வியாழன், 7 ஜூலை, 2016

16. நேயத்தே நின்ற நிமலன்/ Neyatthe Nindra Nimalan

16.  நேயத்தே நின்ற நிமலன்

            “நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றிஎனும் வரி மணிவாசகர் அருளிய திருவாசகத்தின் சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. அடியாரது அன்பினில் நிலைத்து நின்ற மாசு அற்றவனின் திருவடிக்கு வணக்கம் என்று மணிவாசகர் இதன் வழி குறிப்பிடுகின்றார். பெருமான் அடியார்களின் அன்பிற்கே அகப்படுவான் என்பதனை, “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஎன்று வள்ளல் சிதம்பர இராமலிங்க அடிகள் குறிப்பிடுவார். அப்படி அன்பிற்கு அகப்படும் மலையாகிய பெருமான் அகப்பட்டு விட்டால் எளிதில் நீங்க மாட்டான் என்பதனை, “இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன், எங்குஎழுந்து அருளுவது இனியேஎன்பார் மணிவாசகர். பெருமான் வேறு எதற்கும் ஈர்க்கப்படாது அன்பிற்கே அடிமையாகும் தன்மையாவது அவன் மாசு அல்லது மலம் அற்று இருப்பதனால் ஆகும் என்று குறிப்பிடுகின்றார் மணிவாசகர்.

            பெருமானை எண்குணத்தான் என்பார் உலகப் பேராசான் திருவள்ளுவர். அவ்வெண் குணம் அல்லது இயல்புகளில் ஒன்று இயல்பாக மும்மலம் நீங்கினவன் என்பதாகும். ஆணவம், கன்மம், மாயை என்பனவே மும்மலங்கள் எனப்படுகின்றன. இம்மும்மலங்களைத் தளை என்றும் குறிப்பிடுவர். வடமொழியில் பாசம் என்பர். அறிவு, விருப்பு, செயல்களை இயல்பாக நிகழ விடாமல் தடைசெய்து, தளைத்து அல்லது கட்டி வைப்பதனால் மும்மலங்களைத் தளை என்றும் குறிப்பிடுகின்றனர்.

            கண்ணின் ஒளியை மறைக்கும் புற இருள் போல, அறிவை மறைக்கும் அக இருள்தான் ஆணவ மலம். புறத்திலே நாம் காணும் இருள் ஆனது ஒரு பொருளையும் காட்டாது மறைக்கும். ஆயினும் இருளானது இருண்ட கரு நிறமாகிய தன் இயல்பினையாவது காட்டும். ஆனால் ஆணவமாகிய அக இருள், புறப் பொருளை மட்டும் அல்லாது தான் இருப்பதையும் காட்டாது என்று தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இருள் கண்ணொளியை மறைக்கும். ஆனால் அதனால் கதிரவனின் ஒளியை மறைக்க இயலாது. அது போல ஆணவ மலம் உயிர் அறிவை மறைக்க இயலுமே அன்றி இறையுணர்வை அல்லது இறையறிவை மறைக்க இயலாது. எனவேதான் இறைவன் ஆணவ மலத்திலிருந்து இயல்பாய் நீங்கினவன் என்பதனை நின்மலன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

            உயிர்களுக்குத் தன் அறிவை மறைத்துக் கீழ்நோக்கிச் செலுத்தும் ஆணவ மலத்தின் தாக்கம் இருப்பதனால்தான் உயிர்கள் அறியாமை எனும் பலவீனத்தால் பல்வேறு குற்றங்களுக்கு உள்ளாகின்றன. இதனாலேயே உயிர்கள் எதிலும் எவ்விடத்திலும்யான்’,’எனதுஎனும் செருக்குடனும்தான்எனும் முனைப்புடனும் நிற்கின்றன. இவ்வியல்புகள் இறைவனை இயல்பாகவே பற்றுவது கிடையாது என்கின்றார் மணிவாசகர்.

            எல்லாவற்றிலும் தானே சிறப்பு உடையவன், தன்னுடையதே சிறப்புடையது என்று உயிர்கள் காட்டும் முனைப்பினை இறைவன் காட்டுவதில்லை என்கின்றார் மணிவாசகர். உயிர்கள் விரும்பும் புகழுக்கும் பேருக்கும் இறைவன் மயங்குவதில்லை! இறைவன் தன் பேர் ஆற்றலையும் பேர் அறிவையும் உயிர்களிடத்தே காட்டி அடைய வேண்டியது ஒன்றும் இல்லை என்கின்றார். உயிர்களுக்குப் பிறரால் ஆக வேண்டிய செயல்கள் இருப்பது போல இறைவனுக்கு உயிர்களால் ஆக வேண்டிய செயல்கள் எதுவும் இல்லை என்கின்றார். உயிர்களைப் போன்று அறியாமையால் இறைவன் தவறுகள் செய்வதில்லை. பின் வருந்துவதும் இல்லை. உயிர்களைப் பழி வாங்குவதும் இல்லை. உயிர்களைப் பழிவாங்குவதால் பெருமானுக்குக் கிட்டுவதும் ஒன்றும் இல்லை. உயிர்களைத் துன்புறுத்திப் பெருமான் மகிழ்வதும் இல்லை. பெருமான் உயிர்களைப் போன்று சூழலுக்கு ஏற்பப் போலியாக நடிப்பது இல்லாமல் என்றும் ஒரு படித்தாகவே இருப்பவன் என்கின்றார். மேலும் நிலைத்த இன்பமுடைய பொருளான அவன் நிலையற்றப் பொருள்களையும் உயிர்கள் கொடுக்கும் நிலையில்லாத இன்பம் உடைய பொருள்களையும் விரும்புவதில்லை என்றும் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

            கடவுளைப் போன்றே உயிர்களும் தளையாகிய மலங்களும் என்றும் உள்ள பொருள் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஆயினும் உயிரைத் தளை பற்றுவதுபோல் கடவுளைத் தளை பற்றுவதில்லை என்கின்றார் மணிவாசகர். பெருமானைத் தளை பற்ற இயலாது என்பதனை, “பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில், பதியினைப் போல்பசு பாசம் அனாதி, பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம், பதி அணுகில் பசு பாசம் நிலாவேஎன்று தமிழ் ஆகமம் அருளிய திருமூலர் குறிப்பிடுவார். பதியாகிய இறையும் பசுவாகிய உயிரும் பாசமாகிய தளையும் அப்பதியினைப் போல் என்றும் உள்ளவை. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் கட்டுண்ட உயிரும் சடப்பொருளான, அறியாமையைச் செய்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் இறைவனை அணுக முடிவதில்லை! கடவுளின் திருவருளைத் துணையாகக் கொண்டு உயிர் கடவுளை அணுகுமாயின் உயிரைப் பற்றியுள்ள மும்மலங்கள் தம் முனைப்பு இல்லாமல் கெட்டு ஒடுங்கும் என்பதனைத் திருமூலரும் தெளிவுபடுத்துகின்றார்.

            மும்மலங்களில் இரண்டாவது மலமாகிய கன்மம் அல்லது செயல் அல்லது வினை என்பதும் கடவுளைப் பற்றுவது கிடையாது என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆணவம் எனும் மலத்தினைப் போக்குவதற்குக் கன்ம மலமும் மாயாமலமும் இறைவனால் சேர்த்து வைக்கப்பட்டவை என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்களுக்குப் பிறவிகள், உடல்நிலை, வாழும் உலகம், அறிவு நிலை, நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளுக்குக் கரணியம் வினைப் பயனே என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்கள் என்னதான் முயன்றாலும் அது நிறைவேறும் காலம் வரும் வரையிலும் அம்முயற்சி நிறைவு பெறாமல் நிற்பதற்குக் கரணியம் வினைப் பயனே என்று சைவம் குறிப்பிடுகின்றது. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்என்பதும் வினைக் கொள்கையின் அடிப்படையில்தான்.

            அறியாமையால் மனம், வாக்கு, காயத்தால் பெருமான் தாக்குறுவதில்லை என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இதனால் பெருமானிடத்தில் தீய எண்ணங்கள் அண்டுவதில்லை. தீய மொழிகள் பெருமானின் திருவாயிலிருந்து உதிப்பதில்லை. பெருமானின் திருவருட் செயல்கள் எல்லாமே அருட் செயல்களே. உயிர்களின் வினைகளுக்கு ஏற்பவே அவை நல்லனவாகவும் தீயனவாகவும் நுகர்ச்சிக்கு வருகின்றன. பெருமான் உயிர்களைப் போன்று ஐம்புலன்களால் தாக்குறுவது இல்லை என்கின்றார் மணிவாசகர். இதனையே, “பொறிவாயில் ஐந்துஅவித்தான்என்று இறைவனை வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார். ஐம்பொறிகளின் வாயிலாக ஏற்படும் வேட்கைகளையும் அவற்றினால் ஏற்படும் தவறுகளையும் வென்றவன் இறைவன் என்கின்றார். நல்வினையும் தீவினையும் நீங்கினால் மட்டுமே உயிர்களுக்குப் பிறவியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது சைவக் கொள்கை. ஒன்று பொன் விலங்கு மற்றது இரும்பு விலங்கு. இரண்டுமே உயிர் பிறவியில் இருந்து விடுபடுவதற்குத் தடையானவைதான். எனவேதான் அவற்றைஇருள்என்று திருவள்ளுவர் உருவகித்தார். இறைவன் இயல்பாய் வினைகளை நீங்கினவன் என்பதனை, “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்என்றார்.

            ‘மாஎன்றால் ஒடுங்குதல் என்றும்யாஎன்றால் தோன்றுதல் என்றும் பொருள்படும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். எனவே எல்லாப் பொருள்களும் ஒடுங்குதற்கும் தோன்றுதற்கும் எது மூலப் பொருளாக இருக்கின்றதோ அதுவே மாயை எனப்படுகின்றது. புல், பூடு, புழு, மரம், விலங்கு, பாம்பு, கல், மாந்தர், பேய், கணங்கள், அசுரர், வானவர், முனிவர், போன்ற உயிர்களுக்கு உரிய உடல், கருவி, நுகர்ச்சிப் பொருள்கள் யாவும் இம்மாயை என்னும் மூலப் பொருளில் இருந்தே ஆக்கப்படுகின்றன என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இவ்வுடம்புகள் பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, பசி எனபனவற்றிற்கு உட்பட்டு அல்லல்படும், துன்புறும், சிறுக்கும், பெருக்கும், அழிந்துபடும். நீர், நிலம், தீ, வளி, வெளி எனும் ஐவகைப் பூதங்களுக்குத் தாக்குற்றுத் தமது நிலையில் இருந்து சீர் கெடும், மாறும், அழியும். உயிர்களின் உடம்பிற்கு இளமைக் கால உடல், முதுமைக் கால உடல் என்ற மாற்றமும் தோற்றமும் உண்டு. இறப்பு ஏற்பட்டு உடல் அழிவது உண்டு. கடவுளின் திருமேனி மாயையால் ஆகியது அல்ல என்கின்றார் மணிவாசகர். அது இறைவனின் திருவருளால் ஆனது. இறைவன் தனது திருவருளையே தமக்குத் திருமேனியை அமைத்துக் கொள்ளவதற்குத் துணையாகக் கொள்கின்றான் என்கின்றார் மணிவாசகர். இதனாலேயே பெருமானை, “பிறவா ஆக்கைப் பெரியோன்என்றும்மூவா முதல்வா போற்றிஎன்றும் மாற்றம் ஏற்படா ஒளி, “நொந்தா ஒண் சுடரேஎன்றும் அடியார்கள் போற்றி மகிழ்ந்தார்கள்.

            மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி எனும் அகக் கருவிகளும் கை, கால், எருவாய், கருவாய் போன்ற செயற் கருவிகளும் மாயையினால் ஆக்கப்பட்டு உயிர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. இறைவன் மாயையினால் ஆகிய கருவிகளைக் கொண்டு எதனையும் செய்வதில்லை. பெருமான் நினைத்த அளவிலேயே அனைத்தையும் நிகழ்த்துபவன் என்று மணிவாசகர் நினைவுறுத்துகின்றார். அடியார்களின் வரலாற்றில் பெருமான் வருவதெல்லாம் மாந்தர் எனும் சட்டையை அணிந்து வருதல் போல் ஆகும் என்று சைவம் குறிப்பிடும். எனவே அறிகருவிகள், செயல் கருவிகள் என்று மாயையால் ஆகியவற்றிலிருந்து பெருமான் நீங்கினவன் என்று மணிவாசகர் தெளிவுபடுத்துகின்றார்.

            நீர், நிலம், தீ, வளி, வெளி, கோள்கள், விண்மீன்கள், திசைகள் இவை யாவும் மாயையினால் ஆக்கப் பெற்று இருப்பதனால் இவை பெருமானைப் பாதிப்பதில்லை. மாற்றம் அடையக் கூடிய மாயையினால் ஆகிய பொருட்களை நிலையானவை என்று எண்ணுகின்ற மயக்கத்தினை மாயா மலம் என்பர். இம்மாயா மலம் உண்மை அல்லாதவற்றை, நிலையில்லாதவற்றை உண்மைப் பொருள் போன்றும் நிலைத்த பொருள் போன்றும் மயக்கினை ஏற்படுத்தும். இம்மயக்கமும் பெருமானுக்கு ஏற்படுவதில்லை என்கின்றார் மணிவாசகர். நின்மலன் ஆகிய அப்பெருமானின் உண்மை இயல்பினை அறிவோம் தெளிவான சைவநெறியினைப் பின்பற்றுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக