ஞாயிறு, 5 ஜூலை, 2020

38. தணியாய் போற்றி/Thaniyaai Poodri

38.          தணியாய் போற்றி

பரம்பொருளான பெருமான் கற்பனைக்கு அப்பாற்பட்ட பெரியோன். கோடான கோடி அண்டங்களைத் தன்னுள்ளே அடக்கும் அளப்பு அரியவன். அணுவுக்குள் அணுவாய் இருந்து அவற்றை இயக்கியும் அண்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவற்றையெல்லாம் கடந்தும் இருக்கின்ற சிவம் என்னும் பேராற்றல் மிக்கப் பரம்பொருள் மறக்கருணை புரிகின்ற வெய்யோனாகவும் அறக்கருணை புரிகின்ற தண்ணியனாகவும் இருக்கின்றான் என்று ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர்  குறிப்பிடுகின்றார்.
                சிவம் என்னும் பரம்பொருளை அடைவதே நிலைபெற்ற வாழ்வு என்பதனை மறந்து, நீண்டநாள் வாழ வேண்டும் என்ற அறியாமை உணர்வால் மயக்குற்றுத் திருமாலைத் தலைமையாகக் கொண்டு, பிறவிக்கு உவமையாகச் சொல்லப்படும் திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களும் அசுரர்களும் அமிழ்தம் பெற முயன்றனர். அப்போது அவர்கள் செய்த பிழையானது பெரும் நஞ்சாகத் திரிந்து திருப்பாற்கடலில் வெளிப்பட்டது. அந்நஞ்சின் வெப்பம் தாங்காது திருமால் உள்ளிட்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி, ஓடிப்போய் பெருமானிடம் முறையிட்டுத் தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
பிழைபொறுக்கும் தண்ணியனாகிய சிவன் அவர்களின் பிழையைப் பொறுத்து அக்கொடிய நஞ்சினை உண்டு தம் கண்டத்து அடக்கினான். பெருமானின் திருவடியை அடைவதே நிலைத்தப் பேரின்பம் என்பதனை உணராத பிழையினை உடைய தேவர்களை உடனே மன்னித்து அவர்கள் அமிழ்தம் பெற அருள்புரிந்தான் பரம்பொருள் என்று பரம்பொருளின் தண்மையைச் சுட்டுவர். பெருமான் பிழைபொறுக்கும் பெரியோனாகத் தந்நிகரில்லாத் தண்மையனாக மேன்மையுற்று அடியார்களுக்கு அருளியுள்ளமையைப் பல அடியார்கள் வாழ்வில் காணலாம். பெருமான் அடியவர்கள் செய்யும் பிழைகளையெல்லாம் பொறுத்து அருள்பவன் எனும் துணிவினால் தான் பிழை செய்ததாகச் சுந்தரர் பெருமான் குறிப்பிடுகின்றார். திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை விட்டுப் பிரியமாட்டேன் என்று இறைவன் திருமுன்பு பொய் உறுதி செய்கின்றார். பின்பு திருவாரூர் பெருமான் மீது கொண்ட அன்பால் அவ்வுறுதியை மீறுகிறார். அதனால் பெருமான் சுந்தரரின் கண்ணொளியைப் பறிக்கின்றார். பெருமான் பிழைபொறுக்கும் பெரியோன் என்பதனாலே தாம் கொடுத்த உறுதியை மீறும் பிழையைச் செய்ததாகத் திருவெண்பாக்கம் திருக்கோயிலில் நைந்து பாடி நலம் பெறுகின்றார்.
திருவாரூரில் பெருமானின் தண்மைய மேன்மையைத் தம்பிரான் தோழர் என்ற சிறப்பினைப் பெற்ற சுந்தரர் பெருமான், “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப், போகமும் திருவும் புணர்ப்பானைப், பின்னை என்பிழையைப் பொறுப்பானைப் பிழையெலாந் தவிரப் பணிப்பானை, ஸஸ. எளிவந்த பிரானைஎன்று குறிப்பிடுவார். அதாவது எனக்குப் பொன்னையும், மெய்யுணர்வையும் வழங்குபவனும், அவை வாயிலாக உலக இன்பத்தையும், வீடுபேறு என்கின்ற பேரின்பத்தை அளிப்பவனுமாகச் சிவபெருமான் உள்ளான். அப்பெருமான் அளித்த உலக இன்பங்களை நுகரும் பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுக்கும் தண்மையனாகவும் அவன் உள்ளான். அதன் பின் பிழைகளே செய்யாமல் அவன்தான் அருள் செய்கின்றான். உயிர்களுக்கு மிக எளிதாக, எளிமையாக வந்து அருளும் பெருமான் அவன் என்றும் சுந்தரர் அடிகள் குறிப்பிடுவதனையே வாதவூர் அடிகள் எனப்படும் மணிவாசகரும் குறிப்பிடுகின்றார்.
பெருமானின் தண்மையையும் அருளும் மேன்மையையும் உணர்ந்த பட்டினத்து அடிகள், “கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனேஎன்று நெக்கு உருகிப் பாடுவார்.
                பரம்பொருளான பெருமானின் தண்மையன் ஆகியப் பெருந்தன்மையை வெறுப்பனவே செய்யும் என்சிறுமையை நின், பெருமையினால் பொறுப்பவனே ஸ.. நின் திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமேஎன்று திருவாசக அடைக்கலப் பத்தில் மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவார். அதாவது தீமையான பிழைகளையே செய்கின்ற என் இழிவை, உன் பிழைபொறுக்கும் பெருங்குணத்தால் பொறுப்பவனே, உன் திருவருள் என்னும் வாளால் என் பிறவியை வேரோடு அறுப்பவனே! அடியேன் உன் அடைக்கலம் என்று குறிப்பிடுகின்றார்.
                செந்தமிழ்ச் சிவநெறியில் திளைத்து அதனைத் தங்கள் வாழ்வு முறைமையாகக் கொண்டு, அதன் வழியே பரம்பொருளான பெருமானின் திருவடியை அடைந்த அடியார் பெருமக்கள் பெருமானின் மேன்மையை, பிழைபொறுக்கும் பெருந்தன்மையை தண்மையன் ஆகியத் தன்மையை நன்கு அறிந்திருக்கின்றனர். திருநெறியாகிய சைவநெறியினை அறியாத போலிச் சைவர்கள் பலர் இன்று சிவபெருமானை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் துன்பம் ஏற்படும் என்று கூறுவது அறியாமையின் வெளிப்பாடு என்பதனைத் தெளிதல் வேண்டும்.
சிவபெருமானை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் சண்டையும் குழப்பமும் ஏற்பட்டுக் குடும்பம் ஆட்டம் கண்டு விடும் என்பது அறியாமையிலும் அறியாமை. கருணையே வடிவான பிழைபொறுக்கும் பெரியோனை, தந்நிகர் இல்லாத் தண்மையனைப்  பழிவாங்கும் கடவுள், கடுஞ் சினமுடைய கடவுள், உயிரைப் பறிப்பதை மட்டும் தொழிலாகக் கொண்ட கடவுள், சுடுகாட்டில் கொடூரமாக ஆடிக்கொண்டிருக்கும் கடவுள், கொலை வெறி பிடித்தக் கடவுள் என்று தமிழ்ச் சைவர்களிடையே அவர்கள் முழுமுதலாகக் கொண்டு வழிபட வேண்டிய கடவுளைப் பற்றி அச்ச உணர்வை ஏற்படுத்தி உண்மையை உணரவிடாது சமய ஆசிரியர்கள் என்ற போர்வையில் உலவுகின்றவர்களை நம்புவதும், அவர்களைப் பின்பற்றுவதும், அவர்களைக் கொண்டு நம் இல்ல நிகழ்ச்சிகளிலும் திருக்கோயில்களிலும் வழிபாடுகளைச் செய்வதும் சைவத்துக்கு நாம் இழைக்கும் பெரும் தீங்காகும் என்பதனைத் தெளிதல் வேண்டும். மணிவாசகரின் திருவாசகம் பற்றி வாழ்வோம்.  
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக