திங்கள், 3 அக்டோபர், 2016

7. சைவக் கடவுளர்களும் மனைவியர்களும் / Saiva kadavulargalum Manaiviyargalum

சிவ சிவ
திருமுறை

சைவக் கடவுளர்களும் மனைவியர்களும்

            கடவுள் ஒன்று எனவும் அக்கடவுளின் திருவருளே கடவுளின் மனைவியாகவும் குறிப்பிடப்படுகின்றது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. “அரன் தனக்கு அருளது சத்தியாகும்என்று சிவஞானசித்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது. எனவே சிவபெருமானுக்கு மனைவியாகச் சொல்லப்படுகின்ற அம்மை சிவபெருமானின் சத்தி அல்லது திருவருள் ஆற்றலே என்று புலப்படும். சிவபெருமான் தீப்பிழம்பு என்றால் அதன் வெப்பம் அம்மை என்று இறைவனையும் அவனின் சத்தியையும் சைவம் குறிப்பிடும். இறைவனும் இறைவியும் எப்பொழுதும் ஒரு நோக்கிலேயே இருப்பர் என்பதனை, “எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனால் சத்தி அல்லது உமை அம்மை சிவபெருமானுக்கு மனைவி அல்ல என்பதும் சிவகுடும்பம் இல்லை என்பதும் பெறப்படும். உமை அம்மை சிவபெருமானுக்கு மனைவி, மகள், தாய் என்று மூன்று நிலைகளிலும் குறிக்கப் பெறுவாள் என்பதனை, ‘அரனுக்கு மனோன்மணி தாயும், அரனுக்கு மனோன்மணி மகளும் அரனுக்கு மனோன்மணி நல்தாரமுமாமேஎன்று திருமூலர் குறிப்பிடுவார்.

சிவபெருமானுக்கு மனைவியாகச் சொல்லப்படுகின்ற உமையம்மையை, “உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்என்று திருஞானசம்பந்தர் திருவண்ணாமலைத் திருப்பதிகத்தில் குறிப்பிடுவார். இது உமையம்மை பலர் நினைப்பதைப் போன்று அல்லாமல், அவள் குழந்தை பெறாதவள்; தன் குழந்தைகளுக்குப் பால் ஊட்டாதவள் என்று புலப்படுத்துகின்றது. பெருமானின் திருவருள் நல்ல தாயின் அன்பைப் போன்று இருப்பதனால் அப்பெருமானின் திருவருளுக்குப் பெண் வடிவம் கொடுத்துப் போற்றினர் நம் முன்னோர். இதனையே, “பால் நினந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்துஎன்று திருவாசகம் அருளிய மணிவாசகர் குறிப்பிடுவார்.பெருமானும் அவனது திருவருளும் வேறு அல்ல, ஒரு பொருளின் மற்றொரு கூறு என்பதனால்தான் அப்பெருமாட்டி எப்பொழுதும் பெருமானை விட்டுப் பிரியாதவள் என்பதனைக் காட்டப் பெருமானின் வடிவில் ஒரு கூறாக உமையம்மையைப் பெருமானின் இடப்பால் அமைத்து வைத்தனர். இதனையே, ‘மாதோர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினைஎன்று திருவலஞ்சுழிப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார். இதன்வழி கடவுள் ஒன்று என்றும் அதனது சத்தியாகக் குறிக்கப் பெறுவது அதனது திருவருளே அன்றி அதனது மனைவி அல்ல என்பதும் தெளிவாகின்றது.

உண்மை இவ்வாறு இருக்கச் சிவபெருமான் இரண்டு மனைவியரை உடையவன் என்று பலர் அறியாமையில் குறிப்பிடுவர். சிவபெருமானின் திருவடிவில் அவனது இடப்பாலில் ஒரு பகுதியாக உள்ள உமையம்மையே பெருமானின் மனைவி அல்ல எனும் நிலையில் பெருமானின் திருச்சடையில் உள்ள கங்கை எப்படி உமையம்மைக்குப் போட்டியாக, இன்னோரு மனைவியாக இருக்கக்கூடும் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும். “குறைவிலா நிறைவே கோதிலா அமுதேஎன்று மணிவாசகர் இறைவன் குற்றம் அற்றவன்  என்று குறிப்பிடும் கருத்து பொய்யாகி விடும். பலரும் எண்ணுவது போல சிவபெருமான் மற்றொரு மனைவியைக் கொண்டுள்ளான் என்பது தவறான செய்தியாகும். பெருமானின் திருச்சடையில் உள்ள கங்கை திருக்கயிலாயத்தில் உள்ள கங்கை எனும் ஓர் ஆறே என்பதனைத் தெளிதல் வேண்டும்.

கங்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில் பகீரதன் எனும் முனிவரைப் பற்றிய புராணச் செய்தியைக் குறிப்பிடுவர். பகீரதன் தம் முன்னோரை எண்ணி இறைவனை வழிபட அமைத்தப் பூந்தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச, கயிலாயத்தில் இருந்து பூவுலகிற்குக் கங்கை ஆறு வரவேண்டும் என்று சிவபெருமானை வேண்டித் தவம் இயற்றியதாகக் குறிக்கப்பெறுகின்றது. இவ்வாறு பகீரதர் வேண்டவும் சிவபெருமான் கங்கை ஆற்றைப் பூமிக்கு விட, அக்கங்கை ஆறு பெரும் செருக்கோடு பூமியை நோக்கி  வந்ததாகவும் அந்தக் கங்கை ஆறு அதே வேகத்தோடு பூமியை அடையுமாயின் பூமி அழிந்துபோகும் என்பதற்காகச் சிவபெருமான் தம் பெரும் பரிவால் தனது திருச் சடையை விரித்து அக்கங்கை ஆற்றைத் தாங்கினான் என்று புராணம் குறிப்பிடுகின்றது. கங்கை ஆற்றின் செருக்கினை அடக்கச் சிவபெருமான் விரித்தச் சடையானது கங்கையின் வேகத்தினை அடக்கியது. இதன்வழி கங்கையின் நீர் உலகிற்குத் தேவையான அளவாகவும் பகீரதருக்குப் பயன் அளிக்கும் வகையிலும் வெளிப்பட்டது என்று அப்புராணம் மேலும் குறிப்பிடுகின்றது.

பெருமானின் திருவருளின் வெளிப்பாடே கங்கை என்பதனால் அதனைப் பெருமானின் திருவருளாகக் குறிப்பிட்டனர். பெருமானின் திருவருளைப் பெண்ணாகக் குறிப்பிடும் வழக்குடைய சைவர்கள் அதனையும் பெருமானின் மனைவியாக உருவகமாகக் குறிப்பிட்டனர். எனினும் திருமுறைகளில் இச்செய்தியை அது பெருமானின் திருவருளே என்று மிகத் தெளிவாக உணர்த்தி உள்ளனர். இதனை, “சடையார் புனல் உடையான் ஒரு சரி கோவணம் உடையான்என்று திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார். இவ்வுண்மையை உணராதவரே கங்கை உமையம்மைக்குச் சக்களத்தி என்றும் கங்கை சிவபெருமானின் இரண்டாவது மனைவி என்றும் அறியாமையால் குறிப்பிடுவர். இன்னும் சிலர் தமிழ்ச் சைவர்களின் வழிபடு முழுமுதற்பொருளான சிவபெருமான் ஒழுக்கக் கேடு உடையவன் போன்றும் இரண்டு மனைவியரோடு வாழ்பவன் போன்றும் தவறான தோற்றத்தை ஏற்படுத்திவிட்டனர். “கடவுளே இரண்டு மனைவியரோடு வாழ, நான் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு?” என்று சிலர் தங்கள் தவற்றை மறைப்பதற்குக் கூறும் சாக்குப் போக்கும் அடிப்படை அற்றதும் உண்மை அற்றதும் ஆகும் என்பதனைத் தெளிதல் வேண்டும். பரம்பொருளான சிவபெருமானுக்கு உள்ள மனைவியர் உருவகமாகக் குறிக்கப் பெறுவது போன்று சிவபெருமானின் இதர வடிவங்களாக விளங்கும் பிள்ளையார், முருகன் ஆகிய திருவடிவங்களின் மனைவியர்களாகக் கூறப்படும் வடிவங்களின் உண்மையையும் தெளிதல் வேண்டும்.

ஒன்றாகிய கடவுள் ஓசை வடிவமாக வந்தபோது அதனை ஓங்காரத்தின் வடிவாக விளங்கும் பிள்ளையாராகக் குறிப்பிடுகின்றோம். பிள்ளையாருக்குச் சத்திகளாக, இரு மனைவியர்களாகச் சித்தி, புத்தி என்று இரண்டு மனைவியர்களாகக் குறிப்பிடுவர். சிவபெருமானின் ஆற்றலையே உமையம்மையாகக் குறிப்பிடுவது போன்று அவனின் வேறு வடிவமாக விளங்கும் பிள்ளையாரின் ஆற்றலையே இரண்டு மனைவியராக உருவகமாகக் குறிப்பிட்டனர். இதில் சித்தி என்பது வெற்றியையும் புத்தி என்பது அறிவையும் குறிப்பிடும் என்பர். இதனால் ஓசை வடிவாகத் தோன்றி நமக்கு அருள் புரியும் பெருமான் தனது திருவருளை வெற்றியாகவும் அறிவாகவும் தந்து அருள் செய்கின்றான் என்பதனைத் தெளிதல் வேண்டும். இதன்வழி பிள்ளையார் திருமணம் செய்து இரண்டு மனைவியரோடு வாழ்கின்றார் என்ற செய்தி அடிப்படை அற்றது என்பதனைத் தெளிதல் வேண்டும். இது ஒரு புறம் இருக்க, தன் தாயைப் போன்றே தமக்கு மனைவி வேண்டும் என்று பிள்ளையார் அரச மரத்தின் அடியில் திருமணம் ஆகாது காத்துக் கொண்டிருக்கின்றார் என்ற ஒரு கதையையும் பரப்பியுள்ளனர்.

தமிழர்கள் அவர்களது திருக்கோயிலில் மருத்துவ இயல்புடைய அரிய மரங்களை நட்டு வைத்தனர். அவ்வகையில் ஆல், அரசு, வேல், வில்வம் போன்ற மரங்களை நட்டு வைத்தனர். ஆலமரம் உயிர்க்காற்றை மிகுதியாகக் கொடுப்பதனைப் போன்று, வேப்பிலை மரம் காற்றைக் குளிரச் செய்வது போன்று அரசமரம் காற்றிலுள்ள கிருமிகளைத் தூய்மை செய்யக் கூடியது. இவ்வடிப்படையிலேயே அரசமரத்தின் அடியில் பிள்ளையாரின் திருவடிவினை அமைத்து வைத்தனர். இப்படிச் செய்வதனால் அரசமரத்தடி பிள்ளையாரைச் சுற்றி வருபவர் அரசமரத்துக் காற்றை உட்கொள்வர் என்பதற்காகவே இவ்வாறு செய்தனர். இதைத் தன் தாயைப் போன்றே பெண் வேண்டும் என்று பிள்ளையார் அரசமரத்தடியில் உட்கார்ந்து இருக்கின்றார் என்று கட்டுக் கதையைக் கட்டி விட்டனர்.

சிவபெருமானின் மற்றொரு வடிவானது முருகன் வடிவம். இது பெருமானின் ஒளி அல்லது அறிவு வடிவம். அறிவு வடிவாக முருகன் எனும் திருப்பெயரோடு தோன்றி அருளும் சிவபெருமானுக்கும் இரண்டு மனைவிகள் உண்டு என்று குறிப்பிடுவர். முருகனின் இரண்டு மனைவியர்களாகக் குறிக்கப்படுபவர்களை வள்ளி தெய்வயானை என்று குறிப்பிடுவர். பெருமானுடைய அருட்சத்திகளாக விளங்கும் அவை பெருமானின் மனைவியர் அல்லர். வள்ளியும் தெய்வயானையும் இச்சை கிரியை எனப்படும் விருப்பு, செயல் என்ற இரண்டு ஆற்றல்களைக் குறிக்கும் என்று சைவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவு வடிவாக வருகின்ற முருகன் தனது அருள் ஆற்றலாகிய விருப்பையும் செயலையும் கூட்டுவித்து உயிர்களை அறிவுபெறச் செய்பவனாக இருக்கின்றான் என்பதனை உருவகமாக உணர்த்தினர். இந்த உண்மையை உணராதவரே முருகன் இரண்டு மனைவியரை உடையவன் என்று  குறிப்பிட்டனர்.

கல்வி அறிவு இல்லாத பாமரரும் இறைவனை உய்த்து உணர்ந்து வழிபட வேண்டும் என்பதற்காகவும் பெருமான் நம் மீது அருள் கூர்ந்து எடுத்து வந்த வடிவங்களின் உண்மையை உணரவேண்டும் என்பதற்காகவும் உருவகமாகச் சொல்லப் பட்ட செய்திகளையே உண்மையெனப் பிடித்துக் கொண்டு நின்று விட்டமையால் இன்று நம் இறைவடிவங்கள் பற்றிய செய்திகள் தவறான தோற்றத்தைக் காட்டி நிற்கின்றன. இவ்வாறான தவறான செய்திகள் செந்தமிழ்ச் சைவர்களின் சமய உண்மைகளுக்கு மாறாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ்ச் சைவர்களின் சமய மேன்மைக்கு இழுக்கை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழ்ச் சைவர்களின் வழிபடு வடிவங்களான பிள்ளையார், முருகன், சிவன் போன்ற திருவடிவங்கள் இரண்டு மனைவியர்களை உடையவர்கள் என்பதும் அவர்கள் இல்லறம் நடத்துவது போன்று குறிப்பிடப்படுவதும் உண்மைச் சைவத்திற்கு மாறான கருத்தாகும்.

அவரவர் விரும்பி ஏற்றுக்கொண்டு வழிபடுகின்ற வழிபடு திருவடிவங்களையே பிடித்துக் கொண்டு செல்ல, நம் சமயத்தில் பல கடவுளர்கள் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படவும் இத்திருவடிவங்களைக் குடும்ப உறவுகள் போன்று குறிப்பிட்டனர். ஒரு கடவுளின் பல வடிவங்களை வழிபடுகின்றவர் தனித் தனிக் கொள்கையோடு பிரிந்து விடாமல் இருக்க ஏற்படுத்தி வைத்த உறவு முறைகள் போன்ற இந்த உருவக அமைப்புப் பின்பு ஆறு சமயக் கொள்கையாகப் பிரிக்கப்பட்டு விட்டது. தமிழ்ச் சைவர்களுக்கு எக்காலத்திலும் ஒரு கடவுள் கொள்கைதான். ஆறு சமயக் கொள்கை என்பது தமிழ்ச் சைவர்களின் கொள்கை அன்று. இந்த ஆறு கடவுள் கொள்கை அடிப்படையில் கூறப்படும் திருவடிவங்களின் ஆற்றல்களை அல்லது சத்திகளை மனைவியர் என்று குறிக்கப்படுவதும் உருவகமே! தமிழ்ச் சைவத்தில் குறிக்கப்படும் கடவுள் திருமணம் செய்து வாழ்கின்றது என்பதும் அடிப்படை அற்றதுவே! இதனையே, “தன்னிலைமை மண்ணுயிர்கள் சார தரும் சத்தி பின்னமிலான் எங்கள் பிரான்என்று திருவருட்பயன் எனும் மெய்கண்ட நூலின் உண்மையை உணர்ந்து உண்மைச் சைவர்களாக வாழ்வதோடு நம் சமயத்தின் மேன்மையைக் காப்பதும் நம் தமிழ்ச் சைவர்களின் கடமை என்பதனை நினைவில் கொள்வோம்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக