செவ்வாய், 4 அக்டோபர், 2016

14. ஞானத்திரள் ஊனத் திரளைப் போக்கும் / Nyaanatthiral Uunatthilai Pokkum

சிவ சிவ
திருமுறை

ஞானத்திரள் ஊனத் திரளைப் போக்கும்

            இறைவனுக்கு அறிவே வடிவம் என்பது சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகும். இறை அறிவைப் பெறுதலையே  உயிர் முற்றப் பெறுதல் என்று குறிப்பிட்டனர். உயிரின் அறிவினை மறைத்து நிற்கும் அறியாமையைப் போக்கி இறை அறிவு சிறந்து விளங்கி நிற்கப் பெற்ற அருளாளர்ளையே  உயிர் முற்றப் பெற்றவர்கள் (சீவன் முத்தர்கள்), இறை அறிவாளர்கள் (சித்தர்கள்) என்றனர். இறை அறிவு சிறக்கப் பெற்றவர்களை அருளாளர்கள் என்றனர். இதனால் இறை அறிவு சிறக்க உலக அறிவு மட்டும் இன்றி இறை அருளும் வேண்டுவதாய் நம் சித்தாந்த மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இறைவனை அறியும் அறிவினை அவனின் அருளால் பெற்றப் பின் அவ்வறிவாவது பெருமானேதான் என்று புரியும் என்று திருமூலர் குறிப்பிடுவார். இதனை, “எட்டும் இரண்டும் அறிவால் அறிந்த பின் எட்டும் இரண்டும் இலிங்கமர்தாமேஎன்று குறிப்பிடுவார். “அவனுடைய அறிவெல்லாம் நம்மை அறியும் அறிவே ஆகும்என்று இறைவனை உணர்ந்த கண்ணப்பரின் அறிவினை இறைவன் குறிப்பிட்டதாய்த் தெய்வச் சேக்கிழார் கண்ணப்பரின் வரலாற்றில் குறிப்பிடுவதனைப் பெரியபுராணத்தில் காணலாம். இதனையே, “ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்லடியார்மேல் ஊனத் திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள் போலும்என்று திருஞானசம்பந்தரும் திருவண்ணாமலைப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

            அறிவின் திரட்சியாக விளங்கும் பெருமானின் திருவடிவு உயிர்கள் தங்களிடம் உள்ள அறியாமையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்தி நிற்பதாகத் திருஞானசம்பந்தரின் திருவாக்குக் குறிப்பிடுகின்றது. ஒன்றாய், வடிவம் அற்றதாய், பெயர் அற்றதாய், அடையாளங்களுக்கு உட்படாததாய், கற்பனைக்கும் எட்டாததாய், சொல்லுக்குள் அடங்காததாய், பொருளுக்குள் உட்படாததாய் உள்ள பரம்பொருள், தம் பேர்அருள் பெரும்பரிவினால் உயிர்கள் அறிவுபெற வேண்டிப் பல்வேறு வடிவங்கள் தாங்கி வந்து நின்று அருளுவதாய் மணிவாசகரின் திருவாசகம் குறிப்பிடும். அவ்வாறு பெருமான் கொள்கின்ற வடிவங்கள் யாவும் உயிர்களின் அறியாமையை நீக்கி, அறிவைச் சிறக்கச் செய்யவே என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவுக்கு அறிவாய்ப் பெருமான் நின்று உணர்த்தும் வடிவம்அற்ற (அருவம்) நிலையும் வடிவமும் வடிவம் அற்ற நிலையுமான சிவலிங்க நிலையும் (அருவுருவம்) வடிவ நிலையும் (உருவம்) உயிர்களின் அறியாமையைப் போக்கும் முகமாகவே இறைவனால் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனைச் சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

            சிவச் செறிவாளர்களுக்கும் (சிவ யோகிகள்) சிவ அறிவாளர்களுக்கும் (சிவ சித்தர்கள்) இறைவன் அறிவுக்கு அறிவாய் நின்று அவர்களின் அறியாமையைப் போக்குவான் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதைத் தவிர வடிவமும் வடிவம் அற்றதுமான, சிவபெருமான் கொள்கின்ற சிவலிங்க வடிவமும் உயிர்களின் அறியாமையைப் போக்குகின்ற அறிவுத் திரளாகவே விளங்குகின்றது என்று குறிப்பிடுவர். அருளோன் அல்லது சதாசிவம் என்று குறிக்கப்பெறும் சிவலிங்கம் குறிக்கப்பெறும். இச்சிவலிங்க வடிவம் உயிர்கள் உணர வேண்டிய அரிய அறிவுத் தெளிவினை உணர்த்தி நிற்கின்றது. ஒன்றாய், பரம்பொருளாய் இருக்கின்ற அறிவுத் திரளே ஒன்பது நிலைகளில் உயிர்களுக்கு தம் சிறப்பு நிலையில் இருந்து இறங்கி வந்து அருள் செய்கின்றது என்ற அறிவினை உயிர்கள் பெற வேண்டும் என்பதனை உணர்த்தி நிற்கின்றது.

            பரம்பொருளாய் இருக்கின்ற அப்பேரறிவு பரசிவம், பராசத்தி, பரநாதம் (மேலான ஓசை) பரவிந்து (மேலான ஒளி) என நின்று உலகப் பொருள்களையும் உலகையும் உயிரையும் தொழிற்படுத்துகின்றதை உணர்த்தி நிற்கின்றது என்பர். சிவலிங்கத்தில் அடங்கியுள்ள இதர ஐந்து நிலைகளான அருளோன், மறைப்போன், துடைப்போன், காப்போன், படைப்போன் என்பன உயிர்களுக்காகப் பெருமான் இயற்றும் ஐந்து அருட் தொழில்களை உயிருக்கு அறிவுறுத்துவனவாக உள்ளன என்று குறிப்பிடுவர். பெருமானின் இந்த ஒன்பது நிலைகளையே நவம்தரும் பேதம் என்று வடமொழியில் குறிப்பிட்டனர். இதனை மாறி வருகின்ற ஒன்பது நிலைகள் என்று அன்னைத் தமிழில் குறிப்பிட்டனர். இவ்வொன்பது நிலைகளிலும் வரும் கடவுள் ஒருவனே என்றும் குறிப்பிட்டனர். பெருமானின் இந்நிலைகளைச் சுருக்கமாகப் பெருமானும் அவனது திருவருளும் எனவும் சிவனும் சத்தியும் எனவும் குறிப்பிட்டனர். பரம்பொருளை ஆணாகவும் அப்பரம்பொருளின் திருவருள் ஆற்றலைப் பெண்ணாகவும் குறிப்பிட்டனர். மேலான சிவம், மேலான சத்தி, மேலான ஓசை, மேலான ஒளி, அருளோன் (சதாசிவம்) அருளோள் (மனோன்மணி), மகாஈசன் மகாஈசை அல்லது மறைப்போன் மறைப்போள், துடைப்போன் துடைப்போள் (சிவன் உமை), காப்போன் காப்போள் (திருமால் திருமகள்), படைப்போன் படைப்போள் (நான்முகன் கலைமகள்) என்றும் உணர்த்தி நிற்பதாய்க் குறிப்பிடுவர்.

            இதன்வழி அறிவுக் கொழுந்தாய் விளங்கும் சிவலிங்கம் உயிர்களுக்கு இறைவன் செய்யும் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து அருட்தொழில்களை உணர்த்தும் அறிவுத் திரளாய் இருக்கின்றது என்பதனைத் தெளிதல் வேண்டும். பிறவிகள் தோறும் உயிர்கள் பெறுகின்ற உடம்பு, உடம்பில் இருக்கின்ற கருவிகள், உயிருக்குப் பொருத்தப்பட்டிருக்கின்ற கரணங்கள் எனப்படும் உட்கருவிகள், உயிர்கள் வாழும் புவனங்கள் எனப்படும் உலகங்கள், பஞ்ச பூதங்கள், உலகத்தில் உள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவை இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு, நிற்பிக்கப்பட்டு, துடைக்கப்பட்டு, மறைக்கப்பட்டுப் பின் அருளப்படுகின்றன என்பதனை உயிர்களுக்கு அறிவிக்கும் அறிவுத் திரளாய்ச் சிவலிங்கத் திருமேனி நிற்கின்றது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதை உணராத அறிவிலிகள் சிவலிங்கத்தைப் பாலியல் அடையாளம் என்றும் பாலியல் உறுப்புக்கள் என்றும் குறிப்பிட்டனர். சிவலிங்கத்தின் தண்டுப் பகுதிப் பெருமானையும் கோமுகப்பகுதி (ஆவுடையாள்) அவனின் திருவருள் ஆற்றலையும் உணர்த்துகின்றது என்பதனை அறியாதவர்கள் அதனை உருண்டைக் கல் என்றும் தட்டைக் கல் என்றும் குறிப்பிட்டனர்.

            பெருமான் சிவலிங்க வடிவிற்குள் பல்வேறு பெயர்களில் நின்று உயிர்களுக்கு அருள்புரிகின்றதனை உணர்த்தும் அறிவுத் திரளாய் நிற்கின்றான் என்பதனை உணராதவர்களே அச்சிவலிங்கத்திற்கு வெறும் செயல்முறைகளாகப் (சடங்குகள்) பூசனைகளை இயற்றினர். மலர் இடல், நீர் வைத்தல், தூபத் தீபங்களைக் காட்டுதல், மந்திரங்களைச் சொல்லுதல், திருமுறைகளை ஓதுதல் என்பவை ஏதோ செயல்முறை என்று செய்து அதில் பெருமானை அறிவுத் திரளாய் உணராது நிற்கின்றனர் என்பர். பெருமான் அறிவுத் திரளாய் நிற்பதனை உணர்ந்தவரே அதனைச் சிவப் பரம்பொருளாகவே எண்ணி அன்பால் வழிபட்டனர். சிவலிங்கத்தில் நின்று சிவபெருமான் உணர்த்தும் அறிவினை உணர்ந்தவர்களே அதனை வீட்டில் வைத்து வழிபடத் துணிந்தனர். அறியாதவர் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவது தீமை என்று அஞ்சி அறியாமையில் வாழ்வர் என்று குறிப்பிடுவர்.

            பெருமான் அறிவுத் திரளாய் நின்று உயிர்களின் அறியாமையை விலக்கும் மற்றொரு வடிவம் நடவரசு (நடராசர்), ஆடல் வல்லான், கூத்தப் பிரான் என்றெல்லாம் போற்றப்பெறும் திருவடிவு ஆகும். இவ்வடிவில் வட்டமாய் இருக்கும் சுடர் வட்டம் ஓங்காரத்தை உணர்த்துவது. இது பெருமான் ஓசையாகவும் ஒளியாகவும் நின்று உலகையும் உயிர்களையும் செலுத்துகின்றான் என்பதனைக் குறிக்கின்றான் என்பர். ஆடல் வல்லானின் இடப்பக்கம் உள்ள தோடும் வலப்பக்கம் உள்ள குழையும் அவனே சிவனும் சத்தியுமாக, ஆணும் பெண்ணுமாக நின்று அருளுகின்றான் என்பதனை அறிவிக்கின்றான் என்பர். நடவரசர் வடிவினுள்ளேயே சிவபெருமானும் சிவகாமி அம்மையும் நின்று அருளுவதை உணர்த்தி நிற்கின்றான் என்பர். பெருமானும் அவனது திருவருளும் ஒன்றை ஒன்று வேறுபடாது, சுடரும் அதனின் வெப்பமும் போல உயிர்களுக்கு நின்று அருளுகின்ற அறிவினை உணர்த்தி நிற்கின்றான் என்பர்.

            நடவரசர் திருவடிவின் வழி பெருமான் தமது கையில் உள்ள உடுக்கையால் உயிர்களுக்குத் தாம் இயற்றும் படைத்தல் தொழிலை உணர்த்துகின்றான் என்பர். அமைந்த திருக்கை காத்தலையும் தீ ஏந்திய திருக்கை துடைத்தலையும் ஊன்றிய திருவடி மறைத்தலையும் எடுத்தத் திருவடி அருளலையும் அறிவுறுத்தி அறிவுத்திரளாய் நிற்கின்றது என்பர். பெருமானின் விரிந்த திருச்சடை அவனின் பரந்த பேர் அறிவையும் அதில் தென்படும் பிறை அவன் குற்றங்களை மன்னிப்பவன் என்பதனையும் அத்திருச் சடையில் பாயும் கங்கை பெருமானே நம் செருக்கை அடக்கிக் காப்பான் என்பதனையும் அவனின் திருவடியில் மிதியுண்டுக் கிடக்கும் முயலகன் பெருமானே நம் ஆணவ மலத்தை நலிவுறச் செய்வான் என்பதனையும் அறிவுறுத்தும் அறிவுத் திரளாய் இருக்கின்றது என்பர். பெருமான் மந்திர வடிவாகநமசிவயஎன்றும்சிவயநமஎன்றும் நின்று உயிர்களுக்கு அறிவுப் புகட்டி அறியாமையை நீக்குகின்றான் என்பதனை உணர்த்தி நிற்கும் அறிவுத் திரளாக அவ்வடிவில் நிற்கின்றான் என்பர்.

            பெருமான் அறிவு வெளியில் அறிவு ஆடலும் உயிர்களின் அறிவில் ஊன ஆடலும் இயற்றி, உயிர்களுக்கு அறியாமையைப் போக்கி அருளுகின்றான் என்பதே அவன் ஆடல் ஆடுகின்ற மேடையாகிய தில்லைச் சிற்றம்பலம் உணர்த்தி நிற்கின்றது என்பர். அறிவு விளக்கம் பெற்றுத் தன்னை அறியும் உயிர்களுக்குத் தன்னைக் காட்டி இன்ப ஆடல் புரிவான் என்பதனை விளக்கும் அறிவுத் திரளாகவும் நடவரசர் திருவடிவு விளங்குவதாய்க் குறிப்பிடுவர். இதனை அறியாதவர்களே நடவரசரை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டிற்கு ஆகாது என்று குறிப்பிடுவர். நடவரசரை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வம் தங்காது என்றும் குறிப்பிடுவர். சிவபெருமானின் திருவடிகளை ஏத்துதலே உண்மைச் செல்வம் என்று பெருமான் அறிவுறுத்துவதை உணராதவரே ஆடல் அரசுப் பெருமானின் திருவடிவை வைத்து வழிபடுவதற்கு அஞ்சுவர்.

            நடவரசுப் பெருமானின் திருவடிவிற்குத் திருமஞ்சனம் ஆட்டி, ஆடை அணிகளை அணிவித்து, அழகு செய்து பார்ப்பதோடும் அப்பெருமானுக்குத் தூபம், தீபம், மலர், நீர், பாமாலை என்று வெறும் செயல்முறைகள் செய்வதோடு நின்று விடுபவர் அப்பெருமான் உயிர்களுக்கு இயற்றும் அருட்தொழில் ஐந்தினையும் உணர்ந்து அவனிடத்தே அன்பு பாராட்டாது விடுவார்களேயானால் அறிவுத் திரளாய் நிற்கும் அப்பெருமானை அறியும் அறிவினைப் பெறாது, அறியாமை நீங்காது மீண்டும் மீண்டும் பிறவிகளுக்கு உட்படுவர் என்று திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும் குறிப்பிடுகின்றன.

            “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயேஎன்று சிவபெருமான் ஓசை வடிவாக நின்று அருளுகின்ற அறிவுத் திரள் வடிவே பிள்ளையார் வடிவு என்று உணராது பிள்ளையார் வேறு ஒரு கடவுள் என்று எண்ணுகின்றவர் சிவனின் அறிவினைப் பெறமாட்டார் என்று குறிப்பிடுவர். சிவபெருமானின் மற்ற அறிவுத் திரள் வடிவே பிள்ளையார் என்பதனை உணர்ந்து, பிள்ளையார் சிவபெருமானின் மகன் அல்ல என்ற தெளிவினைப் பெறுகின்றவரே பெருமான் அறிவுத் திரளாய் நின்று உணர்த்தும் உண்மையான அறிவினைப் பெறுவர் என்று சைவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

            பெருமானின் அறிவுத் திரளின் வேறு ஒரு வடிவே முருகனின் வடிவு என்பதனைத் தெளிந்தவரே பெருமான் அறிவுத் திரளாய் நின்று உணர்த்துவதை உணர்பவர் என்று கச்சியப்பரின் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது. முருகனைச் சிவனின் மகன் என்றும் பிள்ளையாரின் தம்பி என்றும் உணராது அது சிவபெருமானின் அறிவு வடிவம் என்று உணர்பவரே பெருமான் அறிவுத் திரளாக நின்று உணர்த்துவதனை உண்மையாக உணர்பவர் என்று கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.

            தானே அருள் ஆற்றலாக, அம்மையாக நின்று அருள்பாலிக்கின்றான் என்று அறிவுத் திரளாக உணர்த்தி நிற்கும் அம்மையின் திருவடிவை வேறு ஒரு கடவுள் என்று பிரித்து உணரும் அறியாமையை உடைய தமிழ்ச் சைவர்களுக்கு அவ்வம்மையைச் சிவபெருமானின் மனைவி, முருகன் பிள்ளையாரின் அன்னை என்று மயக்குற்று இருக்கும் தமிழ்ச் சைவர்களுக்கும் அப்பெருமானின் அறிவுத் திரள் விளங்காது என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானின் அறிவுத் திரள் வடிவங்கள் உணர்த்தும் உண்மை அறிவினை உணர்வோம். அறியாமை விலகி உய்தி பெறுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக