திங்கள், 8 பிப்ரவரி, 2016

3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான் Imai poluthum Nenjil Neengkaathaan

3.  இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்

பெருமான் உறைகின்ற பொருள்களாக எட்டைக் குறிப்பிடுவர். இதனை வடமொழியில் பெருமானின் அட்ட மூர்த்தம் என்பர். பெருமான், நிலம், நீர், தீ, வளி, வெளி, திங்கள், ஞாயிறு, உயிர் என எட்டுப் பொருள்களில் நின்று அளுகின்றான் எனத் தமிழ்ச் சைவர்களின் சமயமான சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே திருநாவுக்கரசு அடிகள், “இருநிலனாய்த் தீயாகி நீருமாகி, இயமானனாய் எறியும் காற்றுமாகி, அருநிலைய திங்களாய் ஞாயிறாகி, ஆகாசமாய் அட்டமூர்த்தியாகிஎன்று திருத்தாண்டகத்தில் குறிப்பிடுவார். இதனால் உயிர் அற்றச் சடப்பொருள்களான, நிலம், நீர், தீ, வளி, வெளி, திங்கள், ஞாயிறு ஆகியவற்றைத் தமிழ்ச் சைவர்கள் கடவுளாக வழிபடுகிறார்கள் என்பது தவறு. ஆராய்ச்சி அறிவோடும் அறிவியலோடும் தருக்க முறை வழுவாமல் உண்மைகளைக் கூறும் சித்தாந்தச் சைவம் சிவபெருமான் ஒருவனே வழிபடுவதற்கு உரியவன் என்பதனைத் தெளிவு படுத்துகின்றது.
                நிலத்தில் திண்மையாகவும் பயிர்களை முளைப்பிக்கின்ற தன்மையாகவும் நீரில் தண்மையாகவும் தீயில் வெம்மையாகவும் காற்றில் ஊக்கமாகவும் வெளியில் இடம் அளிப்பவனாகவும் திங்களில் குளிர் ஒளியாகவும் ஞாயிற்றில் வெம்மை ஒளியாகவும் பெருமான் நின்று அருளுகின்றான் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இவற்றைப் போன்று உயிர்களில் உயிர்களுக்கு உயிராய் நின்று இறைவன் அருளுகின்றான் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிரைப் பிரியாது நின்று அருள்புரிவதனையே கண் இமைக்கின்ற காலப் பொழுதுகூட இறைவன் தன் நெஞ்சினை விட்டு நீங்காமல் இருக்கின்றான் என்பதனை, “இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்கஎன்று திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார்.
                பெருமான் எல்லாவற்றையும் கடந்தும் அனைத்தின் உள்ளும் புகுந்து நிற்கின்றான் என்பதனைக் குறிக்கவே பெருமானுக்குக் கடவுள் என்ற குறியீட்டுப் பெயரினைச் சைவம் வழங்கியுள்ளது. பெருமானைக் கற்பனை கடந்த சோதி, அண்டம் கடந்த பொருள் என்று குறிப்பிடும் அடியார்கள், பெருமானை நம் அகத்து உள்ளேயும் காணலாம் என்று குறிப்பிடுகின்றனர். திருமாலும் நான்முகனும் தேடிக் காணமுடியாத பெருமானைத் தம் அகத்துள் தேடிக் கண்டதாகத் திருநாவுக்கரசு அடிகள், “திருமாலொடு நான்முகனும், தேடித் தேடொனாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்என்று குறிப்பிடுவார்.
                உயிர்கள் இவ்வுலகில் பருவுடலோடு இருக்கும்போதும் பின்பு இறப்பு நிகழ்கையில் பருவுடலை விட்டு நீங்கி, வேறு உலகங்களில் நுண் உடல்களோடு இருக்கும் போதும் பெருமான் உயிரை விட்டுப் பிரிவதில்லை என்ற உண்மையை மணிவாசகர் நமக்கு உணர்த்துகின்றார். இவ்வுண்மையை உணராமையினால்தான் இன்று பலரும் சமய உண்மைக்குப் புறம்பான பல செய்திகளையும் செயல்களையும் சொல்லியும் பின்பற்றியும் வருகின்றனர். சிலர் பெருமான் திருக்கோயில் கருவறைக்கு உள்ளே மட்டும் இருக்கின்றான் என்று எண்ணுகின்றனர். சிலர் பெருமான் நாம் நம் எண்ணத்தை ஒருமுகப்படுத்த வைத்து வழிபடும் திருவடிவங்கள், அடையாளங்கள், படங்கள் போன்றவற்றில் மட்டும் இருக்கின்றான் என்று எண்ணுகின்றனர். திருக்கோயில் கருவறைக் கதவினை அடைத்துவிட்டாலோ, திரைசீலையைப் போட்டு மறைத்து விட்டாலோ, வெளியே நடப்பது எதுவும் பெருமானைத் தொடர்புப் படுத்தாது என்று எண்ணுகின்றனர்.
                பெருமான் பூசனை அறையோடு நின்று விடாமலும் திருக்கோயில் கருவறையோடு நின்று விடாமலும் மேற்குறிப்பிட்ட எட்டுப் பொருள்களிலும் பிறவற்றிலும் ஒன்றாய், உடனாய், வேறாய் கண் இமைக்கும் காலம் கூட நீங்காமல் இருந்து அருள் செய்கின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமான் உயிர்களோடும் பிற பொருள்களோடும் பிரிப்பின்றிக் கலந்து நிற்கும் தன்மையால் ஒன்றாய் இருக்கின்றான் என்பர். பெருமான் உயிர்களையும் பிற பொருள்களையும் செலுத்தும் வகையால் அவற்றினோடு உடனாய் இருக்கின்றான் என்பர். உயிர்களையும் பிற பொருள்களையும் பெருமான் ஒன்றாயும் உடனாயும் இருந்து கலந்தும் செலுத்தியும் நின்றாலும் பொருள் தன்மையினால் இறைவன் வேறு அவை வேறு என்று குறிப்பிடுவர். உயிர்களும் பிற பொருட்களும் ஒருபோதும் இறைவனாக முடியாது என்பதே சித்தாந்த சைவத்தின் கொள்கையாகும்.
                பெருமான் கண் இமைக்கின்ற காலப் பொழுது கூட நம் உயிரில் பிரியாமல் இருக்கின்றான் என்று திருமுறைகளும் சைவ மெய்கண்ட நூல்களும் குறிப்பிடினும் பல வேளைகளில் தமிழ்ச் சைவர்கள் இறைவனை நம் உயிரில் இருந்து பிரித்து வைத்து விட்டதாக எண்ணி மயங்குகின்றனர். இறப்பு நேருமானால் இறைக்குற்றம் அல்லது தீட்டு என்று இறைவனையும் இறைவழிபாட்டினையும் தள்ளி வைக்கின்றனர். இறப்பு ஏற்படுமானால் குற்றம் அல்லது தீட்டு யாருக்கு ஏற்படுகின்றது? இறைவனுக்கா, இறந்தவரின் உயிருக்கா, இறந்தவரின் உறவு முறைகளுக்கா என்று கூட எண்ணிப் பார்க்காமல் பலரும் பலவாறு தவறான அறிவுரைகளை வழங்கும் வழக்கத்தினைக் கொண்டுள்ளனர். ஒருவரின் இறப்பு என்பது இறைவனால் நிகழ்த்தப் பெறுவது. இறைவனே பருவுடலில் இருந்து உயிரைப் பல்வேறு வழிகளில் பிரிக்கின்றான். பருவுடலில் இருந்து நீங்கி நுண் உடலோடு இருக்கின்ற உயிரோடு பெருமான் எப்பொழுதும் கலந்தே இருக்கின்றான். இறைவனே ஒருவரின் உயிர் பருவுடலை விட்டு நீங்கும் காலத்தை உறுதி செய்கின்றான். இதில் ஒருவரின் உயிர் பிரிந்த நேரம் சரியில்லை என்பதும் இறப்பினால் தீட்டு ஏற்பட்டது என்பதும் எவ்வகையில் பொருந்தும் என்று எண்ணுவது நலம்.
                இறந்தவரின் உடலுக்குச் செய்யப்படும் அனைத்துச் செயல்முறைகளும் இறந்தவரின் உயிரை எண்ணிச் செய்யப்படுபவை. இறந்தவரின் உடலுக்கு உணர்வும் அறிவும் இல்லாமையால் நாம் செய்கின்ற எதனையும் அவ்வுடல் உணர்வதில்லை. இறந்தவரின் உயிர் உலகப் பற்றுக்களை விட்டு இறைவனின் திருவடியை எண்ணிச் செல்ல வேண்டும் என்பதே திருமுறை ஓதுதல், எண்ணெய் வைத்தல், வாய்க்கரிசி இடல், கொள்ளி வைத்தல், பால் ஊற்றுதல், எட்டாம் நாள் மற்றும் பதினாறாம் நாள் கூட்டு வழிபாடு செய்தல் போன்றவை. இவற்றில் இறைவனைத் தள்ளி வைத்து விட்டு எந்த நோக்கத்துடன் இச்செயல் முறைகளைச் செய்கின்றோம் என்று எண்ணிப் பார்த்தல் தெளிவுடைமையாகும்.
                இறந்தவரின் உடலில் இருந்து தொற்று நோய்கள் போன்ற நோய்கள் பரவக் கூடும் என்பதற்காகவும் தூய்மையைக் கருதியும் இறந்தவரின் உடலைத் திருக்கோயிலுக்குக் கொண்டு செல்வதனை நம் முன்னோர் தவிர்த்தனர். இறந்தவரின் உடலைத் திருக்கோயிலுக்குக் கொண்டு சென்ற நிகழ்ச்சி திருஞானசம்பந்தர் வரலாற்றில் பூம்பாவையின் இறப்பிலும் திருநாவுக்கரசர் வரலாற்றில் அப்பூதி அடிகளின் மகனின் இறப்பிலும் இடம் பெற்றே உள்ளது. தூய்மையைக் கருதிச் சொன்ன இச்செய்தி இன்று வேறு வடிவம் பெற்று நிற்கின்றது. இன்றைய சூழலில் இறப்பு ஏற்படுமானால் இல்லங்களில் பூசனை அறைகளில் விளக்கு ஏற்றுவது இல்லை, பதினாறு நாட்களுக்கு இறை வழிபாடு இல்லை, பதினாறு நாட்களுக்குத் திருக்கோயில்களுக்குச் செல்வது இல்லை என்றும் ஓர் ஆண்டிற்குத் திருக்கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை என்ற தெளிவின்மையும் கூட பெருகி விட்டிருக்கின்றது. ஓர் ஊரிலோ அல்லது கிராமத்திலோ ஒருவர் இறந்து விடுவாரானால் அவ்விறப்பு நிகழ்ச்சியில் ஊர்மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் திருக்கோயிலை அடைத்தனர். இறந்தவரின் உடல் கொண்டு செல்லப்பட்டப் பிறகு திருக்கோயிலில் வழக்க நிலை திரும்பும். ஆனால் இன்றோ திருக்கோயிலுக்குத் தீட்டுப் பட்டு விடும் என்பதற்காகத் திருக்கோயில் அடைக்கப் பட்டிருக்கின்றது என்று குறிப்பிடுவது தெளிவின்மையை உணர்த்தி நிற்கின்றது.
                குழந்தை பிறக்குமானால் குழந்தையை ஈன்றப் பெண் உடலால் சோர்வு உற்று இருப்பாள் என்பதற்காகவும் அவளின் உடல் நலம் கருதியும் திருக்கோயில் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றனர். அவ்வாறு செல்வதால் தாய்க்கும் சேய்க்கும் உடல் நலக் கேடு ஏற்படும் என்று தவிர்க்கச் செய்தனர். இதனை அறியாமல் இன்று குழந்தை பெறுவது பெரும் இறைக் குற்றமாகவும் தீட்டாகவும் கருதப்படுகின்றது. கண் இமைக்கும் காலப்பொழுது கூட நம் உயிரில் இருந்து பிரியாமல் இருக்கும் இறைவனைக் குழந்தை ஈன்றத் தாயினிடத்தும் பிறந்த குழந்தையினிடத்தும் குழந்தை பிறந்த இல்லத்தாரினிடத்தும் இருந்து பிரித்து வைப்பதாய்க் கூறுகின்றனர். குழந்தையின் பெயர் சூட்டு விழா வரையிலும் முப்பது நாட்களுக்கு இல்லத்தில் பூசனை அறையில் விளக்கேற்றுதல், பூசனை இயற்றுதல் கூடாது என்றும் குறிப்பிடுகின்றனர். குழந்தையை ஈன்ற தாயின் உடல் நலம் கருதி அவளை உடல் அளவில் இறைவழிபாட்டைத் தவிர்க்கக் கூறினாலும் அகத்தில் உள்ள இறைவனைத் திருமுறைகள் ஓதி அகத்திலே வழிபாடு செய்யலாம் என்பதனைப் பலரும் தெளிய வேண்டும்.
                கண்கள் இமைக்கும் காலம்கூட ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து உயிரிலும் நீங்காது நின்று அருளும் இறைவனைப் பெண்களுக்கு இறைவன் கொடுத்த விலக்கு ஏற்படும் காலங்களில் நீக்கி வைத்து விட முடியும் என்று பலர் எண்ணுகின்றனர். இறைவனே பெண்களின் உடலில் விலக்கினைக் கொடுக்க, எப்படி அது குற்றமாகும்? தவிர விலக்குக் காலங்களில் பூசனை அறையில் விளக்கு ஏற்றாமல் இருப்பதனாலும் பூசனை அறைக்குச் செல்லாமல் இருப்பதனாலும் உயிரில் கலந்துள்ள இறைவனை ஒருபோதும் விலக்கி வைக்க இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும். விலக்குக் காலத்தில் பெண்களின் உடல் நிலையைக் கருதியும் தூய்மையைக் கருதியும் சொல்லப்பட்ட ஒன்று இன்று இறைக் குற்றம் அல்லது பெண்களின் குற்றம் என்று ஆகி நிற்கின்றது. விலக்கு உடையவர்களினால் இறைவனுக்கு அழுக்கு அல்லது குற்றம் ஏற்படுமானால் அது இறைவனின் பேர் ஆற்றல் உடையவன் என்ற இயல்புக்கு இழுக்கினை ஏற்படுத்தி விடும். விலக்குக் காலங்களிலே தான் கொடுத்த விலக்கே தீமையானது என்று எண்ணி இறைவன் விலகுவானேயானால் அது பெருமானின் பெருங்கருணை எனும் இயல்புக்கு இழுக்கினை ஏற்படுத்தி விடும்.
                கண் இமக்கும் காலப்பொழுதும் பெருமான் விலக்குடைய பெண்களின் உயிரிலும் கலந்தே இருக்கின்றான் என்பதனைத் தெளிந்து இயன்ற அளவு இல்லத்திலும் அகத்திலுமாவது இறைவனை வழிபடுவதே சிறந்தது என்பதனைத் தெளிதல் நல்லது. இறைவழிபாடு விலக்குடைய பெண்களின் மன அமைதிக்கும் உள்ள உணர்வுகளுக்கும் உடல் நலத்திற்கும் ஏற்றது. இதுவே சமயம் உணர்த்தும் உண்மையும் கூட. எதற்கெடுத்தாலும் இறைக்குற்றம், தீட்டு என்று இறைவனை எண்ணுவதற்கும் வழிபடுவதற்கும் முட்டுக் கட்டையாய் நிற்பது பெரும் இறைக் குற்றம் ஆகும். இமைப் பொழுதும் நம் நெஞ்சில் நீங்காது நின்று அருளும் இறைவனை நாளும் எண்ணி வழிபடுவோம், நலம் பெறுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக