திங்கள், 3 அக்டோபர், 2016

12. நீறு அணிந்த மேனியன் / Neeru Anintha menian

சிவ சிவ
திருமுறை

நீறு அணிந்த மேனியன்

            சிவத்தோடு தொடர்புடைய நெறி சைவம் என்று, தமிழ்ச் சிவாகமம் என்று போற்றப்பெறும்  திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுவார். சிவத்தோடு தொடர்புடைய இந்நெறியைச் சித்தாந்த சைவம் என்றும் குறிப்பிடுவர். இச்சித்தாந்த சைவநெறியினைத் திருநீற்று நெறி என்று தெய்வச் சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தப் பெருமான், மங்கையர்க்கரசியாரின் அழைப்பினை ஏற்று, பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையம்பதிக்கு எழுந்து அருளி, இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் என்று அழைக்கப்பெறும் திருஆலவாயில் திருக்கோயிலைச் சென்று அடைந்தார். அங்குத் திருஆலவாயில் அண்ணலாக விளங்கும் செந்தமிழ்ச் சொக்கநாதப் பெருமானை வழிபட்டு, மங்கையர்க்குத் தனி அரசியாக விளங்கிய மங்கையர்க்கரசியார், திருஞானசம்பந்தரை வரவேற்றார். அப்போது, காலங்காலமாய்ச் சைவர்கள், பிழையின்றிப் பின்பற்றி வந்த சைவநெறியின் பயனாகவும் இனி எதிர்காலத்தில் சைவம் தழைக்க இருக்கின்ற சிறப்பினையும் இங்குத் தாங்கள் எழுந்து அருளிய பேற்றினால் எப்போதும் திருவருள் உடையவர்கள் ஆகும் நன்மையினைப் பெற்றோம். உயிர்களுக்கு வேண்டுவனவற்றை எல்லாம் தந்து, தாயைப் போலப் பேணிக்காக்கும் இறைவனுக்கு நன்றியையும் அந்நன்றியினைக் காட்டும் நெறியினையும் பின்பற்றி வரும் இப்பாண்டிய நாடும் அதன் மன்னனும் உய்வுபெற வேண்டும். மேலும் மேன்மை உடைய திருநெறியாகியத் திருநீற்றுநெறி விளங்கும் சிறப்பினையும் தங்கள் வருகையால் கிடைக்கப் பெற்றோம் என்று கூறி வரவேற்றதாய்த் தெய்வச் சேக்கிழார் திருஞானசம்பந்தர் வரலாற்றில் குறிப்பிடுவார்.

            மங்கையர்க்கரசியாரைப் புகழ்ந்து குறிப்பிடுகையில், “பொங்குஒளி வெண்திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமேஎன்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். தமிழ் நாட்டில் சமண சமயம் பெரிதாகப் பரவி, பாண்டியன் நின்றசீர் நெடுமாறனும் அவனது குடிகளும் சைவநெறியை மறந்து, நாட்டில் திருநீறு அணிந்தால் தண்டனை கிடைக்கும் என்று அறிவித்து இருந்த காலத்தில் திருநீற்று நெறியின்பால் கொண்டிருந்த உறைப்பின் கரணியமாக மங்கையர்க்கரசியார், திருநீற்றைச் சந்தனக் குழம்போடு குழைத்துத் தம் திருமார்பில் அணிந்திருந்தார் என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். திருநீற்று நெறியாகிய சைவநெறியைத் தமிழ்ச் சைவர்கள் நீங்கிச் சமணத்தைச் சார்ந்து இருந்தபோது, தமிழ்க் குலத்திற்கு நேர இருந்த பெரும்பழியைப் போக்கிய, தெய்வப் பாவையாகிய அப்பெருமாட்டியே தமிழ்ச் சைவம் மீண்டும் பாண்டிய நாட்டில் தழைக்கச் செய்தார். பொங்கும் ஒளி வீசும் திருநீற்றினைக் கொண்டு தமிழ்ஞானசம்பந்தர் நின்றசீர்நெடுமாறனின் வெப்பு நோயைப் போக்கவும் திருநீற்று நெறியாகிய சைவநெறி நிலைநின்றது. திருநீறு பூசிய கயவனின் கையால் இறப்பதுவும் மேல் என்று தன்னை வாளால் குத்திய முத்தநாதன் என்பவனை மன்னித்து அவனைக் காப்பாற்றிச் சிவபெருமானின் திருவடிகளை வெற்றி கொண்டார் மெய்ப்பொருள் நாயனார். உடல் முழுவதும் திருநீறு பூசி இருப்பது போன்று தோற்றம் அளித்த வண்ணானின் தோற்றத்தைக் கண்டு, தமது பட்டத்து யானையின் மீது இருந்து இறங்கி, அவ்வண்ணானின் கால்களில் வீழ்ந்து வணங்கினார் கழறிற்று அறிவார் எனும் சேரமான் பெருமான் நாயனார்.
அரிய பொருள்களை ஓரிரு எழுத்துக்களில் சுருக்கிக் குறிப்பிடுவது மந்திரம் என்பர். ‘ஓம்என்ற ஓங்கார மந்திரம், ‘’+‘என்ற சிவத்தையும் சத்தியையும் சுருக்கமாகக் குறிக்கும் மந்திரம் என்பர். நடப்பாற்றல், மலம், சிவம், வனப்பாற்றல், யாக்கை என்ற ஐந்து அரிய பொருளின் சுருக்கமேநமசிவய’  என்ற திருவைந்து மந்திரம் என்பர். அரிய பொருளின் சுருக்கமாய் இருக்கின்ற மந்திரங்கள் சொல்பவரைக் காப்பவை என்பர். இத்தகைய மந்திரங்களுக்கு நிகரானது திருநீறு என்கின்றார் திருஞானசம்பந்தர். இதனையே, “மந்திரமாவது நீறுஎன்று அவர் குறிப்பிட்டார். சிவம் எனும் பரம்பொருள் இட்டப் பணிகளைச் செய்யும் வானவர்களாகக் குறிக்கப்படும் தீ, காற்று, மழை, கோள்கள், விண்மீன்கள் இவற்றிற்கு எல்லாம் மேலானது திருநீறு என்றார்.

            ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது எனும் இரண்டு நிழற்கோள்கள், இருபத்து ஏழு விண்மீன்களைக் காட்டிலும் உயர்வானது திருநீறு என்பது ஞானசம்பந்தரின் குறிப்பு. இக்கோள்களையும் விண்மீன்களையும் எண்ணி அஞ்சிப் போற்றுவதனைக் காட்டிலும் திருநீற்றினைப் போற்றி அணிவது மேலானது என்கின்றார் திருஞானசம்பந்தர். தீக்கடவுள், காற்றுக் கடவுள், மழைக் கடவுள், கடல் கடவுள், சூரியக் கடவுள், நிலவுக் கடவுள், என்று அவற்றைப் போற்றி வழிபடுவதனைக் காட்டிலும் திருநீறு அணிவது மேலானது என்கின்றார் திருஞானசம்பந்தர். இதனாலேயே வெப்ப மிகுதியால் ஏற்பட்ட நோயைத் திருநீற்றினைக் கொண்டே போக்கினார் திருஞானசம்பந்தர். மேலும் தமக்குப் பூணூல் அணிவிக்கும் செயல்முறையின் போது தமது கையில் கட்டப்பட இருந்த கயிற்றுக் காப்பினைத் தவிர்த்துத் திருநீற்றினையே காப்பாக அணிவிக்கும்படி வேண்டி அணிந்து கொண்டார் திருஞானசம்பந்தர் என்று தெய்வச் சேக்கிழார் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றில் குறிப்பிடுகின்றார். இதன்வழி குழந்தைகளுக்குக் காய்ச்சல், அச்சம் அல்லது பொதுவாகக் காப்பு வேண்டும் என்று எண்ணி முடிக்கயிறு அணிந்து கொள்கின்றவர்கள், பிற சமயத்து அன்பர்களின் மந்திரங்களையும் பொருட்களையும் நாடாது, மந்திரங்களாகச் சொல்லி அணிவிக்கும் கயிறுகளுக்கு மேலாக விளங்கும் திருநீற்றினை அணிந்து, திருவைந்து எழுத்து மந்திரத்தைச் சொல்வது சிறப்பு என்கின்றார் திருஞானசம்பந்தர். இதனையே, "வானவர் மேலது நீறு" என்றார் திருஞானசம்பந்தர்.

புற அழகையே நாளும் நாளும் விரும்பிக் காக்கின்ற நமக்கு உண்மை அழகினைக் கொடுப்பது திருநீறு ஆகும். "குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும், மஞ்சள் அழகும் அழகல்ல..." என்பார் நாலடியார். நெஞ்சத்து அழகே உண்மை அழகு என்பார். இதனையே சிவப்பொலிவு என்று திருநீற்று நெறியாகிய சைவநெறி குறிப்பிடுகின்றது. அழகிய முகம், முகப்பூச்சு, அழகியத் தலைமயிர், மீசை, தாடி, உடல் கட்டு, இளமை, அழகிய உடை என்பனவற்றைப் பெறுவதில், பேணுவதில் தவறில்லை என்று திருநீற்று நெறியாகிய சைவநெறி குறிப்பிடுகின்றது. இப்புற அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுவது, பாதுகாப்பாய் அமைவது உயிர் அழகு என்று திருநீற்று நெறி குறிப்பிடுகின்றது. இவ்வுலக வாழ்க்கைக்குப் புற அழகு வேண்டுவதாயிற்று. இறப்பிற்குப் பின் இறைவனோடு சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கைக்கு உயிர் அழகு வேண்டுவதாய் உள்ளது. இதனை நினைப்பிப்பதும் பெறுவதற்கு வாயிலாய் அமைவதும் திருநீறு என்பர். இதனையே, "சுந்தரம் ஆவது நீறு" என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

திருநீற்றினை நீரில் குழைத்துச் சிவலிங்க வடிவம் செய்து நிறுத்தி, அதனைச் சிவமாகவே வழிபடலாம் என்பதனைத் திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிவாக, இறைவனின் திருவருளாகத் திருநீறு போற்றப்படுவதால்தான் தமிழ்ச் சைவர்களின் திருமணத்தில், காதணிவிழாவில், வளைகாப்பு அணி விழாவில், பிறந்த நாள் விழாவில், திருமண நாள் விழாவில், புதுமனைப் புகுவிழாவில், பூப்பெய்து விழாவில், பெயர் சூட்டு விழாவில், இறப்பில், பெரியோர் கைகளினால் திருநீறு அணிவிக்கப்பெற்று வாழ்த்து பெறுகின்றோம். அடியார்களிடம் இருந்து வாழ்த்து பெறுகின்றபோதும் அவர்களின் திருவடிகளில் வீழ்ந்து, கைகட்டி, வாய்ப்பொத்திப் பணிந்து, திருநீற்றினைப் பெற்றோ அல்லது அணிவித்தோ கொள்கின்றோம். இதனையே, "துதிக்கப் படுவது நீறு" என்று திருஞானசம்பந்தர் குறிப்பிட்டார்.

சமய நூல்கள் உணர்த்துகின்ற முப்பொருள் உண்மையை உணர்த்துவதே திருநீறு. இறைவன், உயிர், தளை என்ற, என்றும் உள்ள உண்மைப் பொருளானவற்றில் இறைவனையும் உயிரைக் கட்டியிருக்கின்ற தளையையும் உயிர் உணர வேண்டிய நிலையாமையையும் உணர்த்துவதாய் உள்ளது திருநீறு. உயிரின் அறிவு இறைவனை உணர முடியாதவாறு கட்டுப்படுத்துகின்ற ஆணவம், கன்மம், மாயை என்பனவற்றை உயிர் போக்கிக் கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்துவதே திருநீற்றினை மூன்று கோடுகளாக அணிவது என்பதனை உணர்த்தி நிற்கின்றது. உயிரைப் பற்றி இருக்கின்ற, உயிருக்கு அறியாமையைச் செய்கின்ற ஆணவம் என்ற அழுக்கு சுட்டெரிக்கப் பட்டு நீறாகப் போக வேண்டும் என்ற உண்மையை உயிர் உணர வேண்டும் என்பதனை உணர்த்துவதாக உள்ளது திருநீறு. உயிர் பெற்றிருக்கின்ற இவ்வுடம்பு, உலகம், கருவி கரணங்கள், மனைவி, மக்கள், வீடு, பொருள் போன்ற நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்துமே உயிர் உடலை விட்டுப் பிரியும் போது உடன் வராது என்ற நிலையாமையை உணர்த்துவதாகத் திருநீறு உள்ளது. உயிரைப் பிரிந்த உடல் எரிக்கப்பட்டால் எஞ்சுவது பிடி நீறே என்பதனை உணர்த்துவதாக உள்ளது திருநீறு என்பதனைச் சைவசமய மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே, "தந்திரமாவது நீறு" என்று திருஞானசம்பந்தர் குறிப்பிட்டார்.

திருநீறு சைவ சமயத்தின் அடையாளமாக விளங்குவது. சைவசமய நெறிப்படி வாழ்வதற்கும்  இறைவனை வழிபடுவதற்கும் திருநீறே அடிப்படையாக உள்ளது. உயிரானது உலகப் பற்றுக்களை விட்டுப் பற்று அற்ற இறைவனைப் பற்று அறுக்கப் பற்றிக் கொண்டால் மட்டுமே பேரின்பப் பெருவாழ்வினை அடைய முடியும் என்பதனை விளக்குவதாய்த் திருநீறு உள்ளது. இதனாலேயே தமிழ்ச் சைவ முறைப்படி பூசனை இயற்றுவதற்குச் சைவத் தீக்கை முறைகளைச் சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு ஏழு அகவைக்கு முன்பாகப் பெற வேண்டிய தீக்கை முறைகளில் முதலாவதாகப் பெற வேண்டியது சமய தீக்கை. அச்சமய தீக்கையில் முதலில் கற்பிக்கப்படுவது திருநீற்றை அணிகின்ற முறைகள்தாம். பரவலாகவும் மூன்று கோடுகளாகவும் திருநீறு அணிகின்ற முறையினையும் தீக்கைப் பெற்றவர்கள் உடலில் திருநீற்றினைப் பதினாறு இடங்களில் அணிய வேண்டிய முறைகளையும் அதன் பொருளையும் இன்னின்ன இடங்களில் இத்தனை அங்குல நீளம் அணிய வேண்டும் என்பதனையும் குறிப்பிட்டு உள்ளனர். இதனையே, "சமயத்தில் உள்ளது நீறு" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

திருநீற்று நெறியின் அடையாளமாக விளங்கும் இத்திருநீற்றினை உயிர் வகைகளே அன்றி இறைவனும் உடல் முழுவதும் அணிந்துள்ளான் என்று திருமுறைகள் குறிப்பிடுகின்றன. “காடுடைய சுடலைப் பொடிப்பூசிஎன்று சம்பந்தர் குறிப்பிடுவார். “சுண்ண வெண்நீறணிஎன்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். “கங்காளன் பூசும் கவசத் திருநீறுஎன்று திருமூலர் இறைவன் திருநீறு அணிந்து உள்ளதனைக் குறிப்பிடுவார். தன் திருவடியை வந்து அடையும் உயிர்களைப் பற்றியிருக்கின்ற ஆணவம் எனும் அழுக்கு வெந்து நீறாய் அவனின் திருமேனி முழுவதும் கொட்டிக் கிடக்கின்றது என்பதே பெருமான் திருநீறு அணிவதாகக் குறிக்கப் பெறுகின்றது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனாலேயே சிவப் பூசனையில் பெருமானுக்குத் திருமஞ்சனம் ஆற்றும்போது திருநீற்றினால் திருமஞ்சனம் ஆட்டுவர் என்பர். தன்னுடைய அழகியத் திருவருளைத் துணையாகக் கொண்டு உயிர்களின் அறியாமையைச் சுட்டு எரித்து நீறாக்குகின்றான் பெருமான் என்பதனை உணர்த்தவே, “செந்துவர் வாய் உமைப் பங்கன் திருஆலவாயன் திருநீறேஎன்று திருஞானசம்பந்தர் குறிப்பிட்டார்.

இத்தகைய மேலான, சிறப்பான, சைவ சமயத்தின் அடையாளமான, இறைவனின் திருவடிவான, பெருமானின் திருவருளான, சைவ சமயத்தின் முப்பொருள் உண்மையை உணர்த்துவதான, உயிருக்கு உண்மைப் பொலிவினைத் தருகின்ற திருநீற்றினைத் தமிழ்ச் சைவர்கள் அன்றாட வாழ்வில் போற்றி அணிவோமாக! நம் அடுத்த தலைமுறையினரும் இதனைப் போற்றிக் காக்க ஆவன செய்வோமாக!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக