வியாழன், 22 ஜூன், 2017

4. திருக்கோயில் வழிபாட்டில் திருக்கோபுர வணக்கம்/Thirukkovil Valipaattil Thirukobura Vanakkam

4. திருக்கோயில் வழிபாட்டில் திருக்கோபுர வணக்கம்

      திருக்கோவில் வழிபாட்டில் திருக்கோபுர வணக்கம் முதன்மை பெறுகின்றது. இல்லத்தில் இறை வழிபாட்டை முடித்துக் கொண்டு, தமிழர் பண்பாட்டு உடைகளை அணிந்து கொண்டு, குடும்பத்தோடு திருக்கோயில்களுக்குச் செல்லும் நம்மைத் தொலைவிலேயே உயரே நின்று வரவேற்பது திருக்கோபுரம் ஆகும். நான்கு திசைகளிலும் இருந்து வருகின்றவர்களை வரவேற்க நான்கு நுழைவாயில்களாகத் திருக்கோவில்களில் நான்கு திசைகளிலும் திருக்கோபுரம் அமைக்கும் வழக்கம் சீர்மிகு தமிழ்ச் சைவர்களிடையே இருந்துள்ளது. இத்தகைய நாற்றிசைக்குமான திருக்கோபுரங்கள் அமைக்கப் பெற்றுள்ள திருக்கோயில்களாகத் தில்லைச் சிற்றம்பலம், திருக்காளத்தி, மதுரை திருஆலவாய், திருவாரூர் புற்றிடங்கொண்டார் போன்ற திருக்கோயிகளைக் குறிப்பிடலாம்.

      தில்லைச் சிற்றம்பலத் திருக்கோவிலுக்குத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களும் நான்கு திசைத் திருக்கோபுரங்களின் வழி நுழந்ததாகத் திருமுறைகளில் செய்தி உண்டு. ஊரிலேயே மிக உயர்ந்த கட்டடமாகத் திருக்கோவில் திருக்கோபுரத்தைத் தமிழர்கள் அமைத்தார்கள். எல்லா உலகங்களையும் அண்டங்களையும் உயிர்களையும் அரசு ஆளும் பெருமானின் இல்லமாகிய கோ+இல் தங்கள் இருப்பிடங்களைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் இத்திருக்கோபுரங்கள் கண்களுக்குத் தென்பட வேண்டும் என்று எண்ணினார்கள். இதனால் இறைச் சிந்தனையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

      திருக்கோவிலுக்குச் செல்கின்ற நாம், இத்திருக்கோவில் திருக்கோபுரத்தைக் கண்டவுடனேயே வணங்க வேண்டும் என்றார்கள். மதுரைக்கு அடியார்களுடன் திருப்பல்லக்கில் அமர்ந்து வந்த திருஞானசம்பந்தர், திருவாலவாய் அண்ணல் திருக்கோவில் திருக்கோபுரத்தைக் கண்டவுடனேயே திருப்பல்லக்கில் இருந்து இறங்கி, மதுரை ஊர் எல்லையிலேயே தரையில் வீழ்ந்து வணங்கினார் என்று தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.

சிவன் திருக்கோவில் திருக்கோபுரமானது திருக்கோவில் கருவறையில் இருக்கின்ற சிவக்கொழுந்தின்(சிவலிங்கத்தின்) வெளித்தோற்றம் என்று சமய நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனைத் தூல இலிங்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். திருக்கோவில் திருக்கோபுரத்தைச் சிவக்கொழுந்தாகவே எண்ணி வணங்க வேண்டும் என்பது இதனால் விளங்கும். திருக்கோவில் அமைப்பு முறையில் ஒருவர் தரையில் கிடப்பது போன்று திருக்கோயில் அமைக்கப் பெறும் என்று சிவஆகமங்களில் குறிக்கப்பெறுகின்றது. ஒருவரின் கால்கள் முதல் உச்சந்தலை வரைக்குமான அமைப்பு முறையில் அமைக்கப் பெறும் திருக்கோவிலில் திருக்கோபுரம் அவரின் பாதத்தை உணர்த்தி நிற்பதாய்க் குறிக்கப்பெறும். இதற்கு ஏற்றாற்போல் திருக்கோபுரத்தின் உச்சியில் ஐந்து விரல்களைப் போல் ஐந்து கலசங்கள் இடம்பெற்றிருக்கும். இவை திருக்கோவிலில் விளங்கும் மந்திர ஆற்றல்களை உயரே நின்று ஊருக்கு பரப்பும் கருவிகளாக விளங்குபவை ஆகும்.

திருக்கோவில் திருக்கோபுரங்கள் பொதுவாக மூன்று அடுக்குகள், ஐந்து அடுக்குகள், ஏழு அடுக்குகள் என்று காணப்பெறும். இவற்றை நிலைகள் என்று குறிப்பிடுவர். மூன்று நிலை திருக்கோபுரம் பெருமான் மூவுலகங்களையும் ஆளும் நான்முகன், திருமால், சிவன் எனும் மும்மூர்த்தியாக விளங்குகின்றான் என்பதனை உணர்த்துவதாகக் குறிப்பிடுவர். ஐந்து நிலைத் திருக்கோபுரம் பெருமான் நான்முகன், திருமால், சிவன், மாஈசன், சதாசிவன் என்னும் ஐந்து வடிவில் விளங்குகின்றான் என்பதனைக் குறிக்கும் என்பர். ஏழு நிலைத் திருக்கோபுரம் என்பது ஏழு வகைப் பிறப்பினுக்கு உட்படும் உயிர்களுக்கு அவனே தலைவன் என்பதனைக் குறிக்கும் என்பர்.

திருக்கோயில் திருக்கோபுரங்களில் பல்வேறு சிற்பங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப் பெற்றிருக்கும். இவை சீர்மிகு செந்தமிழரின் சிற்பக்கலை நுண்ணறிவினுக்குச் சான்றாய் விளங்குபவை. இச்சிற்பங்கள் வெவ்வேறு கோணங்களில் நம் அறிவினை விளக்கும் களஞ்சியங்களாக அமைக்கப்பெறும். சில திருக்கோவில்களில் கருவறையில் உள்ள மூல மூர்த்தியின் பல்வேறு வடிவங்களையும் அடியார்கள் வாழ்வில் அக்கடவுள் நிகழ்த்திய அருள் நிகழ்ச்சிகளை உணர்த்துவதாயும் அமைக்கப் பெற்றிருக்கும். சில வேளைகளில் புராணங்களில் இடம்பெற்றுள்ள செய்திகளை வெளிப்படுத்துவனவாக அமைக்கப்பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக முருகன் ஒளவையுடன் திருவிளையாடல் புரிந்தது, சிவபெருமான் அடியவராக வந்து சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து ஆண்டது, வானவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தது, அம்மை மயில் வடிவில் பூசனை இயற்றியது போன்றவை ஆகும்.

இத்தகையத் திருக்கோவில் திருக்கோபுரங்களைக் காண்கையில் நம் உள்ளம் அப்பெருமானின் திருப்பெருமையை உணர்ந்து, அப்பெருமானின் திருவடியில் குவிவதனாலேயே திருக்கோயில் திருக்கோபுர வணக்கம் முதன்மை பெறுகின்றது.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக