திங்கள், 3 அக்டோபர், 2016

2. திருவடிவங்களும் சைவர்களும்/ Thiruvadivanggalum Saivargalum

சிவ சிவ
திருமுறை
திருவடிவங்களும் சைவர்களும்

            பெருமானுக்குத் தமது சிறப்பு நிலையில் வடிவமோ பெயரோ அடையாளமோ கிடையாது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களில் ஒன்றான திருவுந்தியார் எனும் நூல் குறிப்பிடும். மாந்தர்களின் கற்பனைக்கு எட்டாத பரம்பொருளை உயிர்கள் எண்ணி வழிபட்டுத் தன் திருவடியை அடைதற்குப் பெருமான் தன் பேர் அருளின் கரணியமாகப் பொதுநிலைக்கு இறங்கி வருகின்றான் என்பர். அவ்வாறு வருகையில் அறிவுக்கு அறிவாக விளங்கும் வடிவம் அற்ற நிலையிலும் பார்ப்பதற்கு வடிவம் இருத்தல் போன்றும் அது குறித்த வடிவத்தைப் பெறாதது போன்றதுமான, வடிவமும் வடிவம் அற்றதுமான சிவலிங்கம் போன்ற நிலையிலும், முருகன், பிள்ளையார், அம்மை, இருபத்து ஐந்து சிவவடிவங்கள் போன்ற வடிவ நிலையிலும் பெருமான் வெளிப்பட்டு அருளியிருக்கின்றான் என்று சித்தாந்த சைவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

            தமிழ்ச் சைவர்கள் தங்களின் திருக்கோயில்களில் வைத்து வழிபடும் சைவநூல்களில் குறிக்கப் பெற்றிருக்கும் வடிவங்கள் கற்பனையால் அமைந்தவை அல்ல! அவை பெருமான் வெளிப்பட்டுக் காட்டி அருளிய திருவடிவங்கள் என்பதனைத் தமிழ்ச் சைவர்கள் தெளிதல் நலம். மாந்தர்கள் செய்த திருவடிவங்கள் அல்லது சிலைகளை அவர்களே வழிபடுகின்றார்கள் என்ற கூற்றுக்கு அத்திருவடிவங்கள் செய்யப் பெற்றிருக்கும் பொருள்களான உயிர் அற்ற கருங்கல்லையோ அல்லது உலோகப் பொருளையோ சைவர்கள் வணங்குதல் இல்லை என்பதும் அத்திருவுருவங்களின் வழி எண்ணப்படுகின்ற பரம்பொருள் நினைவே திருவடிவ வழிபாட்டின் விளக்கம் என்பதனைத் தெளிதல் வேண்டும். தவிர பெருமான் காட்டி அருளாத பிற வடிவங்கள் வழிபாட்டிற்கு ஏற்றவை அல்ல என்பதும் சித்தாந்த சைவம் உணர்த்தும் உண்மையாகும். இதனால் சைவ சமயத்திற்குப் பொருந்தாத, சைவ சமய நூல்களில் குறிப்பிடப் பெறாத நடுகல் வீரர்களின் சிலைகள், கிராமத்து தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள், காவல் தெய்வங்கள் போன்றவை அவரவர் விருப்பம் போன்று இடத்துக்கு இடம் தோற்றத்தில் வேறுபட்டு இருத்தலின் வழி அறியலாம். தவிர, அறிவாள், ஈட்டி, சூலம், சங்கிலி, குதிரை, நாய், சாட்டை போன்ற சிறு தெய்வங்களின் ஆயுதங்கள், ஊர்திகள் போன்றவையும் நம் சைவ வழிபாட்டிலிருந்து வேறுபட்டவை அல்லது தொடர்பு அற்றவை என்பதனைத் தெளியலாம்.

            சைவ சமய மெய்கண்ட நூல்களிலும் சிவ ஆகமங்களிலும் திருமுறைகளிலும் குறிக்கப் பெறும் திருவடிவங்கள், அடியார்கள் கண்டு காட்டியவை. பல்வேறு காலக்கட்டங்களிலே வாழந்திருக்கும் அடியார்கள் பெருமானை அதே வடிவங்களில் வெளிப்படக் கண்டு காட்டியிருக்கின்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் இன்னும் இதர திருமுறை ஆசிரியர்களும் பெருமானை ஒருவாறாகக் காட்டி இருக்கின்றனர். தாங்கள் கண்ட பெருமானின் திருவடிவினைத் தங்களின் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். டூவையே உண்மைச் சைவநெறியில் நிற்பவர்களின் வழிபடு திருவடிவங்களாகச் சிவ ஆகம நெறிப்படி அமைக்கப் பெறுகின்ற திருக்கோயில்களில் அமைக்கப் பெறுகின்றன. இத்திருவுருவங்கள் உயிர்கள் பெருமானைப் பற்றி உணர்ந்து கொள்வதற்கு உரிய உண்மைகளை உணர்த்துவதற்குப் பெருமானால் காட்டப் பெற்றவை ஆகும். அவையே சைவர்களின் வழிபாட்டிற்கு உரியனவாகும்.

            கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், நடுகல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் இன்று அவை முன்பு இருந்த இடங்களை விட்டு மாறி சைவர்களின் திருக்கோயிலில் முதன்மை பெறுவதால் உண்மைச் சைவர்களின் வழிபாட்டிலும் திருக்கோயில்களிலும் பல்வேறு பிழைகளும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. முன்பு காலத்தில் ஊர் எல்லையில், கிராமத்தின் எல்லையில் வைத்து வழிபட்டச் சிறு தெய்வங்கள் இன்று வீட்டிற்கு வீடு, குடியிருப்புப் பகுதிக்குப் பகுதி என்று மனம் போன போக்கில் அமைக்கப் பெற்றுப் பெரும் அளவில் வழிபடப்படுவதினால் வளர்ந்து வரும் இளைய குமுகாயத்திற்குத் தமிழ்ச் சைவர்களின் உண்மையான, முறையான வழிபாட்டுத் திருவடிவங்களும் அவை உணர்த்தும் உண்மைகளும் தெரியாமல் போகும் அவலம் ஏற்படுகின்றது. தவிர பல்லினத்தவரும் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் பார்ப்பவரை அச்சுறுத்தும் கோரமான காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்களின் வடிவங்களை அமைத்து அவற்றிற்குச் சைவ சமயத்திற்குப் புறம்பான மது, புலால், சுருட்டு, அரிவாள், சாட்டை, சங்கிலி, குதிரை, துப்பாக்கி, நாய்க்குட்டி என்று அமைத்து வழிபடுவது நம் சைவ சமயத்திற்குப் பெரும் இழுக்கை ஈட்டித் தருவதோடு, நம் இளைய குமுகாயத்திற்கு நல்ல வழிகாட்டலையும் ஏற்படுத்திக் கொடுக்காது என்பது தெளிவு.

            சீர்காழியில் திருஞானசம்பந்தப் பெருமான் சிவஅறிவுப் பால் உண்டு, பெருமான் தனக்குக் காட்டி அருளிய திருவடிவினை, “தோடுடைய செவியன், விடையேறி ஓர் தூவெண்மதி சூடி, காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்என்று குறிப்பிட்டுப் பாடுகின்றார். இவ்வடிப்படையிலேயே பெருமானின் திருவடிவினை விடை ஏறிய பெருமானாகவும் (இடபாரூடர்), நடவரசராகவும் (நடராசர்) அமைப்பர். இவ்வரிய வடிவம் பல்வேறு உண்மைகளை உணர்த்தி நிற்பதனைக் குறிப்பிடுவர்.

திருமுறைகள் பெருமானின் திருச்செவியைச் சென்று சேர பாடப்பெறுவது என்பதனால் திருஞானசம்பந்தப் பெருமான், முதலில் பெருமானின் தோடு அணிந்த செவியைக் குறிப்பிட்டார் என்பர். பெருமான் உயிர்களுக்கு அருளுவதற்காகத் தமது திருவருளைப் பெண்ணாகத் தமது இடப்பால் அமர்த்தி இருக்கின்றான் என்பதனை உணர்த்துவதற்காத் தோடு அணிந்த காதைப் பாடினார் என்பர். செவியன் என்றமையால் அவனது வலப் பக்கம் ஆண் பகுதியாகவும் பெருமான் அம்மை அப்பராக இருந்து உலகிற்கு அருளுகின்றான் என்பதனைத் திருஞானசம்பந்தருக்குக் காட்டினான் என்பதனைக் குறித்துப் பாடினார் என்பர்.

பெருமான் விருப்பு வெறுப்பு இன்றி வேண்டியவர் வேண்டாதவர் என்று இன்றி உயிர்களின் செவ்விக்கு ஏற்ப அறத்தோடு நின்று அருளுபவன் என்பதனை விடையின் மீது ஏறி அமர்ந்து தனக்குக் காட்டியமையைப் பாடினார் என்பர். தூய வெண்மையான மதியைச் சூடியது என்பது ஆனது இளம்பிறை கறை நீங்கியது, இது குற்றம் நீங்கிய தூய மனத்தினரைப் பெருமான் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றான் அல்லது உயரிய இடத்தில் வைத்து அருளுகின்றான் என்பதனைக் குறித்தது என்பர். சுடுகாட்டில் கிடைக்கும் சாம்பலைப் பொடியாகப் பெருமான் பூசித் தோற்றம் அளிப்பதானது உலகில் நிலையாமையையும் பேர் ஊழி காலத்துப் பெருமானே எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கி அருள் செய்பவன் என்பதனையும் குறித்தார் என்பர். உள்ளம் கவர் கள்வன் என்பதானது பெருமான் எல்லா உயிர்களையும் அவை அறியாமலேயே அவற்றை மெல்லத் தன் பக்கம் கவர்ந்து அவனின் திருவருளுக்கு ஆளாக்கி அருள் செய்து கொண்டிருக்கின்றான் என்பதனை உணர்த்துதற்கு ஆகும் என்பர்.

திருஞானசம்பந்தப் பெருமான் கண்டு காட்டிய திருவடிவம் அம்மை அப்பரே உலகிற்கு அம்மை அப்பர் என்றும் அதுவே நாம் வழிபடுவதற்கு உரிய திருவடிவங்களில் ஒன்று என்றும் உணர்த்துகின்றார். பெருமான் தனது திருவருளையே தனக்குத் திருவடிவாகக் கொண்டு வந்து நமக்கு அவன் இயற்றும் உதவிகளை உணர்த்தி நிற்கின்றான் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமான் குறிப்பில் உணர்த்தும் அவனின் திருவடிவங்களை அது அதுவாகக் கொள்ளாது அவை உணர்த்தும் உண்மைகளைக் கற்று உணர்ந்து தெளிதல் தமிழ்ச் சைவர்களின் கடமையாகும்.

பெருமானின் திருவடிவங்களை உணர்ந்து கொள்ளாது அவற்றை மாந்தர்களின் உடலைப் போன்று எண்ணுவதும் அவற்றின் பொருளை உணராது கேலி பேசுவதும் அறியாமை ஆகும். அருளாளர்கள் குறிப்பிடும் ஒவ்வொரு திருவடிவமும் பல்வேறு இறையியல்புகளை நமக்கு உணர்த்தி நிற்க, சாதாரண ஆயுதங்கள், மாந்தர்கள் பயன்படுத்தும் பொருட்கள், விலங்குகள் போன்றவற்றைக் கொண்டு நிற்கும் மாந்தர்களின் கற்பனையில் வடிவமைக்கப்பட்டு வழிபடப்படும் வடிவங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும். பெருமான் உயிர்களுக்கு அருள் செய்கின்ற அருள் இயல்புகளை உணர்த்தி நிற்கின்ற முறையான, சைவ சமயத்தில் குறிப்பிடப் பெற்றிருக்கும் திருவடிவங்களை வணங்குவோம். பிறந்து இறந்த மாந்தர்களை வழிபடுவதனைத் தவிர்ப்போம். பிறவா ஆக்கைப் பெரியோன் ஆகிய பெருமானுக்கும் உடல் கிடக்க இறந்துபடும் மாந்தருக்கும் உள்ள வேறுபாட்டினை உணர்ந்து உண்மைச் சைவர்களாக வாழ்வோம். உண்மைச் சைவத்தை நாளும் பின்பற்றுவோம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக