திங்கள், 3 அக்டோபர், 2016

27. எண் இறந்து எல்லை இலாதான்/ Enniranthu Ellai Ilaathaan

எண் இறந்து எல்லை இலாதான்

          சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம், பரம்பொருளான சிவமே அவர்களுக்கு முழுமுதல் பொருள் என்று குறிப்பிடுகின்றது. அச்சிவம் ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாய் இருப்பதனால் உயிர்களின் எண்ணத்திற்கும் செயலுக்கும் சொல்லிற்கும் அப்பாற்பட்டதாய் இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றது. சிவம் எனும் பரம்பொருளின் திருவடிகள், பாதாள உலகம் ஏழினையும் கடந்து கீழ் நோக்கிச் சென்று அதன் ஆழம் சொல்ல முடியாதனவாக இருக்கின்றன. கொன்றை மலரைச் சூடி இருக்கின்ற அச்சிவத்தின் திருமுடியின் முடிவோ எல்லாப் பொருள்களுக்கும் மேம்பட்ட உயர்வு உடையதாய் இருக்கின்றது. தனது அருள் சத்தியாகிய உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பகுதியாக வைத்திருக்கின்ற அப்பெருமானின் திருமேனியோ ஒன்று அல்ல, பலவாக இருக்கின்றது என்பர்.

          வடமொழி வேதங்களும் தமிழ் மந்திரங்களும் வானவர்களும் மண்ணுலகத்தவர்களும் பல்வேறாக இருந்து அவன் இயல்புகளையும் பெருமைகளையும் போற்றித் துதித்தாலும் அவை அவனை முழுமையாகச் சொல்லி முடிக்க இயலாத பெருமையன் என்பர். பெருமான் எல்லாப் பொருள்களையும் தன் அகண்டிதத்துள் அடக்கி நிற்பவன் என்றும் தான் ஏது ஒன்றின் அகண்டிதத்தின் உள்ளும் உட்படாதவன் என்றும்  பெருமானின் அகண்டிதத்தையும் ஆழத்தையும் நுண்மையையும் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் சிவபுராணத்தில், “எண்ணிறந்து எல்லை இலாதானேஎன்று குறிப்பிடுவார்.

            “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க், கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு, வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனேஎன்று இறைவனின் இயல்புகளையும் பெருமைகளையும் அவனின் பேர் அருளையும் சொல்லி வாழ்த்த இயலாமையை எண்ணி மற்றொரு பாடலில் மணிவாசகர் தளர்ச்சியுறுவார். பெருமானின் பெருமையைக் கூற வந்த அருளாளர்கள், பெருமானின் தன்மைகளை முழுமையாக ஆராயும் அறிவு, ஆற்றல், ஒழுக்கம், வாய்மை, தூய்மை தங்களிடத்தில் இல்லை! தாங்கள் சிற்றறிவே உடையவர்கள்! பேர் அறிவு உடைய, அகண்டிதமான இறைவனை முற்றாக அறிந்துகொள்ளவும் மனத்தில் எண்ணவும் முடியவில்லை என்று பெருமானிடத்தில் புலம்பி கதறியிருப்பதனை அவர்களின் வரலாறுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

          இறைவனை வெறும் ஊகத்தினாலும் ஆராய்ச்சிக் கொள்கைகளினாலும் நூல்களில் சொல்லப்பட்ட செய்திகளினாலும் மிகுதியாக ஆய்வு செய்ய வேண்டாம். அவன், உள்ளத்தில் அன்பு இல்லாமல் வெறும் புற அளவிலே நிகழ்த்தக் கூடிய ஆய்வுகளுக்கும் வழிபாட்டு நெறிகளுக்கும் வெறும் புறச் சுடராகவே தோன்றுவான். அன்போடு கூடி அகத்தில் சிவ அறிவினைத் துணைக் கொண்டு நோக்கினால் உள்ளத்திலே எழும் உள்ளொளியாகத் தோன்றுவான் என்பதனை, “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச், சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதி, மாதுக்கம் நீங்கல்உறுவீர் மனம் பற்றி வாழ்மின், சாதுக்கண் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே!” என்று பெருமானின் சிவ அறிவைப் பெற்றத் திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார். அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையாக இருக்கின்ற பெருமானை அடைவதற்குப் பல்வேறு வழிகளை அவனே வகுத்து நமக்கு அளித்துள்ளான். அவ்வழிகளைப் பின்பற்றுவோர், தாங்கள் பின்பற்றும் வழியே மிகச் சரியானது என்றும் இறைவனை முழுமையாகக் காட்டிவிடக் கூடியது என்றும் செருக்குற்று இருக்க வேண்டாம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

          இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற அருளாளர்கள் அருளிய திருமுறைகளைத் துணைக் கொண்டு இறைவனைச் சிறப்பாகப் பாடி, அவற்றின் பொருளை உள்வாங்கி, உணர்ந்து வழிபாடு செய்கின்றவர்கள் அந்நெறியிலேயே இறைவனை அடையலாம் என்று நம் திருமுறை ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. இறைவனைப் பொருளுணர்ந்து பாடியே அடையும் முறையினைப்பதிகப் பெருவழிஎன்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். இவ்வழியினைச் சீலம் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

          இறைவனுக்குரிய பூசனைகளையும் சிவ வேள்விகளையும் திறம்படச் செய்யும் பயிற்சியும் ஆற்றலும் உடையவர்கள் அதன்வழி இறைவனை அடையலாம். வெறும் செயல்முறையாக மட்டும் அல்லாது உள்ளன்போடு இறைவனின் திருவுருவங்களைத் தொட்டு திருமஞ்சனங்களைச் செய்தும் இறைவன் திருவுருவங்களை இறைவனாகவே எண்ணிப் பூசனைகள் செய்வதன்வழியும் இறைவனை அடையலாம் என்று திருநீலநக்க நாயனார் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் குறிப்பிடுகின்றன. வேள்விக் குழியில் வளர்க்கப்படும் தீயினைச் சிவத் தீயாகவே எண்ணிச் சிவன் தங்கள் முன் தோன்றி இருப்பதாய் உணர்ந்து, திருவைந்து எழுத்து மந்திரத்தாலும் திருமுறைகளாலும் இறைவனை வேள்விக் குழியில் நிறுத்தி நோன்பு நெறியில் வழிபடுவதன் மூலமும் இறைவனை அடையலாம் என்பதனை, அப்பூதி, சோமாசிமாறர் போன்ற நாயன்மார்களின் வரலாற்றின் வழி அறியலாம்.
         
          நன்று ஆற்றல் (இயமம்) என்பவற்றில் செய்ய வேண்டியவைகளைத் தவறாது செய்து, தீது அகற்றல் (நியமம்) என்பவற்றில் விடவேண்டியவற்றை விட்டுத் தூய்மையான உள்ளத்துடன் பல இருக்கை முறைகளைக் கற்று, மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டு, மனத்தையும் புலன்களையும் அடக்கி, இறைவனைத் தொடர்ந்து எண்ணத்தில் நிறுத்துகின்ற செறிவு நெறியின் மூலம் இறைவனை அடையலாம். தவிர, அறிவு நூல்களைக் கற்றல், கேட்டல், சிந்தித்தல், அவற்றின் வழி நிற்றல் எனும் முறையால் இறைவனை அறிவில் கண்டு வழிபடும் அறிவு முறையாலும் அடையலாம். உயிர்களின் செவ்விக்கும் அறிவுத் திறத்திற்கும் ஆற்றலுக்கும் ஏற்ப இறைவனால் வகுக்கப்பட்ட சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் இம்முறைகளில், ஒன்று சிறந்தது, மற்றது தாழ்ந்தது எனவும் இன்ன நெறியைப் பின்பற்றுகின்றவர்கள் தான் உண்மையான இறைநெறியில் நிற்கின்றனர் என்றும் பெருமிதம் கொள்வதும் தவறு என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பெருமானைத் தவிர எவரும் தாம் தாம் பின்பற்றும் நெறியில் முழுமைப் பெற்றவரல்லர் என்பதனைத் தன்மேல் ஏற்றிப், “பாட வல்லார் நெறி பாட அறிகிலேன், ஆடவல்லார் நெறி ஆட அறிகிலேன், நாட வல்லார் நெறி நாட அறிகிலேன், தேட வல்லார் நெறி தேடகிலேனேஎன்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

          சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற எந்த நெறியில் நிற்பவராயினும் இறைவனின் பெருமையை அந்நெறியின் வழி முற்றாகவோ முழுமையாகவோ சொல்லவோ உணர்த்தவோ மாந்தர்களால் இயலாது என்கின்றார் மணிவாசகர். ஏனெனில் இறை உணர்வு என்பது உணரப்படுவது என்கின்றார். இறை உணர்வை ஒவ்வொருவரும் அவர் அவர் உயிரில் உணரல் வேண்டும். சிவ உணர்வினைப் பிறர் மற்றவர்களுக்குக் கொடுக்க இயலாது. இறைவன் ஒருவனே அதனை உணரச் செய்ய இயலும்             என்பது மணிவாசகரின் குறிப்பு. தொடர்ந்து எந்த நெறி முறையாலும் இறைவனின் பரந்து விரிந்த பெருங்கருணையையும் பேராற்றலையும் எங்கும் எதிலும் நுணுகி உள்ள தன்மையையும் எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற தன்மையையும் நம்மால் காட்ட இயலாது என்கின்றார்.

          ஒரு நாமம், ஓர் உருவம், இன்ன தன்மையன் என்று சொல்ல முடியாத அறிய பெரிய ஒளிப்பிழம்பாய் இருக்கின்ற அப்பெருமானின் அடியையும் நுனியையும் மூலத்தையும் முடிவையும் எந்நெறியில் நிற்பவர்களும் முழுமையாகச் சொல்லாவோ காட்டிவிடவோ முடியாது என்பதனை உணர்த்துகின்றார் மணிவாசகர். இதனையே, “ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை, ஆர் அறிவார் இந்த அகலமும் நீலமும், பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின், வேர் அறியாமை விளம்புகின்றேனேஎன்று திருமூலரும்  குறிப்பிடுகின்றார்.

          பெருமானிடத்திலே அன்பை விளைவிக்கும் தமது மணித் தமிழால் பெருமானைச் சிக்கெனப் பிடித்த மணிவாசகர், இறைவனின் பெருமையை, இறைவனை அடையும் நெறியை, முழுமையாகச் சொல்ல இயலாமல் இறைவனின் திருவருளை எண்ணி நிற்கின்றேன் என்கின்றார். மணிவாசகரைப் போன்ற அருளாளர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே அறிந்துக்கொண்ட நம்மைப் போன்றோர் சமய நெறிகளில் கரைகண்டு விட்டது போன்று செருக்கித் திரிவதும் தன்மூப்பாக நடந்துக் கொள்வதும் தங்களைக் கடவுளாகவே எண்ணிக்கொள்வதும் பிறரைத் தங்களைக் கடவுளாக எண்ணித் தியானிக்கச் சொல்வதும் தவறு என்று உணர்த்துகின்றார் மணிவாசகர். இல்லற நெறியில் நின்று இறைவழிபாட்டில் ஈடுபடுகின்றவர்களைத் துறவற நெறியில் நிற்கின்றவர்கள் பழிப்பதும் குறை கூறுவதும் அதனைத் தவறான நெறி என்பதும் தவறு. துறவற நெறியில் நின்று இறைவனை அடைய முற்படுகின்றவர்களை இல்லற நெறியாளர் சிறுமையாகப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டியவை. செறிவு அல்லது யோக நெறியில் நிற்பவர்கள் பூசனை இயற்றுகின்ற நோன்பு நெறியாளர்களைப் பாலர்ப்பள்ளியினர் என்பதும் பூசனை முறைகளில் நிற்பவர் இறைவனைப் பாடும் நெறியினை உடைய சீல நெறியினரைச் சிறுமையாக எண்ணுவதும் தவறாம். சித்தர் நெறி என்று அறிவு நெறியில் நிற்பவர் சீலம், நோன்பு, செறிவு நெறியில் நிற்பவர்களைக் காலத்தை வீண் செய்கின்றவர்கள் என்று தாழ்வாக எண்ணுவதும் அறியாமையேயாம் என்பதனையும் இதன் வழி உணரலாம்.

          எந்நெறியில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் நம் சிறுமையை எண்ணிப் பெருமானின் பெருமையை உணர்ந்து, வழிபாட்டு நெறிகளினால் ஏற்படும் செருக்குகளை நீங்கி உண்மையான அன்பு ஏற்பட்டுச் சிவமாம் தன்மை பெறல் வேண்டும் என்பதே மணிவாசகர்  நமக்கு உணர்த்தும் அரிய பாடம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக