செவ்வாய், 4 அக்டோபர், 2016

13. பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் / Paatham Tholuvaar

சிவ சிவ
திருமுறை
பாதம் தொழுவார் பாவம்  தீர்ப்பார்

பாவத்தைத் தொலைக்கப் போவதாகப் பலரும் பலவற்றைச் செய்து வருகின்றனர். சிலர் குடமுழுக்கில் கலந்து கொண்டால் ஏழேழு பிறவிக்கும் உள்ள பாவங்கள் நீங்கிவிடும் என்று கோயில் குடமுழுக்குகளைத் தேடிச் செல்கின்றனர். சிலர் கோயில் திருப்பணி, கோயில் உபயம் என்று பாவம் தொலைவதற்கு வாறி வழங்குவர். சிலர் பெருமானுக்கு ஆடை அணிகள் வாங்கிக் கொடுத்துப் பாவத்தைத் தொலைக்கலாம் என்று தங்க வேல், வைர மூக்குத்தி, பட்டுப் புடவை, வைர அட்டியல், வெள்ளிக் கவசம் என்று செலவிடுவர். இன்னும் சிலர் கத்தைக் கத்தையாக வெள்ளிப் பணத்தை கோயில் உண்டியலில் செலுத்துவர். இன்னும் பல நூறு ஆயிரம் பேருக்குச் சோறு போடுவதனால் பாவம் தொலையும் என்று சிலர் அன்னக் கொடை அளிப்பர். இவ்வாறான நற்பணிகள் செய்வது நல்லதே எனினும் அவை பாவங்களைப் போக்காது என்பது சித்தாந்த சைவத்தின் கொள்கை. இறைத் தொண்டும் மக்கள் தொண்டும் நமக்கு நல்வினைப் பயன் என்ற நற்செயல்களின் பலனையே கொடுக்கும். இதற்கு மேலாக இந்நற்பணிகளைச் செய்வதனால் இறைவனிடத்தில் அன்பும் இறை உணர்வும் மேலோங்க வேண்டும் என்பதனையே முதன்மையாக சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

பாவத்தைத் தொலைப்பதற்காக இன்னும் சிலர் புனித நீர் நிலைகளைத் தேடிச் செல்வர். கங்கை, காவிரி, தென்குமரி என்று புனித நீர்நிலைகளில் நீராடிப் பாவத்தைத் தொலைக்க முற்படுவர். இவ்வாறு நீராடுகின்ற போது அணிந்திருகின்ற உடையைக் கழற்றிக் கொடுத்து விடுவதனால் பாவம் தொலைந்து விடும் என்றும் எண்ணுவர். அவ்வாறு செய்வதால் பாவம் தொலைவதில்லை என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுகின்றார். “கங்கை ஆடில்என் காவிரி ஆடில்என், கொங்கு தண்குமரித்துறை ஆடில்என், ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடில்என், எங்கும் ஈசன் எனாதவர்க்கேஎன்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுகின்றார். நெய் விளக்குப் போடுதல், எள் விளக்குப் போடுதல், எலுமிச்சைத் தோலில் விளக்குப் போடுதல், தேங்காயில் விளக்குப் போடுதல், பூசனியில் விளக்குப் போடுதல் என்று விளக்குப் போட்டுச் சிலர் மறுமாற்று அல்லது பரிகாரம் செய்து பாவத்தைத் தொலைக்க முற்படுவர். இவ்வாறு செய்தாலும் பாவத்தைத் தொலைக்க முடியாது என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

நம் பாவங்கள் தீர்வது என்பது இறை உணர்வு மேலிடுவதால் மட்டுமே கூடும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாவம் என்பது செயல் அல்லது வினையோடு தொடர்பு உடையதாக இருக்கின்றமையால் தன் செயல் என்பது அற்று எல்லாம் அவன் செயலே என்ற உணர்வு பெறுகின்றபோது பாவம் நீங்கத் தொடங்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாவம் நீங்க விழைபவர்கள் நாதனே எனவும் நக்கனே எனவும் நம்பனே எனவும் கூறி நின்று இறைவனின் திருவடிகளைப் பாடிப் பரவி வழிபட்டால் இறை உணர்வு மேலோங்கப் பாவம் கழியும் என்கின்றார். இதனை, “வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு ..... நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று, பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரேஎன்று தமது திருப்பழனத் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

திருஞானசம்பந்தப் பெருமானின் பாடல் வழி இறை உணர்வு ஒன்றே பாவங்கள் தொலைய வழி என்று புலப்படுகின்றது. இறை உணர்வு ஏற்பட அப்பெருமானின் பாதங்களைத் தொழுகின்ற இறை வழிபாடே முதன்மையான ஒன்றாக இருக்கின்றது. கோயில் திருப்பணிகள், மக்கள் தொண்டு, புனித நீர்நிலைகளில் நீராடுதல், மறுமாற்றுச் செயல்முறைகள் அல்லது பரிகாரங்கள் இறைவழிபாடு ஆகாதா என்றால் அவை என்ன நோக்கோடு செய்யப் படுகின்றது என்பதனை வைத்தே அது உறுதியாகின்றது. எதையாவது ஒன்றை எதிர்பார்த்துச் செய்யும் அல்லது பயன் கருதி செய்கின்ற செயல் முறைகள் இறைவழிபாடு ஆகாது எனப்படுகின்றது. பெயர், புகழ், பாராட்டு என்பதோடுயான், எனதுஎனும் செருக்கோடு செய்கின்ற திருப்பணிகள், உயிர் நற்செயல் அல்லது பசு புண்ணியம் என்று ஆகுமே ஒழிய பாவம் தொலைய வாய்ப்பில்லை என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. நாம் செய்கின்ற நற்பணிகளின் வாயிலாக நமக்கு இறை உணர்வு ஏற்பட, நம் பாவம் தொலைய, அப்பணிகளைநாதனேஎன்று எண்ணிச் செய்ய வேண்டும் என்கின்றார் திருஞானசம்பந்தர்.

நாதாஎன்பது தலைவனே, எங்களை உடையவனே என்ற பொருளில் குறிக்கப்படுவது. பாவம் தொலைய, இறை உணர்வு ஏற்பட, வழிபாட்டில், பெருமானே நீயே எல்லா உயிர்களுக்கும் தலைவன். நீயே எல்லா உலகங்களுக்கும் தலைவன். நீயே அனைத்து உலகங்களையும் ஆக்குகின்றவன். நீயே அனைத்து உயிர்களையும் காக்கின்றவன். நீயே அனைத்து உயிர்களையும் உரிய வேளையின் போது இளைப்பாறச் செய்பவன். நீயே அனைத்து உயிர்களுக்கும் உன் திருவடிகளைக் கொடுத்து அருளுகின்றவன் என்று எந்த உயிர் உணர்வால் அவனின் திருவடிகளில் அடைக்கலம் புகுகின்றதோ அந்த உயிருக்கே பாவம் தொலைவதற்கு வாய்ப்புண்டு என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

நற்பணிகள் செய்தால் அவற்றிற்குரிய பலன் நற்செயல் பயனாக வருவதும் தீய செயல்கள் செய்தால் அதனின் பயன் தீய பயனாக வரும் என்பதே சித்தாந்த சைவக் கொள்கை. நற்செயல்களின் பலனைப் பொன் விலங்கு என்றும் தீய செயல்களின் பலன்களை இரும்பு விலங்கு என்றும் குறிப்பிடுவர். எனினும் விலங்கு என்பது ஒருவரின் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துவது போன்று நல்வினைப் பயனையும் தீவினைப் பயனையும் ஒருவர் நுகர்ந்து முடிக்கப் பல பிறவிகள் என்பதில் அகப்பட்டு இன்ப துன்ப உணர்வுகளை நுகர்ந்து அல்லல் பட வேண்டி உள்ளது. இதிலிருந்து விடுபடுவதனையே பாவம் தொலைத்தல் என்று சைவம் குறிப்பிடுகின்றது. பிறவி அறுதலே பாவம் தொலைத்தல் எனப்படுகின்றது. எனவே பயன் கருதிச் செய்யப்படுகின்ற பரிகாரங்கள் மீண்டும் மீண்டும் நமக்குப் பிறவியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பர்.

பயன் கருதாத நற்செயல்களே நமக்கு இறை உணர்வை ஏற்படுத்தி பிறப்பு அற வழி காட்டும் என்பர். இதனையே, “என் கடன் பணி செய்து கிடப்பதே, தன் கடன் அடியேனையும் தாங்குதல்என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். அன்றாட வாழ்க்கையில் பெருமான் அளித்துள்ள பணம், பொருள், புகழ், மனைவி, மக்கள், சுற்றம், உலகம், நாடு என்பன எல்லாம் பெருமானின் திருவருளால் நமக்குக் கிட்டியது. அப்பெருமான் செய்திருக்கின்ற உதவிக்கு, திருவருளுக்கு நான் ஒருபோதும் கைமாறு செய்ய இயலாது என்று நம்மை முன்னிலைப் படுத்தாது பெருமானின் திருவருளையே முன்னிலைப் படுத்திச் செய்கின்ற திருப்பணிகளும் மக்கள் தொண்டுமே நமக்கு அவற்றின் வழி இறை உணர்வை ஏற்படுத்தி நம் பாவம் தொலைய துணை நிற்கும். பெருமானே எல்லாவற்றிற்கும் தலைவன். நாம் என்றும் அவனின் அடிமை. நாம் என்றும் அவனுக்கு அடிமை செய்யக் கடப்பாடு உடையவர்கள் என்ற உணர்வு உள்ளே எழுந்து, யான் எனது என்ற செருக்கு அற்று அன்பும் பணிவும் அடக்கமும் உடைய உயிர்களே இறை உணர்வை எட்டிப் பார்க்கும் நிலைக்குத் தங்களைத் தக்க வைத்துக் கொள்ளுபவை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார்.

இதனாலேயே அடியார் பெருமக்கள் மற்றவர்களிடம் அன்பு காட்டுவதையும் மற்றவரைப் பணிதலையும் தங்கள் மூச்சாகக் கொண்டனர். தங்களை ஒரு பொருட்டாக என்ணாது பெருமானின் திருவருளுக்கு முன் தாங்கள் மிகவும் எளியவர்கள் என்றும் அவர்கள் பெருமானுக்கு அடிமை பூண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்கள். இதனையே, “கடையவனேனைக் கருணையினால் ஆண்டுக் கொண்ட விடையவனேஎன்று மணிவாசகர் குறிப்பிடுவார். “நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைஎன்றும்சீயேதும் இல்லாத சிறுமையனைஎன்றும் மணிவாசகர் குறிப்பிடுவார். உயிர்கள் பாவம் நீங்க வேண்டும், பிறவி நீங்க வேண்டும் என்றால் இறைவனுக்கு நாம் உடைமைப் பொருள், அவனுக்கு நாம் அடிமைப் பொருள், அவன் நமக்குச் செய்துள்ள பெரும் கருணையினால்தான் இவ்வுலகில் தற்காலிகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், அவன் உயிர்களுக்குச் செய்யும் உதவியினைத்தான் நாம் அவனின் நிகராளியாக, நம் நற்பணிகளாக, நற்செயல்களாகச் செய்து கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வு மேலிடாமல் நம் பாவங்கள் தொலையாது என்பர்.

புனித நீர் நிலைகளில் நீராடுவது என்பது சிவபெருமானின் திருவருளில் நனைகின்றேன், அவன் இட்டப் பிச்சையே இவ்வாழ்க்கை, என் செயல் என்பது நீங்கி எல்லாம் அவன் கட்டளை இட நடக்கின்றது என்ற உணர்வு மேலிட்டு என் பிறவி அற வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டால் ஒழிய பாவம் நீங்காது என்பர். பெருமானுக்கு விளக்குப் போடுதல் போன்ற பரிகாரங்கள் எல்லாம், “நான் கையில் ஏந்தி உள்ள இந்த விளக்கு, எப்போது என் உள்ளத்தில் உள்ள அறியாமை எனும் இருளை அகற்றுமோ இறைவா, அதற்கு நீ எப்பொழுது அருள் செய்வாய்!” என்று எண்ணி ஏங்கி வழிபடும் உயிர்களுக்கே பாவத்தைத் தொலைப்பதற்கு வழி பிறக்கும், இறை உணர்வு மேலிடும் என்பர். இதனையே, “செடிஉடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும், செல்கதிக்கு வழிகாட்டு சிவனே என்றும், தூய்மலர் தூவி வழிபடும் அவர் நெஞ்சுளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமேஎன்பார் திருநாவுக்கரசு அடிகள்.

பாவத்தைத் தொலைப்பதற்கு, “நாதாஎன்று மட்டும் அல்லாமல்நக்காஎன்றும் அவனின் திருவடிகளை வழிபட வேண்டும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ‘நக்காஎன்பது நின்மலன் என்று பொருள்படும். பெருமான் மலம் அற்றவன். அவன் விருப்பு வெறுப்பு அற்றவன். அவன் வேண்டுதல் வேண்டாமை இலாதவன் என்பதனைத் தெரிந்து வழிபாடு இயற்றினால் பாவம் தொலையலாம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார். இப்பொழுது என் வினைப் பயனுக்கு ஏற்பப் பேர் அருளாளனான பெருமான் மிகச் சிறந்த ஒன்றை எனக்கு நல்கிக் கொண்டிருக்கின்றான். அவன் உயிர்களிடத்தே வேண்டியவர், வேண்டாதவர் எனும் வேறுபாட்டினைக் காட்டாதவன். எப்பொழுதும் உயிர்களின் நலன்  கருதியே அருள் புரிந்து கொண்டிருக்கின்றான். என்னுடைய அறியாமையினால்தான் சில நுகர்வுகள் இன்பமாகவும் சில நுகர்வுகள் துன்பமாகவும் எனக்குத் தோன்றுகின்றன எனும் உண்மையை உணர்ந்து வழிபாடு இயற்றும் உயிர்களே பாவங்களைத் தொலைக்கத் தலைப்படுபவை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதனையே, “குறைவிலா நிறைவே, கோதிலா அமுதேஎன்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவார்.

இதனையே, திருவாடுதுறையில் பெருமானிடத்தில் திருஞானசம்பந்தர் அவர் தந்தையின் வேள்விக்குப் பணம் கேட்டுப் பாடிய போது பெருமான் பணம் அளிக்காது காலம் தாழ்த்தினான். இதற்குப் பாவம் தொலைந்தவரான திருஞானசம்பந்தர், “நீ எனக்குப் பணம் கொடுக்கவில்லை என்றால், அது நீ எனக்குச் செய்யும் இனிமையான அருள் எனவே கொள்வேன்என்று கூறியதனை, “இடரினும் தளரினும் ..... ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனேஎன்று அருளினார்.

பாவம் தொலைவதற்கு, ‘நாதா எனவும்’ ‘நக்கா எனவும்’ ‘நம்பா எனவும்இறைவனின் திருவடிகளைத் தொழ வேண்டும் என்கின்றார் திருஞானசம்பந்தர். நம்பன் என்றால் நம்பிக்கைக்கு உரியவன் என்று பொருள். பெருமான் எப்பொழுதும் நமக்கு நன்மையே செய்து கொண்டிருகின்றான்; நம்மைச் சுற்றி நடப்பதெல்லாம் நன்மையாகவே நடந்து கொண்டு இருக்கின்றது. அப்பெருமானே நமக்கு அனைத்தையும் கூட்டுவித்து நம்மை நன்னெறிக்கு ஆளாக்கிக் கொண்டு இருக்கின்றான் என்று அவனை முழுமையாக நம்பாத வரையிலும் உயிர்களுக்குப் பாவம் தொலைய வழி ஏற்படாது என்று திருஞானசம்பந்தப் பெருமான் நினைவூட்டுகின்றார்.

பாவம் தீர்க்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபடும் நாம் புறத்தில் செய்யும் செயல் முறைகளின் வழி அகத்தில் ஏற்பட வேண்டிய இறை உணர்வுக்கு முதன்மை அளிப்போமானால் நாம் செய்கின்ற வழிபாடுகளும் பரிகாரங்களும் வெறும் செயல்முறையாய்க் கழியாமல் இறை உணர்வை மேலிடச் செய்யும் என்பதனைத் தெளிவோம், நலம் பெறுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக