திங்கள், 3 அக்டோபர், 2016

10. சிவ குடும்பம் / Siva Kudumbam

சிவ சிவ
திருமுறை

சிவ குடும்பம்

            சிவம் எனும் பரம்பொருள் தம் சிறப்பு நிலையில் வடிவம், அடையாளம், குறி என்பனவற்றை எல்லாம் கடந்து, உண்மை, அறிவு, இன்பப் பொருளாய் இருக்கின்றது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையையே சிவபெருமானின் சச்சிதானந்த நிலை என்று வடமொழியில் குறிப்பிடுவர். இவ்வாறு உண்மை, அறிவு, இன்பப் பொருளாய் இருக்கின்ற பரம்பொருள் உலகைப் படைத்து உயிர்களுக்கு அருள் செய்ய, தன்னுள்ளே ஒடுங்கி இருக்கும் தம் திருவருளை வெளிப்படுத்தியது என்பர். அவ்வாறு வெளிப்பட்ட திருவருளே பரம்பொருளின் ஆற்றலாக, சத்தியாகக் குறிக்கப் பெறுகின்றது. உண்மை, அறிவு, இன்ப நிலையில் உள்ள சிவபெருமானைப் பரசிவம் என்றும் அவனின் திருவருளைப் பராசத்தி என்றும் குறிப்பிட்டனர். உயிர்களையும் உலகங்களையும் உலகங்களில் உள்ள பொருள்களையும் செயற்படுத்த உயர்ந்த தமது சிறப்பு நிலையில் இருந்து பொது நிலைக்கு இறங்கி வருகின்ற அப்பரம்பொருளும் அதனின் ஆற்றலும் முதலில் உயர்ந்த ஓசை வடிவாகவும் பின்பு உயர்ந்த ஒளி வடிவாகவும் வருகின்றன என்றனர். இதனையே வடமொழியில் பரநாதம் பரவிந்து என்றனர்.

            பரவிந்து என்று குறிக்கப் பெறும் பரம்பொருளின் ஒளி ஆற்றலே பரம்பொருளின் இதர ஐந்து நிலைகளில் வெவ்வேறு பெயர்களில் அதனின் இயல்பினையும் அதனின் அருள் திறத்தினையும் வைத்து வழங்கப் பெறுகின்றது என்பர். அவ்வகையில் பரவிந்து என்ற பரம்பொருளின் ஒளி ஆற்றல், பரம்பொருளின் அருளோன்(சதாசிவம்), மறைப்போன்(மகேசுவரன்), துடைபோன்(உருத்திரன்), காப்போன்(திருமால்), படைப்போன்(பிரமன்) என்ற நிலைகளுக்கு ஏற்ப முறையே அருளோள்(மனோன்மணி), மறைப்போள்(மகேசுவரி), துடைப்போள்(உமை), காப்போள்(திருமகள்), படைப்போள் (வாணி) என்று நின்று அருள் செய்கின்றது என்பர். இவ்வாறு இறங்கி வந்து அருள் செய்கின்ற பரம்பொருளின் திருவருளாகிய ஆற்றல் ஒன்றே ஆகும் என்பர். இதனை, “சத்தியாய் விந்து சத்தியாய் மனோன்மணி தானாகி, ஏத்துறு மகேசையாகி உமை திரு வாணியாகி, வைத்துறும் சிவஆதிக்கு இங்ஙண் வரும் சத்தி ஒருத்தியாகும், எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்என்று சிவஞானசித்தியார் எனும் மெய்கண்ட நூலில் அருணந்தி சிவாசாரியார் குறிப்பிடுவார்.

பரம்பொருளான சிவத்திற்குக் குறிக்கப்பெறும் சதாசிவம், மகேசுவரன், அரன், திருமால், பிரமன் என்ற பல பெயர்களுக்கு ஏற்ப மனோன்மணி, மகேசுவரி, உமை, என்று வெவ்வேறு பெயர்களில் குறிக்கப்பெறும் பரம்பொருளின் திருவருள் ஆணாகவும் பெண்ணாகவும் குறிக்கப்படுகின்றது. பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுவது அதனது பொதுநிலையில் சிவனாகின்றது. திருவருள் ஆற்றல் என்பது திருவருள் அம்மை, அம்பாள், அம்பிகை, சத்தி என்று பெண்பாலால் குறிக்கப்பெறுகின்றது. பரம்பொருளின் திருவருள் ஆற்றல், பெற்ற தாயினும் சிறந்த பரிவு உடையதாய் இருப்பதனால் தாய் வடிவில் பெண் வடிவில் பெண்களுக்குரிய பெயர்களால் குறிக்கப்பெறுகின்றது. இதனையே, “தாயினும் சாலப் பரிந்துஎன்று மணிவாசகர் குறிப்பிடுவார். மாந்தர்க்குரிய ஆண், பெண், அலி என்ற இயல்புகள் எல்லாம் கடந்த அந்தப் பரம்பொருளைப் பாமர மக்களும் உணர்ந்து கொள்ள ஆண், பெண், ஆணும் பெண்ணும் உடனாகிய நிலையில் குறிப்பிட்டனர். இவ்வாறு பெண்ணாகக் குறிக்கப் பெறும் இறைவனின் திருவருள் ஆற்றல் அல்லது அம்மையைத் தனியொரு கடவுளாக வைத்து எண்ணுவது தமிழ்ச் சைவர்களின் கொள்கை அன்று. இதனை, ‘தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும் சத்தி, பின்னமிலான் எங்கள் பிரான்என்று திருவருட்பயன் கூறும். பெண் வடிவாகப் போற்றப் பெறும் சிவம் எனும் செம்பொருளின் திருவருள் ஆற்றல் அல்லது திருவருள் அம்மை ஒன்றாய் இருக்கின்ற பரம்பொருளின் தன்மை என்பர். பரம்பொருள் சுடர் என்றால் திருவருள் அம்மை அதனின் தன்மையாகிய வெப்பம் என்பர். இதனாலேயே திருவருள் அம்மைக்கு எனத் தனிச் செயல் கிடையாது என்பர். பரம்பொருளின் அருள்திறமே திருவருள் அம்மையின் செயல் என்பர். இதனை, “எத்திறம் நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்என்று சிவஞான சித்தியார் பாடல் குறிப்பிடுகின்றது.

தமிழர்களுக்கே உரிய மதிநுட்பச் சிறப்பினாலும் பரம்பொருளின் திருவருளினாலும் விளைந்த சித்தாந்த சைவம் என்னும் செந்நெறியின் உயர்ந்த உண்மைகளை எல்லோரும் உணரல் வேண்டும் என்பதற்காக மாந்தரிடையே இருக்கின்ற உறவு முறைகளை வைத்துப் பலர் சைவத்தை எளிமைப்படுத்திக் கூற முற்பட்டனர். அவ்வாறு கூறுகையில் உருவகமாகவும், உட்கருத்தாகவும், பலசெய்திகள் குறிப்பிடப் பெற்றன. இவை புராணங்களின் வழியாகவும் கதைகளின் வழியாகவும் எளிமைப்படுத்திக் குறிக்கப்பெற்றன. இவற்றை இறைத் தத்துவங்கள் என்றும் குறிப்பிட்டனர். பெருமானும் அவனின் திருவருளும் அவனுடைய சிறப்புநிலையில்  இருந்து  மாறிவந்து பொது நிலையில் நின்று அருளுவதனை முப்பத்தாறு மெய்கள் அல்லது முப்பத்தாறு தத்துவங்கள் என்றே சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.

இவ்வாறு இறைவனையும் அவனின் திருவருளையும் பாமர மக்களிடம், அவர்கள் அறிந்த மாந்த உறவு முறைகளை வைத்து விளக்க முற்பட்ட போது, பரம்பொருள் ஆண் ஆகியது. அதனது திருவருள் பெண்ணாகிக் கணவன் மனைவி என்று ஆயினர். பரம்பொருள் பரமசிவன் என்றும் அவனது திருவருள் பராசத்தி என்று ஆயினர். பரம்பொருளின் திருவருள் பொருந்திய ஓசை வடிவான ஓங்காரம் பிள்ளையார் ஆகி, சிவபெருமானின் முதல் மகன் ஆனார். பரம்பொருளின் திருவருள் பொருந்திய ஒளிவடிவான முருகன் இரண்டாவது மகன் ஆனார். சிவன், அம்மை, பிள்ளையார், முருகன் எனும் சிவ குடும்பம் ஏற்பட்டது. பரம்பொருளின் திருவருள் திறத்தை விளக்குவதற்குத் திருமால் என்ற பெயரில் காக்கின்ற கடவுள் வடிவில் இருக்கின்ற பரம்பொருள் சிவபெருமானுக்கு மைத்துனன் ஆகவும் திருவருள் அம்மைக்கு அண்ணனாகவும் பிள்ளையார் முருகன் ஆகியோருக்குத் தாய்மாமனாகவும் குறிக்கப் பெற்றார்.

இவ்வாறு குடும்பமாய், உருவகமாய்த் தத்துவமாய்க் குறிக்கப் பெற்றப் பரம்பொருளின் இயல்புகளை மேலும் விளக்குவதற்குக் குடும்பங்களில் உள்ள நடைமுறைகளை வைத்துச் சில நற்பண்புகளைப் புகட்ட முற்படுகையில் நம்மைப் போன்ற மாந்தர்களின் வாழ்வியல் கூறுகளைப் புராணங்களில் சேர்த்தனர். அவ்வகையில் இறைவன் தன் திருவருளோடு பொருந்தி இருந்து அருள் புரிவதனைத் தெய்வத் திருமணங்கள் என்று ஆக்கினர். திருக்கல்யாணம் என்றனர். பிறப்பு, இறப்பு அற்ற சிவபெருமானின் ஓசை வடிவான பிள்ளையாரை ஓங்காரத்தில் இருந்து வெளிப்பட்டதாய்க் குறிப்பிட்டனர். சிவனின் ஒளி வடிவாகிய முருகனைச் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்டதாய்க் குறிப்பிட்டனர். ஒவ்வொரு முறையும் பெருமான் கொள்கின்ற திருவடிவங்களுக்கு அவன் தன் திருவருள் ஆற்றலோடு பொருந்த வேண்டும் என்ற கருத்தினை உணர்த்துவதற்காகத் திருக்கல்யாணம் அல்லது தெய்வத் திருமணங்களைப் புராணங்களில் குறிப்பிட்டு வைத்தனர்.

பரம்பொருளான சிவம் தன்னுடைய திருவருளில் பொருந்துவதனைப் பாமர மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பொது நிலையில் குறிக்கப்பெறும் சிவபெருமான் உமையம்மையைத் திருமணம் செய்து கொள்வதாய்க் குறிப்பிட்டனர். இவ்வாறு உருவகமாய், தத்துவமாய்க் கூறப்பட்ட இவ்வுண்மைகள் நலிந்து, கிரியைகள், சடங்குகள் மலிந்து விட்ட பிறகு, மாந்தர்களுடைய திருமணங்களைப் போன்று இவை நடத்தப்பட்டு வருகின்றன. திருக்கல்யாணம்  இன்று மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என்று நடத்தப்படுவதும் மாந்தர்களைப் போன்று உமையம்மைக்குத் தாலி அணிவிப்பதும் சமய உண்மைகளை மீறி சடங்குகளினால் ஏற்பட்டது என்பதனைத் தெளிதல் வேண்டும்.

முருகனின் திருமணம், பிள்ளையாரின் திருமணம், திருமாலின் திருமணம் போன்றவையும் கூட சமய உண்மைகளை உணர்த்தி நிற்பவையே அன்றி நம்மைப் போன்று கடவுளர் திருமணம் செய்து வாழ்வதில்லை என்ற தெளிவினைப் பெறல் வேண்டும். உமையம்மை சிவபெருமானின் சொல்கேட்காமல், தன் தந்தையான தச்சன் வீட்டிற்குச் செல்வதும் முருகனுக்கும் பிள்ளையாருக்கும் ஞானப்பழத்தைப் பெறுவதில் பிணக்கு ஏற்பட்டது என்பதும் உருவகமாகச் சொன்ன சில உண்மைகளை ஆகும். முருகனும் பிள்ளையாரும் ஞானப் பழம் பெறுவதற்கு முயன்ற புராணச் செய்தியில் ஓர் அரிய உண்மையை உணர்த்தினர். அறிவு என்பது அங்குப் பழமாக உருவகம் செய்யப்பட்டது. எனவே அதனை அண்ணனும் தம்பியும் ஆளுக்குப் பாதி எனப் பங்கிட முடியாமல் போனது. உலகங்களையும் அண்டங்களையும் யார் முதலில் சுற்றி வருகின்றாரோ அவருக்கே பழம் உரியது என்று தெரிவிக்கப் படுகின்றது. முருகன் அண்டங்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற முயன்றது, இறைவன் அண்டங்களுக்கு அப்பால் பெரிதாக நிற்பவன் என்பதனைக் காட்டுதற்கு ஆகும்பிள்ளையார் அம்மை அப்பரைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றது, இறைவனுக்குள் அண்டங்கள் எல்லாம் ஒடுக்கம் என்பதனைக் குறிப்பதற்கு ஆகும். அறிவுப் பழமாக, அறிவின் வடிவாக விளங்கும் முருகப் பெருமானுக்கு இவ்வுண்மை தெரியாது போகுமா? அப்படித் தெரியாமல் போகுமானால் பரம்பொருளின் வடிவாய் நிற்கும் முருகனின் முற்று அறிவினன், பேர் அறிவினன் என்ற இயல்பிற்கு இழுக்கு ஏற்படும். இதன் வழி இறைவன் எல்லாவற்றையும் கடந்தும் அவற்றின் உள்ளும் உறைபவன் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுமே அன்றி சிவம் எனும் பரம்பொருளின் குடும்பத்திலும் மாந்தர்களைப் போன்று சிக்கல்கள் இருப்பதாய் எண்ணுவதும் கூறுவதும் தெளிவின்மையாகும்.

ஒளிவடிவாய்த் தோன்றிய சிவபெருமானே முருகன் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அவ்வாறு இருக்கையில் முருகன் எவ்வாறு சிவபெருமானுடன் பிணக்குக் கொண்டு பழநிமலையில் ஆண்டியாய் நிற்க இயலும்? தானே தன்னை எவ்வாறு சினங்கொள்ள இயலும்? எளிய மக்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் உணர்த்தப்பட்டச் செய்திகளின் உண்மைகளை உய்த்து உணருதலே உண்மையான சமய அறிவாகும். உண்மையான, தெளிவான, சமய அறிவே நம் சமயத்தின் மீது அசைக்க முடியாத பற்றையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். எதையும் பகுத்தறிவோடு ஆய்ந்து பார் என்று குறிப்பிடும் சைவ சமயத்தின் உண்மையையும் மேன்மையையும் அறிவோம்! மேன்மை பெருவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக