திங்கள், 15 பிப்ரவரி, 2016

சிவ பரத்துவம் Siva Parathuvam

சிவ சிவ

திருமந்திர மாநாட்டிற்கான கட்டுரை
தலைப்பு:     சிவ பரத்துவம்
படைப்பாளர்: தருமலிங்கம் நடராசன்



            ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைக்கொண்டே உலகம் தோன்றிற்று என்பதனைஆதிபகவன் முதற்றே உலகுஎன்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்என்று திருவெம்பாவையில் உயிர்கள் உலகில் இடம் பெறுவதற்குப் பரம்பொருளான சிவபெருமானே முதலில் அருள்புரிந்தான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். எல்லா உலகங்களில் உள்ள உயிர்களும் அருமையான சிவப் பரம்பொருளைப் போற்றுதற்கு உரியன என்பதனை, “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்என்று பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அத்தகைய பரம்பொருள் யார் என்பதற்கு அடையாளமும் கூறுவார். பரம்பொருளான சிவமே, அறிவு வெளியாகிய சிதம்பரத்தில் ஆடல் வல்லானாக, நிலவு மற்றும் கங்கையைத் தலையில் அணிகளாகக் கொண்டவனாக, அளவு இல்லாத ஒளி பொருந்தியவனாகப் பொதுவில் நடம் புரிகின்றான் என்றும் குறிப்பிடுவார். எல்லா உயிர்களும் தொழ வேண்டிய சிவத்தின் பரத்துவத்தைத் திருமூலரும் புலப்படுத்துவார்.
            எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் பரம்பொருளான சிவமே என்பதனைப், “போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை, நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை, மேற்றிசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம், கூற்று உதைத் தானையான் கூறுகின்றேனேஎன்பார் திருமூலர். எல்லா உயிர்களும் சிவம் என்னும் பரம்பொருளைத் தொழ வேண்டும் என்பதற்குத் திருமூலர் பல காரணங்களைச் சொல்கிறார். “போற்றி, என் வாழ் முதலாகிய பொருளேஎன்பார் மணிவாசகர். தமது வாழ்விற்கு இறைவனே முதலாகப் பலவற்றைக் கொடுத்து அருள் புரிந்திருக்கின்றான் என்று குறிப்பிடுகின்றார். பல்வேறு உலகங்களில் வாழ்கின்ற எல்லா உயிர்களிலும் இறைவன் தங்கி இருந்து அருள்புரிகிறான் என்பார். அவன் உயிர்களில் தங்கி இருக்கும் வகையால் ஒன்றாயும் உயிர்களைச் செலுத்தும் வகையால் உடனாயும் பொருள் தன்மையால் உயிர் வேறு இறைவன் வேறு என்று வேறுபட்டும் நின்று அருளுகின்றான், அதனால் அவனே எல்லா உயிர்களும் தொழுதற்கு உரிய பரம்பொருள்  என்கின்றார்.
            அன்றாட வாழ்வில் எல்லா உயிர் வகைகளும் இயற்றும் அனைத்துச் செயல்களுக்கும் பரம்பொருளான சிவனே துணை நிற்கின்றான். சிவனே உயிரற்ற எல்லா பொருள்களையும் உயிர்கள் பயன் பெறும் பொருட்டு இசைவிக்கின்றான். இப்படி உயிர்களிலும்         நீக்கம் அற நின்று அனைத்தையும் சிவன் நிகழ்த்துவித்த போதும் உயிர்களாலோ உலகப் பொருள்களாலோ அழுக்கு  அடையாதத் தூயவனாகச் சிவன் இருக்கின்றான். அதனால் உலக உயிர்கள் அனைத்தும் அவனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றன என்கின்றார். அத்தகைய உயர்ந்த பரம்பொருள் ஒருவனே எல்லா உயிர்களாலும் தொழப்படும்  தன்மையாளனாக உள்ளான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
            எல்லா உலகங்களையும் உயிர்களையும் தனது திருவருளான நடப்பாற்றலைக் கொண்டே சிவம் நடத்துவிக்கின்றது. இதனையே பெண்ணாக, அம்மையாக, அம்பிகையாக உருவகப்படுத்தி, ஆதிசத்தி என்று மொழியும் சித்தாந்த சைவம். இதனையே நான்கு திசைகளிலும் வாழும் உயிர்களுக்கு நல்ல அருள் புரியும் அம்மைக்குத் தலைவன் என்கிறார் திருமூலர். சிவனும் சிவனின் திருவருளுமே உலகையும் உலக உயிர்களையும் பேணிக்காப்பதனால் சிவனையும் அவனின் திருவருளையும் உயிர்களுக்கும் உலகங்களுக்கும் அம்மை அப்பர் என்றனர். சித்தாந்த மெய்கண்ட நூலும், “அம்மை அப்பரே உலகிற்கு அம்மை அப்பர்என்று குறிப்பிடும். இதை ஒட்டியே, “ அப்பன் நீ அம்மை நீ .....  துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீஎன்பார் திருநாவுக்கரசு அடிகள். எல்லா உயிர்களின் உள் இருந்தும் அவற்றிற்குச் சிவன் அம்மை அப்பராக இருந்து திருவருள் புரிவதனாலே சிவனின் பரத்துவத்தை அறிந்து எல்லா உயிர்களும் அவனைத் தொழும் கடப்பாடு உடையன ஆகின்றன  என்பார் திருமூலர்.
            பரம்பொருளான சிவன், தென்திசைக்கு வேந்தன் என்பதாலும் அவன் கூற்றுவனை உதைத்தவன் என்பதாலும் சிவத்தின் பரத்துவம் உணர்தற் பாலது என்று  குறிப்பிடுகின்றார் திருமூலர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற சிறந்த திசைகளில் மிகச் சிறந்ததாகத் தென்திசையைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். திருமூலர் போற்றும் தமிழ் மொழி வழங்கும் தென்பாண்டி நாடு தென் திசையில் இருப்பதாலும் தென்நாட்டினைத் தெரிவு செய்து பெருமான் ஆடல் புரிந்து, தென்னாடு உடைய சிவனாக எந்நாட்டவற்கும் இறைவனாய் விளங்குவதனாலும் தென்திசையைச் சிறப்புடைய திசையாகக் குறிப்பிடுகின்றார் திருமூலர். தவிர, உயிர்கள் தொழவேண்டியவன், “தென் திசைக்கு ஒரு வேந்தன்என்கின்றார். தொன்மைத் தமிழர் சிவ பெருமானை, “வேந்தன்என்று அழைக்கும் வழக்கு உள்ளமை தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்என்பது தொல்காப்பியம். உயிர்களால் கற்பனை செய்தும் பார்க்க இயலாத இறைவன் தமிழ் வழங்கும் தென் நாட்டில் வெளிப்பட்டுத் தோன்றி அனைத்து உயிர்களுக்கும் அருள் வழங்குபவனாய் இருப்பதனால் எல்லா உயிர்களும் தொழும் பரத்துவம் உடையவனாகச் சிவன்  இருக்கின்றான் என்பார் திருமூலர்.
            எல்லா உயிர்களையும் பறித்துச் செல்லும் பணியினைச் செய்பவன் காலன் அல்லது எமன் என்று கூறுவர். காலனைக் கூற்றுவன் என்றும் குறிப்பிடுவர். மார்கண்டேயர் எனும் சிறந்த சிவனடியாருக்காக அவரின் உயிரைப் பறிக்க வந்த காலனைச் சிவபெருமான் காலால் எட்டி உதைத்து அருள்புரிந்தார். காலனுக்கும் காலனாகிய அச்சிவபெருமானே சொர்க்கம் நரகம் எனும் உலகினுக்கு மேம்பட்ட உலகான சிவ உலகினை அளிக்க வல்லவன். உண்மையான மரணம் இல்லாத பெருவாழ்வினை அளிக்கக் கூடியவன். காலனுக்கும் காலனாக இருக்கக் கூடியவன் பரம்பொருளான சிவபெருமானே! அதனாலேயே உயிர்கள் உண்மையான மரணம் இல்லாத பெருவாழ்வு அடைய வேண்டுமாயின் சிவப் பரம்பொருளையே தொழவேண்டும் என்கின்றார் திருமூலர். பிறந்து மடியும் சிற்றுயிர்களையும் சிறுதெய்வங்களையும் வழிபடுவதனால் சிறு சிறு நன்மைகள் மட்டும் கிடைக்குமே ஒழிய, பேரின்பப் பெருவாழ்வான, உண்மையான மரணமிலாப் பெருவாழ்வான, பிறந்த பிறவியின்  பயனான, இன்பநிலை கிட்டாது என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். இதனால் எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் பரம்பொருளான சிவனே என்று புலப்படுத்துகின்றார்.
                கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள் என்று தமிழர்களின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். இதனால் ஒரு தாயின் கருவில் தங்கிப் பிறந்து தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கடவுள் இல்லை என்று புலனாகிறது. விலங்குகளின் வயிற்றில் கருவாய் இருந்து வரும் பசு, சிங்கம், எலி, குரங்கு, ஆடு, புலி போன்றவை கடவுள் இல்லை என்பது அறிவில்படுகின்றது. விதையிலிருந்து தோன்றும் ஆலமரம், அரசமரம், மாமரம், வில்வம், வேப்பிலை, துளசி, அருகம்புல், எலுமிச்சை போன்ற மூலிகைத் தன்மை உடைய தாவர வகைகளும் கடவுள் இல்லை என்றுத் தெளிவாகின்றது. வியர்வையிலிருந்து தோன்றும் கிருமிகள், பேண் போன்ற உயிரினங்களும் கடவுள் இல்லை என்று உறுதியாகிறது. முட்டையிலிருந்து தோன்றும் பாம்பு, மயில், சேவல், கழுகு, தவளை, பல்லி, போன்றவையும் கடவுள் இல்லை என்று உண்மையாகின்றது.
                நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்புக்கும் உட்படாத பரம்பொருளைச் சித்தாந்த சைவம் முழுமுதல் என்றும் பரம்பொருள் என்றும் குறிப்பிடுகின்றது. அதனைச் சிவம் என்று திருமூலரும் திருமுறை ஆசிரியர்களும் மெய்கண்ட நூலாசிரியர்களும் சுட்டுவர். முழுமுதல் ஆகிய சிவத்தினை, “முன்னை ஒப்பாயுள்ள மூவருக்கு மூத்தவன், தன்னைஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்என்று திருமூலர் தமது திருமந்திரத்தில் உணர்த்துகின்றார். நான்முகன் படைத்தல், திருமால் காத்தல், அரன் அழித்தல் என்ற ஒவ்வொரு தொழிலே உடையவர் என்றும் அந்தந்த தொழில் ஒன்றினையே அடிப்படையாகக் கொண்டு தமக்குள் ஒருவருக்கு ஒருவர் ஒப்பானவர்கள் என்பார். இம்மூவருக்கும் முழுமுதலாய், அவர்களினும் மேலானவனாய் விளங்கும் சிவன், படத்தல், காத்தல், அழித்தல் எனும் தொழில்களை மேற்கூறிய மூவருக்கும் பணித்து அதற்கு மேல் மறைத்தல், அருளல் எனும் தொழில்களைச் செய்து, முடிந்த முதலாய்த் தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகனாய்ப் பரத்துவம் மிக்கவனாய்  விளங்குபவன் என்பார் திருமூலர்.
                “என்னால் தொழப்படும் எம்இறை மற்றுஅவன் தன்னால் தொழப்படுவார் இல்லைதானேஎன்பார் திருமூலர். அடியேனால் தொழப்படும் எம் தலைவன் சிவன், யாரையும் தொழ வேண்டுவது என்பது இல்லாதவன். நற்பேறு வேண்டி அவனையே எல்லோரும் தொழுவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இது பற்றியே திருவாசகம் அருளிய மணிவாசகரும், திருஅம்மானையில், “சேர்ந்தறியாக் கையானைஎன்று பெருமானைப் போற்றுகின்றார். முழுமுதல் பரம்பொருளே பிறவா ஆக்கைப் பெரியோன், அவன் பிறப்பு இறப்பு அற்றவன். மற்ற உயிர்களுக்குப் பிறப்பையும் இறப்பையும் அளிப்பவன். அவன் பிறரை வழிபட வேண்டுவது இல்லை என்பார் திருமூலர்.
                பிரமபுரம், கொச்சை, பூந்தாராய், சண்பை, சிவபுரம், வெங்குருகு எனப் பன்னிரு பெயர்களால் திருமுறைகளில் குறிக்கப்பெறும் சீர்காழியில், முழுமுதலான சிவனை நான்முகன் வழிபட்டு உய்ந்தான் என்ற செய்தியினைத் திருஞானசம்பந்தப் பெருமானின்,  “தோடுடைய செவியன்எனத்தொடங்கும் பிரமபுரத் திருப்பதிகம் உறுதி செய்கின்றது. சிறந்த சிவ அடியாராகிய இராவணனைக் கொன்றப் பழி நீங்க, இராமேசுவரத்தில்  இராமபிரான் முழுமுதல் சிவனை வழிபட்டுப் பழி நீங்கினான் என்று திருமுறைகள் சுட்டுகின்றன. திருமாற்பேறு எனும் தலத்தில் திருமால் சிவபெருமானை வழிபட்டுப் பேறுபெற்றான் என்று திருநாவுக்கரசு அடிகளின் ஐந்தாம் திருமுறையான திருக்குறுந்தொகை குறிப்பிடுகின்றது. ஆயிரம் மலர்களைக் கொண்டு பெருமானை வழிபட்டத் திருமால், ஆயிரம் மலர்களில் ஒரு மலர் குறைய, தன் கண்ணைப் பிடுங்கி மலராகச் சாற்றிச், சுதர்சனம் என்ற சக்கரத்தினைப் பரிசாகப் பெறும் பேற்றினைப் பெற்றான் எனும் குறிப்பைச் சேந்தனார் தமது திருப்பல்லாண்டில் குறிப்பிடுவார்.
சூரியன், சந்திரன், வாயு, வருணன், அக்கினி, குபேரன், எமன், இந்திரன் போன்ற வானவர்களும், புதன், வியாழன், சனி, ராகு, கேது போன்ற கோள்களும், வியாசர், பிரிங்கி, தக்கன், அகத்தியர், ஜைமினி, சுகர், கௌதமர் போன்ற முனிவர்களும் சீதை, இலக்குவன், அனுமன், வாலி, சுக்ரீவன், சடாயு, சம்பாதி, தருமன், வீமன், அர்ச்சுனன், முதலிய புராண இதிகாச அடியார்களும் முழுமுதலான சிவனை வழிபட்டே பழி நீங்கினமையும் பேறு பெற்றமையும் திருமுறைகளில் காணக்கிடக்கின்றது.
                தவிர, இறைத்தமிழ் மந்திரங்களான பன்னிரண்டு திருமுறைகளை அருளிய இருபத்து ஏழு திருமுறை ஆசிரியர்களூம், அறுபத்து மூன்று நாயன்மார்களும், பதினான்கு சைவ சித்தாந்த மெய்கண்ட நூல்களை அருளிய மெய்கண்டார் முதலாய மெய்கண்ட ஆசான்களும் தாயுமானார், வள்ளல் பிரான், சைவ மடங்களின் ஆதீனத் தலைவர்கள் போன்ற பிற்கால அடியார்களும் சிவனையே முழுமுதலாகக் கொண்டு பேறு பெற்றிருக்கின்றனர்.
                பெருமானிடம் நடனப் போட்டியில் தோல்வியுற்றுத் தன் ஆணவம் நீங்கும் பேற்றினைப் பெற்றுத் தில்லைக் காளி என்று வீற்றிருக்கும் காளியும், குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளும் எல்லைக்குள்ளும் தங்கள் ஆட்சியையும் காவலையும் உடைய மதுரை வீரன், ஜடாமுனி, சங்கிலி கருப்பன், கருப்புச்சாமி, முனியாண்டி, சடையாண்டி, ஐயனார் போன்ற காவல் தெய்வங்களும் எல்லைத் தெய்வங்களும் குல தெய்வங்களும், மாரியம்மன், பேச்சியம்மன், கூனி, இசக்கியம்மன், காத்தாயி போன்ற கிராமத் தேவதைகளும் நீலி, காட்டேறி, பிடாரி போன்ற பேய்களும் பிறப்பு இறப்புக்கு உட்படுபவை. இவை நம்மைப் போன்று விருப்பு வெறுப்புக்கு ஆளாகின்றவை என்பதனால் இவற்றின் வாழுங்காலத்தினையும் நற்பேற்றினையும் பரத்துவச்  சிவனே அளிக்கின்றான் என்பது திருமூலரின் குறிப்பு.
                தமிழர்களின் அக்கறையின்மையினாலும் சமயக் கல்வியை முயன்று கற்காமையினாலும் தமிழருக்கே உரிய சைவ சமயமும் அதன் உயர்ந்த கொள்கைகளும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. தமிழர் அவர்தம் உண்மைச் சமயத்தை மறந்து பல தவறான கொள்கைகளிலும் அறியாமையிலும் உழன்று கொண்டு இருக்கின்றனர். இதன் விளைவாகத் பழைமையும் சிறப்பும் அருள் நிகழ்ச்சிகளும் நிகழ்ந்த பெரும் பெரும் சிவன்கோயில்கள் பாழடைந்தும் முறையான பூசனைகள் நடைபெறாமலும் முடங்கிக் கிடக்கின்றன. நாயன்மார்களும் திருமுறை ஆசிரியர்களும் பணி செய்த, திருமுறைப் பாடல்கள் அருளிய பாடல் பெற்றத் திருக்கோயில்கள் பேணப்படாமல் கிடக்கின்றன. தனக்கு ஒப்பு இல்லாத் தலைவனான, பரம்பொருளான, சிவபெருமானை வழிபடுதலே தமிழ்ச் சைவர்களின் முறையான வழிபாடு என்பதனைத் தமிழர்கள் அறியாது இருக்கின்றனர். இதனால் இன்று சிவவழிபாடு நலிந்து, காவல் தெய்வ வழிபாடுகளும் சிறுதெய்வ வழிபாடுகளும் மலிந்து கிடக்கின்றன. தமிழ்ச் சைவர்கள் வேறு சமயங்களைத் தழுவுதலும் புதுப்புது சமயங்களை உருவாக்கி மக்களைத் திசைத் திருப்புகின்றவர்களின் பின்னால் திரிவதும் மலிந்து காணக்கிடக்கின்றது. இன்னும் சிலர் தனி மாந்தரைக் கடவுளாக எண்ணி வழிபடும் அறியாமையிலும் வீழ்ந்து கிடக்கின்றனர். தனக்கு ஒப்பு இல்லாத் தலைவனான சிவனை அறியாமல் ஏமாற்றுக்காரர்களின் ஏமாற்றுக்கு ஆளாகித் தவிக்கின்றனர்.
                “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஎன்று பெருமானை மணிவாசகர் திருவெம்பாவையில் சுட்டுவார். உலக ஒடுக்கத்தின் போதும் மீளவும் அதனைத் தோற்றுவிக்கும் போதும் நிற்கின்ற தனி ஒருவனைத், தன்னை ஒப்பாய் இல்லாத் தலைவனை, இயலும் பரம்பொருளான சிவத்தை வழிபட்டால், தீமை ஏற்படும், கைப்பொருள் செலவாகிவிடும், குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்று யாரோ கூறுவதைக் கேட்டு அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்ற  தமிழ்ச் சைவர்கள் சிந்திக்க வேண்டும். இறந்தவரின் உயிர் அமைதி பெறுவதற்கு மட்டும் சிவன் கோயில்களைத் தேடுகின்ற நாம், திருமணம், காதணிவிழா, புதுமனைப் புகுவிழா, பிறந்த நாள் விழா என்று எல்லா வேளைகளிலும் சிவனை வழிபட வேண்டும். அன்றாட வாழ்வில் சிவ வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்பதே திருமூலரின் கருத்து, அதுவே உண்மைச் சைவர் வாழ்வின் இலக்கு. திருமூலரின் திருவாக்கிற்குச் செவிசாய்த்து உண்மையை நாடுவோம், வாழ்வின் பயனை அடைவோம்!

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

1 கருத்து:

  1. அதர்வசிகையில் சிவனொருவனே தியானிக்கத்தக்கவன் என்று கூறப்படுகிறதாயினும் அங்கே இருக்கும் சிவநாமம் விஷ்ணுவையே குறிக்குமெனவும் விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் சிவநாமங்கள் வருகிறதால் அது விஷ்ணுவைக் குறிக்குமெனவும்.சிவஸகஸ்ரநாமத்தில் விஷ்ணுவின் பெயர்கள் இல்லாததால் விஷ்ணு நாமங்கள் சிவபிரானுக்கில்லை
    எனவும் கூறுகின்றனர் இதற்குத் தக்க பதில் அளிக்கவும்

    பதிலளிநீக்கு