திங்கள், 3 அக்டோபர், 2016

8. சிவபெருமானே தியானப் பொருள் / Sivaperumane Thiyaana Porul

சிவ சிவ
திருமுறை

சிவபெருமானே தியானப் பொருள்

            இறைவனை அடைதற்கு உரிய நெறிகளாகச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற நன்னெறி நான்கினைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. சிவநெறியாகிய சைவநெறி உயிர்களின் செவ்விக்கு ஏற்ப இறைவனை அணுகுதற்கு நான்கு நிலையிலான வழியை முன் வைக்கின்றது. உடல் தொண்டு முக்கால் பகுதியும் இறை உணர்வு கால் பகுதியும் கொண்ட நிலையில் இறைநெறியில் நிற்பவர்களைச் சீலத்திற்கு உரியவர்கள் என்று குறிப்பிடுகின்றது. பூசனை புரிந்து இறைவனை அடைய முயலும் நெறியாகிய நோன்பு நெறி உடற்தொண்டு அரைப் பகுதியும் இறை உணர்வு அரைப் பகுதியுமாக உடையது என்று குறிப்பிடுகின்றது. யோகநெறி எனும் செறிவு நெறியில் அறிவு முக்கால் பகுதியும் உடற்கூறு தொண்டு கால் பகுதியுமாக நின்று இறைவனை அடைய முயலும் நெறி என்பதனைக் குறிப்பிடுகின்றது. உயிர்கள் அடைய வேண்டிய முடிவான பயனாகிய நெறி, அறிவு நெறி. இதுவே சிவ அறிவைப் பெறுவிக்கும் நெறி. இந்நெறியில் நிற்பதே இறையின்பம் கிட்டும் நிலை என்பர்.

            சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நான்கு நெறிகளில் யோகம் அல்லது செறிவு எனும் நெறியிலேயே தியானம் என்ற மனம் ஒன்றியிருக்கும் நிலை குறிக்கப் பெறுகின்றது. சிவச் செறிவு எனும் முயற்சியில் உள்ள தீது அகற்றல், நன்று ஆற்றல், இருக்கை, வளி நிலை, மனத்தைப் புலன்களோடு செல்லவிடாது தடுத்தல், மனத்தைக் குறித்த நிலைக்களங்களில் நிறுத்தி வைத்தல், மனத்தை ஒன்றி ஓரிடத்தில் இருக்கச் செய்தல், மன ஒன்றுதலினால் ஏற்படும் வெற்றியால் இறையருள் வெளிப்பட, அதனைப் பற்றிக் கொள்ளுதல் எனும் எட்டுப் படிநிலைகள் (இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி) குறிக்கப் பெறுகின்றன. இவ்வெட்டுப் படிநிலைகளில் ஏழாவது படிநிலையாகக் குறிக்கப்படுவதே மனம் ஒன்றி ஓர் இடத்தில் நிலைத்து நிற்கும் தியானம் என்பதாகும். மனம் ஒன்றி ஒரு நிலையில் நிற்கும் அரிய நிலையை இன்று பலரும் மிக எளிய ஒன்றினைப் போன்று குறிப்பிடினும் அது அத்தகைய எளிய செயல் அல்ல!

            சிவச்செறிவு எனும் முயற்சியில் முதல் படிநிலையாகிய தீது அகற்றலில் கொலை, பொய், களவு, கள், காமம் அகற்றிச் சீர்தூக்கும் இயல்பும் நற்பண்பும் அடக்கமும் நடுவுநிலைமையும் கொண்டே நன்று ஆற்றல் எனும் இரண்டாம் படிநிலைக்குச் செல்ல இயலும் என்று சித்தந்தச் சைவம் குறிப்பிடுகின்றது. சிவச் செறிவின் இரண்டாம் படிநிலையாகிய நன்று ஆற்றலில் தூய்மை, அருள், ஊண் சுருக்கம், பொறுமை, செம்மை, வாய்மை, மானம், தவம், செபம், இறைவழிபாடு, சிவநோன்பு, சிவபூசனை, சித்தாந்தச் சைவ அறிவு, தூய அறிவு என்ற இயல்புகளைப் பெறப்பெற்றவரே மூன்றாம் படிநிலையாகிய இருக்கை நிலையினுக்கு முன்னேற இயலும் என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுவார். மூன்றாம் படிநிலையாகிய இருக்கையில், தாமரை, அரிமா, மயில், வாள், விடை போன்ற பல்வேறு இருக்கைகளைக் கற்று மனத்தைக் கட்டுப்படுத்தும் போது உடல் இடையூறு செய்யாமல் மனத்தைக் கட்டுப்படுத்தத் துணையாக இருக்கும். இதுவே இருக்கைகளைப் பயிலுவதன் நோக்கம். இது வெறும் உடற்பயிற்சி அன்று. உடற்பயிற்சிக்கு உரிய இருக்கைகளை அடயோகம் எனும் அடச்செறிவில் அறியலாம் என்பார் திருமூலர்.

            சிவச் செறிவில் இருக்கை எனும் மூன்றாம் படிநிலையை அடுத்து பிராணாயாமம் எனும் வளி நிலைக்குச் செல்ல வேண்டும். நான்காம் படிநிலையாகிய இவ்வளி நிலையில் உடலிலே உள்ள இடநாடி, வலநாடி, நடுநாடி என்ற நாடிகளின் வழி உயிர்ப்புக் காற்றை உள்வாங்கியும் உள் இருத்தியும் வெளிவிடுதலுக்குமான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பர். மூச்சைக் கட்டுப் படுத்தும் இப்பயிற்சி மனம் அமைதி அடைவதற்கு இன்றியமையாதது எனப்படுகின்றது. ஐந்தாம் படிநிலையாகிய பிரத்தியாகாரம் எனப்படும் படிநிலையில் மனத்தைப் புலன்களோடு செல்லவிடாமல் நிறுத்தும் முயற்சியை மேற்கொள்வர். இதில் புறக்கருவிகளான கண், காது, மூக்கு, வாய், மெய் போன்றவற்றுடனும் அக்கருவிகளினால் ஏற்படும் நுகர்வுகளுடனும் மனத்தை ஒட்ட விடாமல் பிரிக்கும் வல்லமை பெறுவதனைக் குறிப்பிடுவர். இதுவும் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல என்பதனைத் தெளிதல் வேண்டும். இதனையும் கடந்தே தாரணை எனும் ஆறாம் படிநிலையை அடைய வேண்டும் என்பர்.

            நன்று ஆற்றல், தீது அகற்றல் என்பவற்றால் ஏற்பட்ட மனத் தூய்மையைக் கொண்டு, மனத்தினைக் கட்டுப் படுத்தி, உரிய நிலைக்களத்தில் (ஆதாரங்கள்) கொண்டு போய் நிறுத்துவதே தாரணை எனப்படுகின்றது. மூலம், சுவாதிட்டானம், கொப்பூழ், இருதயம், கண்டம், புருவநடு என்ற ஆறு நிலைக்களங்களில் மனதை நிறுத்தும் இப்பயிற்சியில் வெற்றி கண்டவரே ஏழாம் படிநிலையாகிய மனம் ஒன்றி இருக்கின்ற தியானம் எனும் நிலையை அடைய இயலும். மனம் ஒன்றி இருக்கின்ற, இறையருள் வெளிப்படுகின்ற சமாதி அல்லது திருவருள் வெளிப்பட அதில் அழுந்தி இருக்கும் சமாதி நிலைக்கு முன் உள்ள இத்தியான நிலையினைப் பலரும் மிக எளிமையான செயலைப் போன்று குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட, நாமாவளி எனப்படும் இறைவனின் திருப்பெயர்களையோ அல்லது ஓங்காரத்தையோ அல்லது வேறு ஏதாவது மந்திரங்களையோ வாய் முணுமுணுக்கக் கண்களை மூடிக்கொண்டு, இருக்கைகள் இட்டு அமர்ந்து இருப்பதனை தியானம் என்று எண்ணுகின்றனர். உண்மையான தியான நிலைக்குச் செல்ல கடந்து வரவேண்டிய அரிய செயற்பாடுகள் என்ன என்பதனை அறியாமல் பலர் தியானம் கூடிவிட்டது என்று குறிப்பிடுகின்றனர். சமய அறிவும் தெளிவும் இல்லாமல் ஒருபோதும் தியானம் கூடி வருவது இல்லை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்சமய அறிவும் தெளிவும் இல்லாமல் மன ஒன்றுதல் ஏற்படாது. மன ஒன்றுதல் இல்லாமல், மன ஒடுக்கம் இல்லாமல், உளத்தூய்மை இல்லாமல் தியானம் கூடாது என்பதனைப் பலரும் அறியாது பிதற்றி வருகின்றனர். எடுத்த எடுப்பிலேயே செறிவு நெறியின் எழாவது  படிநிலையான தியானத்தை இரண்டு மணித்துளிகளில் பெற்றுவிட முடியும் என்கின்றனர். இன்னும் சிலர் தியானத்தைக் கூவிக் கூவி பணத்திற்கு விற்கின்றனர். இன்னும் பலர், சிவச் செறிவில் இடம்பெறும் தியானத்தில் எதை வைத்து எண்ணுவது என்பதனை அறியாமல், தியானம் இயற்றுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

            சிவச் செறிவில் தியானப் பொருளாய் அல்லது ஒன்றிய மனத்தில் வைத்து எண்ண வேண்டிய பொருள் என்ன என்பதனைத் திருமூலரும் திருஞானசம்பந்தப் பெருமானும் தெளிவுறக் குறிப்பிடுகின்றனர். தமிழ்ச் சைவர்கள் ஒன்றிய மனதில், சிவபெருமானையே தியானப் பொருளாய் வைத்து எண்ண வேண்டும் என்பதனைத் திருஞானசம்பந்தப் பெருமான் திருவலிதாயத்துத் திருப்பதிகத்தில் தெளிவுறக் குறிப்பிடுகின்றார். “புந்தி ஒன்றி நினைவார் வினையாயின தீரப் பொருளாய, அந்திஅன்னது ஒரு பேரொளியான்என்று  குறிப்பிடுகின்றார். மனம் பொறிவழிச் சென்று புலன்களைப் பற்றாமல் ஒருமையால் நின்று தியானிக்கும் அடியவர்களின் வினையைப் போக்குவான் சிவபெருமான் என்கின்றார். அந்திக் காலத்துச் செவ்வொளி போன்றவன் சிவபெருமான் என்கின்றார். இதன் வழி தமிழ்ச் சைவர்கள் தியானத்தில் மனத்தில் வைத்து எண்ண வேண்டியது சிவபெருமான் என்கின்றார். ஒளிவடிவில் தியானப் பொருளை மனதில் வைத்து எண்ணுகின்றவர்கள் சிவஒளியையே வைத்து எண்ண வேண்டும் என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. சிவபெருமானின் திருவடிவு அல்லது சிவஒளியை வைத்து எண்ணாத செறிவு, சிவச் செறிவு ஆகாது என்பதனைத் திருமந்திரம் அறிவுறுத்துகின்றது.

            சிவச் செறிவினுக்கு மனதில் வைத்து எண்ணுவதற்கு மிகச் சிறந்த வடிவமாகச் சிவலிங்கத்தை மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. வடிவமும் வடிவம் அற்றதுமான சிவலிங்கத்தை விடுத்து, நடவரசர் திருவடிவினையும் மனத்தில் இருத்தி எண்ணலாம் என்றும் மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதை  விடுத்து சிவம் அல்லாத வெறும் புள்ளிகள், வெறும் ஒளிகள், இதர வெறும் வடிவங்கள், சிவச் செறிவினுக்கு உட்படாதவை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். தியானம் இயற்றுகின்றவர் பலர் தங்களின் ஆசான்களின் வடிவங்களையோ நிழற்படங்களையோ வைத்து எண்ணுகின்றனர். இது தமிழ்ச் சைவர்களின் சித்தாந்த சைவம் குறிப்பிடும் சிவச் செறிவினுக்கு ஏற்புடையது அன்று. தங்களைத் தியானப் பொருளாய் வைத்து எண்ணக் கூறும் ஆசான்கள்  சைவம் குறிப்பிடும் சிவச்செறிவினுக்கு மாறானவர்கள். இது குருடனுக்குக் குருடன் வழி காட்டுவது போல் ஆகும் என்பார் திருமூலர். சைவம் குறிப்பிடும் சிவச்செறிவில் சிவனைத் தவிர வேறு ஒருபொருளைத் தியானப் பொருளாகக் கொள்வது கிடையாது.

            குறியும் நெறியும் பரம்பொருளான அச்சிவமே என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். சிவச் செறிவில் அடைய வேண்டிய இலக்காக இருக்கின்றவன் சிவபெருமான். அவ்விலக்கினை நோக்கிச் செய்யப்படும் தீது அகற்றல் முதலாகிய எட்டுப் படிநிலைகளில் வெற்றி பெறுவதற்குப் பல்வேறாகச் சிவச் செறிவாளர்கள் முயற்சிக்கினும் பெருமானின் திருவருளே ஒவ்வொரு படிநிலையிலும் அம்முயற்சியில் வெற்றி பெறுவிக்கும் வழியை நமக்குக் கொடுக்கின்றது என்பர். எனவே சிவச்செறிவில் சிவனை விடுத்த தியானம் ஒருபோதும் வெற்றி பெறாது. சிவனைத் தியானப் பொருளாகக் கொள்ளாத பொதுச் செறிவுகள், உலகப் பயனுக்குரிய சிறு சிறு பயன்களைக் கொடுக்குமேயன்றி சிவச் செறிவின் உண்மை இலக்காகிய சிவபெருமானின் திருவருளைக் கூட்டுவிக்காது என்கின்றார் திருமூலர். அட்டமாசித்திகள் எனப்படும் எண்பெரும் பேறுகள் கூட இறையருளைப் பெற்று அவனின் திருவடிக்கு ஆளாகுவதற்குத் துணைக் கொள்ள வேண்டுமேயன்றி உலக இன்பங்களுக்குப் பயன்படுத்துவது  அறியாமையே ஆகும் என்பார் திருமூலர். மெய்யறிவாளர் தாம் பெற்ற அறிவுப் பேறுகளை மேலும் மேலும் உயர்ந்த பொருளான இறைவனின் திருவடி இன்பத்தினை அடைவதற்கே துணையாகக் கொள்வர் என்பார். சைவம் குறிப்பிடும் உண்மைத் தியானப் பொருளை அறிவோம்! உண்மைச் சிவச்செறிவினை இயற்றுவோம், உண்மைச் சிவச்செறிவின் பயனைப் அடைவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக