திங்கள், 26 செப்டம்பர், 2016

19. ஆராத இன்பம் அருளும் மலை/ Araatha Inbam Arulum Malai Potri

19.  ஆராத இன்பம் அருளும் மலை

            பெருமான் வேண்டுதல் வேண்டாமை இலான் என்று உலகப் பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். இதனால் பெருமானுக்கு விருப்பு வெறுப்பு என்பது கிடையாது என்பது தெளிவாகின்றது. விருப்பு வெறுப்பு இல்லாமையால் பெருமான் குறைவிலாத நிறைவு உடையவனாக இருக்கின்றான். இதனைக்குறைவிலா நிறைவே கோதிலா அமுதேஎன்று மணிவாசகர் குறிப்பிடுவார். நம்மைப் போன்ற உயிர்கள் குறை உடையவை என்பதனால் விருப்பு வெறுப்புக்கு உட்படுபவையாக இருக்கின்றன. இதனால் எதிலும் மன நிறைவு கொள்ளாதவையாக இருக்கின்றன. நாளும் இன்பத்தைத் தேடி அலைகின்ற நம் போன்ற உயிர்கள் பெறும் உலக இன்பங்களும் நிறைவு உடையவைகளாக இருப்பதில்லை! இறைவனிடத்தில் உள்ள இன்பம் தெவிட்டாத இன்பமாகவும் நுகர நுகர முடிவில்லாத இன்பமாகவும் உள்ளது என்று மணிவாசகர் குறிப்பிடுவார். இதனையே, “ஆராத இன்பம் அருளும் மலை போற்றிஎன்று சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மலை என்பது பெருமானின் தன்நிகர் அற்ற, தனித்துவம் மிக்க, உயர்ந்த இயல்பினைக் குறிப்பதாக உள்ளது.

            தன்னிடத்தே உள்ள தெவிட்டாத, நிறைவு அளிக்கும் இன்பத்தினை உயிர்களுக்கு வழங்குவதற்காகவே உயிர்களுக்கு உடல், உலகம், அகக் கருவிகள், புறக்கருவிகள், நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமான் படைத்து அளித்திருக்கின்றான் என்று தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்தச் சைவம் குறிப்பிடுகின்றது. இதற்காகவே உயிர்களுக்குப் பல்வேறு பிறவிகளைக் கொடுத்து, அதன்வழி ஒவ்வொரு பிறவியிலும் பட்டறிவினை உயிர்களுக்கு வளரச் செய்து, நாளும் நாளும் நம்மைப் பேணிக் காத்து, வளர்த்துத் தன் திருவருளைப் பொழிந்து, இறுதியில் உயிர்கள் தன் திருவடியை அடையும் போது தன்னிடத்தே உள்ள ஆராத இன்பத்தினைப் பெருமான் நல்குகின்றான் என்று சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் குறிப்பிடுகின்றன. இதனையே, “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத்திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்என்று மணிவாசகர் திருவெம்பாவையில் குறிப்பிடுவார். இதனையே மணிவாசகரைத் தம் உயிராய் வைத்துப் போற்றிய வள்ளல் இராமலிங்க அடிகள், “தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம், அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்என்று போற்றி மகிழ்வார்.

            உலகில் பல்வேறு பிறவிகளில் பிறந்து வாழ்கின்ற உயிர்கள் நுகர்கின்ற இன்பம், நிறைவு அற்றதாகவும் நிலை அற்றதாகவும் உள்ளது. குறிப்பாக மாந்தப் பிறவியில் வாழும் நாம் நம் திறன் அனைத்தையும் திரட்டிப் பல்வேறு இன்பங்களை நுகர நாளும் முனைகின்றோம். அவ்வின்பங்களைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றோம். எனினும் உலக இன்பங்கள் ஒன்றைப் பெற்று விட்டால் வேறு ஒன்றைப் பெற வேண்டும் என்று மனம் தாவிக் கொண்டே இருக்கின்றது. மனநிறைவு கொள்வதாய் இல்லை! தவிர இன்பம் என்பது அகவைக்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப, காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றது. இன்பப் பொருளும் தேவைக்கு ஏற்பவும் காலத்திற்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் மாறிக்கொண்டே இருகின்றது.

            சிறார்களாய் இருந்த போது மிகவும் விரும்பிய மிட்டாய், பொம்மைகள், நடைவண்டி இப்போது இளைஞராய் வளர்ந்து விட்ட பிறகு இன்பம் அளிப்பதாய் இல்லை. இளைஞராய் இருக்கும்போது மிகவும் விரும்புகின்ற அழகு, நண்பர்கள், அரட்டை, விளையாட்டுகள், கேளிக்கை, ஊர் சுற்றுதல் போன்றவை திருமணம் செய்து வாழ்கின்ற போது இன்பமாய்த் தோன்றவில்லை. மன நிறைவையும் அளிக்கவில்லை. மனைவி, மக்கள், வீடு, பட்டம், பதவி, பணம் என்பவையும் வயது போன பிறகு நிறைவான இன்பமாகத் தோன்றுவதில்லை. அப்படி இன்பமாகத் தோன்றுபவையும் எல்லா காலத்தும் உடன் வருவதில்லை, நிலைத்தும் நிற்பதில்லை! இதனையே, “காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கேஎன்றார் பட்டினத்து அடிகள்.

            உயிர்களுக்கு எல்லா காலக் கட்டத்திலும் வாழ்க்கை முழுமை பெறாத ஓர் உணர்வு இருந்து கொண்டே இருக்கின்றது. பெற்றிருக்கின்ற உலக இன்பம் சற்று கூடிப்போனால் தெவிட்டவும் செய்கின்றது. அதன் மேல் வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகின்றது. எதிலும் நிறைவு கொள்ள இயலாத உயிர்கள், விருப்பையும் வெறுப்பையும் நிறைவு செய்து கொள்ள நாளும் நாளும் போராடிச் சோர்ந்து போகின்றன. உயிர்களின் இத்தகைய சிக்கலைப் போக்குகின்றவன் பெருமான் ஒருவனே என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமானைத் தவிர வேறு எவராலும் முடிவில்லாத இன்பத்தினை உயிர்களுக்கு அளிக்க இயலாது என்பதனைத் தெளிவுறுத்துகின்றார் மணிவாசகர்.

            குறைவிலாத நிறைவாக இருக்கின்ற பெருமான் ஒருவனே உயிர்களுக்கு நிறைவான இன்பத்தினை அளிக்க வல்லவன் என்கின்றார். தீமை சற்றும் இல்லாத, நன்மையே இயல்பாய் உள்ள பெருமான் ஒருவனே உயிர்களுக்கு முடிவில்லாத இன்பத்தினை அளிக்க இயலும் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். குறையில்லாத பெருமானுக்கு எல்லாம் நிறைவாக இருப்பதனால் பெருமான் ஒருவனே முடிவில்லாத, நிலைத்தப் பேரின்பம் உடையவனாக இருக்கின்றான். அத்தகைய நிலைத்தப் பேரின்பத்தை அடைவதனையே உயிர்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்று மணிவாசகர் நினைவுறுத்துகின்றார். இதனையே, “தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே, நினத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும், அனைத்துஎலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும், குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீஎன்று திருக்கோத்தும்பித் திருப்பதிகத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார். சிறு சிறு இன்பங்களையும் வெற்றிகளையும் கொடுக்கின்ற பொருள்களையும் மாந்தர்களையும் உயிரினங்களையும் துதி பாடி வழிபடாது, உண்மையான, நிலைத்தப் பேரின்பத்தினை அளிக்கும் பெருமானையே வழிபட வேண்டும் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

       இதன்வழி உயிர்களாகிய நாம் நிலையில்லாத, தெவிட்டி விடக்கூடிய, இன்னும் பிறவியை வருவிக்கக் கூடிய உலகியல் சிற்றின்பங்களிலேயே கவனத்தைச் செலுத்தி, அதிலேயே பெரிதும் உழன்று வாழ்நாளைக் குறிக்கோள் இன்றிக் கழித்தல் கூடாது என்று நினைவுறுத்தப் படுகின்றது. ஆராத இன்பமாய், முடிவில்லாத இன்பமாய், தெவிட்டாத இன்பமாய்ப் பெருமானிடத்தில் உள்ள பேரின்பத்தினை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்று நினைவுறுத்தப் படுகின்றது. பெருமானிடத்தில் உள்ள பேரின்பப் பெருவாழ்வினைப் பெற பெருமான் அளித்துள்ள பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவியாகிய மாந்தப் பிறவியை முழுமையாக, முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றது.


    பெருமானிடத்தே உள்ள ஆராத இன்பத்தினை நாம் பெறுவதற்கு ஏதுவாய்ப் பெருமான், வாழ்த்த வாயும், நினைக்க இளமையான நெஞ்சும் தாழ்த்தத் தலையும் அளித்திருக்கின்றான் என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். அத்தகைய இறைவனை நன்றியால் நல்ல மலர்களைக் கொண்டு அன்பால் பாடி வழிபடாமல் விட்டு விடுவோமானால் கிடைத்த மாந்தப் பிறவியை வெறுமனே வீணடித்ததோடு மட்டும் அல்லாமல் மேலும் துன்பத்தைத் தேடிக் கொண்டவர்களாகி விடுவோம் என்று நாவுக்கரசு அடிகள் மேலும் குறிப்பிடுவார். பெருமான் அளித்த நிலையற்ற இன்பங்களைக் கொண்டு நிலையான இன்பத்தினைப் பெறுவதற்கு நாளும் பாடுபடுவோம், அப்பெருமான் நல்கும் பேரின்பத்திற்கு ஆளாவோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக