திங்கள், 3 அக்டோபர், 2016

11. முதலும் முடிவும் ஆகியவன் / Muthalum Mudivum Aagiyavan

சிவ சிவ
திருமுறை

முதலும் முடிவும் ஆகியவன்

அன்னைத் தமிழ் எழுத்துக்களுக்குஎன்ற அகரம் முதலாக இருப்பது  போன்று இவ்வுலகிற்கு ஆதி மூலமாக இருக்கின்ற இறைவனே முதல்வன் என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். இறைவன் உலகங்கள் தோன்றுவதற்கு முன்பாகத் தோன்றிய என்றும் உள்ள பொருள். அவ்வாறு முன்பாகத் தோன்றிய பொருள் முதலாகவும் நடுவாகவும் இறுதியாகவும் இருந்து உலகங்கள் தோன்றுதற்கும் உயிர்களுக்கு அருளுதற்கும் உதவினான் என்பதனை, “முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்என்று திருவாசகத்தில், திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவார். இதனையே, “ஈராய் முதல் ஒன்றாய்..என்று திருஞானசம்பந்தப் பெருமான் தமது திருவீழிமிழலைப் பதிகத்தில் குறிப்பிடுவார். இறைவனே உயிர்களைப் பல்வேறு பிறவிகளில் புகுத்தி, உயிர்களைச் செவ்வியுறச் செய்து, தமது திருவடிக்கு ஆளாக்கிக் கொள்கின்றான் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

            உயிர்களுக்கு அருள்புரிவதற்காக இறைவன், உயிர்களுக்கு உடல், உடலில் உள்ள உள் மற்றும் வெளிக்கருவிகள், உயிர்கள் வாழ்வதற்கான பல்வேறு உலகங்கள், உயிர்கள் உடலில் இருந்து கருவி கரணங்களால் நுகர்தற்குரிய பல்வேறு நுகர்ச்சிப் பொருள்களையும் தோற்றுவிக்கின்றான் என்பர். அவ்வாறு இறைவன் தோற்றுவித்த மேற்கூறியவற்றை உயிர்கள் செவ்வியடையும் வரையிலும் பல்வேறு பிறவிகளில் நிறுத்தியும் துடைத்தும் அருளுவான் என்பதனை, “அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அருள்தருவாய், போக்குவாய் புகுவிப்பாய் நின்தொழும்பின்என்று சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார்.

            இவ்வாறு பெருமான் அளித்திருக்கின்ற அருட்கொடைகளைத் துணையாகக் கொண்டு, பெருமானின் திருவருளைக் கைவிளக்காகக் கொண்டு வாழ்க்கை எனும் கடலைக் கடப்பதே பிறவியின் நோக்கம் அல்லது குறிக்கோள் என்பர். இதனையே, “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவன் அடி சேராதார்என்பார் ஐயன் திருவள்ளுவர். இறைநெறியைப் பின்பற்றாது, இறைவனின் திருவருளை முன் நிறுத்தாது வாழ்ந்த வாழ்க்கையைக், ‘குறிக்கோள் இன்றிக் கெட்டேன்என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். பெருமான் உயிர்களுக்குச் செய்திருக்கும் உதவிகளை உணர்ந்து, உண்மை உண்மையாக அவனிடத்திலும் அவன் தோற்றுவித்தப் பொருள்களிடத்திலும் அவன் எப்போதும் நமக்குத் துணையாய் அளித்துள்ள பிற உயிர்களிடத்திலும் அன்பு செய்வதே மெய்யுணர்வு என்றார்கள். எல்லோரிடத்தும் அன்பு செய்கின்ற வழியினை வருவித்துக் கொள்வதே இறைவனை அடையும் நெறி, அன்புநெறி, சிவநெறி என்றார்கள். இதனாலேயே, “ அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்என்றார் திருமூலர். என் அன்பு பெருகின்ற வழியினை நான் அறிந்து கொண்டு விட்டமையால், இனி எனக்குப் பிறவி வாய்க்காதுஎன்பதனை, “என்அன்பு ஆலிக்கும் ஆறு கண்டுஇன்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியேஎன்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.

            பெருமானே முதலும் முடிவும் அற்றவன், அவன் அளித்த கொடையே இவ்வாழ்வு. இது மிகவும் தற்காலிகமானது. ஒவ்வொரு பிறவியும் உயிர் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்காகப் பெருமானால் அளிக்கப்படுகின்றது. பிறவிகளில் மாந்தப் பிறவியே கிடைத்தற்கரிய பிறவி. இம்மாந்தப் பிறவியில்தான் பகுத்தறிவு சிந்தனையுடன், மனம், வாக்கு, காயத்தினால் பெருமானை எண்ணவும் வழிபடவும் புகழவும் முடியும். பிற உயிர்களிடத்திலே அன்பு பாராட்ட வேண்டும் என்பதனை உணரும் உயிர்களே, தீய செயல்களை விலக்கி, நற்செயல்களைச் செய்ய இயலும் என்பதும் பின்பு மனம், வாக்கு, காயத்தினால் செயல்கள் செய்ய வேண்டும் என்ற விருப்பு நீங்கி, எல்லாம் அவன் செயல் என்று எண்ணி அமைதியுற்று இருக்கும் என்றும் குறிப்பிடுவர். இதனையே, “என் செயல்ஆவது யாதும் ஒன்றும் இல்லை, தெய்வமே நின்செயலே என்று உணரப் பெற்றேன்என்று தாயுமானவ அடிகள் குறிப்பிடுவார். தன் செயலற்று, தான் என்ற முனைப்பு அற்ற உயிர்களே இறைவனின் திருவருளுக்குத் தகுதி உடையவையாகத் தம்மை ஆக்கிக் கொண்ட உயிர்கள் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

            பெருமானே உயிர்களுக்கு முதலும் முடிவுமாய் இருக்கின்றான் என்ற உணர்வு உடைய உயிர்களே, ‘யான், எனதுஎனும் செருக்கு அற்றவையாக இருகின்றன. நான் மிகுந்த அறிவாளி, நான் மிகுந்த செல்வம் உடையவன், நான் மிகுந்த புகழை உடையவன், நான் மிக அழகானவன், நான் மிகுந்த ஆதிக்கம் உள்ளவன் என்றுநான், நான்என்று தருக்கித் திரியும் உயிர்கள் மெய்யறிவு கூடப்பெறாதவை என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. உயிர்கள் கொண்டிருக்கின்ற அறிவு சிற்றறிவு என்றும் அவ்வறிவு அது அதுவாய்ச் சுட்டி அறிகின்ற அறிவு என்றும் ஒன்றை அறிகின்ற போது பிற ஒன்றை அறிய இயலாத அறிவு என்றும் ஒன்றை அறிவித்தால் மட்டுமே அறியும் என்றும் எதையும் அழுந்தி நுகர்ந்தாலே அறியும் எனும் குறைபாடுகளை உடையது என்றும் மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. முதலும் முடிவுமாய் இருக்கின்ற பெருமானின் அறிவு பேர் அறிவு, எல்லாவற்றையும் ஒரு சேர ஒரே நேரத்தில் அறியும் அறிவு, இயற்கை அறிவு, முற்றறிவு, அழுந்தி நுகராமலேயே அறியும் அறிவு என்று உயிர்கள் உணருமானால், ‘தான்என்ற செருக்கு தானே விலகும் என்பர்.

            என் பட்டம், என் பதவி, என் உடம்பு, என் மனைவி, என் மக்கள், என் வீடு, என் செல்வம், என்றுஎனது எனதுஎனும் செருக்கு, பெருமானே உயிர்களுக்கு முதலும் முடிவுமாய் இருக்கின்றான் என்பதனை உணர்ந்தால் நீங்கும் என்பர். இவ்வுடலில் இருந்து உயிரைப் பிரிக்கும் தொழிலைச் செய்யும் பெருமான், உடலில் இருந்து உயிரைப் பிரித்து விட்டால் என் பட்டம் நீங்கிப் பிணம் எனும் பட்டம் வந்துவிடும். என் பதவி பறிபோகிவிடும். என் உடம்பு என்பது போய்ச் சாம்பலாகிவிடும். என் மனைவி, என் மக்கள். என் வீடு, என் செல்வம், என் நாடு, என் உலகம் என்ற எதுவும் உடன் கொண்டு செல்ல முடியாதது ஆகிவிடும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானுடைய திருவருளே நாம் நுகர்கின்ற அனைத்திற்கும் மூலமாக, முதலாக இருக்கின்றது. இதனையே, “போற்றி என் வாழ் முதலாகிய பொருளேஎன்று மணிவாசகப் பெருமான் தமது திருப்பள்ளி எழுச்சியில் குறிப்பிடுவார்.

            “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை, சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே, வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமேஎன்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். பெருமானே நமக்குப் பேச்சாற்றல் உடைய வாயையும் பெருமானே நமக்குப் பலவற்றையும் எண்ணிச் செயலாற்றத் தூண்டும் இளமையான நெஞ்சினையும் பெருமானே நமக்குக் கண், காது, மூக்கு, வாய், மூளை ஆகியவற்றைத் தலையில் பொறுத்திக் கொடுக்கின்றான். அவற்றை நன்முறையில் பயன்படுத்தி நெறியான வாழ்க்கையினை வாழ்ந்து அவனின் திருவடிகளை அன்பினால் வாழ்த்தி, நினைந்து, தலையால் வணங்குவதே நிலைபெற்ற வாழ்வினை அளிக்கும் என்பர். “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்என்று நெறியற்ற வாழ்க்கையினை வாழ்பவற்கு இவ்வுலகில் பல்வேறு துன்பங்கள் ஏற்படும் என்று திருமுறைகள் குறிப்பிடுகின்றன. “நடையை மெய்என்று நாத்திகம் பேசாதே, படைகள் போல் வரும் பஞ்சமா பூதங்கள், தடைஒன்றும் இன்றியே தன்னடைந்தார்க்கு எல்லாம், அடைய நின்றிடும் ஆனக்கா அண்ணலேஎன்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.

            பெருமானே நம் வாழ்விற்கு முதலாய் இருக்கின்றவன். பெருமானே நம் வாழ்வினை அல்லது பிறப்பினை முடிவித்துத் தன் திருவடிகளை அளிப்பவன் என்ற தெளிவுடைய உயிரே தனக்கு வருகின்ற துன்பத்தினைத் துணிவோடு எதிர்கொள்ளவும் துன்பத்தினைத் தாங்கிக் கொள்ளவும் பிறருக்குத் துன்பம் விளைவிக்காமலும் இருக்கும் என்பர். “வகுத்தான் வகுத்தவழி அல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிதுஎன்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவது போல் முடிவும் முதலுமாய் இருக்கின்ற பெருமான் சொல்லாமல் எதுவும் என்னை வந்து சாராது. நன்மையும் தீமையும் நம் வினைப்பயனுக்கு ஏற்ப அவன் அளிக்கவே வருகின்றன. இன்ப நுகர்வுகளும் துன்ப நுகர்வுகளும் என் நன்மைக்காகவே இறைவனால் அளிக்கப் பெறுகின்றன. என் உயிரைப் பட்டைத் தீட்டிச் செவ்வி அடைவிக்கவே இறைவன் துணைகொள்கின்ற உலக உயிர்களாலும் பிற பொருள்களாலும் நுகர்ச்சிகள் என்னை வந்து அடைகின்றன என்ற உணர்வு ஏற்பட்டுவிடுமாயின் பிறரிடத்தில் வெறுப்பும் சினமும் குற்றம் காணுதலும் நீங்கும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. “அவன் அன்றி ஓர் அணுவும் அசையாதுஎன்ற தெளிவினை உடையவர்கள் எதற்கெடுத்தாலும் பிறரைக் குறை கூறுகின்ற நிலையினை நீங்கிப் பெருமான் கூட்டுவிக்க இதன் வழியாக, இவ்வாறு வந்தது என்று அமைதியையும் ஆறுதலையும் பெறுவர் என்பர்.

            உரிய வேளைக்குத் தவறாது நினைந்து இருந்து பால் ஊட்டுகின்ற தாயைவிட மேலான இறைவனே நமக்கு அனைத்திற்கும் முதலும் முடிவுமாக இருக்கின்றான் என்ற தெளிவினைப் பெறுவோமேயானால் யான், எனது என்ற செருக்கினை நீங்கி, எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுகின்ற தூய நிலையையும் குறிக்கோளுடைய வாழ்க்கை நெறியையும் மேற்கொள்வோம். நாம் உய்வு பெறுவதற்காகவே நமக்கு பெற்றோர், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்பவர்களைப் பெருமான் அளித்திருக்கின்றான் என்பதனை உணர்ந்தால் அவர்களிடத்தில் அன்பு பாராட்டுவோம். அவர்கள் நாம் செய்த வினைப்பயனுக்கு ஏற்ப நம்மை வாழ்விக்க வந்தவர்கள் என்பதனை உணர்கின்ற உணர்வே இல்லறத்தை நல்லறமாக வழி நடத்த துணை நிற்கும்  என்று குறிப்பிடுவர். உலக வாழ்க்கையில் முறையாகப் பெறுகின்ற சிற்றின்பங்களையே பேரின்பத்திற்கு வாயிலாகக் கொண்டு வாழ்பவரே இனிமையான, சுமையற்ற, மகிழ்ச்சியான, இல்வாழ்க்கையை வாழமுடியும் என்று திருமுறைகள் குறிப்பிடுகின்றன.

இல்லறத்தில் கடமைகளைத் தவறாது செய்து, பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர், விருந்தினர், தான், மனைவி, பிள்ளைகள் என்று பேணிக்காத்துப் பின் மற்றவர், பிற உயிர்கள், உலகம் என்று அன்பு பொருந்திய வாழ்வினை முறையாக நடத்தி இன்புற்று, இவற்றை எல்லாம் நமக்கு அளித்த இறைவன் செய்கின்ற உதவிக்காக அவனையும் வாழ்த்தி, வணங்கி, வழிபடுகின்ற இன்பமும் பெருக, நிலைத்த வாழ்வான பேரின்பப் பெருவாழ்வினையும் பெறுவோம் என்பதனை நினைவில் கொள்வோம், சீர் பெறுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக