திங்கள், 8 பிப்ரவரி, 2016

5. ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க Aagamam Aagi

5. ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

                பிறவி எனும் பிணியை அறுக்கவும் பெருமானின் திருவடியை அடையவும் எல்லை இல்லா நிலைத்த இன்பத்தில் திளைக்கவும் வழிகாட்டுபவை சிவ ஆகமங்கள். செந்தமிழ்ச் சிவ ஆகமங்கள் இருபத்து எட்டு. சிவ ஆகமங்கள் சிதாந்தச் சைவர்களின் சமயக் கொள்கைகளை விளக்குவனவாக உள்ளன. இச்சிவ ஆகமங்களை அருளியவன் சிவபெருமானே என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். தவிர சிவ ஆகமங்களில் குறிக்கப் பெற்று இருக்கின்ற நெறியின் படி நின்றால்  கற்பனைக்கும் அப்பாற்பட்டு இருக்கின்ற அப்பரம்பொருள் நம்மை நெருங்கி வருவான் என்பதனை, “ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் என்றும் மணிவாசகர் மேலும் குறிப்பிடுகின்றார். சிவ ஆகமங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிவ ஆகமங்களின் முதல் பகுதி திருக்கோயில் கட்டுதல், பெருமானின் திருவுரு அமைத்தல், நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு போன்றவற்றைச் செய்ய வேண்டிய முதன்மைகளை வகுத்துக் கூறும் செய்கைப் பகுதி என இருக்கின்றது. இதனைக் கரும காண்டம் என்று வடமொழியில் குறிப்பிடுவர்.
                சிவ ஆகமங்களின் இரண்டாம் பிரிவானது மேற்கூறிய திருக்கோயில், திருவுரு, நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு போன்றவற்றின் வழிபாட்டு முறைமையைப் பின்பற்றுதலை விளக்கும் பகுதியாக உள்ளது. இதனை உபாசனை காண்டம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். சிவ ஆகமங்களின் மூன்றாம் பிரிவு திருக்கோயில், திருவுரு, நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு போன்றவற்றின் உண்மைப் பொருளைத் தெளிவிக்கும் பகுதியாகவுள்ளது. இதனை ஞான காண்டம் என்று வடமொழியில் குறிப்பிடுவார். இறைவன், உயிர், தளை என்கின்ற முப்பொருளின் உண்மையினைத் தெளிவிக்கும் பிரிவாகவும் இது விளங்குகின்றது.
                இருபத்தெட்டு சிவ ஆகமங்களையும் சிவபெருமான் தனது பேர் அருளின் கரணியமாக அருளோன் எனும் சதாசிவத் திருவடிவில் தனக்குள்ள ஐந்து திருமுகங்களில், உச்சித் திருமுகம் எனப்படும் அஞ்சா முகத்தின் வழி அருளினான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பெருமான் ஆதியில் கல் ஆல மரத்தின் நீழலிலும் பின்பு மகேந்திர மலையிலும் அதன் பின்பு திருப்புறம்பயத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் சிவ ஆகமங்களை அருளினான் என்றும் அவை மறைந்து போயின என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
                சிவம் என்னும் மேலான பரம்பொருளின் பேர் அருளால் சிவ ஆகமங்கள் அன்னையாகிய பராசத்திக்கும் பெருமானால் உணர்த்தப் பெற்றது என்பார் திருமூலர். பராசத்தியிடமிருந்து அருளோனாகிய சதாசிவத்திற்குச் சிவ ஆகமங்கள் சேர்ப்பிக்கப் பட்டன. சதாசிவத்திடமிருந்து ஆண்டானாகிய மகேசன் (மாஈசர்) வடிவிற்கும் மகேசனிடமிருந்து ஆசானாகிய நந்தி எம்பெருமானுக்கும் தரப்பெற்றது. இவ்வாறு தரப்பெற்ற இருபத்து எட்டு சிவ ஆகமங்களில் ஒன்பது ஆகமங்கள் மட்டுமே நந்தி எம்பெருமானுக்குக் கிட்டின என்பதனை, “சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம், உமா மகேசர் உருத்திர தேவர், தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற, நவஆகமம் எங்கள் நந்தி பெற்றானே என்று திருமூலர் குறிப்பிடுவார்.
                சிவம் என்ற பரம்பொருளின் பேர் அருளால் நந்தி எம்பெருமான் பெற்ற ஒன்பது சிவ ஆகமங்கள் காரண ஆகமம், காமிக ஆகமம், வீர ஆகமம், சிந்தம் ஆகமம், வாதுளம் ஆகமம், வியாமளம் ஆகமம், காலோத்தரம் ஆகமம், சுப்பிரம் ஆகமம், மகுடம் ஆகமம் என்பன என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நந்தி எம்பெருமானே பின்பு ஒன்பது சிவ ஆகமங்களைத் தமது எட்டு மாணவர்களுக்குப் போதித்தார் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை, “நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின், நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி, மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர், என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
                நந்தியெம் பெருமானாக, ஆல் அமர் செல்வராக (தட்சிணாமூர்த்தியாக) அமர்ந்து சிவ ஆகமங்களைப் பெருமான், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், சிவயோக மாமுனி, பதஞ்சலி எனும் பாம்புக்கால் முனிவர், வியாக்ரமர் எனும் புலிக்கால் முனிவர், திருமூலர் ஆகிய எண்மருக்கு ஒன்பது சிவ ஆகமங்களை அருளினார் என்பார் திருமூலர்.
                பெருமானின் பேர் அருளால் உரைத்த சிவ ஆகமங்கள், இவ்வெண்மரால் உலகில் சிவமடங்கள் அமைக்கப் பெற்றுத் தங்களுடைய மாணவர்களுக்குப் போதிக்கப் பெற்றன. பெருமானிடம் தெளிவு பெற்ற சனற்குமாரர் அவரது மாணவர் சத்தியஞானதரிசினிகள் என்பாருக்குப் போதித்தார். சத்தியஞானதரிசினிகள் தம் மாணவர் பரஞ்சோதியாருக்குப் போதித்தார். பரஞ்சோதியார் ஞானம் புகட்டிய மாணவரே மெய்கண்டார். மெய்கண்டார், ஆசான் மாணவர் முறைமையில்தான் சைவ உலகினுக்கு மெய்கண்ட மரபும் பதினான்கு மெய்கண்ட நூல்களும் கிட்டின. அம்மரபு வழிதான் நமக்குத் திருக்கயிலாய ஆசான் மரபும் திருவாவடுதுறை, தருமபுரம் போன்ற சைவ மடங்களும் அமைந்துள்ளன.
                பதஞ்சலியாகிய பாம்புக்கால் முனிவரும் வியாக்கரமர் எனும் புலிக்கால் முனிவரும் வடநாட்டிலும் சிதம்பரத்திலும் மடங்கள் அமைத்துச் சிவ ஆகமங்களைப் பரப்பினர். சிவயோக மாமுனி தென்னாட்டில் பல சித்தர் மடங்களை உருவாக்கினார். பெருமானின் பேர் அருளால் ஒன்பது சிவ ஆகமங்கள் பெறப் பெற்றத் திருமூலர் அவற்றை ஒன்பது தந்திரங்களாக அமைத்துத் தீந்தமிழில் மூவாயிரம் மந்திரங்கள் என திருமந்திரமாக அருளினார். திருவாவடுதுறையில் பெருமானின் பேர் அருளால், மூலன் எனும் மாடு மேய்ப்பவனின் உடலில் இருந்து அரிய சிவ ஆகமங்களை நல்ல தமிழில் நமக்கு அருளினார்.

                முதல் தந்திரத்தைக் காரண ஆகமத்தின் சாரமாகவும், இரண்டாம் தந்திரத்தைக் காமிக ஆகமத்தின் சாரமாகவும், மூன்றாம் தந்திரத்தை வீர ஆகமத்தின் சாரமாகவும், நான்காம் தந்திரத்தைச் சிந்தியாகமத்தின் சாரமாகவும், ஐந்தாம் தந்திரத்தை வாதுள ஆகமத்தின் சாரமாகவும், ஆறாம் தந்திரத்தை வியாமள ஆகமத்தின் சாரமாகவும், ஏழாம் தந்திரத்தைக் காலோத்திர ஆகமத்தின் சாரமாகவும், எட்டாம் தந்திரத்தைச் சுப்பிரபேத ஆகமத்தின் சாரமாகவும், ஒன்பதாம் தந்திரத்தை மகுட ஆகமத்தின் சாரமாகவும் ஆக்கித் தந்தார். பெருமானின் பேர் அருளே தம்மைச் செந்தமிழ் சிவ ஆகமங்களை மூவாயிரம் திருமந்திரப் பாடல்களாகப் பாடச் செய்தது என்பதனை, “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்றும், மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது என்றும் திருமூலர் சுட்டுவதன் வழி அறியலாம். இதனையே ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் என்று மணிவாசகரும் குறிப்பிடுகின்றார். 

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக