்றது. திருமஞ்சனப் பொருட்களைக் கைகளிலோ, தலையின் மீதோ, காவடியின் வழியோ கொண்டு சேர்ப்பதற்கே முதன்மை அளிக்கப்பட வேண்டியது என்று ஆகின்றது.
            முன்பு, தைப்பூசத்தன்று மலைமேல் இருக்கின்ற பெருமானுக்குத் திருமஞ்சனத்திற்காகப் பால், பழச்சாறு, கருப்பஞ்சாறு, பன்னீர், சந்தனம், தயிர், நெய், மலர், பச்சிலைகள் போன்றவற்றை ஏந்திச் சென்றனர். இதன் அடிப்படை இன்று மாறி இருக்கின்றது. திருமஞ்சனப் பொருட்களுக்கு முதன்மை அளிக்காமல், அவற்றைச் சுமந்து செல்லப் பயன்படும் காவடிகளுக்கும் அதன் அழகிற்கும் முதன்மை அளிக்கப் படுகின்றது. இருப்புப் பட்டைகளும் முட்களும் மணிகளும் நிறைந்து காணப்படும் கனமானப் பெரிய பெரிய காவடிகளில் திருமஞ்சனப் பொருட்கள் சிறு சிறு சொம்புகளில் அழகுக்காகத் தொங்கவிடப் பட்டுள்ளதே பெருமளவு தென்படுகின்றது. குடங்களிலோ, கூடைகளிலோ, கைகளிலோ ஏந்திச் செல்ல வேண்டியப் பழங்கள், பச்சிலைகள், இளநீர், பால் போன்றவை முட்களில் மாட்டப் பெற்று அன்பர்களின் உடம்புகளில் தொங்க விடப்பட்டவாறு கொண்டுச் செல்லப்படுகின்றன. பெருமானுக்குத் தூய்மையாகக் கொண்டுச் சேர்க்க வேண்டியத் திருமஞ்சனப் பொருட்கள், திருமஞ்சனப் பொருட்களைக் கொண்டு செல்பவரின் உடல் வியர்வை, புழுதி என்று அழுக்காகித் தூய்மை கெட்டுப் போகிய நிலையில் பெருமானுக்குக் கொண்டுச் சேர்க்கப்படுகின்றது. சிறு சிறு தேர்களில் பெருமானின் திருவடிவச் சிலைகள், மயில் இறகுகள், வண்ண வண்ண தாட்கள், சங்கிலிகள், முட்கள், வளையங்கள் போன்றவற்றை இழுத்தும் தூக்கியும் செல்வது அடிப்படையில் சமய நோக்கிற்கு முரணானவை என்பதனைத் தெளிதல் வேண்டும்.
            அரிவாள் மீது நடத்தல், அலகு குத்துதல், சாட்டை வீசிச் செல்லல், தீச்சட்டி ஏந்துதல், குங்குமத்தைக் கொட்டிக் கொண்டுச் செல்லல், முதுகிலே முள்ளை மாட்டிப் பின்னால் பிறர் பிடித்து இழுக்க நடந்து செல்லல், முதுகில் முள்ளை மாட்டிப் பாரந்தூக்கிகளில் தொங்குதல் போன்றவை பெருமானுக்குத் திருமஞ்சனப் பொருட்களைத் தைப்பூசத்தன்று சேர்ப்பித்தல் எனும் அடிப்படை நோக்கிலிருந்து விலகியவை. இவ்வாறு செய்வது செய்பவருக்கும் பிறருக்கும் இறையன்பை மேலிடச் செய்வதற்குத் துணை நிற்குமா என்று என்ணிப் பார்த்தல் நலம். இறையன்போடும் பணிவோடும் இறைவனின் திருமுன்பு தைப்பூசத்தன்று செல்ல வேண்டியவர்கள் சற்றும் மரியாதையும் நன்னெறியும் இன்றிச் சுருட்டுக்களைப் புகைத்துக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் சாட்டையை வீசிக் கொண்டும் செல்வது பெருமானின் திருமுன்பு ஆணவப் போக்காய் அமைவது என்பதனை உணரல் வேண்டும். இது சைவ சமய விழாவாகியத் தைப்பூசப் பெருவிழாவிற்கு முரணானது மட்டும் அல்லாது சைவசமய நெறிக்கும் ஏற்புடையது அன்று.
            தைப்பூசத் திருவிழாவில் சிலர் பெண்களைப் போன்று உடை அணிந்து கொண்டும் போலி மயிரைத் தலையில் வைத்துக் கொண்டும் கோரத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டும் செல்வர். சிலர் வெறியாடுவதாகவும் அவர்களின் மேல் சிறு தெய்வங்கள், காவல் தெய்வங்கள் நின்று மருள் ஆடுவதாகவும் குறிப்பிடுவர். இத்தகையோரின் மேல் நின்று ஆடுவதாகக் குறிக்கப் பெறும் சிறுதெய்வங்கள் எதுவாக இருப்பினும் பரம்பொருளான முருகனின் முன்பு அடக்கமும் பணிவும் கொண்டு அமைதியாய்ச் சென்று வழிபடுதலே முறையாகும்.
            இறைவனின் திருமுன்பு நமக்கென்று பெருமை கிடையாது, அழகு கிடையாது, மானம் கிடையாது என்று குறிப்பிடுவதற்குத்தான் மானத்தின் அடையாளமாக விளங்கும் தலைமயிரை மலித்தல் அல்லது மொட்டை அடித்துக் கொள்ளுதல் எனும் வழக்கம் ஏற்பட்டது. மொட்டை அடித்தத் தலையின் மீது படும் வெய்யிலையும் அதனால் ஏற்படும் சூட்டினையும் குறைக்கவே குளிர்ச்சியைக் கொடுக்கும் சந்தனத்தைக் காப்பாக மொட்டை அடித்தவர் தலையில் பூசினர். பின்பு அதன் உண்மை விளங்காது பெருமானுக்கு முடி காணிக்கைச் செலுத்துவது என்று ஆகிவிட்டது. நம் தலை மயிர் இறைவனுக்கு வேண்டுவது என்பது இல்லை என்பதனைக் கருத்தில் கொள்ளல் நன்மை பயக்கும்.
            தைப்பூசப் பெருவிழா இறையுணர்வை மேலோங்கச் செய்யும் திருவிழா என்பதனை நினைவில் கொண்டு அனைத்துக் கேளிக்கைக் கூறுகளையும் அத்திருவிழாவின்போது தவிர்த்தலுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பொறுப்பற்றச் சிலரின் ஆட்டமும் பாட்டமும் ஒருபுறம் நம் சமயத்திற்கு இழிவை ஏற்படுத்தி நிற்க, தூய்மையையும் ஒழுங்கையும் பேணாத இன்னும் சிலரின் போக்கு பிற இனத்தவரின் மத்தியில் நமக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
            தைப்பூசம் கொண்டாடப்படும் திருக்கோயில்களின் வளாகங்களில் விற்கப்படும் பொருட்கள், ஒலியேற்றப்படும் பாடல்கள், உணவு வகைகள் போன்றவை தைப்பூசத் திருவிழாவை வெறும் கேளிக்கைச் சந்தையைப் போன்று ஆக்கி விடாமல் இருப்பதனை உரியவர்கள் உறுதி செய்ய வேண்டும். தைப்பூசத் திருவிழா, பெருமானை வழிபடவும் இறையுணர்வை மேலிடச் செய்யவும் உள்ள பெருவிழா என்பதனைச் சிறு அகவை முதலே பிள்ளைகளுக்குச் சொல்லிப் பழக்க வேண்டும். பெரியவர்களும் இறைவழிபாட்டிற்குச் செல்லும் நோக்கோடு தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு இளைய தலைமுறையினருக்கு நல்ல எடுத்துக் காட்டாய்த் திகழ வேண்டும். சிந்திப்போம், செயல்படுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!