திங்கள், 3 அக்டோபர், 2016

4.எளிய இல்லப் பூசனைச் செயல்முறைகள் / Eliya Poosanai Muraigal

சிவ சிவ
திருமுறை

எளிய இல்லப் பூசனைச் செயல்முறைகள்

            சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம், இறைவனை அடையும் நன்னெறி நான்காகச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பனவற்றைக் குறிப்பிடுகின்றது. இந்நன்னெறி நான்கினில் நோன்பு என்பது சிவப்பூசனை இயற்றுவதனைக் குறிப்பதாக உள்ளது. திருக்கோயில்களில் செய்யப்பெறும் சிவப்பூசனை பொதுப்பூசனை(பரார்த்தப் பூசனை) என்றும் இல்லங்களில் இயற்றப் பெறும் சிவப்பூசனை தனிமாந்தப் பூசனை(ஆன்மார்த்தப் பூசனை) என்றும் குறிக்கப் பெறுகின்றது. இல்லப் பூசனையை எளிமையாகத் தமிழ்ச் சிவ ஆகமமாகத் திகழும் திருமந்திரமும் தமிழ் வழிபாட்டுமுறை நூலாகத் திகழும் திருமுறைகளும் தெளிவுற விளம்புகின்றன.

            பெருமானுக்கு நீரும் பூவும் தமிழ்ப் பாடல்களுமே வழிபாட்டிற்குப் போதுமானவை எனினும் எல்லா நிலையில் உள்ள மக்களும் மனம் பற்றி, அழுந்தி, அன்போடு வழிபாடு இயற்றுவதற்குச் செயல்முறைகள் உடைய பூசனை பெருந்துணையாக உள்ளது. சிவப்பூசனை இயற்றுவதன் முதன்மையைத் திருமூலரும் சிவச்செறிவு இயற்றுதலில், நன்று ஆற்றுதல்(நியமம்) எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார். எனவே இல்லங்களிலும் திருக்கோயில்களிலும் பெருமானிடத்தில் அன்பு ஏற்படப் பூசனைகள் இயற்றுவது இன்றியமையாதது ஆகின்றது. சைவத் திருக்கோயில்களில் பூசனை இயற்றுவோரும் குடமுழுக்கு செய்வோரும் சைவத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள நான்கு வகையான சிவதீக்கைகளை முறையாகப் பெற்றுப் பூசனைகளை இயற்ற வேண்டும் என்பது சைவசமய மெய்கண்ட நூல்களில் குறிக்கப்பெற்றுள்ளது. இல்லத்தில் பூசனை இயற்றுவோருக்கு இம்முறைமை கட்டாயம் இல்லை எனினும் பூசனை முறைகளைத் தீக்கைப் பெற்றுச் செய்வது சிறப்பு என்று குறிக்கப் பெறுகின்றது. இல்லத்தில் பூசனை இயற்றுவோர் சிறிதேனும் எளிய பூசனை முறைகளை அறிந்து பூசனை இயற்றுவதும் அதனை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதும் தலையாயதாக உள்ளது.

            தமிழ்ச் சைவர்களின் இல்லத்தில் இயற்றப் பெறும் பூசனைகளில் இறைவனின் திருவடிவப் படங்களோ அல்லது திருவடிவங்களோ வைத்துப் பூசனை இயற்றி வழிபடலாம். பூசனையில் திருவடிவப் படங்களைக் காட்டிலும் திருவடிவங்களை வைத்துப் பூசனை இயற்றுவதே சிறப்பு. திருக்கோயிலில் வைக்கப்பெறும் திருவடிவங்களுக்கே ஆகமவிதிப்படி அளவை போன்ற கட்டுப்பாடுகள் உண்டு. இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்படும் திருவடிவங்களுக்கு அக்கட்டுப்பாடுகள் இல்லை என்று குறிக்கப்பெறுகின்றது. இதனால் இல்லத்தில் திருவடிவங்களை வைத்துப் பூசனைகள் இயற்றலாம் என்பதும் நாம் விரும்பியவாறு அவற்றின் அளவை அமைத்துக் கொள்ளலாம் என்பதும் புலனாகும். எனினும் திருவடிவங்களை வைத்துப் பூசனை இயற்றும்போது அவற்றிற்குரிய முறையான திருமஞ்சனம்(அபிடேகம்), பூசனை என்பதனைத் தவறாமல் செய்து வழிபடுவது இன்றியமையாதது ஆகும்.

            பெருமானைத் தொட்டுப் பூசனை செய்பவர்களை, “முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்என்று சுந்தரர் பெருமான் தமது திருத்தொண்டர்த்தொகையில் குறிப்பிட்டு மகிழ்வார். திருவடிவங்களை வைத்து, அவற்றைத் தொட்டுத் திருமஞ்சனம் ஆட்டி, உடைகள் அணிவித்து, அழகு செய்து மலரிட்டுப் பொட்டு வைத்துத் திருநீறு அணிவித்துப் பூசனை இயற்றுகின்ற போது, பெருமானிடத்திலே அன்பு மிகுகின்றது. இவ்வாறு பூசனைக்குத் தெரிவு செய்யப்படும் திருவடிவங்களில், சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களில் குறிக்கப் பெற்றிருக்கும் சிவலிங்கம், நடவரசர் திருவடிவங்களை வைத்துப் பூசனை இயற்றுவது பெருஞ்சிறப்பாகும். பிள்ளையார், முருகன், அம்மை போன்ற சிவபெருமானின் பிற வடிவங்களை வைத்துப் பூசனை இயற்றினாலும் சிவனின் திருவடிவு பூசனையில் இடம்பெறுவது தமிழ்ச் சைவர்களின் இல்லப் பூசனையில் இன்றியமையாதது ஆகும்.

பல திருவடிவங்களை வைத்துப் பூசனை இயற்றுவதைக் காட்டிலும் ஒரு கடவுள் வழிபாட்டிற்குள் வந்து விடுவது மேன்மையானது என்பதனை, “பொது நீக்கித் தனை நினைய வல்லோர்..” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். பூசனைக்குரிய திருவடிவங்களைச் சாக்கடைக்கு அருகிலும் வீட்டு வேலிக்குப் பக்கத்திலும் வீட்டுப் படிகளுக்கு அடியிலும் வைத்து வழிபடுவது பொருத்தம் அற்றது. தவிர, சைவத்திற்குப் பொருந்தாத காவல் தெய்வங்களையும் சிறுதெய்வங்களையும் நடுகல் தெய்வங்களையும்  எல்லைத் தெய்வங்களையும் வீட்டில் வைத்துப் பூசனை இயற்றுவதும் தவறு என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

            தூயவனாகியப் பெருமானைத் தூய இடத்தில் வைத்து, அகத்தூய்மையுடனும் புறத்தூய்மையுடனும் பூசனை இயற்ற வேண்டும் என்று குறிப்பிடுவர். இல்லப் பூசனையில் முதலில் பூசனை இயற்றுபவர் குளித்துத் தூய உலர்ந்த ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். பின்பு திருவடிவத்தை வைத்து வழிபடுபவர் என்றால் பெருமானுக்கு நீரையும் பாலையும் கொண்டு எளிய திருமஞ்சனம்(அபிடேகம்) செய்து, ஈரத்தைத் துடைத்து உலர்ந்த ஆடைகளைப் பெருமானுக்கு அணிவித்து, மலர் மாலைகளையோ மலர்ச்சரத்தையோ அணிவித்து, பெருமானை அழகு செய்தல் வேண்டும். பின்பு பூசனை இயற்றுபவர் உடை மாற்ற வேண்டியிருக்குமானால் உடைமாற்றிக் கொண்டு, தீக்கைப் பெற்றவராக இருப்பின் புறச்சுத்தி, அகச்சுத்திப் போன்றவற்றைச் செய்து திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். தீக்கைப் பெறாதவராய் இருப்பின் உடை மாற்றிக் கொண்டுசிவயநமஎன்ற திருவைந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லித் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். பின்பு பூசனைக்குரிய பொருட்களைத் தயார் செய்தல் வேண்டும். முதலில் திருவைந்து எழுத்தினையோ அல்லது திருமுறையினை ஓதியோ நல்ல விளக்கினை ஏற்றல் வேண்டும். “இல்லக விளக்கதுஎன்ற பாடலைப் பாடிக்கொண்டு நல்ல விளக்கினை ஏற்றுவது சிறப்பானது.

            விளக்கு ஏற்றிய பின்பு, பெருமானுக்குக் கிண்ணத்தில் நீர் வைத்தல் வேண்டும். இன்னொரு கிண்ணத்திலோ செம்பிலோ நீரை நிரப்பி, அதில் உதிரிப் பூக்களைப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இது பூக்களைத் தூய்மை செய்வதற்கு ஆகும். ஊது வர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும். வசதிக்கு ஏற்பத் தேங்காய் மூடியில், வெற்றிலை, வாழைப்பழம், பாக்கு வைத்து இறைவனின் திருமுன்பு வைக்கலாம். பொங்கல், முந்திரிப்பழம், கற்கண்டு, பழம் போன்றவற்றைத் திருவமுதாக இறைவனின் முன்பு தட்டிலோ, இலையிலோ வைத்து மூடிவிட வேண்டும். மணி, தூபக்கால், ஒற்றைச் சுடர்க்கால், சூடத்தட்டு, சிறிய கரண்டியுடன் கூடிய நீர்க்கிண்ணம், திருநீற்றுக் கிண்ணம், தட்டில் உதிரிப் பூக்கள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

            பூசனையை ஆரம்பிப்பதற்கு முன்பு சாம்பிராணியைக் கொளுத்திப் புகை வெளிப்படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். பூசனையில் முதலில் ஆசான் வணக்கம் செய்தல் வேண்டும். பெருமானே நமக்கு நந்தியெம்பெருமான் வடிவில் ஆசானாக வந்தமையால் பூசனை மணியின் மீது உள்ள நந்தியினை ஆசானாக எண்ணி வணங்கல் செய்யலாம். நால்வர் பெருமக்களையும் வணங்கலாம். இதற்கு நீர்க்கிண்ணத்தில் போடப்பெற்றிருக்கும் மலர்களில் சில மலர்களை எடுத்து, மணியின் மீது வைத்து, ‘நமசிவயஎன்ற திருவைந்து எழுத்து மந்திரத்தை மூன்று முறைக் கூறியோ, “பூழியர்கோன் வெப்பு ஒழித்தப் புகலியர் கோன் கழல் போற்றி ....” என்று தொடங்கும் நால்வர் துதியை மந்திர வடிவிலே சொல்லி மணியில் அடியில் மலரிட வேண்டும்.

            இதனை அடுத்து நீர்க்கிண்ணத்தில் உள்ள சில மலர்களைக் கையில் எடுத்துக் கூப்பிக் கொண்டு, திருவடிவில் இறைவனை எழுந்தருளச்  செய்தல் வேண்டும். இதற்கு, “எல்லாம் வல்ல இறைவா, அடியேன் செய்கின்ற இந்த எளிய பூசனையை ஏற்க இத்திருவடிவில் எழுந்தருள்வாயாகஎன்று கூறலாம். இறைவனை எழுந்தருளச் செய்த பின்பு, கூப்பிய கையில் உள்ள மலர்களை இறைவனின் திருவடியில் இடல் வேண்டும், தொடர்ந்து வலக்கையால் மணியை எடுத்து, இடக்கைக்கு மாற்றி மணியை ஒலிக்க வேண்டும். பின்பு புகைந்து கொண்டிருக்கும் சாம்பிராணிக் காலினை எடுத்து வைத்து, நீர்க்கிண்ண மலரில் சிலவற்றை எடுத்து, சாம்பிராணியைச் சுற்றி, இறைவனுக்கு அதனைச் சமர்ப்பித்ததாக பாவனை செய்து அம்மலர்களைத் திருவடிவின் திருவடிகளில் இடவேண்டும். இவ்வாறு செய்யும் போதுநமசிவயஎன்ற மந்திரத்தையோ, “சலம்பூவொடு தூபம் ....) என்ற பாடலை மந்திரமாகக் கூறியவாறு செய்யலாம்.

பின்பு சாம்பிராணியை எடுத்து ஓங்கார வடிவில் இறைவனின் திருமுன்பு காட்டி வைத்தல் வேண்டும். தொடர்ந்து ஒற்றைச் சுடரை ஏற்றி வைத்து நீர்க்கிண்ண மலர்களில் சிலவற்றை எடுத்துச் சுடரைச் சுற்றித் திருவடிவின் திருவடிகளில் இட்டு, ஒற்றைச் சுடரை ஓங்கார வடிவில் காட்டி வைக்க வேண்டும். இதுபோது, “சொற்றுணை வேதியன் ....” என்ற பாடலை மந்திரமாகக் கூறலாம். அதன் பிறகு நீர்க்கிண்ண மலர்களில் சிலவற்றை எடுத்து திருவமுதினைத் திறந்து அதனைப் பெருமானுக்குப் படைப்பதாக மலர்களைச் சுற்றிப் பெருமானின் திருவடிகளில் இட வேண்டும். தீர்த்தக் கிண்ணத்தில் உள்ள நீரினைத் தீர்த்தக் கரண்டியில் மூன்று முறை அள்ளித் திருவடிவின் வாயருகே கொண்டுச் சென்று பின் பெருமானின் திருவடியில் இடல் வேண்டும். இதுபோதுநமசிவயஎன்ற திருவைந்து எழுத்து மந்திரத்தைக் கூறலாம். இது பெருமானுக்கு அன்போடு உணவளித்தலுக்கு நிகராகும். பின்பு சூடத்தை ஏற்றி வைத்து நீர்க்கிண்ண மலர் சிலவற்றை எடுத்து சூடத்தினைச் சுற்றி திருவடிவின் திருவடியில் இட்டுச் சூடத்தினைப் பெருமானுக்குச் சமர்ப்பிப்பதாக இடல் வேண்டும். பின் சூடத்தட்டை ஓங்கார வடிவில் காட்டி வைத்து அணைத்து விட வேண்டும். சூடத்தைக் காட்டும்போது, “கற்பனைக் கடந்த சோதி ....” என்ற பாடலை மந்திரமாகவோ, திருவைந்தெழுத்தையோ கூறலாம்.

பூசனையில் தொடர்ந்து தட்டில் உள்ள உதிரிப்பூக்களை எடுத்துக் கொண்டு மந்திரம் சொல்லிப் பெருமானின் திருவடியில் மலரிட வேண்டும். பூவைக் கையில் எடுத்து, நெஞ்சின் அருகே கொண்டு சென்றுப் பின் பெருமானின் திருவடியில் இட வேண்டும். இதுபோது, “கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி ...” என்ற திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் போற்றியை முழுமையாகவோ அல்லது முதற் கண்ணியையும் இறுதிக் கண்ணியையும் மட்டுமோ அல்லது திருவைந்து எழுத்து மந்திரத்தையோ மனநிறைவு கொள்ளும் வரையிலோ சொல்லி மலரிடலாம். இது பெருமானை மலர்களால் வழிபாடு செய்தல் ஆகும். இதனைத் தொடர்ந்து பஞ்சபுராணமோ அல்லது தெரிந்த திருமுறைகளையோ ஓத வேண்டும். இது பெருமானைப் பாமாலையால் வழிபடுதல் ஆகும். இதுபோது, மூவர் பாடல்களில் இருந்து ஒரு தேவாரம், மணிவாகரின் திருவாசகத்தில் இருந்து ஒரு பாடல், திருவிசைப்பாவில் இருந்து ஒருபாடல், திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடல், பெரியபுராணத்தில் இருந்து ஒரு பாடல் என்று ஐந்து பாடல்களை ஓதலாம்.

அதன் பின் சிறிது மலர்களை எடுத்துக் கையில் கூப்பிக் கொண்டு, எட்டு மலர்கள் சாற்றுதல் என்பதனைச் செய்தல் வேண்டும். இதற்குச் சிவபுராணத்தில் வந்துள்ள, “ ஈசன் அடி போற்றி....” என்று தொடங்கி, “ஆறாத இன்பம் அருளும் மலை போற்றிஎன்பது வரையிலான எட்டுப் போற்றிகளைச் சொல்லிப் பெருமானின் திருவடிகளில் மலரிட வேண்டும். பின்பு இன்னும் சில மலர்களைக் கையில் வைத்துக் கொண்டு, உலக நலனுக்காக, “வான்முகில் வழாது பெய்க..” என்ற பாடலைக் கூறவேண்டும். பின்பு சூடத்தினை ஏற்றி வைத்து, நீர்க்கிண்ண மலரை எடுத்து, அச்சூடத்தினைச் சுற்றித் திருவடிவின் திருவடியில் இட வேண்டும். சூடத்தட்டினை ஓங்கார வடிவில் பெருமானின் திருமுன்பு காட்ட வேண்டும். இது போது, அடியார் வணக்கமாக, “என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்...” என்ற பாடலை மந்திரமாகக் கூறலாம். பின்பு சூடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு திருநீற்றினை அணிந்து கொள்ளலாம். இயலுமானால் சிறிது நேரம் அமர்ந்து இறைவனை மனதில் எண்ணலாம் (தியானம்).

இல்லத்தில் இயற்றக் கூடிய இந்த எளிய பூசனை முறையை அன்போடு இயற்றுதல் இன்றியமயாத ஒன்று. இந்த எளிய இல்லப் பூசனை முறையை எல்லா இல்ல நிகழ்ச்சி வழிபாட்டிலும் செய்யலாம். தமிழ்ச் சைவர்களாகிய நாம் சுயமாகப் பெருமானை வழிபடவும் நம் இல்ல நிகழ்ச்சிகளில் இல்லத் தலைவர்களாகவும் இல்லத் தலைவிகளாகவும் பூசனைகளை நாமாகவே முன் நின்று நடத்துவது இன்றியமையாதது ஆகும். இல்லத் தலைவர்களும் இல்லத் தலைவிகளும் நம் பிள்ளைகளுக்கு நம் வழிபாட்டு முறைகளை முன்மாதிரி எடுத்துக்காட்டாய் நின்று கற்றுத் தர வேண்டுவது பெருங் கடமையாகும். நம் சமய, மொழி, இனமான உணர்வை நிலைநிறுத்துவது நம் கடமை என்பதனைத் தெளிதல் வேண்டும்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக