திங்கள், 3 அக்டோபர், 2016

5. படை இலங்கு கரம் எட்டு உடையான் / Padai Ilanggu Karam Udaiyaan

சிவ சிவ
திருமுறை

படை இலங்கு கரம் எட்டு உடையான்

             பரந்து விரிந்த பரம்பொருளான சிவபெருமானின் இயல்புகள் அல்லது குணங்கள் இவைதான் என்று குறிப்பிட முடியாது என்று செந்தமிழ்ச் சைவர்களின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. எனினும் அப்பரம்பொருளின் இயல்பினை உயிர்கள் சற்றேனும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சித்தாந்த சைவம் பெருமானின் இயல்புகள் அல்லது குணங்கள் எட்டு என்று குறிப்பிடுகின்றது. இதனையே உலகப் பேராசான் திருவள்ளுவரும் இறைவனை, ‘எண்குணத்தான்என்று குறிப்பிடுவார். இறைவனைக் குணக்குன்றே என்றும் குணமிலி என்றும் திருமுறைகள் குறிப்பிடினும் தன் வயத்தன், தூய உடம்பினன், இயற்கை அறிவினன், முற்று அறிவினன், இயல்பாய்ப் பாசம் நீங்கினவன், பேர் அருள் உடையவன், பேர் ஆற்றல் உடையவன், வரம்பில் இன்பம் உடையவன் என்ற எட்டு இயல்புகளை அல்லது குணங்களைப் பொதுவாக இறைவனின் இயல்புகளாகச் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

            பெருமானின் எட்டு இயல்புகளில் தூய உடம்பினன் என்ற இயல்பினை நன்கு விளங்கிக் கொள்வது இன்றியமையாதது ஆகும். பெருமானின் திருவுடம்பு அல்லது திருவடிவம் பல்வேறாகத் திருக்கோயில்களில் அமைக்கப் பெற்றிருப்பதனைக் காண்கின்றோம். வடிவமும் பெயரும் இல்லாதவன் பரம்பொருள் என்பதனை, “ஓர் உருவம் ஓர் நாமம் என்று ஒன்றும் இல்லார்க்கு, ஆயிரம் நாமம் சொல்லித் தெள்ளேனம் கொட்டாமோஎன்று திருத்தெள்ளேனத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார். எனினும் அறிவதற்கு அரிதாய் உள்ள அப்பரம்பொருள் உயிர்கள் தன்னை அறிந்து வழிபட்டு உய்தி பெற வேண்டும் என்பதற்காகத் தானே வடிவம் தாங்கி வந்தது என்று திருவுந்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது. எனவே தன்னிடத்தே உள்ள பேரின்பத்தினை உயிர்களுக்குக் கொடுப்பதற்காகப் பெருமானே வடிவம் அற்ற நிலையிலும், வடிவ நிலையிலும், வடிவமும் வடிவம் அற்ற நிலையிலும்(அருவம், உருவம், அருவுருவம்) தோன்றி அருளுகின்றான் என்று தமிழ் மந்திரங்களான திருமுறைகளும் சித்தாந்த மெய்கண்ட நூல்களும் குறிப்பிடுகின்றன.

            பெருமான் வடிவம் கொள்கின்றபோது தனது திருவருளையே தமக்குத் திருவடிவாக அமைத்துக் கொள்கின்றான் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. மாயை என்ற மூலப்பொருளினைத் துணையாகக் கொண்டு உயிர்களுக்கு அவன் உடல்களைக் கொடுப்பது போன்று தமக்கு அமைப்பது கிடையாது என்று சைவம் குறிப்பிடுகின்றது. இதனால் பெருமானின் திருவடிவம் நம்மைப் போன்ற மாந்தர்களின் உடலினைப் போன்றது அன்று என்பதனைத் தெளிதல் வேண்டும். பெருமானின் திருவடிவம் நம்மைப் போன்று தசையினாலும் குருதியினாலும் ஆனது அன்று. நம் உடலினைப் போன்று பசிக்கும் நோய்க்கும் ஆளாவது அன்று. மூப்பு, பிணி, சாக்காடு என்பதனை அடைவது அன்று. பெருமானுக்கு உடல் தளர்ச்சி, பிறப்பு, இறப்பு என்பது கிடையாது. இதனாலேயே அவனைப் பிறவா ஆக்கைப் பெரியோன் என்று சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது.

            பெருமானின் திருவடிவு அவனின் திருவருளே என்பதனால் பெருமானுக்குப் பசிப்பது என்பது கிடையாது. இதனால் பெருமானுக்குப் பூசனையில் படைக்கின்ற உணவுப் பொருட்களும் கூட நம் மனநிறைவுக்காகப் படைக்கின்றோமே அன்றி, பெருமான் அவற்றை உண்கின்றான் என்பது ஏற்புடையது அன்று. இதனால் பெருமானுக்கு விலையுயர்ந்த ஆடைகளை அணிவிப்பதும் விலையுயர்ந்த அணிகலன்களை அணிவிப்பதும் கூட நம் மனமகிழ்விற்காகவும் மனம் ஒன்றுதலுக்கும் ஆகும் என்பதே உண்மை. மேலும் இதன்வழி இறைவனின் திருவடிவிற்கு இயற்றப்பெறும் திருமஞ்சனமும் கூட நம் மனமகிழ்விற்கும் மனநிறைவிற்கும் ஆகுமே அன்றி பெருமானுக்கு அது வேண்டுவது என்பது கிடையாது. பெருமான் உயிர்களுக்காகச் செய்யும் உதவிகளுக்குக் என்ன கைமாறு செய்வது என்று அறியாமலேயே இவ்வாறான செயல்முறைகளைப் பூசனைகளிலும் வழிபாட்டிலும் செய்கின்றோம்.

            உயிர்கள் தம்மைப் புறத்திலும் அகத்திலும் இருத்தி வைத்து வழிபடுவதற்காகப் பெருமான் இருபத்து ஐந்து சிவ வடிவங்களைக் கொண்டான் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு வடிவமும் பெருமான் உயிர்களுக்காக நிகழ்த்திய ஓர் அருள் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அருள் வடிவமாகக் குறிக்கப் பெறுகின்றது. அவ்வகையில் பெருமான் கொள்கின்ற திருவடிவங்களைச் சினவடிவம், இன்பவடிவம், அறிவுவடிவம் என மூன்றாகக் குறிப்பிடுவர். இதனை வேகவடிவம், போகவடிவம், யோகவடிவம் என்றும் குறிப்பிடுவர். பெருமானின் இருபத்து ஐந்து அருள் வடிவங்களை ஒட்டிய திருவருட்செயல்களும் குறிக்கப் பெறுகின்றன. இவ்விருபத்து ஐந்து அருள் வடிவங்களில் ஆடல் அரசு, சிவலிங்கம், பைரவர், கங்காளர், தென்முகக் கடவுள், உமையொரு பாகர், பலிகொள் பெருமான் போன்றவை சிலவாம்.

            சிவபெருமானின் அருள் திருவடிவங்களையே சைவத் திருக்கோயில்களில் நம் முன்னோர் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். பெருமான் உயிர்களுக்காக வெளிப்பட்டு அருளிய வடிவங்களையே திருக்கோயில்களின் கருவறையில் திருவடிவங்களாக அமைத்து வழிபட்டனர். இதை விடுத்து பெருமான் அருளாளர்களுக்குத் தோன்றி வெளிப்படுத்திய முருக வடிவம், பிள்ளையார் வடிவம், அம்மை வடிவம் போன்ற திருவடிவங்களையும் நம் தமிழ்ச் சைவர்கள் சைவக் கோயில்களில் அமைத்து வழிபட்டனர். இது  தவிர அவரவர் விரும்பிய வடிவங்களையும் பொருட்களையும் போர்க்கருவிகளையும் திருக்கோயிலில் வைத்து வழிபடுவது தமிழ்ச் சைவர்களின் சமயக் கொள்கைக்கு ஏற்புடையது அன்று என்பது தெளிவாகும். இதன்வழி தமிழ்ச்சைவர்கள் தங்களின் திருக்கோயில்களில் கற்பனையால் புனைந்த திருவடிவங்களை அமைத்து வழிபடுவது என்பது தவறாகும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. தவிர இறைவனின் திருவடிவங்களை அமைக்கின்றபோது இறைவன் காட்டி அருளிய வடிவங்களோடு சிவ ஆகமங்களிலும் திருமுறைகளிலும் குறிப்பிடப்பெற்றிருக்கும் இறைவனின் இயல்புகளையும் அவை உணர்த்தும் உண்மைகளுக்கும் ஏற்பத் திருவடிவங்களை அமைத்தனர் நம் முன்னோர்.

            திருவலிதாயம் என்னும் திருத்தலத்தில் இருக்கின்ற பெருமானைத் திருஞானசம்பந்தப் பெருமான், "படைஇலங்கு கரம்எட்டு உடையான் படிறாகக் கலன் ஏந்திக், கடை இலங்குமனையில் பலிகொண்டு உண்ணும் கள்வன்  உறைகோயில் அடையநின்ற அடியார்க்கு அடையாவினை அல்லல் துயர்தானே" என்று குறிப்பிடுகின்றார். திருவலிதாயத்தில் இருக்கின்ற பெருமான் எட்டுத் திருக்கைகளைக் கொண்டிருப்பதாயும் எட்டுத் திருக்கரங்களிலும் படைக்கலங்களைக் கொண்டிருப்பதாயும் சம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார். தமிழ்ச் சைவர்கள் தாங்கள் வழிபட்டத் திருவடிவங்களுக்கு ஏன் கூடுதலான திருக்கைகளை அமைத்தனர் என்பது உணர்தற்குரியது. இரு கைகளை உடைய நம்மைக் காட்டிலும் பெருமான் பன்மடங்கு பேர் ஆற்றல் மிக்கவன் என்ற இயல்பினைக் காட்டவே கூடுதலான திருக்கைகளை அமைத்தனர். ஏன் எட்டுக் கைகளை அமைக்க வேண்டும் என்று எண்ணுவோமானால் எட்டுத் திசைகளிலும் அப்பெருமானின் அருட்திருக்கைகள் சென்று அருளுதலை உணர்த்தினார்கள். அருளே வடிவான, பரிவே வடிவான அப்பெருமான் ஏன் படைக்கலங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதும் உணர்தற்பாலது.

            அருள் வடிவாய்த் தோன்றுகின்ற அப்பெருமான் நல் இயல்பும் நல்லொழுக்கமும் நல்லறிவும் உடைய உயிர்களுக்கு அன்பாய் அறக்கருணை புரிந்து அருள்வான் என்பதும் நல்லறிவும் நல்லொழுக்கமும் இல்லாது, செருக்கும் தீயப் பண்புகள் உடைய உயிர்களுக்குப் போர்க்கருவிகள் கொண்டு தண்டித்து மறக்கருணை புரிவான் என்பதனையும் குறிப்பால் காட்டி அமைத்து வைத்தனர் என்பர். அவ்வகையில் பெருமான் மூவிலைச் சூலம், மழு, வாள், குத்துக்கோல், பாசக் கயிறு, போன்ற படைக் கலங்களைக் கொண்டிருப்பான். மூவிலைச் சூலத்தால் ஆணவம், கன்மம், மாயை என்ற உயிர்களைப் பற்றியுள்ள அழுக்கினைப் பெருமான் அறுத்து எறிகின்றான் என்றும் மழுவினால் மும்மலங்களையும் வெட்டி வீழ்த்துகிறான் என்றும் அறிவு வாளால் உயிர்களின் பகையான அறியாமையை அறுத்து எறிகின்றான் என்றும் யானையை அடக்கும் குத்துக் கோலால் உயிர்களின் செருக்கை அடக்குகின்றான் என்றும் பாசக் கயிற்றால் உயிர்களை உடம்பில் இருந்து பிரித்து எடுக்கிறான் என்றும் குறிப்பால் உணர்த்தினர்.

            இவ்வாறு படைக்கலங்களைக் கொண்ட பெருமானே வேறு ஒரு நிலையில் பிரமனின் மண்டை ஓட்டில் பலிகொள்கின்ற பெருமானாகத் தோற்றம் அளிப்பதாகத் திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார். பிரமனின் மண்டையோட்டை ஏந்தி, இல்லங்கள் தோறும் இரத்தலைச் செய்யும் கள்வனாகவும் தோன்றுகின்றான் என்கின்றார். எல்லா உலகங்களையும் அவற்றில் உள்ள பொருள்களையும் உடைமையாகக் கொண்ட பெருமான் ஏன் இரத்தல்(பிச்சை) ஏற்கும் வடிவில் நிற்கின்றான் என்பதும் அதுவும் பிரமனுடைய மண்டை ஓட்டினை இரத்தற் கலனாகக் கொண்டு ஏற்கின்றான் என்பதும் தெளிதற்பாலது. பெருமான் இட்ட படைத்தல் தொழிலைச் செய்பவன் உயிர்வகையைச் சேர்ந்த பிரமன். அப்பிரமன் ஒரு சமயம் தாம் படைத்தல் தொழிலைச் செய்வதனால் தன்னைப் பெருமானுக்கு நிகராக எண்ணிச் செருக்குற்று இருந்தமையால் அவனுக்குச் செருக்கினைப் போக்கி நல்லறிவு புகட்டப் பெருமான் அவனின் ஐந்து தலைகளில் ஒரு தலையைப் பிடுங்கி, அத்தலையில் இரத்தலை மேற்கொண்டான் என்ற குறிப்பு சைவப் புராணங்களில் குறிக்கப் பெறுகின்றது. அவ்வகையில் பெருமானின் இரத்தல் வடிவம் பெருமான் சில உயிர்களின் செருக்கினைச் சினவடிவம் கொண்டு போக்கி அருளுவான் என்பதும் அவன் ஏற்கின்ற இரத்தல் பொருள், உணவு என்பது அல்லாது உயிர்களின் அறியாமை என்பதே என்பதனை உணர்த்துவதும் ஆகும் என்பர். பிரமனின் மண்டை ஓட்டினைப் பார்க்கையில் பிற உயிர்களுக்கு அது பாடமாகவும் அமையும் என்றே பெருமான் பிரமனின் மண்டை ஓட்டினை ஏந்தும் வடிவம் கொள்கின்றான் என்றும் குறிப்பிடுவர்.

            கள்வன் என்று பெருமானைத் திருஞாசம்பந்தப் பெருமான்  குறிப்பிடுவது, உயிர்களின் அறியாமையை, உயிர்கள் அறியாமலேயே பெருமான் இரத்தல் பொருளாகக் கொண்டு அருள் செய்கின்றான் என்பதனை உணர்த்துதலே ஆகும் என்பர். இவ்வாறு பெருமானின் திருவடிவங்கள் உணர்த்தும் உண்மைச் செய்திகளை உணர்ந்து, பெருமானின் அருள் இயல்பினைத் தெளிந்து, அவன்பால் அன்பு செலுத்துகின்றவருக்குத் துன்பம் வராது, வினைப் பயன் வறுத்தாது, தொல்லைகள் ஏற்படாது என்று திருஞாசம்பந்தப் பெருமான் அறுதியிட்டுக் கூறுகின்றார். நம் பெருமானின் திருவடிவங்கள் உணர்த்தும் உண்மைகளை உணர்வோம், உண்மைச் சைவத் திருவடிவங்களை வழிபடுவோம், உய்தி பெறுவோம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக