வியாழன், 10 மார்ச், 2016

8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் - திருச்சடை / Pirappu Arukkum

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் - திருச்சடை

    உயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்கஎன்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். உயிர் வாழ்க்கையின் குறிக்கோள் பிறவி அறுவதுதான் என்று திருமுறைகளும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களும் குறிப்பிடுகின்றன. “பிறவாமை வேண்டும்என்று காரைக்கால் அம்மையார் தமது திருவாலங்காட்டுத் திருப்பதிகத்தில் குறிப்பிடுவார். உலகப் பேராசான் திருவள்ளுவரும் கூட, “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தாதார், இறைவனடி சேரா தார்என்று குறிப்பிடுவார். அறுவதற்கு அரிதான பிறவியைச் சிவபெருமானின் திருவடியைப் பற்றியே அறுக்க இயலும் என்று பேராசான் குறிப்பிடுகின்றார். சிவபெருமானே உயிர்களின் பிறவியை அறுக்க வல்லவன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.
பின்னகம் என்பதே பிஞ்ஞகன் என்று மறுவி வழங்குகின்றது என்பர். பிஞ்ஞகன் என்பது தலைக்கோலங்களை உடையவன் என்று பொருள்படும் என்பர். இனி பிறவிக்கு வராத நிலையை அருளும் தலைக் கோலங்களை உடைய சிவபெருமானின் சிறப்புடைய கழல்கள் வெற்றி பெறுக என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமானுடைய தலைக்கோலங்கள், உயிர்கள் அறிவு விளக்கம் பெறுவதற்கும் பிறவி அறுவதற்கும் வேண்டிய அரிய உண்மைகளை உருவகமாக உணர்த்தி நிற்கின்றதனை மணிவாசகர் சுட்டிக் காட்டுகின்றார். பெருமானின் தலைக் கோலங்களாகத் திருச்சடை, பிறை, கங்கை, பாம்பு குறிக்கப்பெறுகின்றன. இவை உயிர்களின் பிறவியை அறுக்கப் பெருமான் செய்யும் அருள்செயல்களையும் உணர்த்தி நிற்கின்றன என்பதனை மணிவாசகப் பெருமான் உணர்த்துகின்றார். உயிர்கள் பிறவி அறுவதற்கு இவ்வுண்மைகளை உணர வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.

    தமிழ்ச் சைவர்கள் தங்களின் இல்லங்களிலும் தங்களின் சைவத் திருக்கோவில்களிலும் வைத்து வழிபடுகின்ற திருவடிவங்கள் உயிர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய அரிய உண்மைகளை உணர்த்தி நிற்கின்றன. அவ்வகையில் சிவபெருமானின் திருவடிவில் தலைக் கோலமாக அமைந்துள்ள திருச்சடை அரிய உண்மைகளை உணர்த்தி நிற்கின்றது. பெருமானுடைய பரந்து விரிந்த திருச்சடை பெருமானின் பேர் அறிவினை உணர்த்தி நிற்கின்றது என்று குறிப்பிடுவர். பெருமானின் நிமிர்ந்த முடிந்த திருச்சடையோ பெருமான் அனைத்தையும் முற்றாக, முழுமையாக அறிபவன் என்பதனை உணர்த்தி நிற்கின்றது என்பர். பெருமானின் பேர் அறிவு இயல்பினையும் முற்றறிவு இயல்பினையும் உயிர்கள் அறிந்து இருப்பது உயிர்கள் பிறவி அறுவதற்கு இன்றி அமையாதது ஆகும். பிறவிகள் தோறும் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் உயிர்கள் இயற்றும் நற்செயல்களையும் தீய செயல்களையும் இறைவன் தனது பேர் அறிவால் நன்கு அறிவான் என்றே தெளிவே உயிர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் பிறவி அறுவதற்கும் அடிப்படையான நல்வழி என்பதனை விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

 உயிர்களுக்கு வேண்டுவனவற்றை வேண்டிய வேளையில் வேண்டியவாறு வேண்டாமலேயே பேர் அறிவுடைய பெருமான் அறிந்து கொடுக்கின்றான் என்ற தெளிவு ஏற்படுமாயின், உயிர்கள் உலக வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சியும் மிகப் பெரிய துன்பமும் இல்லாமல் மிதமாய் வாழும். மிகுதியான படபடப்பும் பரபரப்பும் ஆடம்பரமும் இன்றி எளிமையாய் வாழும். உயிர்கள் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் அனைத்தையும் பெருமான் அறிந்தே நமக்குக் கூட்டுவிக்கின்றான் என்பதனைத் தெளிந்தால் சோர்வும் ஏமாற்றமும் சினமும் அச்சமும் வெறுப்பும் நீங்கி உயிர்கள் ஆக்ககரச் செயல்களில் ஈடுபடும் என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார். இறைவன் எல்லாவற்றையும் அறியும் பேர் அறிவு உடையவன் என்பதனை உயிர்கள் உணர்ந்தால் பொன்னையோ பொருளையோ மற்று ஏதாவது ஒன்றையோ கொடுத்துத்தான் இறைவனிடம் நம் குறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்ற அறியாமை நீங்கி வஞ்சக வழிபாட்டினை உயிர்கள் விட்டொழிக்கும் என்கின்றார் மணிவாசகர்.

 உயிர்களுக்குப் பிறவியையும் காலத்தையும் நுகர்ச்சிப் பொருள்களையும் கொடுத்த இறைவனிடமே நம் பெயரையும் பிறந்த விண்மீனையும் மனைவி, மக்கள், உறவினர், வேண்டியவர் என்போரின் விண்மீன்களின் குறிப்பினைக் கூறி வழிபாடு செய்கின்ற தெளிவின்மை நீங்கும் என்கின்றார் மணிவாசகர். உயிர்கள் உலகில் பிறக்கின்ற நேரத்தையும் இவ்வுலகை விட்டு நீங்குகின்ற இறக்கின்ற நேரத்தினையும் மற்ற அனைத்தும் நடைபெறுகின்ற நேரத்தினையும் இறைவனே வகுத்து, அறிந்தே நமக்கு அளிக்கின்றான் என்ற தெளிவு ஏற்படுமாயின் உயிர்கள் காலத்தைக் கண்டு அஞ்சாமல் எதையும் துணிவுடன் எதிர் கொள்ளும் என்று உணர்த்துகின்றார்.

    பெருமானால் படைக்கப் பெற்ற ஐம்பூதங்களின் இயக்கத்தினையும் கோள்களின் இயக்கத்தினையும் அவற்றில் ஏற்படக் கூடிய மாற்றங்களையும் பெருமான் நன்கு அறிவான். அவனே உயிர் அற்ற அவற்றின் உள்ளிருந்து அம்மாற்றங்களை நிகழ்த்துவிக்கின்றான் என்பதனைப் பெருமானின் திருச்சடையைப் பார்த்தவுடன் உயிர்கள் உணருமானால், கோள்களின் பெயர்ச்சியினைக் கண்டு உயிர்கள் கலங்காமல் இருக்கும். அவற்றிற்குப் பரிகாரம் அல்லது கழுவாய் என்ற பெயரில் அலைந்து திரிந்து அல்லல் படாமல் இருக்கும். உயிர் மேம்படுவதற்கான, பிறவி அறுவதற்கான பரம்பொருளின் வழிபாட்டினை மேற்கொண்டு அமைதி பெறும் என்று மணிவாசகர் உணர்த்துகின்றார். நல்ல நேரம், நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல திங்கள், நல்ல ஆண்டு என்று நாளும் நாளும் அஞ்சும் உயிர்களுக்கு நாளும் நல்ல நாளே என்ற தெளிவு பிறக்கும் என்கின்றார். “நன்று நாள்தொறும் நம்வினை போய்அறும், என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்என்ற திருமுறை வரிகள் வாழ்வின் உயிர்த்துணையாக இருக்கும் என்கின்றார்

  பெருமானின் தலைக்கோலத்தின் திருச்சடை உணர்த்தும் உண்மையினை உணராமயினால்தான் பல உயிர்கள் அறியாமையில் உழன்று பிறவியை அறுப்பதற்கான வழியை நாடாமல் இருகின்றன என்று உணர்த்துகின்றார் மணிவாசகர். பெருமான் எல்லாம் அறிபவன், முற்றும் உணர்ந்தவன் என்பதனை அறியாமையினால் தான் தமிழ்ச் சைவர் எண்ணில் அடங்கா குட்டிக் கடவுள்களையும் மாந்தக் கடவுள்களையும் நாடிச் செல்கின்றனர் என்று உணர்த்துகின்றார். பள்ளிப் பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஒரு கடவுள், தொழிலில் வெற்றி பெறுவதற்கு ஒரு கடவுள், கணவன் நலமுடன் வாழ ஒரு கடவுள், என்று தமிழ்ச் சைவர்களின் வழிபடு கடவுளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கின்றது. இதனால் மனம் ஒன்றி சிந்தனையை ஒருமுகப்படுத்த இயலாத நிலை ஏற்படுகின்றது. பெருமான் பல்வேறு வடிவங்களிலே தோன்றி அருள் புரியினும்  மனம் பற்றி சிந்தனை ஒருமுகப்பட, பெருமானின் ஒரு திருவடிவினைப் போற்றி, அப்பெருமானே அனைத்தையும் வழங்குவான் என்ற தெளிவினை உயிர்கள் பெற வேண்டும் என்று மணிவாசகர் உணர்த்துகின்றார்.

    காவல் தெய்வங்கள், நடுகல் தெய்வங்கள், குல தெய்வங்கள்,கிராமத்து தெய்வங்கள், இறந்த முன்னோர்கள் போன்றோரைப் பெருமானே அளித்துக் காக்கின்றான் என்பதனை அறியாததினால்தான் பலர் தங்களையும் தங்கள் குலத்தையும் தொழிலையும் காப்பதற்கு மேற்குறிப்பிட்ட தெய்வங்களை நாடிச் செல்கின்றனர். இவ்வாறு செல்கையில் பரம்பொருளின் வழிபாட்டிற்கு மாறுபடுகின்ற, சைவ சமய நெறிக்குப் புறம்பாய் இருக்கின்ற பலி இடுதல், மது, சுருட்டு, அரிவாள், சங்கிலி, சாட்டை, வெறி ஆடுதல் போன்றவை இடம் பெறுகின்றன என்கின்றார். இத்தகைய சிறு தெய்வங்கள் அளிக்கக் கூடிய நன்மைகளை, அத்தெய்வங்களையும் காக்கும் பெருமான் மிக எளிதாக வழங்கக் கூடும் என்ற தெளிவின்மை உயிர் மேம்பாட்டிற்கும் பிறவி அறுவதற்கும் தடையாக அமைந்து விடும் என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார். ஒவ்வோர் உயிரின் உள்ளத்திலும் உள்ளவற்றைப் பெருமானே அறிந்து அனைத்தையும் அளிக்க வல்லவன் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதனையே பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

       பெருமான் எல்லாம் அறிபவன், நமக்கு வேண்டிய முழுவதையும் உரிய நேரத்தில் தரக் கூடியவன் என்ற தெளிவின்மையினால்தான் பலர் இன்று குறுக்கு வழியை நாடுகின்றனர். சிலர் ஆவிகள், பேய்களின் துணையை நாடுகின்றனர். சிலர் ஏவல் தொழில் செய்பவர்களை நாடுகின்றனர். சிலர் பிற இனம், சமயம் என்பவற்றை எல்லாம் கடந்து மாந்திரவாதிகளை நம்புகின்றனர். சிலர் தங்களையே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மாந்தர்களை நம்புகின்றனர். சிலர் விலங்குகளையும் பறவைகளையும் மரங்களையும் பாறைகளையும் நம்புகின்றனர். பலவாறு அலைந்து திரிந்து கைப்பொருளையும் காலத்தையும் வீண் அடித்துக் காலம் கடந்த பின்பு வருந்துகின்றனர். இறுதி காலத்தில் பிறவி அறுவதற்கு வழியைக் காணாது உலக வாழ்க்கைகாகவே நாளும் அலைந்து பிறவி வீண் ஆனதே என்று வருந்துவர். சிலர் இந்தத் தெளிவு இறுதி வரை வராமல் வாழாமல் கழிவர். மணிவாசகப் பெருமான் போன்றோர் வாழ்ந்து காட்டியும் எடுத்துக் கூறியும் அதனைப் பின்பற்றும் உளப்பாங்கும் இன்றி மறுத்துப் பேசிச் சிலர் வாழ்நாளைக் கழிப்பர். பிறவி அறுவதற்கான வழியை உணர்த்தி நிற்கும் பெருமானின் திருச்சடையின் உண்மையினை உணர்வோம்; வாழ்வாங்கு வாழ்வோம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக