திங்கள், 3 அக்டோபர், 2016

1. திருமுறை: திருநெறிய தமிழ் / Thiruneriya Tamil

சிவ சிவ
திருமுறை
திருநெறிய தமிழ்

            கடவுளைப் பற்றியும் உயிரைப் பற்றியும் உலகைப் பற்றியும் சீர்மிகு செந்தமிழர் ஆய்ந்ததின் முடிந்த முடிவாக விளங்குவது சித்தாந்த சைவம் எனும் இறைக்கொள்கை என்பார் தமிழ்க் காசு என்று போற்றப் பெறும் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள். இறைவனை மனம், மொழி, மெய் என்பவற்றால் வழிபட வேண்டும் என்று தமிழ்ச் சைவர்களின் சித்தாந்த சைவம் குறிப்பிடினும் மொழியே இறைவனை வழிபடுதலில் முதலில் பெரும் பங்காற்றுகின்றது என்பர். மொழியே இறைவனை அகத்திலும் புறத்திலும் சொல்லி வாழ்த்தி வழிபடுவதற்குப் பெருந்துணையாக உள்ளது. பெருமானை அடைதற்கு அருமையான எளிய வழி, அவனை வாழ்த்தி வணங்குதலே என்று திருமந்திரத்தில் திருமூலரும் குறிப்பிடுவார். இறைவனை வாய்மொழியால் வாழ்த்திப் பாடியே அடையலாம் எனும் நெறியைப்பதிகப் பெருவழிஎன்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பெருமானை வாழ்த்திப் பாடியே அவன் திருவடிகளை அடையலாம் என்பதனை உலகிற்கு உணர்த்த இறைவனால் அடியார்கள் மூலம் அருளப் பெற்றவை திருமுறைகள். அத்தைகைய அரிய திருமுறைகளை அருளிய அருளாளர்களும் அப்பதிகப் பெருவழியிலேயே நின்று இறைவனை அடைந்தும் காட்டினர் என்பதனைத் திருமுறை ஆசிரியர்களின் வரலாறுகள் மெய்ப்பிக்கின்றன.

            திருமுறைகள் அருளாளர்கள் இறைவனோடு பேசிய மொழியாக விளங்குகின்றன. அருளாளர்கள் இறைவனோடு பேசி, அவனின் பேர் அருளைப் பெற்றுப் பல அருள் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர். திருமுறைகள் பெருமான் தங்களின் உள் நின்று உரைத்தவை என்பதனை, “எனது உரை தனது உரையாகஎன்று திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுவார். அதனாலேயே தமது பாடல்களைத் திருநெறிய தமிழ் என்று திருஞானசம்பந்தப்பெருமான் சிவஅறிவுப் பால் உண்டுப் பாடிய முதல் பதிகமான தமதுதோடுடைய செவியன்எனும் பதிகத்தின் இறுதிப் பாடலில் குறிப்பிடுவார்.

            சிவ அறிவினைப் பாற்சோற்றுடன் குழைத்து ஊட்டப் பெற்ற மூன்று அகவைக் குழந்தை பாடியது தமிழ்ப் பாடல். இதனால் சிவ அறிவு தமிழோடு தொடர்பு உடையது என்று வரலாறு மெய்ப்பிகின்றது. திருநெறிய தமிழாகிய திருமுறைகள் சிவபெருமானின் அருள்பொதிந்த தமிழ் மந்திரங்கள் என்பதனால்தான் அம்மந்திரங்கள் அருளாளர் பெருமக்களுக்குத் துன்பம் ஏற்பட்ட போது அவர்களின் சொல்லுக்குள் இறைவனின் திருவருளாய் நின்று அவர்களைக் காத்தன. கல்லோடு கட்டிக் கடலில் போடப்பட்ட போதும் நீற்றறயில் அடைக்கப்பட்ட போதும் நஞ்சு கலந்த சோற்றை உண்ணச் செய்த போதும் சினங்கொண்ட யானையைக் கொண்டு கொலை செய்ய முயன்ற போதும் திருநாவுக்கரசு பெருமான் போன்ற பெருமக்களை அம்மந்திரங்கள் அத்துன்பங்களில் இருந்து காத்தன. பெருமானின்திருஅப்பாடல்களில் இருந்தமையால்தான் அம்மந்திரங்கள் சாம்பலைப் பெண்ணாக்கின, பாம்பு தீண்டிய பையனை உயிர் பெறச் செய்தன, ஆண் பனையைப் பெண் பனைகளாக மாற்றின.

            திருமுறைகளைப் பொழுதுபோக்கிற்கான இன்னிசை என்றோ, இறப்பு நிகழ்ச்சிக்குப் பாடும் பாடல் என்றோ என்ணாமல் அது இறைவனோடு உறவாடுவதற்கு உரிய மொழி என்பதனை உணர்ந்து அதனை உயர்வாகப் போற்றினர் நம் முன்னோர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர் முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனைஎன்பார் சுந்தரர் அடிகள். திருஞானசம்பந்தரின் திருநெறிய தமிழைக் கேட்டு, மனமகிழ்ந்து இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொன்னால் ஆன தாளத்தினைத் திருக்கோலக்கா திருத்தலத்தில் அருளியதைக் குறிப்பிடுவார். தவிர, திருநெறிய தமிழான திருமுறைகளுக்கு இறைவன் மனம் இரங்குவான் என்பதனையும் தெளிவு படுத்துகின்றார்.

            “மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ், .....காலை எழுந்து கருத்து அறிந்து ஓதிடின், ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றேஎன்று திருமூலர் குறிப்பிடுவார். உலகத் தலைவனாக இருக்கின்ற பெருமானை அறிய, உணர, அடைய, வேண்டுமாயின் உயிர் அறிவு சிறக்க வேண்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உயிர் அறிவு சிறப்பதற்கு அப்பெருமானைக் கற்க வேண்டும் என்கின்றார் திருநாவுக்கரசு அடிகள். “கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றிஎன்பார் திருநாவுக்கரசு அடிகள். “கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைஎன்பார் திருவிசைப்பா அருளிய சேந்தனார். எனவே இறைவனிடத்திலே மனம் ஒன்றுதற்கு, பெருமானின் பெருமைகளை உணர்த்தும் பாடல்களின் பொருளை அல்லது கருத்தைப் புரிந்து உணந்து கொள்வது வேண்டுவதாய் உள்ளது. பெருமானின் பெருமையை உணர்ந்து அவன் நமக்காகச் செய்யும் நன்மைகளைத் தெரிந்து கொண்டு அவன்பால் அன்பு செய்வதற்குத் திருமுறைகள் குறிப்பிடும் செய்திகளை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

            பெருமானை மனம், மொழி, மெய்யால் வழிபடுவதற்கு, அவ்வழிபடு முறைகளைத் தெளிவுற விளக்குகின்ற திருமுறைகளையும் சிவ ஆகமங்களையும் மெய்கண்ட நூல்களையும் கற்க வேண்டியிருக்கின்றது. திருமுறைகள் சிவ ஆகமப் பொருள்களை உணர்த்துவனவாக உள்ளன. இறைவன், உயிர், தளை என்ற சித்தாந்த சைவ முப்பொருள் உண்மைகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன. தமிழ்ச் சைவர்களின் இறைநெறியாகிய திருநெறி காட்டும் நெறியின்படி நின்று இறைவனை அடைந்த அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினைக் காட்டும் சமய வரலாற்றுப் பெட்டகமாக உள்ளன. இறைவனை அடைதற்குரிய நன்னெறி நான்காகச் சித்தாந்த சைவம் குறிப்பிடும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நெறிகளை அன்னைத் தமிழில் உணர்த்தும் கருவூலங்களாகத் திருநெறிய தமிழான திருமுறைகள் திகழ்கின்றன.

            சீர்மிகு செந்தமிழரின் தாய்மொழியாகிய தமிழ் மொழியில் மிளிரும் இத்திருநெறிய தமிழ் மேற்கூறிய  அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளமையினால்தான்திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமேஎன்று திருஞானசம்பந்தப் பெருமான் தமது முதல் திருப்பதிகத்திலேயே அறுதியிட்டுக் கூறுகின்றார். திருநெறிய தமிழாகிய திருமுறைகளை ஓதினால் பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் பழவினைகள் தீரும் என்று சொல்கின்றார். பழவினைகளைக் கழிப்பதற்குப் பலர் புனித நீர்நிலைகளில் நீராட வேண்டும், பல பரிகாரக் கிரியைகளைச் செய்ய வேண்டும், பெரிய பெரிய பூசனைகளை இயற்ற வேண்டும் என்று பல்வேறு செயற்பாடுகளை முன்வைப்பினும், அருமையான, எளிய, திருநெறிய தமிழால் இறைவனை ஓதி வழிபடுதல் சிறப்பான செயல் என்று திருஞானசம்பந்தர், சிவஞானப்பால் அல்லது சிவஅறிவு பெற்ற அந்த நிலையில் நின்று நினைவுறுத்துகின்றார்.

            இறைவனை எண்ணுவதற்கு ஒருமைப்பாடுடைய மனம் இன்றியமையாதது ஆகின்றது. திருநெறிய தமிழைக் கருத்து அறிந்து ஓதுகின்றவருக்கு மனம் ஒருமைப்படும் என்கின்றார் திருஞானசம்பந்தர். இதனை, “ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்என்பார். திருநெறியாகிய இத்தமிழ்நெறி பெறுதற்கு அரிய, அருமையான நெறி என்கின்றார் சம்பந்தர். தமிழ் பேசுதற்கும் இறைவனைத் திருநெறிய தமிழால் பாடி வழிபடுவதற்கும் சென்ற சென்ற பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று திருவலஞ்சுழிப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

            இறைவனை உய்த்து உணர பெருமானே அன்னைத் தமிழில் அரிய திருமுறைகளை; திருநெறிய தமிழை அருளாளர்களின் மூலம் அருட்கொடை செய்துள்ளான். இத்திருநெறிய தமிழின் அருமையை உணராது, பெருமானின் கொடையை ஏற்காது, சீர்மிகு செந்தமிழர் திருநெறிய தமிழைத் தங்கள் வழிபாட்டில் இணைத்துக் கொள்ளாமலும் அதனைக் கற்காமலும் அதனை இல்ல மற்றும் திருக்கோயில் பூசனைகளில் இடம்பெறச் செய்யாமலும் இருப்பது எவ்வளவு பெரிய அறியாமை! அவரவர் இறைவனை அவரவர் நிற்கும் நெறியில், அவரவர் தாய்மொழியில் வழிபட்டு அகமகிழ, இறையுணர்வு பெருகிடச்  சிறப்புற்று விளங்குகின்றனர். அவரது சமயக் கொள்கைகளும் மேலும் மிளிர்ந்து அந்நெறியில் நிற்பவர்களை அவை மேலும் பண்படுத்துகின்றன. பொருள் புரியாத மந்திரங்களும் வழிபாடுகளும் நம் இளைய தமிழ்த் தலைமுறையினரை மேலும் மேலும் அறியாமையில் ஆழ்த்தி மூடநம்பிக்கைகளில் மூழ்கச் செய்து, தேவையற்றக் கிரியைகள் பெருகக் கரணியம் ஆகின்றன. தவிர நம் இளைஞர்கள் நம் சமயத்தின் மீது வைத்துள்ள பற்றும் நம்பிக்கையும் குறைய வழிவகுக்கின்றன என்பதனைத் தெளிந்து உண்மைத் தமிழ்ச் சைவர்களாக வாழ்வோமாக

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக