செவ்வாய், 15 மார்ச், 2016

10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்/ karam kuvivaar

கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்

மந்திரச் செய்யுள்களான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக விளங்குவது திருவாசகம். மணிவாசகப் பெருமான் அருளிய அத்திருவாசகத்தில் இடம்பெற்றிருப்பது சிவபுராணம். சிவபுராணம் இறப்பு வீடுகளில் பாடப்பெறுவது என்று பிதற்றும் அறியாமை உடையவர்களின் சிறுமையைச் சம்மட்டியால் அடிப்பது போன்று மணிவாசகர் இயம்பியுள்ள அரிய கருத்துக்களில் ஒன்று, “கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்கஎன்பது. நம் போன்ற உயிர்களுக்கு அளவிடற்கு அரிய உதவிகளைப் பெருமான் செய்து வருகின்றான் எனும் உண்மையை உணருகின்ற உயிர்கள் உண்மையான நன்றிப் பெருக்கால் அவனைக் கைக்கூப்பித் தொழும். அப்படித் தொழும்போது பெருமான் நம் உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பதனை உணர இயலும் என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுகின்றார்.
நடப்பாற்றல், மலம், சிவம், வனப்பாற்றல், யாக்கை எனும் சொற்களின் முதல் எழுத்துக்களின் கூட்டே, “நமசிவயஎனும் திருவைந்து எழுத்து மந்திரம். உயிர்கள் பட்டறிவினால் தூய அறிவு பெறும் வரையிலும் பெருமான் தன்னை மறைத்து, உலகை உண்மை என்று காட்டும் உதவியை உயிர்களுக்குச் செய்கின்றான். பின்பு உயிர்கள் தூய அறிவு பெற்றப் பின்பு உலகை மறைத்துத் தன்னைக் காட்டுகின்ற பேர் உதவியினைப் பெருமான் செய்கின்றான். பெருமான் உயிர்களைப் பற்றி இருக்கின்ற மலம் எனும் அழுக்கினைப் போக்கத் தன் அன்பினால் உயிர்களுக்குத் தன் திருவருளினை அளித்து உதவுகின்றான். உயிரைத் தாங்கியுள்ள உடலைச் செலுத்தி உயிரினையும் செலுத்தப் பெருமான் உதவுகின்றான். இவற்றை உயிர் உணருமானால் சீர்மை உடைய அப்பெருமானை உயிர் கைக்கூப்பித் தொழும் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

கண்களை மூடித் திறக்கும் சிறிய கால அளவு கூட நம் உள்ளத்தை விட்டு நீங்காது, நம் உயிரைப் பெருமான் நின்று இயக்கிக் கொண்டிருக்கிறான் என்பதனை, “இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான்என்பார் மணிவாசகர். இதனையே, “ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம், நான் நிலாவி இருப்பன் என்நாதனைஎன்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். இவ்வாறு பெருமான் இயற்றும் பேருதவிகளை உணர்ந்தமையினால்தான், “என் கைதான் நெகிழ விடேன், உடையாய் எனைக் கண்டுகொளேஎன்று கண்ணீர் மல்கினார்கள் அப்பெருமக்கள்.

உயிர்கள் இவ்வுலகில் வாழ்ந்து கடைத்தேறுவதற்குப் பெருமானே உடல், கருவிகள், உலகம், நுகர்ச்சிப் பொருள்கள் ஆகியவற்றை அளிக்கின்றான் என்பதனை உணர்ந்தால் உயிர்கள் அவனைக் கைக்கூப்பித் தொழும் என்கின்றார் மணிவாசகர். பெருமானை வழிபடுவதற்கும் வாழ்த்துவதற்கும் அறியாத நமக்கு அவனை வாழ்த்துவதற்கும் வழிபடுவதற்கும் இருபத்து ஏழு திருமுறை ஆசிரியர்களையும் அறுபத்து மூன்று நாயன்மார்களையும் மெய்கண்ட ஆசான்களையும் நமக்கு அருளினான். இறைவன், உயிர், தளை என்பவற்றின் உண்மைகளை அவர்களின் மூலமாக நமக்கு அருளி அவற்றின் பொருளாயும் நின்று அருளுகின்றான். செவ்வியடையும் உயிர்களுக்கு அவனே மாந்த வடிவம் தாங்கி வந்து மணிவாசகருக்குத் திருப்பெருந்துறையில் அருளியது போன்றும் தாயுமானவ அடிகளுக்கு மௌன குருவாக வந்து அருளியது போன்றும் சிவ குருவாக வந்து அருளுகின்றான் என்பதனை உணர்ந்தால் உயிர் அவனைக் கைக்கூப்பித் தொழும் என்கின்றார்.

சிவம் எனும் பரம்பொருள் தமது சிறப்பு நிலையில் ஒன்றாகவும் தமது பொது நிலையில் அம்மை, பிள்ளையார், முருகன் என்று பல்வேறு வடிவங்களிலும் நமக்காக இரங்கி வருகின்றான் என்று உயிர்கள் உணர்ந்தால் அவனை நன்றியினால் கைக்குவித்துத் தொழும் என்கின்றார். விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்று உழன்று, மனவேகத்தினைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலாத நம் போன்றோருக்கு அம்மனவேகத்தினை அடக்கி நம்மைத் தம் ஆளாகக் கொள்கின்ற பேருதவியினைப் பெருமானே செய்கின்றான் என்பதனை உணர்ந்தால் உயிர்கள் அவனைக் கைக்குவித்துத் தொழும் என்கின்றார் மணிவாசகர்.

மனத்தினாலும் வாக்கினாலும் காயத்தினாலும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று அடுத்த அடுத்தப் பிறவிக்கு வித்திடுவதனால் நாம் பிறவியை அறுக்க முடியாதவர்கள் ஆகின்றோம். பிறவி மீண்டும் வராதவாறு செய்கின்ற உதவியினைப் பெருமான் மட்டுமே செய்ய இயலும் என்று உணர்கின்ற உயிர்கள் பெருமானின் திருவருளுக்காக வேண்டி அவனின் திருவடிகளை எண்ணிக் கைக்கூப்பும் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமான் செய்கின்ற உதவிகளை எண்ணி, உணர்ந்து, நன்றியினால் கைக்கூப்பி வணங்குகின்றவர்களே அப்பெருமான் உள்ளத்திலே களித்து இருப்பதனை உணர்வார்கள் என்கின்றார். இத்தனை நலத்தினையும் செய்யும் பெருமானை நன்றியினால் கைக்கூப்பித் தொழுவோம். பெருமான் இயற்றும் நன்றியினை உணர்த்தி நம்மைக் கைக்கூப்பிப் பெருமானை வணங்கத் துணை நிற்கும் சிவபுராணத்தினைத் தமிழ்ச் சைவர்களின் அனைத்து இல்ல நிகழ்ச்சிகளிலும் திருக்கோயில் நிகழ்ச்சிகளிலும் இடம்பெறச் செய்வோம்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக