திங்கள், 12 ஜூன், 2017

34. விமலா போற்றி / Vimalaa Potri

34.  விமலா போற்றி

                சிவபெருமான் இயல்பாக மும்மலம் நீங்கினவன் என்று தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் நெறியாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஆணவம், கன்மம், மாயை என்பனவே மும்மலங்கள் எனப்படுகின்றன. இம்மும்மலங்களைத் தமிழில் தளைஎன்கின்றனர். வடமொழியில் பாசம்என்கின்றனர். உயிரின் அறிவு, விருப்பு, செயல்களை இயல்பாக நிகழவிடாமல் தடைசெய்து, உயிரினைத் தளைத்து (கட்டி) வைத்திருப்பவை ஆதலினால் மும்மலங்களைத் தளைஎன்றனர். எனவேதான் தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி, அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதேஎன்று திருவாசகத் தேனைக் குறிப்பிட்டனர். பன்னெடுங்காலமாக நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் வன்மையான பிறவிக் கட்டினை அறுத்து இன்பம் அளிப்பது திருவாசகம் என்று குறிப்பிட்டனர்.

                உயிரின் அறியாமைக்கும் துன்பங்களுக்கும் மூலகாரணமாக எது இருக்கின்றதோ அதுவே மும்மலங்களின் ஒன்றான ஆணவமலம் எனப்படுகின்றது. நாம் வாழும் இவ்வுலகம் அழிவு அடையக் கூடியது அல்லது மாற்றம் அடையக் கூடியது. இவ்வுலகில் இருக்கின்ற இன்பங்கள் நிலைத்த இன்பம் அளிக்கக் கூடியவை அல்ல என்பது பெறப்படும். ஆனால் உலகம் நிலைபேறு உடையது, நிலைத்த இன்பத்தை அளிப்பது என்று உண்மைக்கு மாறாகக் கொண்டு உயிர் அதில் விருப்புக் கொண்டு நிற்கின்றது. இந்நிலைக்கு காரணம் எதுவோ அதுவே ஆணவமலம் எனப்படுகிறது.

                கண்ணின் ஒளியை மறைக்கும் புற இருள் போல, உயிரின் அறிவை மறைக்கும் அக இருள்தான் ஆணவமலம். உயிரின் அறிவு, விருப்பு, செயல்களைத் தடைசெய்து கட்டுப்படுத்தும் தன்மையுடையதாய பொருள் ஆணவமலம். புறத்திலே நாம் காணும் இருள் ஆனது ஒரு பொருளையும் காட்டாது. ஆயினும் இருண்ட கரு நிறமாகிய தன் இயல்பினையாவது காட்டும். ஆனால் ஆணவமாகிய அக இருள், புறப்பொருளை மட்டுமல்லாது தன் இயல்பினையும் காட்டாது என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். இருள் கண்ணொளியை மறைக்கும். ஆனால் அதனால் கதிரவனின் ஒளியை மறைக்க இயலாது. அது போல ஆணவமலம் உயிர் அறிவை மறைக்க இயலுமே தவிர இறையுணர்வை அல்லது இறையறிவை மறைக்க இயலாது. எனவேதான் இறைவன் ஆணவ மலத்திலிருந்து இயல்பாய் நீங்கினவன் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனையே விமலா என்று மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.

                ஆணவமலத்திற்கு இருவகை ஆற்றல் உண்டு. ஒன்று மறைக்கும் ஆற்றல். மற்றொன்று கீழ்நோக்கிச் செலுத்தும் ஆற்றல். ஆணவமலத்தின் மறைப்பாற்றலால் உயிர் தன்னையும் அறியாது. தன்னை இயக்குகின்ற இயவுளாகிய சிவத்தையும் அறியாது, தனக்கு அறியாமையைச் செய்து கீழ்ப்படுத்துகின்ற ஆணவத்தையும் அறியாது. இதனாலேயே திருமூலர், “தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை, தன்னை அறியாமல் தானே கெடுகின்றான், தன்னை அறியும் அறிவை அறிந்த பின், தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானேஎன்பார். அதாவது திருவருளால் ஆணவத்தை நீக்கித் தனக்குத் தலைவனாகிய சிவபெருமானை அறியத் தன்னை அறியும் உயிராகிய தனக்கு எஞ்ஞான்றும் பிறப்பு இறப்புக்களாகிய கெடுதல் உண்டாகாது என்கின்றார் திருமூலர். தன் தலைவனை அறியும் தனியறிவை உயிர் அறிந்தபின் தன் தலைவனாகிய சிவ பெருமானை அருச்சிக்கும் என்கின்றார் திருமூலர். உயிர்களுக்குத் தன் அறிவை மறைத்துக் கீழ்நோக்கிச் செலுத்தும் ஆணவமலம் இருப்பதனால் தான் அறியாமை எனும் பலவீனத்தால் உயிர்கள் பல்வேறு குற்றங்களுக்கு உள்ளாகின்றன. இதனாலேயே அது எதிலும் எவ்விடத்திலும் யான், எனதுஎனும் செருக்குடனும் தான்எனும் முனைப்புடனும் நிற்கின்றது. இவ்வியல்புகள் இறைவனை இயல்பாகவே பற்றுவது கிடையாது. இதனையே விமலா என்று மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.

                எல்லாவற்றிலும் தானே சிறப்புடையவன், தன்னுடையதே சிறப்புடையது என்று உயிர்கள் காட்டும் முனைப்பினை இறைவன் காட்டுவதில்லை. உயிர்கள் விரும்பும் புகழுக்கும் பேருக்கும் இறைவன் மயங்குவதில்லை. இறைவன் தன் பேர் ஆற்றலையும் பேர் அறிவையும் உயிர்களிடத்தே காட்டி அடைய வேண்டியது ஒன்றும் இல்லை. உயிர்களுக்குப் பிறரால் ஆக வேண்டிய செயல்கள் இருப்பது போல, இறைவனுக்கு உயிர்களால் ஆக வேண்டிய செயல்கள் எதுவும் இல்லை. உயிர்களைப் போன்று அறியாமையால் இறைவன் தவறுகள் செய்வதில்லை. பின் வருந்துவதும் இல்லை. நம்மைப் பழிவாங்குவது இல்லை. நம்மைத் துன்புறுத்தி மகிழ்வதுவும் இல்லை. நடிப்பு இல்லாமல் என்றும் ஒருபடித்தாகவே இருக்கின்றான். நிலைத்த இன்பமுடைய பொருளான அவன் நிலையற்ற பொருள்களையும் நிலையில்லாத இன்பமுடைய பொருள்களையும் விரும்புவதில்லை என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

கடவுளைப் போன்றே உயிரும் தளையும் அநாதிப்பொருள் (என்றும் உள்ள பொருள்) என்று சைவம் குறிப்பிடுகின்றது. ஆயினும் உயிரைத் தளை பற்றுவபோல் கடவுளைப் பற்றுவதில்லை. பற்றவும் இயலாது என்பதனைப், “பதிபசு பாசம் எனப்பகர் முன்றில், பதியினைப் போல்பசு பாசம் அனாதி, பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம், பதி அணுகில் பசு பாசம் நிலாவேஎன்று தமிழ் ஆகமம் அருளிய திருமூலர் குறிப்பிடுவார்.

                பதியாகிய இறையும் பசுவாகிய உயிரும் பாசமாகிய தளையும் அப்பதியினைப் போல் என்றும் உள்ளவை. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் கட்டுண்ட உயிரும், சடப்பொருளான அறியாமையைச் செய்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் இறைவனை அணுக முடிவதில்லை. கடவுளின் திருவருளைத் துணையாகக் கொண்டு உயிர் கடவுளை அணுகுமாயின் உயிரைப் பற்றியுள்ள மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பன தம் முனைப்பு இல்லாமல் கெட்டு ஒடுங்கும் என்று திருமூலர் தெளிவு படுத்துகின்றார்.

                மும்மலங்களில் இரண்டாவது மலமாகிய கன்மம் அல்லது செயல் அல்லது வினை என்பது கடவுளைப் பற்றுவது கிடையாது. ஆணவம் என்ற மலத்தினைப் போக்குவதற்குக் கன்மமலமும் மாயாமலமும் உயிர்களுக்கு இறைவனால் சேர்த்து வைக்கப்பட்டவை என்று சைவத் தமிழர் சமயமான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்களுக்குப் பிறவிகள், உடல்நிலை, வாழும் உலகம், அறிவு நிலை, நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளுக்குக் காரணம் வினைப் பயனே என்று சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்கள் என்னதான் முயன்றாலும் அது நிறைவேறும் காலம் வரும் வரைக்கும் அம்முயற்சி நிறைவேறாமல் நிற்பதற்குக் கரணியம் வினைப் பயனே என்று சைவம் குறிப்பிடுகின்றது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்என்பதும் வினைக்கொள்கை அடிப்படையில்தான். வினைப்பயன் இருப்பதனால்தான் அறநெறிப்படி வாழ்கின்றவருக்கு நன்மையும் அறநெறிப்படி வாழாதவருக்குத் தீமையும் நிகழும் என்ற சைவக் கோட்பாடு கூறப்பட்டுள்ளது.

நற்செயல்கள் செய்வதனை நல்வினை என்றும் தீச்செயல்கள் செய்வதனைத் தீவினை என்றும் சைவம் குறிப்பிடுகின்றது. இவற்றின் பயனே நமக்கு இன்ப துன்பங்களாய் மாறி மாறி வருகின்றன. உலகில் காணும் உயிரினங்களிடையே ஊனமுற்றவர்களையும், முழுமைபெற்றவர்களாயும், அறிவாளிகளாகவும் அதற்கு மாறாகவும், செல்வர்களாகவும் வறியவர்களாயும் நம் முயற்சிக்கு அப்பாற்பட்டு கிடைக்கப் பெறுவது இவ்வினைப் பயனை ஒட்டியே என்று சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்கள் மனம், வாக்கு, காயம் என்பனவற்றால் வினைகளைச் செய்கின்றன. அதனால் வரும் பலன்களை நுகர்ந்து கழிக்கின்றன. மனத்தால் எண்ணும் எண்ணங்கள் செயல்களே அல்லது வினைகளே என்று சைவம் குறிப்பிடுகின்றது. தீய எண்ணங்கள் தீய செயல்களாகவும் நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களாகவும் குறிக்கப்பெறுகின்றன. நல்ல சொற்களும் தீய சொற்களும் அவை அவற்றிற்குரிய பலன்கலைத் தருகின்றன. எனவே காயம் என்ற உடலால் செய்யும் செயல்கள் தான் வினை என்று எண்ணுதல் தவறு.

                எனவே மனம், வாக்கு, காயம் என்ற மூன்றினால் செய்யும் செயல்களை ஆணவ மலம் பிணித்து இருப்பதனால் உயிர் மனத்தாலும் சொற்களினாலும் உடல் செயல்களினாலும் பல தவறுகளைச் செய்கின்றன. இவற்றிற்குத் துணையாக ஐம்புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், மெய் என்பன செயல்படுகின்றன. தவிர உட்கருவிகளான மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் மனவெழுச்சியும் துணைநிற்கின்றன. இப்படி அறியாமையால் செய்கின்ற மன, வாக்கு, காயச் செயல்களுக்கு உயிர்கள் அவற்றின் பயனை நுகர்ந்தே தீர வேண்டும்.

அறியாமையால் செய்யும் செயல்களைக் கடவுளின் திருவருளாலும் திருவடி உணர்வாலும் மட்டுமே நிறுத்த இயலும் அல்லது சிவநல்வினையாய் மடைமாற்றம் செய்ய இயலும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. அதுவரையில் வினைப்பயனை நுகர்ந்தே தீரவேண்டும் என்கிறது. அதனாலேதான் கன்றுக் குட்டியைத் தேர்க்காலில் மடித்தத் தன் மகன் செய்த தீவினைக்குக் கழுவாய் (பரிகாரம்)  செய்யாது அத்தாய்ப்பசு அடைந்த துன்பத்தைத் தான் நுகர்ந்து போக்கிக் கொள்ள வேண்டும் என்று தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றார் மனுநீதிச் சோழர் என்பார் தெய்வச் சேக்கிழார்.

                அறியாமையால் மனம், வாக்கு, காயத்தால் பெருமான் தாக்குறுவதில்லை. அதனால் பெருமானிடத்தில் தீய எண்ணங்கள் அண்டுவதில்லை. தீய மொழிகள் பெருமான் திருவாயில் உதிப்பதில்லை. பெருமானின் திருவருட் செயல்கள் எல்லாமே அருட் செயல்களே! உயிர்களின் வினைகளுக்கு ஏற்பவே அவை நல்லனவாகவும் தீயனவாகவும் நுகர்ச்சிக்கு வருகின்றன. பெருமான் உயிர்களைப் போன்று ஐம்புலன்களால் தாக்குறுவது இல்லை. இதைத்தான், “பொறிவாயில் ஐந்துஅவித்தான்என்று இறைவனை வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார். ஐம்பொறிகளின் வாயிலாக ஏற்படும் வேட்கைகளையும் அவற்றினால் ஏற்படும் தவறுகளையும் வென்றவன் இறைவன் என்கிறார். நல்வினையும் தீவினையும் நீங்கினாலே நமக்குப் பிறவி விடுதலைக் கிடைக்கும் என்பது சைவக் கொள்கை. ஒன்று பொன் விலங்கு மற்றது இரும்பு விலங்கு. இரண்டுமே உயிர் பிறவியிலிருந்து விடுபடுவதற்குத் தடையானவைதான். எனவேதான் அவற்றை இருள்என்று திருவள்ளுவர் உருவகித்தார். இறைவன் இயல்பாய் வினை நீங்கின விமலன் என்பதனை, “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்என்றார்.
                                     
                மா என்றால் ஒடுங்குதல் என்றும் யாஎன்றால் தோன்றுதல் என்றும் பொருள்படுகின்றது என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். எனவே மாயை என்பது எல்லாப் பொருள்களும் ஒடுங்குதற்கும் தோன்றுதற்கும் எது மூலப் பொருளாக இருக்கின்றதோ அதுவே மாயை எனப்படுகின்றது என்று சிவத்தை முழுமுதற் பொருளாகச் சொல்கின்ற சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. புல், பூடு, புழு, மரம், விலங்கு, பறவை, பாம்பு, கல், மாந்தர், பேய், கணங்கள், அசுரர், வானவர், முனிவர் போன்ற உயிர்களுக்கு உரிய உடல், கருவி, உலக நுகர்ச்சிப் பொருள்கள் யாவும் இம்மாயை என்னும் மூலப் பொருளிலிருந்தே ஆக்கப்படுகின்றன என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.

                மரம், செடி, கொடி போன்ற நகரா உயிரினங்களின் உடல்களும் பறவை, பாம்பு, புலி, மீன், பூச்சி, மாந்தர் போன்ற நகர்ந்து இயங்கும் உயிர் வகைகளின் உடம்புகளும் இம்மாயை எனும் பொருளாலேயே ஆக்கப்படுகின்றன. இவ்வுடம்புகள் பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, பசி என்பனவற்றிற்கு உள்ளாகி அல்லல்படும். துன்புறும், சிறுக்கும், பெருக்கும் அழிந்துபடும். நீர், நிலம், தீ, காற்று, ஆகாயமான ஐந்து வகைப் பூதங்களுக்குத் தாக்குற்று தமது நிலையில் இருந்து சீர் கெடும், மாறும் அழியும். உயிர்களின் உடம்பிற்கு இளமைக் கால உடல் முதுமைக் கால உடல் என்ற மாற்றமும் தோற்றமும் உண்டு. உயிர்களின் உடம்பிற்கு நோய் ஏற்படுவது உண்டு. இறப்பு ஏற்பட்டு உடல் அழிவது உண்டு. கடவுளின் உடல் எனப்படும் திருமேனி மாயையால் ஆகியது அல்ல. அது இறைவனின் திருவருளால் ஆனது. இறைவன் தனது திருவருளையே தமக்குத் திருமேனியை அமைத்துக் கொள்வதற்குத் துணையாகக் கொள்கின்றான்.

                எனவேதான் கடவுளைப், “பிறவா ஆக்கைப் பெரியோன்என்கிறார்கள். அதாவது இறைவனின் திருவுடம்பு பிறவிக்கு உட்படாதது என்பதாகும். இயல்பாய் மாயையிலிருந்து இறைவன் நீங்கினமையால் திருவருளால் ஆகிய அவன் திருமேனி மூப்பு அடைவதில்லை. அதனாலேயே கடவுளை, “மூவா முதல்வா போற்றிஎன்று அருளாளர்கள் போற்றுகின்றனர். இறைவனைப் பசிக்கொடுமை வாட்டுவதில்லை. இறைவனை நீர், நிலம், தீ, காற்று, வெளி என்பவை துன்புறுத்துவதில்லை. அழிக்கவும் முடிவதில்லை. நிலைத்த பொருளாக என்றும் மாற்றம் இன்றி இறைவன் ஒளிவிடுகின்றான். ஒளிப் பிழம்பாய் என்றும் மாற்றம் காணாது ஒருபடித்தாய் இருக்கின்ற பெருமானை, இதுபற்றியே, “உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றிஎன்று நாவுக்கரசரும் நொந்தா ஒண் சுடரேஎன்று சுந்தரமூர்த்தி அடிகளும் போற்றிப் புகழ்ந்தார்.
                உயிர்களுக்குப் பொறுத்தப்பட்டுள்ள மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்று சொல்லப்படுகின்ற கருவிகளும் மாயையினாலேயே ஆக்கப்பட்டுள்ளன. உயிர்கள் இறைவனின் திருவடிப் போற்றினை அடையும் போது மாயையினால் ஆகிய இவை நீங்கிப் போகும். பெருமானின் திருவருள் என்ற ஒன்றை மட்டும் துணையாகக் கொண்டு உயிர்கள் இறையின்பத்தை நுகரும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. எனவே மாயையினால் ஆன கருவிகள் இறைவனுக்குக் கிடையாது.

கை, கால், எருவாய், கருவாய், வாய் ஆகிய மாயையினால் ஆகிய செயல் கருவிகள் இறைவனுக்குக் கிடையாது. இதனால் வினைகளை இக்கருவிகளைக் கொண்டுச் செய்ய வேண்டும் என்ற ஒன்று இறைவனுக்கு இல்லை. இறைவன் நினைத்த அளவிலேயே அனைத்தையும் இயற்ற இயலும். அடியார்கள் வரலாரற்றில் பெருமான் நிகழ்த்துவது எல்லாம் மாந்தர் என்ற சட்டையை அணிந்து வருதல் போல் ஆகும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. எனவே அறிகருவிகள், செயல் செய்கின்ற கருவிகள் என்ற மாயையால் ஆகியவற்றை இறைவன் நீங்கினவன் என்று புலனாகிறது.

                உயிர்கள் கடைத்தேறுவதற்கு மாயையினால் ஆகிய நுகர்ச்சிப் பொருள்களை இறைவன் படைத்து நமக்கு அளித்திருக்கின்றான். நீர், நிலம், தீ, காற்று, வெளி, கோள்கள், விண்மீன்கள், பொன், பொருள், பிற உயிர்வகையினால் கிட்டும் நுகர்ச்சிகள் இவையாவும் மாயையினால் ஆக்கப்பெற்றிருக்கின்றன. இவற்றின் மூலம் இறைவன் உயிர்களுக்கு பிறவிகள் தோறும் செவ்வியை (அனுபவத்தை) அளித்துத் தேற்றுகின்றான். மாற்றம் அடையக் கூடியதாகவும் அழியக் கூடியதாகவும் உள்ள இந்நுகர்ச்சிப் பொருள்களைக் கொண்டே உயிர்கள் அறிவு பெற்று இறைவனைப் புரிந்து கொண்டு பிறவிக்கடலை நீத்த வேண்டியவையாக இருக்கின்றன. பெருமானுக்கு மாயைப் பொருளினால் ஆகிய நுகர்ச்சிப் பொருள்களினால் கிட்ட வேண்டிய செவ்வி (அனுபவம்) தேவையில்லை! பெருமானே அப்பொருள்களைத் தோற்றவும், நிற்கவும், அழிக்கவும் செய்கின்றான். இவ்வாறு மாயையால் ஆகிய மாற்றம் அடையக் கூடிய பொருள்களை நிலையானவை என்று எண்ணுகின்ற மயக்கத்தினையே மாயா மலம் என்றும் குறிப்பிடுவர். இம்மாயா மலம் உண்மை அல்லாதவற்றை, நிலை இல்லாதவற்றை உண்மைப் பொருள் போன்றும் நிலைத்தப் பொருள் போன்றும் மயக்கினை ஏற்படுத்தும். இம்மாயா மலம் செய்யும் மயக்கம் உயிருக்கு ஏற்படும். இதனாலேயே உலக உயிர்கள் நிலை இல்லாத உலகப் பொருட்களின் பாலும் தெவிட்டி விடக்கூடிய சிற்றின்பங்களின் பாலும் அளவற்றப் பற்று கொண்டு, வாழ்நாளைக் கழிக்கின்றன. இம்மயக்கம் பெருமானைப் பற்றுவது இல்லை என்பதனைக் குறிக்கவே பெருமானை விமலா என்றார் மணிவாசகப் பெருமான்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

33. ஓங்காரமாய் நின்ற மெய்யா/ Onggaaramaai Nindra Meiyaa

33. ஓங்காரமாய் நின்ற மெய்யா!

                பெருமான் நாம் கண் இமைக்கும் பொழுது கூட நம் உயிரை விட்டுப் பிரியாமல் இருக்கின்றான் என்பதனை, “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்என்பார் மணிவாசகர். பெருமான் எப்போதும் உயிரில் பிரிவின்றி இருக்கின்றான் என்பதனைப் பலரும் உணருவதில்லை! நாம் உய்வதற்காகவே பெருமான் நம் உயிரையும் உடலையும் விட்டு நீங்காமல் இருக்கின்றான் என்று தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையை விளக்குகின்ற சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சிவ ஆகமங்களும் குறிப்பிடுகின்றன. உயிர்களைப் பிணித்துள்ள அறியாமையை நீக்கி, உயிர்களை மேல் நிலைக்குக் கொண்டுச் செல்லவே, அழுக்கு நிறைந்த புழுக்கள் நெளியும் நம் உடலில் பெருமான் பரிவோடு தங்கி இருந்து அருள் செய்கின்றான் என்று மேலும் அவை குறிப்பிடுகின்றன. இவ்வாறு நம் உடலில் தங்கி இருந்து நம் உடலை இயக்கும் பெருமான் எவ்வடிவில் உயிரிலும் உடலிலும் காத்து இருக்கின்றான் என்பதனை உணர்த்தவே, “உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யாஎன்று மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.

                பொய் நீங்கிய உண்மைப் பொருளாய் இருக்கின்ற அப்பெருமான், நான் மேல்நிலையை அடைய என் உள்ளத்தில் ஓங்கார வடிவாக இருக்கின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். உள்ளத்துள் ஓங்காரமாய் நிற்றல் என்பது பெருமான் ஒலி வடிவாகவும் ஒளி வடிவாகவும் நிற்றல் என்பதனைக் குறிப்பிடுவர். இதனையே நாத விந்து வடிவம் என்று வடமொழியில் சுட்டுவர். பெருமானின் மேலான நிலைகளை ஒலி, ஒளி வடிவம் என்று குறிப்பிடுவர். மேலான ஒலியைச் சிவம் என்றும் மேலான ஒளியை அச்சிவத்தின் சத்தி என்றும் குறிப்பிடுவர். இதனை வரி வடிவில் அகரம் எனவும் உகரம் எனவும் குறிப்பிடுவர். இதனையே தமிழ் எண்கள் அடிப்படையில், “எட்டும் இரண்டும் அறியாத என்னை, எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்திஎன்பார் திருமூலர்.தமிழ் எண்களில் அகரம் எட்டையும் உகரம் இரண்டையும் குறிக்கும். அ+உ+ம் என்பதன் கூட்டே ஓங்காரம். அகரம் சிவத்தையும் உகரம் சிவத்தின் சத்தியையும் மகரம் மாயையையும் குறித்து நிற்கின்றது என்பர். இதனால் பெருமான் நம் உயிரில் ஒலிப் பொருளாயும் ஒளிப் பொருளாயும் பெருமான் தோற்றுவிப்பதற்கும் இயக்குவிப்பதற்கும் துணையாய் உள்ள மாயைப் பொருளாயும் நம் உயிரில் கலந்து நிற்கின்றான் என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார்.

                பெருமான் நம் உயிரில் சிவமாகவும் சத்தியாகவும் மாயைப் பொருளாகவும் இருந்து நம் உட்கருவிகளான மனம், சித்தம், அறிவு, அகங்காரம் எனப்படும் மனவெழுச்சி ஆகியவற்றை இயக்குகின்றான் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் நம் உட்கருவிகளை ஓங்கார வடிவில் நின்று இயக்குவதனால்தான் நாம் அறியாமை நீங்கி, உண்மை அறிவு அல்லது பொருள் உணர்வு பெறுகிறோம் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமானே நம் உயிரில் ஓங்காரமாய் நின்று பெருமானைப் பற்றிய தெளிவினையும் உயிரினைப் பற்றிய தெளிவினையும் உலகினைப் பற்றிய தெளிவினையும் அளித்து உண்மை அறிவு அல்லது மெய் அறிவினை அளிக்கின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

                ஓங்காரமாய் உயிரில் கலந்து இருக்கின்ற பெருமானை அறிதற்கும் உணர்தற்கும் மேற்கொள்கின்ற முயற்சிகளே உள்நோக்குதல் எனும் முயற்சியாகும். இம்முயற்சிக்குத் துணை நிற்பதே சிவச்செறிவு அல்லது சிவயோகம் ஆகும். சிவச் செறிவாளர்கள் மூலாதாரம் எனும் மூல நிலைக்களத்தில் ஓங்கார வடிவில் இருக்கின்ற பெருமானின் ஆற்றலைத் தேடிக் கண்டு எழுப்பி அதன் துணையாலே உடலில் இருக்கின்ற இதர நிலைக்களங்களுக்குப் (ஆதாரங்கள்) பாவனையால் கொண்டுச் சென்று பின்பு பரவெளியில் அதனைக் கண்டு மகிழ்ந்து அதனோடு ஒன்றாய்க் கூடி நிற்பர். சிவச்சித்தர்கள் எனும் சிவஅறிவாளர்களும் சிவ அறிவால் இவ்வோங்காரத்தினைக் கூடி நின்று செவ்வியால் மேல் நிலையினை அடைவர். இதனாலேயே மூலம், சுவாதிட்டானம், கொப்புள், நெஞ்சு, கழுத்து, புருவநடு, உச்சி என்று உடலில் பெருமானை வைத்து எண்ணும் நிலைக் களங்களைக் குறிப்பிடுகையில் மூலநிலைக்களத்திற்கு உரிய கடவுளாகப் பிள்ளையாரைக் குறிப்பிடுவர்.

                பிள்ளையாரின் வடிவு சிவத்தின் அகர, உகர, மகர எனும் ஓங்காரத்தைக் குறிப்பது. பெருமான் நம் உயிரில் சிவம், சத்தி, மாயை எனும் வடிவில் நின்று அல்லது ஒலி, ஒளி, மாயை எனும் வடிவில் ஓங்காரமாய் நின்று நம்மை இயக்குகின்றான் என்பதே இதன் பொருள். இதனாலேயே பிள்ளையாரை வினை முதல்வன் என்று குறிப்பிடுகின்றனர். பெருமானே ஓங்கார வடிவில் நின்று நம் எல்லா வினைகளையும் கூட்டுவிக்கின்றான் என்று உணர்த்துவதே பிள்ளையார் வடிவம். நம் அறியாமையினால் பிள்ளையாரைத் தனி ஒரு கடவுளாயும் சிவனின் மகனாகவும் எண்ணி மயங்கிப் பல்வேறு தவறுகளைச் செய்து வருகின்றோம். சிவ பெருமானும் பிள்ளையாரும் ஒன்றுதான் என்பதனை உணரத் தவறி விட்டோம்.

                பெருமான் ஓங்கார வடிவில் நம் மூலநிலைக்களத்தில் நின்று உதவுகின்றான். அதனை உணர்ந்தாலே மேல்நிலையை அடைய இயலும் என்பதனை உணர்த்தவே திருக்கோயில்களில் பலிபீடத்திற்கு முன்பு உள்ள கொடிக்கம்பத்தின் அடியில் பிள்ளையார் திருவடிவினைச் செய்து வைத்தனர். கொடிக்கம்பங்களில் உள்ளள ஆறு முடிச்சிகள் உடலில் உயிர் நின்று இயங்கக்கூடிய ஆறு நிலைக்களங்களை உணர்த்தி நிற்கின்றன. மேல் நிலையை அடையும் உயிர், பரநாதம் எனப்படும் மேலான ஒலி நிலையை அல்லது சிவநிலையினை அடையும் என்பதற்காக மணிகளை அதன் உச்சியில் தொங்க விட்டுள்ளனர். உயிரை அதில் கட்டப்பட்டிருக்கும் கொடிச் சீலையாக ஒப்புமை காட்டினர். கோயில் கொடிக்கம்பங்களுக்குப் பொன், வெள்ளி, வெண்கலம் என்று முகப்பு இடுவதற்கு முனையும் நாம் அது உணர்த்தும் உண்மையையும் அறிய முனைவது இன்றியமையாதது.

                நமசிவய என்ற திருவைந்து எழுத்தின் சுருங்கிய வடிவாக ஓங்காரம் இருக்கின்றது. திருவைந்து எழுத்து மந்திரத்தில் சிகரம் சிவத்தையும் வகரம் வனப்பாற்றலாகிய சத்தியையும் யகரம் யாக்கை எனும் மாயையிலான உடம்பையும் குறிக்கும். சிவய என்ற மந்திரத்தின் மறுவடிவே சிவத்தையும் சத்தியையும் மாயையையும் குறிக்கும் ஓங்காரம். இதனாலேயே திருமுறைகளில் ஓங்காரம் இன்றியே திருவைந்து எழுத்து மந்திரம் நமசிவய என்று பருவடிவிலும் சிவயநம என்று நுண்வடிவிலும் குறிக்கப் பெறுகின்றது. திருவைந்து எழுத்தின் சுருங்கிய வடிவம் ஓங்காரம் என்பதனைத் திருமூலரின் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. ஓங்காரத்தினை அசபா மந்திரம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நாம் சுவாசிக்கும் போது இயல்பாகச் சொல்லப்படுகின்ற மந்திரம் ஓங்கார மந்திரம் அல்லது அசபா மந்திரம் என்கின்றார் திருமூலர். நாம் காற்றை உள் இழுக்கும் போது வாயைத் திறந்து என்று (அங்காத்து) இழுத்தும் காற்றை வெளியே விடும் போது உம்என்றும் விடுகின்றோம். அதனால் இயல்பாகவே ஓங்கார மந்திரம் கூறுதல் அதில் இடம் பெறுகின்றது. திருவைந்து எழுத்தின் சிறப்பினையும் தனியே திருமூலர் குறிப்பிடுகின்றார். எனினும் திருவைந்து எழுத்தினைக் கணிக்கும் போது ஓங்காரத்தையும் முன் சேர்த்து, “ஓம் நமசிவய”, “சிவயநம ஓம்என்று கணிக்கும் வழக்கு எவ்வாறோ வந்து விட்டது.

                ஓங்காரம் மூல மந்திரம் என்றும் எல்லா மந்திரங்களுக்கும் கடவுளர்களுக்கும் உரியது என்ற வழக்கும் உண்டாகி எல்லாச் சூழலிலும் ஓதப்பெறுவது பரம்பொருளை எண்ணுவதாய் அமைகின்றது. வழிபாட்டுப் பொருட்களில் ஒன்றான சங்கும் இவ்வோங்காரத்தைக் கொண்டே சிறப்புப் பெறுகின்றது. சங்குகளின் உள்ளே காற்று நுழையும் போது இயல்பாகவே ஓம் எனும் ஒலி கேட்பதனால் சங்குகளில் திருநீறு இட்டு வைத்தல், சங்குகளில் நிரப்பிய நீரினால் திருநீராட்டுதல் (சங்காபிசேகம்) சிறப்பு என்றனர். ஆயிரத்து எட்டு சங்குகளினால் திருநீராட்டினால் ஆயிரத்து எட்டு முறை ஓங்கார மந்திரத்தைக் கூறியதற்கு ஒப்பாய் எண்ணினார்கள். இதனாலேயே சங்கினைக் கொண்டு சோழியம் பார்த்தல் எனும் கணிகை முறையினுக்கு அல்லது சோதிடம் பார்ப்பதற்குச் சங்குகளைப் பயன்படுத்தினார்கள். சங்கில் இயல்பாக ஓங்கார ஒலி ஏற்படுவதனாலேயே முன்பு காலத்தில் அணிகலன்களைச் சங்குகளை அறுத்து வளையல்களாகவும் காதணிகளாகவும் அணிந்தனர். இவ்வாறு செய்வதனால் ஓங்காரத்தைக் கூறும் நன்மை உண்டாகும் என்று நம்பினர். குழந்தைகளுக்கும் சங்கினால் பால் ஊட்டினர்.

                எது எப்படி இருப்பினும் ஓங்காரமாய் பெருமான் இருக்கின்றான் என்பதனை உணர நாமே பெருமான் அளித்த வாயால், வாயாற உச்சரிப்பதே மேல் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமான் ஓங்கார வடிவாய் இருந்து நம்மை நாளும் மேம்படுத்துகின்றான் என்பதனை அறிந்து, உணர்ந்து அப்பெருமானை நன்றியினால் வழிபட வேண்டும் என்பதே மணிவாசகர் நமக்குக் கூறும் படிப்பினையாகும்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

சனி, 8 ஏப்ரல், 2017

5. பங்குனி உத்திர திருநாள்/ Pangguni Uttiram

பங்குனி உத்திர திருநாள்





            பங்குனி உத்திரம் என்றாலே நினைவுக்கு வருவது திருக்கல்யாணம் அல்லது தெய்வத்திருமணங்கள்தான். பங்குனி உத்திரத்தைத் திருமண விரத நாள் என்றும் அழைப்பர். சிவன், முருகன், அம்பாள் போன்ற தெய்வங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து, இறைவனைத் திருமணக்கோலத்தில் கண்டு வழிபடும் நாள் இப்பங்குனி உத்திரத் திருநாள்.
புராண குறிப்புக்கள்
                ஆணவத்தினாலே சிவனை இகழ்ந்த தக்கனுக்குத் தாட்சாயினி என்ற பெயருடன் பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தினைப் போக்கிக் கொள்ள, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாகத் தோன்றினாள் உமை அம்மை. அவள் காஞ்சியில் கம்பை நதிக்கரையில் மாமரத்தினடியில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டாள். உயிர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சாதனைகளின் வழி உள்ளன்போடு சிவபூசனையைச் செய்ய வேண்டும் என்பதனை உலகினுக்குக் காட்ட அம்மை அவ்வாறு வழிபாடு செய்ய இறைவன் அதற்குத் துணையாக கம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்கின்றார். மணலால் செய்த சிவலிங்கம் சிதைந்து விடுமே என்று அன்பால் பதறி உமையம்மை சிவலிங்கத்தை மார்புடன் ஆறத்தழுவினாள். அப்போது இறைவன் வெளிப்பட்டு உமையம்மையை மணந்தார். அந்நாளே திருக்கல்யாண நாளான பங்குனி உத்திரத் திருநாள் என்று கந்தபுராணம் மூலமும் பெரிய புராணம் மூலமும் அறிய முடிகின்றதுசூரபதுமன் போன்ற தேவர்களை அழித்து தெய்வயானையை முருகன் திருக்கல்யாணம் செய்த நாள் பங்குனி உத்திரத் திருநாள் என்று கந்தபுராணம் குறிப்பிடுகின்றது. பங்குனி உத்திரத் திருநாள் அன்றுதான் திருநந்திதேவரின் திருக்கல்யாணமும் ஐயாறப்பரால் திருமழபாடியில் நடத்துவிக்கப்பட்டது என்ற செய்தியும் கிடைக்கப்பெறுகின்றது.
திருக்கல்யாண தத்துவம்
                 திருவருளே இறைவனுக்குத் திருமேனி அல்லது உடம்பாக அமைவதனால் இறைவனுக்கு மனிதர்களைப் போன்று திருமணம் தேவையில்லைஇறைவன் தமது சிறப்பு நிலையில் தன் திருவருளை அல்லது சக்தியை தன்னுள் ஒடுக்கி வைத்துள்ளார். உயிர்களுக்கு அருள்புரிவான் வேண்டி அவர் தம்மிலிருந்து தன் திருவருளை வெளிப்படுத்தி அதனுடன் பொருந்தி ஐந்தொழில்களை நிகழ்த்துவதாய் உலகமும் உயிர்களும் நலம் பெறுகின்றன என்று மெய்கண்ட சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு இறைவன் தன் திருவருளோடு இணைவதையே பலவடிவங்களில் உருவநிலையில் தோன்றி அருளும் இறைவனுக்குத் திருக்கல்யாணம் என்கிறோம். அதனையே புராணங்களும் பாமரரும் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறுகின்றன.
            இறைவன் தன் திருவருளோடு இணையாவிட்டால் உலக இயக்கமும் நின்றுவிடும் என்பதைத் திருச்சாழலில்,  “தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற்றம்பலவன்   பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி   பெண்பால் உகந்திலனேல், பேதாய்! இருநிலத்தோர்   விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோஎன்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவார். அதாவது தென்திசை நோக்கித் திருநடனம் ஆடும் தில்லைச் சிற்றம்பலவன், தம்முடைய இடப்பக்கத்தில் உமையம்மையை வைத்திராவிட்டால், மண்ணில் வாழும் உயிர்கள் விண்ணுலகை அடைவதற்காக முழுயோக நிலையைக் கைக்கொள்வர்; இறுதியில் உலக இயக்கம் நின்றுவிடும் என்று கூறிப்பிடுகின்றார். எனவே உலகமும் உயிர்களும் தொடர்ந்து இயங்க வேண்டும்; அதற்கு இறைவன் அவன் திருவருளோடு இணைய வேண்டும் என்ற வேண்டுதலுக்காகவும் நமக்கு இறைவன் ஆற்றுகின்ற பேரருளை நினைவு படுத்திக் கொள்ளவுமே தெய்வங்களுக்குத் திருக்கல்யாணங்களை நடத்துகின்றோம். எனவே திருக்கல்யாணம் நிகழ்கின்றபோது வெறும் திருமண சடங்குகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அதன் உண்மைப் பொருளை மக்களுக்கு எடுத்துக் கூறாமல் விடுவது நம் பொருள்பொதிந்த உண்மைச் சைவத்திற்கு ஏற்றம் தராது.

திருக்கல்யாணத்திற்குச் சீர் எடுப்பது, மொய்ப்பணம் வைப்பது, மஞ்சள் அரிசித் தூவுவது, தாலிக்கட்டுவது என்பதில் மட்டும் கவனத்தைச் செலுத்தாது அன்றைய தினத்தில் ஆலயத்தில் வழிபடும் அன்பர்களுக்கு உண்மை நெறியினை உணர்த்துவதற்கு ஆவன செய்வதும் இன்றியமையாதது.
பங்குனி உத்திர சிந்தனை
            இறைவன் திருக்கல்யாணத்தைக் காண்கின்றபோது இறைவன் தன் திருவருளுடன் இணைந்து உலகமும் உயிர்களும் வாழ அருள்புரிவதைப் போன்று திருமணமான அன்பர்கள் தங்கள் திருமணவாழ்வில் இல்லறத்தார்க்குத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள ஐந்து கடமைகளைச் செவ்வன செய்கின்றோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அதாவது தென்புலத்தார், தெய்வம், ஒக்கல், விருந்து, தான் என்ற ஐந்து பிரிவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வன செய்கின்றோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்இறைவன் எதையும் எதிர்பார்க்காமல் உலகினுக்கும் உயிர்களுக்கும் செய்யும் உதவியினை எண்ணி நன்றியினால் வழிபட வேண்டும்பங்குனி உத்திரத்தன்று ஆண்டுதோறும் தவறாமல் அடியார்களுக்கு உணவளித்தத் தொண்டினைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அவர் மனைவி பரவை நாச்சியாரும் செய்வதைப் போன்று இதுபோன்ற நாட்களிலாவது ஏழை எளியவர்க்கு நம்மால் இயன்ற உதவிகளையோ, உணவையோ இறையுணர்வோடு கொடுத்து மகிழ வேண்டும்.
            பங்குனி உத்திரத் திருவிழாவைக் காணவேண்டும், இறைவனை வழிபட வேண்டும் என்ற பேராவலில் சங்கிலி நாச்சியாரைப் பிரியமாட்டேன் என்று உறுதி கூறியிருந்த சுந்தரர் அதை மீறி சென்றதைப் போன்று பேராவலுடன் குடும்பத்தோடு திருநாட்காலங்களிலாவது கோவிலுக்குச் சென்று நம் எதிர்கால தலைமுறையினருக்கு நம் சமயத்தையும் பண்பாட்டையும் புகட்ட வேண்டும். எனவேதான் சம்பந்தரும் சிறு வயதிலேயே பூநாகம் தீண்டி இறந்துவிட்டப் பூம்பாவையைப் பார்த்து, “பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள், ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்என்று பரிவோடுபாடி அவளை உயிர்பிக்கின்றார். அதாவது திருமுறைகள் ஒலிக்க, இசைக் கருவிகள் முழங்க உள்ளத்தில் பக்திக் கிளர்ச்சியூட்டும் பங்குனி உத்திரப் பெருவிழாவைக் காணாமல் போய்விடுவாயோ என்று பொருள்படுகின்றது. அடியார்கள் சிறப்பித்துக் கூறியுள்ள பெருவிழா பங்குனி உத்திரப் பெருவிழா.
            தமிழ்நாட்டில் காஞ்சி ஏகம்பநாதர் கோயிலிலும் திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் இவ்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. வாழ்விற்குத் தேவையான பல உண்மைகளை மறைமுகமாக உணர்ந்திடும் நம் சமயவிழாக்களை அறிந்து உண்மைச் சைவர்களாக வாழ்வோமாக!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

திருமுறைச் செம்மல், சித்தாந்த இரத்தினம், திருமுறைத் தொண்டர்
திரு . தர்மலிங்கம் எம்.

(தலைவர், மலேசிய சைவ நற்பணிக் கழகம்)