வியாழன், 22 ஜூன், 2017

4. திருக்கோயில் வழிபாட்டில் திருக்கோபுர வணக்கம்/Thirukkovil Valipaattil Thirukobura Vanakkam

4. திருக்கோயில் வழிபாட்டில் திருக்கோபுர வணக்கம்

      திருக்கோவில் வழிபாட்டில் திருக்கோபுர வணக்கம் முதன்மை பெறுகின்றது. இல்லத்தில் இறை வழிபாட்டை முடித்துக் கொண்டு, தமிழர் பண்பாட்டு உடைகளை அணிந்து கொண்டு, குடும்பத்தோடு திருக்கோயில்களுக்குச் செல்லும் நம்மைத் தொலைவிலேயே உயரே நின்று வரவேற்பது திருக்கோபுரம் ஆகும். நான்கு திசைகளிலும் இருந்து வருகின்றவர்களை வரவேற்க நான்கு நுழைவாயில்களாகத் திருக்கோவில்களில் நான்கு திசைகளிலும் திருக்கோபுரம் அமைக்கும் வழக்கம் சீர்மிகு தமிழ்ச் சைவர்களிடையே இருந்துள்ளது. இத்தகைய நாற்றிசைக்குமான திருக்கோபுரங்கள் அமைக்கப் பெற்றுள்ள திருக்கோயில்களாகத் தில்லைச் சிற்றம்பலம், திருக்காளத்தி, மதுரை திருஆலவாய், திருவாரூர் புற்றிடங்கொண்டார் போன்ற திருக்கோயிகளைக் குறிப்பிடலாம்.

      தில்லைச் சிற்றம்பலத் திருக்கோவிலுக்குத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களும் நான்கு திசைத் திருக்கோபுரங்களின் வழி நுழந்ததாகத் திருமுறைகளில் செய்தி உண்டு. ஊரிலேயே மிக உயர்ந்த கட்டடமாகத் திருக்கோவில் திருக்கோபுரத்தைத் தமிழர்கள் அமைத்தார்கள். எல்லா உலகங்களையும் அண்டங்களையும் உயிர்களையும் அரசு ஆளும் பெருமானின் இல்லமாகிய கோ+இல் தங்கள் இருப்பிடங்களைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் இத்திருக்கோபுரங்கள் கண்களுக்குத் தென்பட வேண்டும் என்று எண்ணினார்கள். இதனால் இறைச் சிந்தனையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

      திருக்கோவிலுக்குச் செல்கின்ற நாம், இத்திருக்கோவில் திருக்கோபுரத்தைக் கண்டவுடனேயே வணங்க வேண்டும் என்றார்கள். மதுரைக்கு அடியார்களுடன் திருப்பல்லக்கில் அமர்ந்து வந்த திருஞானசம்பந்தர், திருவாலவாய் அண்ணல் திருக்கோவில் திருக்கோபுரத்தைக் கண்டவுடனேயே திருப்பல்லக்கில் இருந்து இறங்கி, மதுரை ஊர் எல்லையிலேயே தரையில் வீழ்ந்து வணங்கினார் என்று தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.

சிவன் திருக்கோவில் திருக்கோபுரமானது திருக்கோவில் கருவறையில் இருக்கின்ற சிவக்கொழுந்தின்(சிவலிங்கத்தின்) வெளித்தோற்றம் என்று சமய நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனைத் தூல இலிங்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். திருக்கோவில் திருக்கோபுரத்தைச் சிவக்கொழுந்தாகவே எண்ணி வணங்க வேண்டும் என்பது இதனால் விளங்கும். திருக்கோவில் அமைப்பு முறையில் ஒருவர் தரையில் கிடப்பது போன்று திருக்கோயில் அமைக்கப் பெறும் என்று சிவஆகமங்களில் குறிக்கப்பெறுகின்றது. ஒருவரின் கால்கள் முதல் உச்சந்தலை வரைக்குமான அமைப்பு முறையில் அமைக்கப் பெறும் திருக்கோவிலில் திருக்கோபுரம் அவரின் பாதத்தை உணர்த்தி நிற்பதாய்க் குறிக்கப்பெறும். இதற்கு ஏற்றாற்போல் திருக்கோபுரத்தின் உச்சியில் ஐந்து விரல்களைப் போல் ஐந்து கலசங்கள் இடம்பெற்றிருக்கும். இவை திருக்கோவிலில் விளங்கும் மந்திர ஆற்றல்களை உயரே நின்று ஊருக்கு பரப்பும் கருவிகளாக விளங்குபவை ஆகும்.

திருக்கோவில் திருக்கோபுரங்கள் பொதுவாக மூன்று அடுக்குகள், ஐந்து அடுக்குகள், ஏழு அடுக்குகள் என்று காணப்பெறும். இவற்றை நிலைகள் என்று குறிப்பிடுவர். மூன்று நிலை திருக்கோபுரம் பெருமான் மூவுலகங்களையும் ஆளும் நான்முகன், திருமால், சிவன் எனும் மும்மூர்த்தியாக விளங்குகின்றான் என்பதனை உணர்த்துவதாகக் குறிப்பிடுவர். ஐந்து நிலைத் திருக்கோபுரம் பெருமான் நான்முகன், திருமால், சிவன், மாஈசன், சதாசிவன் என்னும் ஐந்து வடிவில் விளங்குகின்றான் என்பதனைக் குறிக்கும் என்பர். ஏழு நிலைத் திருக்கோபுரம் என்பது ஏழு வகைப் பிறப்பினுக்கு உட்படும் உயிர்களுக்கு அவனே தலைவன் என்பதனைக் குறிக்கும் என்பர்.

திருக்கோயில் திருக்கோபுரங்களில் பல்வேறு சிற்பங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப் பெற்றிருக்கும். இவை சீர்மிகு செந்தமிழரின் சிற்பக்கலை நுண்ணறிவினுக்குச் சான்றாய் விளங்குபவை. இச்சிற்பங்கள் வெவ்வேறு கோணங்களில் நம் அறிவினை விளக்கும் களஞ்சியங்களாக அமைக்கப்பெறும். சில திருக்கோவில்களில் கருவறையில் உள்ள மூல மூர்த்தியின் பல்வேறு வடிவங்களையும் அடியார்கள் வாழ்வில் அக்கடவுள் நிகழ்த்திய அருள் நிகழ்ச்சிகளை உணர்த்துவதாயும் அமைக்கப் பெற்றிருக்கும். சில வேளைகளில் புராணங்களில் இடம்பெற்றுள்ள செய்திகளை வெளிப்படுத்துவனவாக அமைக்கப்பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக முருகன் ஒளவையுடன் திருவிளையாடல் புரிந்தது, சிவபெருமான் அடியவராக வந்து சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து ஆண்டது, வானவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தது, அம்மை மயில் வடிவில் பூசனை இயற்றியது போன்றவை ஆகும்.

இத்தகையத் திருக்கோவில் திருக்கோபுரங்களைக் காண்கையில் நம் உள்ளம் அப்பெருமானின் திருப்பெருமையை உணர்ந்து, அப்பெருமானின் திருவடியில் குவிவதனாலேயே திருக்கோயில் திருக்கோபுர வணக்கம் முதன்மை பெறுகின்றது.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!



3. திருக்கோவிலுக்குச் செல்லும் முறை/ Thirukkovilukku Sellum Murai

3.  திருக்கோவிலுக்குச் செல்லும் முறை

                “புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை, வாய்மையால் காணப் படும்என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். ஒருவர் புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும். அதுபோல, அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும் என்பார். திருக்கோவில் வழிபாட்டிற்குச் செல்லும் முறையில் புறத் தூய்மையும் அகத்தூய்மையும் இன்றியமையாததாகக் குறிக்கப் பெறுகின்றன. இதனாலேயே திருக்கோவிலுக்குச் செல்லும் முன்பு வீட்டில் குளித்து உடலைத் தூய்மை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. குளித்த பின்பு தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. குளிப்பது உடலில் உள்ள புற அழுக்கினைப் போக்கி, உடல் அயர்ச்சியை நீக்கிப் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துகின்றது. குளிர்ந்த நீரில் நீராடுதல் மன அமைதியை ஏற்படுத்துகின்றது. தூய்மையான ஆடைகள் புதுத்தெம்பையும் புதுப்பொலிவையும் ஏற்படுத்துகின்றது. இது புற அளவில் நம்மைத் தயார் செய்து கொள்வதற்கு வேண்டுவதாகிறது.

                திருக்கோவிலுக்குச் செல்லும்போது தூமையான ஆடைகளை அணிந்து செல்வதோடு மட்டும் அல்லாமல் முறையான ஆடைகளை அணிவதும் முதன்மையானது. உடம்போடு ஒட்டிக் கொண்டுள்ள இறுக்கமான ஆடைகளும் அதிமெல்லிய ஆடைகளும் அரைகுறை ஆடைகளும் திருக்கோவிலுக்குச் செல்ல ஏற்றவை அல்ல! இத்தகைய ஆடைகள் திருக்கோவில் வழிபாட்டிற்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துபவை. இறுக்கமான ஆடைகள், நம் வழிபாட்டு முறைகளான, கைகளைத் தலைக்கு மேல் தூக்கி வணங்குதல், மண்டியிட்டுத் தொழுதல், தரையில் விழுந்து வணங்குதல் போன்றவற்றிற்கு இடங்கொடுக்காது.

                நம் திருக்கோவில் வழிபாட்டு முறையில் ஆண்கள் எட்டு உறுப்புக்கள் தரையில் படும்படியாக நெடுஞ்சான்கிடையாகத் தரையில் விழுந்து வழிபடுகின்ற முறையும் பெண்கள் ஐந்து உறுப்புக்கள் தரையில் படும்படியாக மண்டியிட்டு வழிபடும் முறையும் இருப்பதனால் இத்தைகைய பொருத்தம் இல்லாத உடைகள் சிக்கலை ஏற்படுத்தும். தவிர இறுக்கமான உடைகள் மன அழுத்தத்தையும் அவ்வுடைகளில் கட்டுண்டுக் கிடக்கின்ற உணர்வையும் ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும் இறுக்கமான ஆடைகள் எந்நேரத்திலும் கிழிந்து விடும் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு அல்லாமல் மற்றவரின் பார்வைப் பொருளாக நேரிடும் என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும். இது முழு மனதுடன் இறை சிந்தனையில் ஈடுபடுவதற்குத் தடையாய் அமைந்துவிடும்.

                அரைகுறையாக ஆடைகள், அத்தகைய ஆடைகளை அணிந்திருப்பவரின் கவனத்தை ஆடைகளின்பாலே செலுத்தி நிற்கும். அரைகுறையான ஆடைகளைச் சரி செய்வதிலும் அவை அளவுக்கு மீறிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதிலுமே கவனம் நிற்க, இறை சிந்தனையில் நிலைத்து நிற்பது என்பது கடினம் என்றாகிவிடும். அரைகுறை ஆடைகள், திருக்கோயில் வழிபாட்டிற்காக வருகின்றவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி அவர்களின் சிந்தனையைச் சிதற வைத்துவிடும். இது நம்மைத் திருக்கோயில் குற்றத்திற்கு ஆளாக்கி விடும். மேலும் திருக்கோயில் வழிபாட்டிற்கு வந்திருக்கின்றவர்களின் சினத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாக நேரிடும்.

                திருக்கோவிலுக்குச் செல்லுகையில் அளவிற்கு அதிகமான அணிகலன்களை அணிந்து செல்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அளவிற்கு அதிகமான அணிகலன்களை அணிந்து செல்வது வழிபாட்டிற்கு வருகின்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் திருடர்களினால் ஏற்படும் அல்லலுக்கு ஆளாகி, விலையுயர்ந்த உடைமைப் பொருள்களை இழக்க நேரிடும். கைகளை உயர்த்தினால் ஒலி எழுப்பும் கண்ணாடி வளையல்கள், நடந்தால் அதிக ஒலியை எழுப்பும் கொலுசுகள் போன்ற அணிகலன்கள் திருக்கோவிலில் மனத்தை ஒருநிலைப்படுத்த முற்படுகின்றவர்களின் முயற்சியைச் சிதைக்கும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.திருக்கோவில் இறைவனை எளிமையோடும் பணிவோடும் வழிபடுகின்ற இடம் என்ற உணர்வு ஏற்படுமாயின் அழகு குறித்த சிந்தனையும் ஆடம்பரம் குறித்த சிந்தனையும் பிறரின் கவனத்தை ஈர்க்க குறித்த சிந்தனையும் தானாக விட்டு ஒழியும்.

                திருக்கோவில்களுக்குச் செல்லும்போது கூடுமான அளவு நம் தமிழர் பண்பாட்டு உடைகளை அணிந்து செல்வதே சாலச் சிறந்தது. புடவை, பாவாடை தாவணி, வேட்டிச் சட்டை என்பவற்றை அணிந்து செல்வதனால் பார்ப்பதற்கு அழகாகவும் பண்பாட்டுடனும் விளங்கும். புடவை அணிகின்றவர்கள் உடலின் வளைவு நெளிவுகளை வெளிக்காட்டாதவாறு அணிதல் நலம். பஞ்சாபியர் உடைகளை அணிகின்றவர்களும் அதிமெல்லிய ஆடைகளை அணியாமலும் உடலோடு ஒட்டிக் கொண்டுள்ள ஆடைகளை அணிந்து திருக்கோவில் செல்லாமல் இருப்பது நலம். இதுவும் பிறரின் இறை சிந்தனையைக் கெடுத்த குற்றத்திற்கு ஆளாகாமல் நம்மைக் காக்கும். நம் முன்னோர்கள் அவர்களின் அறிவுக் கூர்மையால் ஏற்படுத்திக் கொடுத்துள்ள நம் பண்பாட்டுக் கூறுகளில் ஆடையும் ஒன்று. அதனைச் சீர்கெடாமல், தொலைத்து விடாமல், வரும் தலைமுறையினருக்குக் கருத்தாய்க் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதனை மறந்து விடக் கூடாது.

                இரவில் உறங்குவதற்கு அணியும் ஆடைகள் (மெக்சி, நைட்டி), அரைக்காற் சட்டைகள், உள் பனியன்கள், கைலிகள், டி சட்டைகள் போன்றவற்றைத் தவிர்த்து விடல் நலம். முறையற்ற ஆடைகளுடனும் பண்பற்றத் தோற்றத்துடனும் திருக்கோவில்களுக்குச் செல்லும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் திருத்த வேண்டும். அதற்குப் பெற்றோர்களும் பெரியவர்களும் முதலில் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். வளர்ந்த பெண்கள் தலை மயிரை சீராக வாறி முடிந்து, பூச்சூடி, நெற்றியில் பொட்டு இட்டு, திருநீறு போன்ற சமயச் சின்னங்களை அணிந்து சிறு பிள்ளைகளுக்கு எட்டுத்துக்காட்டாக அமைய வேண்டும். புடவை, வேட்டி அணியும் அரிய கலையைப் பெரியவர்கள் பின்பற்றத் தவறியதால் இன்று பெரும்பாலான இளைஞர்களும் இளம் பெண்களும் வேட்டி, புடவை எனும் நம் பாரம்பரிய உடையை அணியத் தெரியாத இழிவு ஏற்பட்டுள்ளது.

                முறையான ஆடைகளையும் சமயச் சின்னங்களையும் அணிந்த பின்பு திருக்கோவிலுக்குச் செல்லுமுன் வீட்டில் வழிபாடு முதலில் இயற்ற வேண்டும் எனும் முறை உள்ளது. இல்லத்தில் வழிபாடு இயற்றிய பின் திருக்கோவிலுக்குச் செல்லும்போது வழிபாட்டிற்கு உரிய பூசனைப் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் மலர், வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எண்ணெய் போன்றவற்றை எடுத்துச் செல்லல் வேண்டும். குறைந்தது மலர்களையாவது எடுத்துச் செல்ல வேண்டும். இவை அல்லாது, திருமஞ்சனத்திற்கு உரிய பால், தேன், இளநீர், கருப்பஞ்சாறு, நெய் போன்றவற்றையும் கொண்டு செல்லலாம். இவ்வாறு திருக்கோவிலுக்குச் செல்லும் போது இறைவனின் திருப்பெயரையோ, திருவைந்து எழுத்து மந்திரத்தையோ, திருமுறைகளையோ சொல்லிக் கொண்டு இறை எண்ணமாகவே திருக்கோவிலைச் சென்று அடைய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.

                இயன்ற அளவு திருக்கோவிலுக்குச் செல்லும் முறையினைப் பின்பற்றி நம் சமயத்தின் சிறப்பினையும் உயர்வினையும் நிலைநிறுத்துவோம். நம் சமயத்தினையும் பண்பாட்டினையும் காப்பாற்றுகின்ற கடப்பாடு அனைவருக்கும் உண்டு என்பதனை உணர்வோம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

2. திருக்கோவிலுக்குச் செல்லும் காலம்/ Kovilukku Sellum Kaalam

2.  திருக்கோவிலுக்குச் செல்லும் காலம்

        தமிழ்ச் சைவர்கள் திருக்கோவில்களுக்குச் செல்வதற்கு உரிய நாள் செவ்வாய் அல்லது வெள்ளி என்று மயங்கிக் கிடக்கின்றனர். நாள்தோறும் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்றே தமிழ்ச் சைவர்களின் தீந்தமிழ் மந்திரங்களான திருமுறைகள் குறிப்பிடுகின்றன. நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவாநித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு” என்று திருநாவுக்க்கரசு அடிகளின் திருவாய்மொழி பகர்கின்றது. நாளும் உலக வாழ்க்கையில் சிக்கித் தடுமாறும் நெஞ்சேநீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால்நாள்தோறும் எம்பெருமானுடைய கோவிலுக்குச் செல்” என்று அறிவுறுத்துகிறார். இவ்வாறு நாள்தோறும் திருக்கோவில்களுக்குச் சென்று வழிபட இயலாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களாவது திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள் என்றார்கள். அதுவே பின்னாளில் வழிபடுவதற்கு உரிய நாள் செவ்வாயும் வெள்ளியும் என்றாகி விட்டது.

                வாரத்தில் இரண்டு நாட்கள் திருக்கோவிகளுக்குச் செல்ல இயலாதவர்கள்வாரத்தில் ஒரு நாளாவது திருக்கோவில்களுக்குக் குடும்பத்தோடு சென்று வழிபடச் சொன்னார்கள். இது வெள்ளிக் கிழமை திருக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு என்றாகி விட்டது. இவ்வாறு வாரத்திற்கு ஒரு நாள் என்று திருக்கோவில்களுக்குச் செல்வதற்குக்கூட இயலாதவருக்குத் திருவிழாக்காலங்கள் அல்லது ஆண்டுத் திருவிழாக் காலங்களிலாவது சென்று வருங்கள் என்று சொல்லி வைத்தார்கள். அதுவும் இயலாதவருக்குப் பெருமானே தெருக்கள்தோறும் இல்லங்கள்தோறும் ஊர் ஊராகத் தேடி வந்து அருள்புரிவதற்குத் தேர்த் திருவிழாக்களை நடத்தி வழிபட வைத்தார்கள்.

                ஒன்றாய் இருக்கின்ற பரம்பொருளின் பல்வேறு திருவடிவங்களைவேறு வேறு கடவுளாக வேறுபடுத்தி வழிபடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டப் பின்இன்ன கிழமை இன்ன கடவுளுக்கு உரிய நாள் எனும் வழக்கம் பெருகியிருக்கின்றது. திங்கட் கிழமை சிவனுக்கும் செவ்வாய்க் கிழமை துர்க்கைக்கும் வியாழக்கிழமை வியாழன் என்ற குருவுக்கும் காரிக்கிழமை சனச்சரன் எனும் சனீசுவரனுக்கும் என்று சிலர் ஏற்படுத்தி விட்டிருக்கின்றனர். இதனையொட்டியே இன்று பலரும் திருக்கோயிவில்களுக்குச் செல்லும் வழக்கமும் நாளும் மாறிக்கிடக்கின்றது.

வாரத்தில் வியாழக் கிழமை வியாழன் என்ற குருவுக்கு விளக்கு ஏற்றுவதற்கு மட்டும் திருக்கோவில் செல்பவர்கள் என்றாகிவிட்டது. காரிக் கிழமை சனச்சரனுக்கு மட்டும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று காரிக் கிழமை சனச்சரன் அமைந்திருக்கும் திருக்கோவில் பகுதிக்கு மட்டும் சென்று வருபவர்களும் உண்டு என்றாகிவிட்டது. எல்லா நாளும் எல்லா திருவடிவங்களையும் வணங்குவதற்கு உரிய நாள் என்பதே உண்மைச் சமயம் குறிப்பிடும் செய்தியாகும். விரதம் இருத்தல் எனும் உண்ணா நோன்பு கூட இன்ன நாளில் இன்ன கடவுளுக்கு இன்ன பலனுக்கு என்று உலகமுகப்படுத்தப்பட்டு விட்டது. உடற்சோர்வைப் புறந்தள்ளிசுறுசுறுப்புடன் ஒருமுகப்படுத்தப்பட்டச் சிந்தனையுடன் அன்போடு இறைவனைத் தொடர்ந்து எண்ண வேண்டும் என்பதே உண்ணா நோன்பின் நோக்கம்அதனை இயன்ற நாட்களில் செய்யலாம் என்பதே உண்மைச் சமயம். அதனை உலக நோக்கிற்காகச் செய்வது சைவநெறிக்குப் புறம்பானது.

திருக்கோவில்களில் நாள் வழிபாடு (நித்திய பூசனை)சிறப்பு வழிபாடு(நைமித்திக பூசனை) என்று இரண்டு வழிபாடுகள் நிகழ்த்தப் பெறும். நாள் வழிபாடு நாள்தோறும் திருக்கோவில்களில் நிகழ்த்தப் பெறும் பூசனை. சிறப்பு வழிபாடு திருவிழாக்காலங்களில் நிகழ்த்தப் பெறும் சிறப்பு வழிபாடு. பூசனைக் காலத்திற்குத் திருக்கோவில்களுக்குச் சென்று வழிபடுவதே சிறப்பு உடையதாகும். பூசனைக் காலத்தில் வழிபாட்டில் உள்ள அனைத்துக் கரணங்களும் (கிரியைகள்) முறையாக சிவஆகம நெறிப்படி நடத்தப்பெறும். ஒவ்வொரு பூசனைக் கரணமும் ஆழ்ந்த சமய உண்மையை உணர்த்துவதாக அமையும். பூசனையின் போது இயக்கப்படும் திருக்கோவில் மணிபூசனை மணிசங்குசேகண்டிமுழவம்நாதசுவரம்தாளம்மந்திரங்கள்திருமுறைகள் நம் உள்ளத்தில் இறையன்பை ஊற்றெடுக்கச் செய்யும். இவை மனம் ஒன்றுவதற்குத் துணை நிற்கும்.

திருக்கோவிலுக்குப் பூசனைக் காலத்தில் செல்வது அடியார் இணக்கத்திற்கும் திருக்கோவில் திருத்தொண்டுகள் ஆற்றுவதற்கும் வழிவகுக்கும். நம் சமயம் வலியுறுத்துகின்ற அடியார் வணக்கம்அடியார் இணக்கம் பூசனைக் காலம் அல்லாத வேளைகளில் கிட்டுவது கடினமே! பூசனைக் காலங்களிலும் திருவிழாக்காலங்களிலும் சிறப்பு வழிபாட்டுக் காலங்களிலும் திருக்கோவில்களுக்குச் சென்று வழிபடும்போது பெருமானின் திருப்பல்லக்கினைச் சுமத்தல்திருச்சின்னங்களை ஏந்துதல்கவரி வீசுதல்தீவத்தி ஏந்துதல்திருக்கோவில் மணியினை ஒலித்தல்திருமஞ்சனத்திற்குத் துணை நிற்றல்அடியார்க்கு அமுது பறிமாறுதல் போன்ற திருக்கோவில் திருத்தொண்டுகளைச் செய்யும் வாய்ப்புக் கிட்டும். இது போன்று பூசனைக் காலங்களில் திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நம் குடும்பத்தில் உள்ளவருக்கும் இளைய தலைமுறையினருக்கும் நல்ல வழிகாட்டுதலாய் அமைவதோடு இன ஒற்றுமையும் நற்பண்புகளும் மேலோங்க நலம் பயக்கும்.

நாள் வழிபாட்டில் திருக்கோவில்களில் ஆறுகாலப் பூசனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிகாலைகாலைநண்பகல்சாயுங்காலம்முன்னிரவுநள்ளிரவு என்று கதிரவனை அடிப்படையாகக் கொண்டுத் திருக்கோவில் பூசனைக் காலங்கள் குறிப்பிடப் பெறுகின்றது. இவ்வாறான காலப் பூசனைக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. இயலாத சூழலில் அவற்றைக் குறைத்து இயன்ற வேளை என்று வைத்துக் கொள்கிறோம். திருக்கோவில்களும் இடம்சூழல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு எத்தனை முறை காலப்பூசனைகளை இயற்றுவது என்று அமைத்துக் கொள்கின்றனர்.

திருக்கோவிலுக்குச் செல்ல இயலாத சூழலில்இருக்கின்ற இடத்திலேயேஇல்லத்திலோ அல்லது பணி இடங்களிலோ அக வழிபாடு இயற்றலாம் என்பதனையும் திருமுறைகள் குறிப்பிடுகின்றன. இறைவனை ஆறு வேளைதான் தொழ வேண்டும் என்பது இல்லாமல் எத்தனை வேளை வேண்டுமானாலும் வழிபடலாம். ஒவ்வொரு முறையும் நாம் உணவு உண்பதற்கு முன்பு இறைவனை வழிபட்டால்இறைவனை வழிபடும் கொள்கைப் பிடிப்பில் தவறாமல் நிற்கலாம் என்பதனை, “உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணுங்கள்” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.

இயன்றால் நாள்தோறும் குடும்பத்தோடு திருக்கோவிலுக்குச் செல்வதே சிறப்பு என்பதனைக் கருத்தில் கொள்வோம். அதிலும் பூசனை நேரத்திற்குச் செல்வோம். இயலாவிடில் இயன்ற நாட்களிலாவது திருக்கோவிலுக்குச் செல்லும் செல்லிம் வழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வோம். திருக்கோவில்தோறும் வீற்றிருந்து தன் திருவருளை வாறி வழங்கும் பெருமானின் திருக்கோயில்களைத் தேடிச் சென்று அவனின் திருவருளைப் பெறுவோம்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!



1. திருக்கோவில் வழிபாடு / Thirukkovil Valipadu

திருக்கோவில் வழிபாடு
                                “ஆலயம் தொழுவது சாலவும் நன்றுஎன்று ஔவை பிராட்டி குறிப்பிடுவார். மாலற நேயமும் மலிந்தவர் வேடமும், ஆலயம் தானும் அரன் எனத் தொழுமேஎன்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களின் தலைமணி நூலான, மெய்கண்டாரின் சிவஞான போதம் குறிப்பிடும். மெய்யன்பு உடைய அடியார்களின் திருவேடத்தையும் சிவனின் திருக்கோவிலையும் பரம்பொருளின் வடிவாகவே கண்டு வணங்க வேண்டும் என்று சிவஞானபோதம் குறிப்பிடுகின்றது.
                                “நாடும் நகரமும் நற்றிருக் கோவிலும், தேடித் திரிந்து சிவபெருமான் என்று, பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின், கூடிய நெஞ்சத்துக் கோவிலாக் கொள்வனேஎன்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருக்கோவில்களைத் தேடிச் சென்று, திருமுறைகளை ஓதி வழிபட்டால் நம் உள்ளம் ஒன்று படும். ஒன்று பட்ட உள்ளத்தைப் பெருமான் அவன் வாழும் கோவிலாக் கொள்வான் என்று திருமூலர் குறிப்பிடுவார்.
                                திருஞானசம்பந்தப் பெருமானும், “தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின், நாடிவந்தவர் நம்மையும் ஆட்கொள்வர், ஆடிப்பாடி அண்ணாமலை கைத்தொழ, ஓடிப்போம் நமது உள்ள வினைகளேஎன்று குறிப்பிடுவார். திருக்கோவில்களைத் தேடிச் சென்று வழிபட்டால் நம்மையும் ஒரு பொருட்டாக எண்ணிப் பெருமான் அருள் செய்வான். ஆடியும் பாடியும் அப்பெருமானை வழிபட்டால் நம் உள்ளத்தில் அறியாமை நீங்கிப் பெருமானின் அருள் ஒளி சிறக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
                                உண்மையான சமய நெறியைப் பின்பற்றி, இறைவனை அடைந்து காட்டிய நாயன்மார்களும் அருளாளர்களும் திருக்கோவில் வழிபாட்டைத் தவறாது மேற்கொண்டுள்ளனர். மூன்று அகவையே அடைந்த திருஞானசம்பந்தர் முதல் எண்பத்தொரு அகவையை எட்டிய திருநாவுக்கரசர் வரை நடந்தே திருக்கோவில்தொரும் சென்று வழிபட்டனர். சைவ அடியார்களின் வரலாற்றினைக் குறிப்பிடும் தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணத்தில், திருஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் சுந்தரரையும் திருக்கோவிலுக்கு வரச் சொல்லியே பெருமான் வெளிப்பட்டு அருளியிருக்கின்றான். திருக்கோயில்களிலேயே பெரும்பாலான அருள் நிகழ்ச்சிகள் அருளாளர்களின் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. திருமுறை ஆசிரியர்கள் திருக்கோவில்களிலேயே திருமுறைகளை அருளியிருக்கின்றனர். இதனால் திருக்கோவில் வழிபாட்டின் இன்றியமையாமை புலப்படுகின்றது.
                               உயிர் முற்றப் பெற்ற நாயன்மார்களும் (சீவன் முத்தர்கள்), திருமூலர், தாயுமானவர், கருவூர்த்தேவர் போன்ற சித்தர்களும் தவறாமல் திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இன்று திருக்கோயிவில்களுக்குச் சென்று வழிபடுதல் அறுகி வருகின்றது. திருக்கோவில்களுக்குச் செல்லத் தேவையில்லை என்ற கருத்து பெருகி வருகின்றது. திருக்கோவில்களுக்குச் செல்பவர்கள் சமயநெறியில் பிந்தங்கியவர்கள் அல்லது முதிர்ச்சிப் பெறாதவர்கள் என்று எண்ணப்படுகிறது. சிலர் திருக்கோவில்களுக்குச் செல்லாமல் தத்தம் குருமார்களுக்குக் கோவில் அமைத்து அங்கு அவர்களின் குருமார்களை வழிபடுகின்றனர். இன்னும் சிலர் திருக்கோவில்களுக்குச் செல்லாமல் பலவாறான பயிற்சி மையங்களிலேயே தங்களின் வாழ்நாளைக் கழித்து விடுகின்றனர்.
                பசுவின் உடலில் உள்ள குருதிதான் பாலாக மாறினாலும் பசுவின் மடியில் கறந்தால்தான் அது பாலாகக் கிடைப்பதுபோல் பரம்பொருள் எங்கும் எதிலும் விரவி இருப்பினும் அப்பரம்பொருளின் திருவருள் வெளிப்பட்டு விளங்கும் அருள்மையமாகத் திருக்கோவிலை அறிவியல் ஆராய்ச்சியுடனும் அருள் விளக்கத்துடனும் நம் முன்னோர் அமைத்துள்ளனர்.
                உயிரை ஒருமுகப்படுத்தும் நிலையமாக (ஆ+லயம்) விளங்க வேண்டியத் திருக்கோவில்கள், அந்நோக்கத்தில் இருந்து தவறி, மன அமைதிக்கும் ஆறுதலுக்கும் இறை அன்பினைச் செலுத்துவதற்கும் வழிவிடாமல் ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆரவாரத்திற்கும் பகட்டிற்கும் வணிகத்திற்கும் துணைபோகின்ற கூடாரமாக மாறிவிட்டச் சூழலும் இன்று பலர் திருக்கோவில்களுக்குச் செல்வதனைத் தவிர்த்து விட்டதற்குக் கரணியமாய் அமைந்து விடுகிறது. எனினும் திருக்கோவில் வழிபாடு இன்றியமையாதது என்று சைவ மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சிவ ஆகமங்களும் அடியார்களின் வரலாறுகளும் குறிப்பிடுவதால் எக்கரணியத்தையும் முன்வைக்காமல் திருக்கோவில் வழிபாட்டினைச் செய்வதற்குக் கடப்பாடு உடையவர்கள் ஆகின்றோம். குடும்பத்தோடு திருக்கோவில்களுக்குச் செல்வோம், அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாய் அமைவோம்.
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!
               


திங்கள், 12 ஜூன், 2017

36. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே / Aanth Agandra Nunniyane

36. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனேஎன்று மணிவாசகப் பெருமான், சிவபுராண வரிகளில் குறிப்பிடுவார். பல்வேறு மறைகள் அல்லது வேதங்கள் பெருமானை எங்களுடைய ஐயனே, நாதனே என்று பல்வேறாகத் துதித்தாலும் ஓலம் இட்டாலும் அவற்றிற்கு எட்டாமல் மேல் உயர்ந்தும் கீழ் ஆழ்ந்தும் அகன்றும் நுண்ணியனாய் இருப்பவனே என்று பொருள்படும்படி இவ்வரிகளின் வழி உரைக்கின்றார்.

                உயிர்கள் படிமுறையில் செவ்வி அடைவதற்கு அல்லது முதிர்ச்சி அடைவதற்குப் பெருமான் பல்வேறு வகையில், பல்வேறு மொழிகளில் சமய நூல்களைத் தாமாகவும் தம் அடியார்களின் மூலமும் அருளியுள்ளான். மொழி என்பது எவ்வாறு எந்த மொழியையும் குறிப்பிடாமல் பொதுவாக நிற்கின்றதோ அதைப்போன்று மறை அல்லது வேதம் என்பது எந்த மறையையும் அல்லது வேதத்தையும் குறிப்பிடாமல் பொதுவாய் நிற்பது. சீர்மிகு செந்தமிழர் வாழ்வில் சமய நெறிகளைப் புகட்டுகின்ற மறை அல்லது வேதங்கள் வடமொழியிலும் தமிழ்மொழியிலும் இடம் பெற்று உள்ளன. சமற்கிருதம் அல்லது வடமொழிச் சமய நூல்கள் அல்லது வேத நூல்கள் பொதுவாக இருக்கு, யசூர், சாமம், அதர்வனம் என்ற வடமொழி வேதங்களையும் அதன் முடிந்த முடிவையும் விளக்கி நிற்கின்றன. தமிழ்மொழியிலான மறைகள் அல்லது வேத நூல்கள் பெருவாறியாகச் சித்தாந்த சைவத்தையும் திருமாலியத்தையும் குறிப்பிடுபவையாக இருக்கின்றன.

                வேதங்கள் என்று குறிப்பிடுவதனை வடமொழி வேதம், தமிழ்ச் சித்தாந்த சைவம் எனும் அடிப்படையில் இங்குக் காணுகின்றோம். நால்வேதங்கள் பற்றிய வடமொழி வேதங்களும் சித்தாந்த சைவம் பற்றிய தமிழ் மறைநூல்களும் உயிர்கள் பெருமானைச் சென்று கூடும் நெறியினை உணர்த்துகின்றன.

                வடமொழி வேதங்களின் முடிவான முடிவை வேதாந்தம் என்பர். வேத வியாசர் அருளிய பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வடநாட்டிலிருந்து வந்து காஞ்சிபுரத்தின் காமக்கோடிப்பீடம் என்றும் சக்திப் பீடம் என்றும் அமைத்த ஆதி சங்கரர் ஏற்படுத்திய கொள்கையே வேதாந்தம் எனப்படுகின்றது. வடமொழி வேதங்கள் நான்கில் ஞானகாண்டமாக அமைந்திருப்பவை உபநிடதங்கள். இவ்வுபநிடதங்கள் குறிப்பிடுபவையே வேதாந்தம் எனப்படுகின்றது. வேதாந்தத்தைப் பின்பற்றுபவர் வேதாந்தி என்று அழைக்கப்படுவர். வேதாந்தத்தைக் கடைப்பிடித்து வெற்றி பெறுபவர் பிரம்ம ஞானம், பரஞானம் பெறுவர். இறைவன் சத்சித்ஆனந்த (உண்மை, அறிவு, இன்பம்) வடிவாக இருக்கின்றான் என்பது வேதாந்தக் கொள்கை. வேதாந்திகள் மெய்ப்பொருளை அல்லது பரம்பொருளைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிடுவர். பரப்பிரம்மத்தின் ஆற்றலால் உலகமும்(சகம்), உயிரும்(சீவன்) தோற்றத்திற்கு வருகின்றன என்று குறிப்பிடுவர். உலகமும் உயிர்களும் பிரம்மம் எனும் அறிவுப் பெருவெளியில் தோன்றவும் இருக்கவும் ஒடுங்கவும் செய்கின்றன என்கின்றன. உலகமும் உயிர்களும் தோன்றுதலும் இருத்தலும் ஒடுங்குதலும் மாயா காரியங்கள் எனப்படுகின்றன. உலகையும் உயிர்களையும் என்றும் நிலையானவை அல்ல என்று மாயாவாத நூல்கள் குறிப்பிடுகின்றன.

                கடலில் அலைகள் தோன்றுவது போலவும் கதிரவனிடத்து கதிர்கள் தோன்றுவது போலவும் எண்ணிலி சீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருந்து தோன்றி, இருந்து மீண்டும் பரமாத்மாவிலேயே ஒடுங்குகின்றன என்பது வேதாந்தக் கொள்கை. இக்கொள்கை பொருள் இரண்டு இல்லை எனும் அத்வைதக் கொள்கை எனப்படுகின்றது. உலகங்களும்(சகம்) சீவன்களும் பரமாத்மாவிற்கு உடலாக இருப்பதால், உடலையும் உடலுக்கு உரியவரையும் இரண்டாகப் பிரிக்க முடியாது என்கின்றது. உடல்களும் உயிர்களும் பரமாத்மாவின் உடற்கூறுகள் என்பதால் உலகங்களும் உயிர்களும் இரண்டு பொருள்கள் அல்ல! அவை ஒரே பொருளில் ஆனவை என்கின்றன. பரமாத்மா பரிபூரணப் பொருள் (நிறைவான பொருள்). உலகமும் உயிர்களும் பிரம்மமே. அவை பிரம்மத்திற்கு வேறானவை அல்ல என்று வேதாந்த வடமொழி வேதங்கள் குறிப்பிடுகின்றன. அத்வைதம் எனும் வேதத்தின் உட்பிரிவாக துவைதம், விசித்தாத்வைதம் எனும் பிரிவுகள் இருந்தாலும் பொருள் ஒன்றே என்பது வேதாந்தக் கொள்கையென வடமொழி வேதாந்த நூல்களான உபநிடதங்கள் விளக்குகின்றன. வேதாந்த நூல்கள் உயிர் பிரம்மமாகவே ஆகிவிடும் என்றும் உண்மைப் பொருள் ஒன்றே என்றும் இரண்டு இல்லை என்றும் குறிப்பிடுகின்றன.

தமிழ் வேதங்களாகத் தமிழ் மறைகளாகச் சொல்லப் பெறுபவை சித்தாந்த சைவ நூல்கள். சித்தாந்த சைவம் வடமொழி வேதத்திற்கு வேறுபட்டது. சித்தாந்த சைவம் 28 சிவ ஆகமங்களையும் 12 திருமுறைகளையும் 14 மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. பெருமானே கல் ஆல மரத்தின் கீழ் ஆசானாக வீற்று இருந்து சீலம், நோன்பு , செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்பதன் பொருளைப் பெருமான் உணர்த்த அறிந்தது.  சித்தாந்த சைவக் கோட்பாடு பெருமானாலேயே உணர்த்தப்பட்ட, "உள்ளது செயற்படும்" எனும் அடிப்படையில் அமைந்தது. சித்தாந்த சைவம், ஆகமாந்தம் சித்தாந்தம் என வழங்கி வருகின்றது. ஆசான் பரம்பரை முறையாக நிலைபெற்று விளங்கும் இக்கொள்கையினை இரௌரவ ஆகமத்தில் உள்ள பன்னிரண்டுச் சூத்திரங்களைத் தழுவித் தமிழில் பன்னிரண்டுச் சூத்திரங்களில் சிவஞானபோதம் எனும் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூலை மெய்கண்டார் அருளினார். மெய்கண்டாரைப் பின்பற்றி அருள்நந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் போன்றோர் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்களை அருளினர்.

மேலும் 27 திருமுறை ஆசிரியர்கள் 12 திருமுறைகளை அருளினர். 12 ஆம் திருமுறையில் தெய்வச் சேக்கிழார் இறைவனை அடையும் நெறிகளை அடைந்து காட்டிய 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றையும் அருளினார். சித்தாந்த சைவம் இறைவன், உயிர், உலகம் என்று பொருள்கள் மூன்றாக உள்ளன என்று குறிப்பிடுகின்றது. அவை என்றும் நிலையானவை என்றும் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிரிலும் உலகிலும் கலப்பினால் ஒன்றாயும் செலுத்தும் வகையால் உடனாயும் பொருள் தன்மையால் வேறாயும் உள்ளான் என்று குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவம் உயிர் அறிவினை இறைவனிடம் உயிர் கொள்ளும் இடையறாத அன்பினால் இறைவனால் அருளப்பெற்று இறை அறிவில் உயிர் அறிவு அடங்கி உயிர் தான் எனும் முனைப்பு இன்றித் தான் என்றும் இறைவன் என்றும் வேறுபாடு அற்ற பிரிப்பின்றி இரண்டு அற்ற நிலையை உணர்ந்து அந்நிலையில் பேரின்பமேதானாய் அழுந்தி விடும் என்று குறிப்பிடுகின்றது.

.இவ்வாறு வேதாந்த நூல்களும் சித்தாந்த நூல்களும் பலவாறு இறைவனைப் பற்றியும் அவனை அடையும் நெறிகளைப் பற்றியும் விளங்கக் கூறி நின்றாலும் அவற்றைக் கற்று விட்டடதனால் மட்டும் அந்நூல்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு எல்லாம் மேலாக ஆழ்ந்து அகன்ற நுண்ணியனாய் இருக்கும் எம்பெருமானை அளவிட்டுக் கூறவோ காட்டி உதவவோ இயலாது என்கின்றார் மணிவாசகர்.

பெருமானின் ஆழ்ந்த அகன்ற நுண்ணிய நிலையினை, வேத நூல்கள் அளவிட்டுக் கூறி முடிக்க முடியாத நிலையினை, இறைவனின் திருவடிக் கமலங்கள், கீழ் உலகங்கள் எழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும், அவனது திருமுடியோ எல்லாவற்றிற்கும் மேலுள்ள முடிவிடமாய் உள்ளது.  அவன் ஒரே வகையாக உள்ளவன் அல்லன். வேத முதலாக, விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் புகழ்ந்தாலும் சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற  நண்பன் என்றும்  மணிவாசகர் குறிப்பிடுவார். அத்தகைய பெருமானின் திருவடிகளை அன்பினால் வழிபட்டுச் சிக்கெனப் பிடித்துக் கொள்வோம்!
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!


35. விடைப்பாகா போற்றி / Vidaippaagaa Potri

35. விடைப்பாகா போற்றி

     பரம்பொருள் ஒன்று. அப்பரம்பொருளைச் சிவம் என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர் குறிபிடுவர். சிவம் எனும் பரம்பொருளின் ஆற்றலைத் திருவருள் ஆற்றல் அல்லது சத்தி என்பர். சிவம் எனும் பரம்பொருள் தனது சிறப்பு நிலையில் தனது திருவருளை வெளிப்படுத்தாது ஒன்றேயாய் நிற்கும். சிவம் எனும் பரம்பொருள் பொது நிலையில் தனது திருவருளை வெளிப்படுத்திச் சிவமும் சத்தியுமாய் நிற்கும். சிவமும் சத்தியும் தீயும் அதன் சூடும் போல ஒன்றை விட்டு ஒன்று பிரியாதது என்றும் சிவமும் சத்தியும் பிரிக்க முடியாதது என்றும் குறிப்பதற்காகச் சிவத்தின் ஒரு கூறாகச் சத்தியைக் குறிப்பிட்டனர். சிவத்தை ஆணாகவும் சிவத்தின் சத்தியைப் பெண்ணாகவும் உருவகித்தனர். இது ஒட்டியே சிவம் தனது பொது நிலையில் அம்மை அப்பராகவும் மாதொரு பாகனாகவும் ஆகினான். இதனையே விடைப்பாகா எனும் திருவாசகத்தின் சிவபுராண வரியில்  பாகா என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

     விடைப்பாகா எனும் சிவபுராண வரியில் விடை எனும் சொல்லும் உண்டு. விடை என்பது எருது அல்லது காளை என்பதனைக் குறிக்கும். தமிழ் மந்திரங்களானத் திருமுறைகளில் பெருமான் விடை ஏறுபவனாகக் குறிக்கப்படுகின்றது. பெருமான் விடையை ஊர்தியாகக் கொள்கின்றான் என்று குறிக்கப்படுகின்றது. தோடுடைய செவியன் விடைஏறிஎன்று தமிழ் ஞானசம்பந்தர் குறிப்பிடுவார். சைவ மெய்கண்ட நூல்களிலும் திருமுறைகளிலும் பெருமான் கொள்கின்ற விடை அறத்தை உணர்த்தி நிற்பதாகக் குறிப்பிடுகின்றது. பெருமான் உயிர்களுக்கு அருளும்போது அறத்தை அடிப்படையாகக் கொண்டே அருளுகின்றான் என்பதனைப் பெருமான் ஊர்தியாகக் கொள்ளும் விடை உணர்த்துகின்றது என்பர். இதனை ஒட்டியே திருக்கோயில்களில் விடையை, நெறிப்படுத்தும் விடையாகவும் (அதிகார நந்தி) பெருமானிடத்து இட்டுச் செல்லும் பலிபீடத்து முன் அமைந்த விடையாகவும்(வாகன நந்தி) அமைத்தனர்.

                பெருமான் உயிர்களுக்குத் தன்னிடத்தே உள்ள பேரின்பத்தினை அருளுவதற்குத் தம்முடைய அருட்செயலான ஐந்தொழிலைச் செய்கின்றான். ஐந்தொழில்களில் படைத்தல், காத்தல், துடைத்தல் என்ற மூன்று தொழில்களை உடம்பின் மீதும் மறைத்தல் அருளல் என்பவற்றை உயிரின் மீதும் செய்கின்றான்.   இறைவன் ஆற்றுகின்ற ஐந்தொழிலாவது உயிர்களைப் பிணித்துள்ள மலத்திற்கு ஏற்றவாறு வாழும் உலகங்களில் வாழ்வதற்குத் தேவையானவற்றைத் தோற்றுவித்தும் நிற்பித்தும் நீக்கியும் மறைப்பித்தும் திருவருளை அளிப்பித்தலாகும். உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள அறியாமையைப் போக்கிக் கொள்வதற்கு வாழுங்காலத்தில் பல பிறவிகளில் செயல்கள் செய்து முதிர்ச்சி பெற வேண்டியுள்ளது. அதற்கு உடல், (தனு) கருவி கரணங்கள் (கரணம்), உலகங்கள் (புவனம்) நுகர்ச்சிப் பொருள்கள் (போகங்கள்) தேவைப்படுகின்றன. இவற்றில் அழுந்தி உழன்றே உயிர்கள் பல பிறவிகளில் தங்களுடைய அறியாமையை இறைவன் அருளால் போக்கிக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவ்வகையில் ஒவ்வொரு உயிரும் பெறவேண்டியவற்றை சீர் தூக்கி, நடுநிலைமையோடு, விருப்பு வெறுப்பு இன்றிப் பெருமான் அருளுதலையே அறத்தை அடிப்படையாகக் கொள்ளுதல் என்றனர். இதனையே, “விடைப்பாகாஎனும் வரியில் மணிவாசகர் சுருங்கக் குறிப்பிடுகின்றார்.   

       மாந்தர், தேவர், கணங்கள், அசுரர், விலங்குகள், பேய், பறவை, பாம்பு, மீன், பூச்சி, புல் பூடு, மரம் என்று எல்லா உயிர் வகைகளின் உடம்பையும் இறைவன் படைத்து, எந்த உயிர் எவ்வகைப் பிறப்பிற்கான உடலுக்குள் செல்ல வேண்டும் என்பதனை அறத்தின் அடிப்படையிலேயே உறுதி செய்து, இறைவனால் படைக்கப்படாத உயிர்களை அவற்றின் உட்புகுத்துகின்றான் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே விடைப்பாகா என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

   உயிர்களுக்குத் தேவையான பல்வேறு உலகங்களைத் தோற்றுவித்து அவற்றின் வினைக்கீடாக அவற்றை அங்கே வாழ வைக்கின்றான். அண்டங்கள், கோள்கள், விண்மீன்கள், கதி, மதி என்று பல்வேறு உலகங்களைத் தோற்றுவித்து அவற்றில் உயிர்களை அரு உடலோடும், உரு உடலோடும் வாழ விடுகின்றான். அந்தந்த உலகங்களில் வாழ்வதற்குத் தேவையான நிலம், நீர், தீ, வளி, வெளி என்று ஐம்பூதங்களைத் தோற்றுவித்து அருளுகின்றான். உயிர்கள் அவற்றின் அறியாமை மறைப்புக்கு ஏற்றவாறு இறையறிவு பெறும் வகையில் உடலில் உட்கருவிகளைப் பொருத்துகின்றான். அவை மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் மனவெழுச்சியாகும். இவை பொறுத்தப்படுவதனாலேயே உயிர்கள் இறைவன் திருவருளைத் துணைக்கொண்டு அவனை நாடி தங்களைப் பிணித்துள்ள அறியாமையைப் போக்கிக் கொள்கின்றன.

         நம் போன்ற மக்களுக்குத் தேவையான நுகர்ச்சிப் பொருள்களையும் பிற உயிர் வகைகளுக்குத் தேவையான நுகர்ச்சிப் பொருள்களையும் அறத்தின் வழி நின்று அவனின் பேர் அருள் இயல்பால் இறைவனே உணர்ந்து தானே அளிக்கின்றான். இதனைத்தான் திருவள்ளுவ நாயனாரும், “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிதுஎன்றார். அதாவது இறைவன் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது என்பதாம். மக்களாகிய நமக்கு இவ்வுலகில் நுகர்வதற்கென மனை, வீடு, மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள், பொன், பொருள், உடை, உணவு என்று இறைவனே நமக்கு நுகர்ச்சிப் பொருள்களைக் கூட்டுவிக்கின்றான். அதனை நுகரச் செய்விக்கின்றான். இதனைத்தான் மாணிக்கத் தமிழில் பாடிய மாணிக்கவாசக அடிகள், “வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீஎன்று குறிப்பிடுகிறார். அழகு தமிழில் பாடிய சுந்தரர் பெருமானோ, “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைஎன்று குறிப்பிடுகின்றார்.

         உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம் என்ற அறியாமையைச் செய்யக் கூடிய பொருளின் வலிமையைக் குறைக்கவும் அறியாமையைப் போக்கவும் இறைவன் அயனாய் நின்று படைத்த உடல், உலகம், கருவிகள், நுகர்ச்சிப் பொருள்கள் இவை யாவற்றையும் நிறுத்திக் காப்பதே காத்தல் தொழில்.

       உயிர்கள் பெற வேண்டிய உணர்வினை, அறிவினை, படிப்பினையைப் பெறும் வரையிலும் ஒரு பொருள் நம்மிடம் இருக்கும்படியாக அதனைத் தற்காத்து நிலைநிறுத்துவதே பெருமான் இயற்றும் காத்தல் தொழிலாகும். இத்தொழிலைச் செய்யுங்கால் பெருமானைத் அரி என்கிறோம். பெருமானே நம் உடல் நலத்தைக் காக்கின்றான். பெருமானே நாம் சரியான உணவு முறைமைகளைக் கொள்ளவும் நோய் நொடியின்றி நலமுடன் நிற்கவும் தோன்றாத் துணையாய் நின்று காக்கின்றான். பெருமானே வேண்டுங்காலம் வரையிலும் நம் கண் பார்வை, கைகால் விளக்கம், இதயத் துடிப்பு, குருதியோட்டம் உடற்கூறுகள் என்று அனைத்தையும் ஒவ்வொரு பிறவியிலும் வேண்டுங்காலம் வரையும் காத்து நிற்கின்றான். இவற்றையும் அறத்தினையும் அருளையும் துணையாகக் கொண்டே செய்கின்றான் என்பதனையே, “விடைப்பாகாஎன்று மணிவாசகர் குறிப்பிட்டார்.

                பெருமானே நம் மன நலனையும் நம் சித்த நலனையும் அறிவு நலனையும் நம் மனவெழுச்சியின் வேக நலனையும் காக்கின்றான். பெருமானே வெள்ளம், புயல், நிலநடுக்கம், எரிமலை, பேராழியின் சீற்றம் என்பனவற்றில் எல்லாம் இருந்து நம்மைக் காக்கின்றான். பெருமானே பெருநிலத்தினைப் பேராழி கொள்ளாமலும் பேராழியும் நீர் நிலைகளும் வற்றி வரண்டு விடாமலும் நம் பொருட்டுக் காக்கின்றான். பெருமானே நம்மைச் சுற்றியுள்ள கோள்களையும் மரஞ்செடிக் கொடிகளையும், காய் கனிகளையும், புள்ளினங்களையும் விலங்குகளையும், மீன்களையும், பூச்சிகளையும் அவ்வவ்வகை உயிரினங்களின் வாழ்க்கைத் தேவைக்கு  ஏற்ப காக்கின்றான்.

                பெருமானே நம் மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள், பணம், பொன், பொருள், வீடு என்று நம் நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் நம் இறையறிவு முதிர்ச்சிப் பெறும் வரையிலும் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து பேரூழி எனும் பேர் ஒடுக்கம் ஏற்படும் வரையிலும் அனைத்தையும் காக்கின்றான். இதனாலேயே அருளாளர் பெருமக்கள் இறைவன் செய்கின்ற பெருங் கருணைக்குக் கைமாறு செய்ய இயலாது என்பதனை அறிந்து, உணர்ந்து கண்ணீர் மல்கி நின்றார்கள். பெருமானை நன்றியினால் அன்போடு வழிபட்டார்கள். விருப்பு வெறுப்பு இன்றி அறத்தோடு நின்று தாயினும் இனியனாக அருள் செய்யும் விடைப்பாகனின் திருவடியை நாளும் வணங்குவோம் நலம் பெறுவோம்!

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!