சனி, 18 ஜூன், 2016

15. சிவன் சேவடி போற்றி / Sivan Sevadi Podtri

சிவன் சேவடி போற்றி

          தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் வழிபடு முழுமுதற் பொருளான பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. மேலான அறிவுப் பொருளாகிய சிவத்திற்குப் பெயரோ, அடையாளமோ இல்லை என்றாலும் உயிர்கள் குறிப்பிடும் பொருட்டும் அறியும் பொருட்டும் அம்மேலான அறிவுப் பொருளை அதனின் இயல்பினை வைத்துக் கடவுள், சிவம் என்று எல்லாம் குறிப்பிட்டனர். தூய அறிவாக விளங்கும் பரம்பொருள் எல்லாவற்றையும் கடந்தும் அவற்றுக்கு உள்ளும் இருப்பதனால் அதனைக் கடவுள் என்றனர். சிறப்பிற்குச்சியையும் வனப்பிற்குவையும் வைத்து அதனைச் சிவம் என்றனர். சிவம் என்பது மங்கலத்தைக் குறிக்கும் என்றும் பொதுவாகக் குறிப்பிடுவர். செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையை விளக்குகின்ற சிவ ஆகமங்களும் திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும் சிவம் என்பது சிறப்பும் வனப்பும் உடைய பொருள் என்றே விளக்குகின்றன. திருநாவுக்கரசு அடிகளைக் கல்லோடு கட்டிக் கடலில் போட்ட போது அவரைக் காப்பாற்றிய திருவைந்து எழுத்து மந்திரமான, ‘நமசிவயஎனும் மந்திரத்திலும்சிஎன்பது சிவத்தையும்என்பது வனப்பாற்றலையும் குறித்து நிற்கின்றது என்று குறிப்பிடுவர்.

                சிவன் எனும் சொல்லுக்குப் பொருள் சிறப்பும் வனப்பும் உடையவன் என்று சித்தாந்த சைவம் குறிப்பிட, அறியாமையில் உழலும் பலர் திரித்து விட்டச் செய்தியினால் சிவன் என்ற சொல்லைக் கேட்கவும் பலர் அஞ்சுகின்றனர். சிவன் என்று சொன்னால் துன்பம் வந்து சேரும். சிவனை வழிபட்டால் வாழ்க்கையில் இடர்கள் தொடர்ந்து வரும் என்று அறியாமையில் பிதற்றுகின்றனர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் நெறியாகிய சித்தாந்த சைவத்தோடு சற்றும் தொடர்பில்லாத சமய குருமார்கள், சிவன் சுடுகாட்டில் ஆடுபவன், உயிர்களைக் கொன்று குவிப்பவன், ஈவு இரக்கம் அற்றவன், சிவனை வழிபட்டால் குடும்பச் சிக்கல் ஏற்படும், வீட்டில் செல்வம் தங்காது என்று அள்ளி விடுகின்றனர். சைவ நெறி வழிபாட்டு முறைகளைச் சற்றும் கற்காத, சைவ முறைப்படித் தீக்கை பெறாத சமய ஆசான்கள் சிலர் சிவனை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் இறப்பு ஏற்படும் என்று கூறித் தங்கள் அறியாமையை வெளிப்படுத்துகின்றனர். இவற்றிற்கு எல்லாம் சாட்டை அடி கொடுப்பது போல, ‘சிவன் சேவடி போற்றிஎனும் மாணிக்க வாசகரின் சிவபுராண வரி அமைந்திருக்கின்றது.

                தொல்காப்பியர் காலத்துக்கு முன்பாகவும் சங்க இலக்கிய காலத்திலும் சிந்து வெளிநாகரிக காலத்திலும் காப்பிய காலத்திலும் அதற்குப் பின்னும் நெடுகத் தமிழ்ச் சைவர்கள் சிவனை வழிபட்டு வந்துள்ள சான்றுகள் நமக்குக் கிட்டுகின்றன. தொல்காப்பியத்தில் ஆல்அமர் செல்வன் என்று சிவபெருமான் குறிக்கப் பெறுகின்றான். புறநானூற்றில் சிவபெருமான் திரிபுரம் எரித்தவன், கறைமிடற்று அண்ணல், மூன்றாவது கண்ணை நெற்றியில் உடையவன், பிறை அணிந்தவன் என்று கிடைக்கப் பெறுகின்றது. சங்கப் பாடல்களின் வழி சிவபெருமானை ஆல்அமர் செல்வனாகத் தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வந்துள்ளதையும் பழந்தமிழர் சிவன் கோயில்களைக் கட்டிய முறைகளையும் சிவ வழிபாட்டு முறைகளையும் அறிய முடிகின்றது என்று பேராசிரியர் ..ஞானசம்பந்தன் குறிப்பிடுகின்றார். சிலப்பதிகார காலத்திலும் சிவனை அச்சமின்றி வழிபட்டுள்ளமை தெரிகின்றது.

                “பிறவா யாக்கை பெரியோன் கோயில்என்று சிவபெருமானையே இளங்கோவடிகள் குறிப்பிடுவதாக ஆய்வு அறிஞர்கள் குறிப்பிடுவர். தவிர, மதுரைக் காண்டத்தில், வேட்டுவ வரியில் சிவனையும் உமையையும், “மதியின் வெண்தோடு சூடும் சென்னி, நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்து .... நஞ்சுண்டு கறுத்தகண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் .... வளையுடைக் கையில் சூலம் ஏந்தி, கரியின் உரிவை போர்த்துஎன்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இன்னும்திங்கள் வாழ் சடையான்”, “ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துஎன்றெல்லாம் சிலப்பதிகாரத்தில் காணக்கிடக்கின்றது. இதனால் சிவவழிபாடு தமிழ்ச் சைவர்களால் அன்போடு போற்றப் பெற்ற ஒரு வழிபாடு என்று அறிய முடிகின்றது.

                குழந்தைக்குப் பசி எடுக்கும் வேளை அறிந்து தவறாமல் பால் ஊட்டும் தாயின் அன்பினைக் காட்டிலும் மேலான அன்பு உடையவன் சிவன் என்று போற்றுவது தமிழ்ச் சைவர்களின் வழக்கு. “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்என்று குறிப்பிடுவார் திருமூலர். “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆர்அமுதேஎன்பார் மணிவாசகர். “அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ அன்புடைய மாமனும் மாமியும்நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீஎன்பார் திருநாவுக்கரசு அடிகள். “சித்தத்துள் தித்திக்கும் தேனே, ஆனந்தக் கனியேஎனபார் திருமாளிகைத் தேவர். “ கரையிலா கருணை மாகடலைஎன்பார் சேந்தனார். “தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்என்பார் வள்ளல் பிரான். இவ்வாறு அன்பின் நிலைக்களமாக, அன்பின் ஊற்றாக, அன்பின் வடிவாக வைத்துப் போற்றிய சிவனை, சிவவழிபாட்டை, ‘ருத்ர’, ‘ருத்ர வழிபாடுதமிழரிடையே புகுத்தப் பட்டவுடன் மறந்தனர் நம் தமிழ்ச் சைவர்.

                வடமொழி வேதங்களிலே மிகுந்த சினமுடைய கடவுளாக, மூர்க்க இயல்புடைய கடவுளாக, எல்லோரையும் அழிக்கும் கடவுளாகச் சொல்லப் பெற்ற ருத்ரன் தமிழர்களால் வழிபடப்பெற்ற அன்பே வடிவான சிவனோடு தொடர்பு படுத்தப்பட்டான். தமிழர் மரபையும் தமிழர் பண்பாட்டையும் தமிழர் வழிபாட்டு முறையையும் அறியாத, வடமொழி வேதங்களைக் கற்றப் பூசகர்கள் ருத்ரனையும் தமிழர்களின் சிவனையும் ஒன்று என்றனர். வடமொழி வேதத்தில் உள்ள ருத்ர வழிபாட்டு முறைகளைத் தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களில் திணித்தனர். முழுமுதற் பொருளாக வழிபடப்பட்டு வந்த சிவனைத் துணை தெய்வங்களில் ஒன்றாக ஆக்கினர். தமிழ் போற்றிகளும் திருமுறைகளும் தமிழர் திருவுருவ வழிபாட்டு முறைகளும் பின் தள்ளப்பட்டன. தமிழ் கேட்டு மகிழ்ந்த சிவனுக்கு வடமொழியில் மந்திரங்கள் சொல்லப் பட்டன. வடமொழி மந்திரங்கள் தெரியாத தமிழ்ச் சைவர்கள், தமிழர் சைவத் திருக்கோயில்களில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களோடு தமிழ் மந்திரங்களும் நீங்கிச் சைவத் திருக்கோயில்களில் திருமுறைகள் ஓதுதற்கு வடமொழிப் பூசகர்களின் அனுமதி வேண்டுவதாயிற்று. பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிவன் திருக்கோயில்களில் பஞ்சபுராணம் எனும் ஐந்து தமிழ்ப்பாடல்கள் மட்டும் ஓதுதற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டது.

                தமிழ்ச் சைவர்களின் பரம்பொருளாக, முழுமுதற் பொருளாக, ஒவ்வொரு தமிழ்ச் சைவர்களின் இல்லங்களிலும் சைவத் திருக்கோயில்களிலும் இருந்த சிவன் இன்று அறுசமயக் கொள்கையின் ஒரு தெய்வமாகக் காட்டப் பெறுகின்றான். தமிழ்ச் சைவர்கள் சிவனைப் பரம்பொருளாகக் கருவறையில் வைத்துப் போற்றி வழிபட்டமையைத் தமிழகத்துப் பழங்காலச் சிவன் கோயில்கள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. தமிழ்ச் சைவர்கள், திருமுறைகள் பாடப்பெற்றதும் அருள் நிகழ்ச்சிகள் நிகழப் பெற்றதும் நாயன்மார்கள் திருவடி அடையப் பெற்றதுமான அச்சிவன் கோயில்களைப் புறந்தள்ளி விட்டுப் புதுப்புது குட்டிக் கோயில்களைக் கட்டிப் புதுப்புது வழிபாடுகளைக் கொண்டு வந்ததின் விளைவாக சிவ வழிபாடு இன்று மீட்டு எடுக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. தமிழ்ச் சைவர்களுக்கே சிவ வழிபாட்டை அறிமுகப்படுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டு உள்ளது. சிவ ஆகமங்களை முறையாகக் கற்றவர்களும் திருமுறைகளைக் கற்றவர்களூம் சைவ மெய்கண்ட நூல்களைக் கற்றவர்களும் முறையாகச் சிவதீக்கைப் பெற்றவர்களும் சிவன் திருக்கோயில்களில் பூசனை இயற்றுவது அருகி வருகின்றது.

                தமிழ்ச் சைவர்கள் திருமுறைகளைக் கருத்துடன் கற்காததினாலும் சைவ மெய்கண்ட நூல்களைப் பயிலாததினாலும் முறையான சிவ வழிபாட்டினையும் சிவபெருமானின் அருமையையும் அறியாது தடுமாறுகின்றனர். பொன்னும் மெய்ப்பொருளும் போகமும் திருவும் தருகின்ற பெருமானை இறந்தவருக்கு மோட்சம் அல்லது வீடு பேறு மட்டும் அளிக்கின்ற கடவுள் என்று எண்ணி, அச்சிவனை மோட்ச விளக்கு ஏற்றுவதற்கு உரிய கடவுள் என்றாக்கி விட்டிருக்கின்றனர். “நமசிவாயவே ஞானமும் கல்வியும் நமசிவாயவே நானறி விச்சையும்என்பார் திருநாவுக்கரசு அடிகள். சிவபெருமானைஞானத்திறள்என்பார் திருஞானசம்பந்தர். ‘பேரறிவான பெருஞ்சுடர் ஒன்று அதுஎன்பார் திருமூலர். இத்தகைய அறிவின் வடிவாய் விளங்கும் சிவனைக் கல்விக்கு உரிய கடவுளாய்த் தமிழ்ச் சைவர்கள் எண்ணாதது அறியாமையே!

                “தனதன் நற்றோழா சங்கரா சூல பாணியேஎன்று திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் குறிப்பிடுவார். தனதன் என்பவன் குபேரன். அக்குபேரனுக்குச் செல்வத்தை வழங்கியவன் சிவன் என்பார் திருமாளிகைத் தேவர். தமிழ்ச் சைவர்கள் செல்வம் வேண்டுமானால் சிவனே அதனை அளிக்க வல்லவன் என்று எண்ண இயலாதது எவ்வளவு பெரிய அறியாமை! சிவ வழிபாட்டினை அறியாத சிலர் இன்றுசிரிக்கும் புத்தர்என்ற சீனரின் வடிவ பொம்மையைக் குபேரன் என்று ஆக்கி அதற்குக் குபேர வழிபாட்டினையும் செய்கின்றனர். இத்தவற்றினைச் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டிய குருமார்களே அவ்வாறு செய்யச் சொல்லித் தூண்டுவதும் அதற்குத் துணைபோவதும் வேலியே பயிரை மேய்ந்தாற் போல் உள்ளது.



                கல்விக்கு ஒரு கடவுள், வீரத்திற்கு ஒரு கடவுள், செல்வத்திற்கு ஒரு கடவுள், திருமணத்திற்கு ஒரு கடவுள், பேய் அச்சத்திற்கு ஒரு கடவுள், காய்ச்சலுக்கு ஒரு கடவுள், பாதுகாப்பிற்கு ஒரு கடவுள் என்று இல்லாமல் எல்லாவற்றையும் நமக்கு அளிக்க வல்லவன் சிவபெருமான் என்று தமிழ்ச் சைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்துவதாக மணிவாசகரின் சிவன் சேவடி போற்றி என்ற சிவபுராண வாசகம் உள்ளது. தமிழ்ச் சைவர்கள் இதனை உணர்வார்களாக! உண்மைச் சைவர்களாக வாழ்வாங்கு வாழ்வார்களாக
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!