திங்கள், 3 அக்டோபர், 2016

3. எளிய சிவபூசனை / Eliya Poosanai

சிவசிவ
திருமுறை

எளிய சிவபூசனை

இறைவனிடத்திலே உள்ளத்தை ஒன்ற வைப்பதற்கே மனம், வாக்கு, காயம் என்ற மூன்றாலும் பெருமானை வழிபடவேண்டும் என்பர். இதற்கு உள்ளத்தில் பெருமானை எண்ணவும் வாக்கால் பெருமானை வாழ்த்தவும் காயத்தால் சில செயற்பாடுகளைச் செய்யவும் வழிபாடு நடைபெற்றது என்பார்கள். மனம், வாக்கு, காயத்தினால் வழிபாட்டினை எளிமையாகச்  செய்ய வேண்டும் என்பதனை, “வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைஎன்று திருநாவுக்கரசு அடிகள் வழிபாட்டினை மிக எளிமையாகக் குறிப்பிடுவார். மாந்தர்களின் அறிவும் செவ்வியும் பல்திறப்பட்டு இருப்பதனால் வெறும் வாழ்த்தினாலும் வெறும் மனத்தால் நினைப்பதாலும் வெறும் தலையால் வணங்குதலினாலும் மட்டும் வழிபாட்டில் இறை உணர்வைப் பெற இயலாது என்பதனால் வாழ்த்துதலோடும் மனத்தில் எண்ணுதலோடும் கூடுதலான சில செயற்பாடுகளையும் நம் முன்னோர் சேர்த்து வைத்தனர். இச்செயற்பாடுகளே கிரியைகள் எனப்பட்டன.

பூசனைக் கிரியைகளை இறைவனை மேலும் எண்ணுவதற்கும் உணர்வதற்கும் துணை நிற்பதற்காகச் சேர்த்து வைத்தனர். அவ்வகையில் பூசனையில் விளக்கை ஏற்றும் வழக்கத்தினை ஏற்படுத்தினர். இது இறைவன் ஒளி வடிவாக இருக்கிறான் என்பதனை உணர்த்துதற்காக ஆகும். நல்லெண்ணெய், இலுப்பை, நெய் போன்றவற்றால் விளக்கு ஏற்றினால் மூச்சுக்கும் உடல் நலத்திற்கும் ஏற்றது என்று உடல் நலக்கூறினையும் அதில் இணைத்தனர். இன்று இவ்வுண்மையை எண்ணாது பலரும் தங்க விளக்கில் ஏற்றினால் பெருமான் உடனே வெளிபடுவான் என்பது போன்றும் வெள்ளி விளக்கில் ஏற்றினால் சற்று காலம் தாழ்த்தி வெளிப்படுவான் என்றும் வெண்கல விளக்கில் ஏற்றினால் இன்னும் கூடுதலாகக் காலம் தாழ்த்தி வருவான் என்பது போன்றும் விளக்கு செய்யப்படும் உலோகத்தின் மீது கருத்தைச் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். உலோகங்கள் மந்திர ஆற்றலை ஈர்த்து வைக்கும் ஆற்றல் உடையவை என்பது உண்மையே என்றாலும் விளக்கு ஏற்றப்படும் எண்ணெய் உடல் நலத்திற்கு நன்மை கொடுப்பது உண்மையே என்றாலும் வழிபாட்டில் விளக்கு ஏற்றப்படும் நோக்கமே முதன்மை பெற வேண்டியதைத் தெளிதல் வேண்டும். இதனால் விலை உயர்ந்த விளக்கு, விலை உயர்ந்த எண்ணெய் என்பதனைக் காட்டிலும் பெருமான் ஒளிவடிவாக இருக்கின்றான் என்ற தெளிவே முதன்மையாகும் என்று புலப்படும்.

வழிபாட்டில் இடம்பெறும் மணி எவ்வகையான உலோகத்தில் செய்யப்பட்டிருக்கின்றது, மணியின் மேல் என்ன சின்னம் அல்லது அடையாளம் இருக்கின்றது என்பதைக் காட்டிலும் அம்மணி ஒலிக்கப்படும் போது உணர்த்தப்படும் உண்மையே முதன்மையாகும். ஓம் என்கின்ற ஓங்காரமாகப் பெருமான் ஒலி வடிவிலும் நிற்கின்றான் என்பதே உணரப்பட வேண்டியதாகும். பூசனையில் இதனையே நாம் உணரல் வேண்டும். பூசனையில் ஏற்றப்படும் ஊதுவர்த்தி, நல்ல மணத்தைக் கொடுத்து அந்நறுமணத்தால் நம் உள்ளத்தையும் பிறர் மனத்தையும் அமைதி செய்ய உதவுகிறது என்பதற்காகவே அதனை ஏற்றுகின்றோம் என்பதனை தெளிதல் வேண்டும். அதனை விடுத்து விலை உயர்ந்த ஊதுவர்த்தியைப் பெருமானுக்கு ஏற்றிவிட்டோம் அல்லது மிகச் சிறந்த மூலிகைகளினால் ஆன ஊதுவர்த்தியை ஏற்றிவிட்டோம், அதனால் பெருமான் உறுதியாய் அருள் செய்துவிடுவான் அல்லது நம் மீது அன்புகாட்டிவிடுவான் என்பது அறியாமை என்பதனைத் தெளிதல் வேண்டும். ஊதுவர்த்தி ஏற்றுவது நம் மன அமைதிபடவே அன்றி பெருமானுக்கு அதனால் ஆவது ஒன்றும் இல்லை என்பதில் தெளிவு ஏற்பட வேண்டும்.

தூபம் அல்லது சாம்பிராணி என்பது உணர்த்தும்  கருத்தினையும் பூசனை இயற்றுபவர் உணர்தல் முதன்மையானது. விலை உயர்ந்த சாம்பிராணியைப் புகைத்தால் பெருமான் ஓடோடி வந்து விடுவான் என்பது உண்மை அல்ல என்பதனைத் தெளிதல் வேண்டும். நல்ல மணத்தை உடைய சாம்பிராணி, நல்ல கிருமி கொல்லி என்பதோடு மட்டும் அல்லாமல் அதன் நறுமணம் மன அமைதியையும் கொடுக்கிறது என்பதனைத் தெளிதல் வேண்டும். இது ஒரு புறம் இருந்தாலும் சாம்பிராணி புகைப்பதன் நோக்கமானது அரிய உண்மையை உணர்த்தி நிற்கின்றது. பெருமானின் திருமுன்பு ஏற்றப்படும் சாம்பிராணியின் புகையானது பெருமானின் திருவடிவைச் சற்று நேரம் மறைத்துப் பின் பெருமானின் திருவடிவைத் தெளிவாகக் காட்டுவது போல, உலகைச் சார்ந்து இருக்கின்றவருக்குப் பெருமான் தன்னை மறைத்து இவ்வுலகையே காட்டுவான் என்பதனையும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு இவ்வுலகை மறத்துத் தன்னைக் காட்டி நிற்பான் என்பதனையும் உணர்த்துவதாக உள்ளது என்பர். இவ்வரிய உண்மையை உணராது சாம்பிராணியின் விலையில் மயங்கிக் கிடப்பவருக்கு வழிபாட்டில் இறை உணர்வு தோன்றுவது கடினம் என்பதனைத் தெளிதல் வேண்டும்.

பூசனையில் இடம்பெறுகின்ற மற்றும் ஒரு செயல்முறை ஒற்றைத் தீபம்(சுடர்) காட்டுவது. பெருமான் ஒருவனே எல்லா உயிர்களிலும் பிரிப்பின்றி, உயிர் ஒளியாய் நின்று அருளிக் கொண்டிருக்கின்றான் என்பதனை உணர்த்துவதாய் அமைவது. இவ்வொற்றைச் சுடரை ஏற்றிப் பெருமானின் வலது திருக்கையில் ஓம் என்ற எழுத்தின் இடச் சுழியாகத் தொடங்கி, மேல் எடுத்துச் சென்று, பெருமானின் திருத்தலை உச்சி வரை சென்று, பின் பெருமானின் திருஇடக் கைவரை இறக்கிப் பின் பெருமானின் திருமார்பு வரை ஏற்றிப் பின் பெருமானின் திரு இடுப்புவரை இறக்கிப் பின் பெருமானின் திருவடிகள் வரை இறக்கி, ஓம் என்ற எழுத்தின் முடிவாகத் திருவடியில் நிறைவு செய்துப் பின் திருமுகத்தில் அவ்வொற்றைச் சுடரைக் கொண்டு வந்து நிறுத்தி நிறைவு செய்தல் வேண்டும் என்பர். இது பெருமான் + என்ற எழுத்துக்களின் கூட்டாகச் சிவ+சத்தியாக, ஓம் வடிவில் நிற்கின்றான் என்பதனை நாம் உணருதற்காக என்பர். இவ்வமைப்பிலேயே எல்லா வகை வழிபாட்டுச் சுடர்களையும் சிவபெருமானுக்குக் காட்டுவர். திருக்கோயில்களில் ஏற்றப்பெறும் பல்வேறு சுடர்களின் பொருளைப் பற்றி வேறு கட்டுரையில் விரிவாகக் காண்போம். இவ்வாறு சுடர் ஏற்றுகையில் எத்தனை முறை சுற்றினோம் என்பதனைக் காட்டிலும் அது உணர்த்தும் பொருளை உணர்வதே இன்றியமையாதது ஆகும்.

இல்லத்தில் இயற்றப்பெறும் எளிய பூசனைகளில் பெருமானுக்குத் திருவமுதாகப் பழங்கள், பொங்கல், முந்திரி, கற்கண்டு என்று பல்வேறாகப் படைப்பர். தனது திருவருளையே திருமேனியாகக் கொள்ளும், எல்லாப் பொருளையும் படைத்து அல்லது தோற்றுவித்து அளித்த பெருமானுக்கு உணவு வேண்டுவது இல்லை என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும் பெருமான் நமக்கு செய்திருக்கின்ற பேருதவிகளுக்கு நன்றியையும் அன்பையும் தெரிவிக்கவே இவ்வாறு செய்கின்றனர் என்று குறிப்பிடுவர். இதில் விலையான திருவமுதிற்குப் பெருமான் மிகுதியான திருவருளைக் கொடுப்பான் என்று எண்ணுவதும் அதற்கு மாறாக எண்ணுவதும் தவறாகும். இதில் அன்பே முதன்மை பெற வேண்டும். நம்மால் இயன்றவற்றைப் படைத்தே மகிழவேண்டும் என்பதே உண்மையான அன்பினை வெளிக்கொணரும்.

            பெருமானுக்குப் பூசனையில் வைக்கப்பெறும் காளாஞ்சியினைப் பற்றித் தெளிதலும் முதன்மையானது ஆகும். தேங்காயின் ஓட்டினைப் போன்று உறுதியாக இருந்த என் அறியாமை உடைபட்டு நீங்கி, வெண்மையான தேங்காயின் பருப்பினைப் போன்று என் அறிவு தூய்மை பெற வேண்டும். உடம்பை உருவகப் படுத்தும் வெற்றிலை, என் உடல் உன் திருவருளால் தூய்மை பெறவேண்டும். கைகால்களை உருவகிக்கும் இரண்டு வாழைப்பழங்கள் என் கைகால்கள் தூய்மை படவேண்டும், செல்வத்தைக் குறிக்கும் பாக்கு, நான் ஈட்டும் செல்வம் தூய்மையான வழியில் அமைய வேண்டும் என்று உணர்த்துதலை உணர வேண்டும். இதை விடுத்து இப்பொருள்களின் தரத்தை எண்ணி மயங்குவது தெளிவாகாது; இறை உணர்வைக் கொடுக்காது என்பதனைத் தெளிதல் வேண்டும்.

சூடம் ஏற்றும் போது பெருமான் சிறிது நேரம் ஒளியாகத் தோன்றி மறந்தான் என்பதனை உணர்தல் வேண்டும். பூசனையில் இடம் பெறும் நீர் புறத்தூய்மையும் அகத்தூய்மையும் பெற வேண்டும் என்பதாகும். மலர் நம் உள்ள அன்பினை வெளிப்படுத்துவதாகும். நீரில் இடப்பட்ட மலர் புறத் தூய்மையோடும் அகத் தூய்மையோடும் காட்டப்படும் அன்பு என்பதாகும். இதில் விலை உயர்ந்த மலர், பெரிய மலர், சிறிய மலர், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மலர், இன்னவகை மலர் என்று வேறுபாடு காட்டி மயங்குவது தெளிவின்மையாகும் என்பதனைத் திருமுறைகள் உணர்த்துகின்றன. மலர் கிட்டா விடில் பச்சை இலைகளைப் போட்டு இறைவனை வழிபடலாம். வில்வம் போன்ற மருத்துவ இயல்புடைய பச்சிலைகளை வழிபட்டில் இடம்பெறச் செய்து அவற்றை உண்டால் உடல் நலத்திற்கு நன்மை என்றார்களே ஒழிய அதுவே இறைவனின் திருவருளைக் கூட்டுவித்து விடும் என்று எண்ணுவது தவறானது என்பதனைத் தெளிதல் வேண்டும்.

வீட்டில் புரியாத மொழியில் மந்திரங்கள் சொல்வது இறை உணர்வை ஏற்படுத்தாது. இறைவனுக்கு இன்ன மொழியில் சொன்னால் தான் புரியும் என்றோ அல்லது இன்ன மொழி தான் உயர்வு என்றோ எண்ணுவது அறியாமையாகும். சொல்லப்படும் மந்திரம் சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் இறை அன்பையும் இறை உணர்வையும் ஏற்படுத்துதற்குத் துணை நிற்கின்றதா என்பதே முதன்மையாகும். தமிழர்கள் தமிழ் மந்திரமானநமசிவயதிருவைந்தெழுத்தின் பொருளை உணர்ந்து கொண்டு சொல்ல வேண்டும். திருமுறையில் சொல்லப்படுகின்ற போற்றிகளைப் பொருள் அறிந்து சொல்லல் வேண்டும். இறை உணர்வு மேலோங்க, பெருமானின் திருவருள் கிடைக்கப் பெற்றுப் பெருமானின் திருவருளால் அருளாளர்கள் அருளிய திருமுறைகளைப் பூசனையில் ஓத வேண்டும். பொருள் புரியாத வேற்று மொழிப் பாடல்களைப் பெருமைக்காகப் பாடுவது பயனற்றது என்பதனை உணர்தல் வேண்டும். மேற்கூறிய செயல் முறைகளோடு பூசனையில் இடம் பெறும் பதினாறு பணிவிடைகளைச் செய்யினும் எல்லோரும் பின்பற்றக்கூடிய எளிய வழிபாட்டினையே திருமுறை முன்வைக்கின்றது. அடியார்களும் எல்லோரும் கையில் மலரும் நீரும் தெரிந்த மந்திரமும் பொருள் புரிந்த இசையோடு கூடிய திருமுறைப் பாடல்களுமே வழிபாட்டில் முதன்மை என்பதனை, “பத்தரொடு பலரும் பொலி அம்மலர் அங்கை புனல் தூவி, ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்து உயர் சென்னிஎன்று திருஞானசம்பந்தர் தமது திருவலிதாயம் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். அனைவரும் பின்பற்றக் கூடிய, எளிய பொருள் புரிந்த, இறை அன்போடு கூடிய வழிபாட்டினை மேற்கொள்வோம், நலம் பெறுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக