திங்கள், 3 அக்டோபர், 2016

24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்/ Ennutharku Eddaa elilaar kalal

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்

          காலம் காலமாய் உயிர்களுக்குப் பெருமான் இயற்றும் உதவியினைச் சொல்வது திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் திருவாசகத்தினை அருளிய மணிவாசகர், “எண்ணுதற்கு எட்டா எழில்ஆர் கழல் இறைஞ்சிஎன்று சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். நினைத்தற்கும் கூடாத அழகு வாய்ந்த சிவபெருமானின் திருவடிகளை வணங்கி என்று குறிப்பிடுவார். கடவுள் தனது சிறப்பு நிலையில் மனிதர்களால் கற்பனை செய்து பார்க்க இயலாத நிலையில், மனம், வாக்கு, காயம் இவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கிறார் என்று குறிப்பிடுவார். அத்தகைய பெருமான் உயிர்களின் மீது கொண்ட கருணையின் கரணியமாக நினைத்தற்கும் கூடாத தமது சிறப்பு நிலையிலிருந்து பொது நிலைக்கு இறங்கி வந்து, வடிவம் தாங்கித் தனது அழகான திருவடிகளை அருளுகின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

            கடவுள் தன் பெருங்கருணையின் கரணியமாகத் தன்னிடமுள்ள எல்லையற்ற இன்பத்தினை உயிர்கள் நுகரும் பொருட்டு பொது நிலைக்கு இறங்கி வருகிறாராம். உயிர்களுக்குத் தன்னை உணர்த்தி, தன்னிடமுள்ள எல்லையற்ற இன்பத்தினையும் அவற்றிற்கு உணர்த்தி, அவ்வின்பத்தினை அடையும் வழிகளையும் அவற்றிற்கு உணர்த்துவதற்காக இறைவன் பொது நிலைக்கு வருகின்றான் என்று தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.. மேலும் உயிர்களுக்கு, உயிர்கள் யாவை, அவை எத்தகைய இயல்பினை உடையவை, அவற்றிடம் இருக்கும் ஆற்றல் என்ன, அறிவு என்ன, அறியாமை என்ன என்பவனவற்றை எல்லாம் உணர்த்த இறைவன் பொது நிலைக்கு அவன் பேரருள் கரணியமாகப் பொது நிலைக்கு இறங்கி வருகின்றான் என்பர். இறைவன் தனது சிறப்பு நிலையிலிருந்து தன் பேரருளின் கரணியமாகத் தானே பொது நிலைக்கு இறங்கி வருவதனை, “அகளமாய் யாரும் அறிவரிது, அப்பொருள், சகளமாய் வந்தது என்று உந்தீபற, தானாகத் தந்து என்று உந்தீபறஎன திருவுந்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடும்.

            எல்லையற்ற பேரரின்ப நிலையில் இருக்கும் இறைவனின் நிலையை உயிர்கள் அடையவே இறைவன் பொது நிலைக்கு இறங்கி வருகின்றான் என்பதனைத், “தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி பின்னம் இலான் எங்கள் பிரான்என்று திருவருட்பயன் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடும். அதாவது மனம் வாக்குக்கு எட்டாததும் பேரின்பமானதும் மலபந்தம் இல்லாததுமாகிய தமது ஒப்பற்ற நிலையை, என்றும் உள்ள பொருளாகிய உயிர்கள் யாவும் அடைய, தமது சிறப்பு நிலையில் ஒன்றாய் இருந்த கடவுள் பொதுநிலைக்குச் சிவம் சக்தி என்று இரண்டாய் வருகின்றது. அவை இரண்டாய் வந்தாலும் அவை ஒன்றேதான். பொருளும் அதன் தன்மையும் போல! தீயும் அதன் வெப்பமும் போல! பொதுநிலைக்கு இறங்கி வருகின்ற இறைவராகிய சிவமும் சக்தியும் வேறு வேறு அல்ல! அவை கணவனும் மனவியும் அல்ல என்று சித்தாந்த சைவம் தெளிவுபடுத்துகின்றது.

            பொதுநிலையில் தன் ஆற்றலாகிய சத்தியை அல்லது ஆற்றலை வெளிப்படுத்தி எல்லாப் பொருள்களுடனும் கலந்து இருந்து அவற்றைச் செயல்படுத்துகிறார் இறைவன். பொதுநிலையில் சிவம் என்றும் பதி என்றும் பெயர் குறிக்கப்படும் இறைவன் தனது சத்தியை அல்லது ஆற்றலைக் கொண்டு அருவம், அருருவம், உருவம் ஆகிய நிலைகளில் தோன்றி அண்டங்கள், உலகங்கள், உலகப்பொருள்கள் முதலாய எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்துப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்கின்றார் என்று சிந்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இந்நிலையில் இறைவன் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி அணுவுக்கு அணுவாகவும் எல்லாப் பொருள்களையும் கடந்தும் அகண்டிதமாகவும் இருக்கின்றார் என்று சைவம் குறிப்பிடுகின்றது.

            பொதுநிலையில் இறைவன் நோயாளியின் நோயை அறிந்து குணப்படுத்துகிற வைத்தியனைப் போலவும் தன் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து உயிர்களுக்கும் முறை செய்து காப்பாற்றுகின்ற மன்னனைப் போலவும் இருந்து அருள் புரிகின்றார் என்று சைவம் குறிப்பிடுகின்றது. பொதுநிலையில் இறங்கி வருகின்ற இறைவனுக்கு எட்டு குணங்கள் சொல்லப்படுகின்றது. பொதுநிலையில் தன் திருவருளையே திருமேனியாகக் கொள்கின்ற பெருமான் கொள்கின்ற நிலைகளை அருவம், அருவுருவம், உருவம் என்று குறிப்பிடுவர். அதில் அருவம் என்பது கண்ணுக்குப் புலப்படாத அறிவால் உணரும் நிலை என்பர். அருவுருவம் என்பது கண்களுக்குத் தெரிந்தும் கண், காது, மூக்கு வாய், கை, கால்கள், வயிறு போன்ற உறுப்புக்கள் விளங்கித் தோன்றாத நிலை என்பர்.

 பெருமானின் அருவுருவ நிலையைச் சிவலிங்கத் திருமேனியாகவும் தீ வடிவாகவும் உலகத்தையும் குறிப்பிடுவர். உருவ நிலை என்பது முழுமையான உறுப்புக்களோடு விளங்கித் தெரிகின்ற, கண்ணால் காணக்கூடிய வடிவங்கள். ஆடல் வல்லான், அம்மையப்பர், பிள்ளையார், முருகன், அம்மை போன்ற திருவடிவங்களை இதற்குக் காட்டாகக் கூறுவர்இறைவன் பொது நிலைக்கு இறங்கி வருகின்ற நிலையினைக், “கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலம் நீடினான்என்று தெய்வச் சேக்கிழாரும் குறிப்பிடுவார். இவ்வாறு வடிவ நிலைக்குப் பெருமான் இறங்கியும் இரங்கியும் வந்து தன் திருவடிகளை வழங்குவதனாலேயே நம்மால் அப்பெருமானைக் கண்டு வழிபட முடிகின்றது என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். அன்பு, அருள் எனும் பொருளாய் விளங்கும் அப்பெருமானின் அழகியத் திருவடிகளை வாழ்த்தி வணங்கி அத்திருவடிகளுக்கு ஆளாவோம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக