திங்கள், 12 ஜூன், 2017

35. விடைப்பாகா போற்றி / Vidaippaagaa Potri

35. விடைப்பாகா போற்றி

     பரம்பொருள் ஒன்று. அப்பரம்பொருளைச் சிவம் என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர் குறிபிடுவர். சிவம் எனும் பரம்பொருளின் ஆற்றலைத் திருவருள் ஆற்றல் அல்லது சத்தி என்பர். சிவம் எனும் பரம்பொருள் தனது சிறப்பு நிலையில் தனது திருவருளை வெளிப்படுத்தாது ஒன்றேயாய் நிற்கும். சிவம் எனும் பரம்பொருள் பொது நிலையில் தனது திருவருளை வெளிப்படுத்திச் சிவமும் சத்தியுமாய் நிற்கும். சிவமும் சத்தியும் தீயும் அதன் சூடும் போல ஒன்றை விட்டு ஒன்று பிரியாதது என்றும் சிவமும் சத்தியும் பிரிக்க முடியாதது என்றும் குறிப்பதற்காகச் சிவத்தின் ஒரு கூறாகச் சத்தியைக் குறிப்பிட்டனர். சிவத்தை ஆணாகவும் சிவத்தின் சத்தியைப் பெண்ணாகவும் உருவகித்தனர். இது ஒட்டியே சிவம் தனது பொது நிலையில் அம்மை அப்பராகவும் மாதொரு பாகனாகவும் ஆகினான். இதனையே விடைப்பாகா எனும் திருவாசகத்தின் சிவபுராண வரியில்  பாகா என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

     விடைப்பாகா எனும் சிவபுராண வரியில் விடை எனும் சொல்லும் உண்டு. விடை என்பது எருது அல்லது காளை என்பதனைக் குறிக்கும். தமிழ் மந்திரங்களானத் திருமுறைகளில் பெருமான் விடை ஏறுபவனாகக் குறிக்கப்படுகின்றது. பெருமான் விடையை ஊர்தியாகக் கொள்கின்றான் என்று குறிக்கப்படுகின்றது. தோடுடைய செவியன் விடைஏறிஎன்று தமிழ் ஞானசம்பந்தர் குறிப்பிடுவார். சைவ மெய்கண்ட நூல்களிலும் திருமுறைகளிலும் பெருமான் கொள்கின்ற விடை அறத்தை உணர்த்தி நிற்பதாகக் குறிப்பிடுகின்றது. பெருமான் உயிர்களுக்கு அருளும்போது அறத்தை அடிப்படையாகக் கொண்டே அருளுகின்றான் என்பதனைப் பெருமான் ஊர்தியாகக் கொள்ளும் விடை உணர்த்துகின்றது என்பர். இதனை ஒட்டியே திருக்கோயில்களில் விடையை, நெறிப்படுத்தும் விடையாகவும் (அதிகார நந்தி) பெருமானிடத்து இட்டுச் செல்லும் பலிபீடத்து முன் அமைந்த விடையாகவும்(வாகன நந்தி) அமைத்தனர்.

                பெருமான் உயிர்களுக்குத் தன்னிடத்தே உள்ள பேரின்பத்தினை அருளுவதற்குத் தம்முடைய அருட்செயலான ஐந்தொழிலைச் செய்கின்றான். ஐந்தொழில்களில் படைத்தல், காத்தல், துடைத்தல் என்ற மூன்று தொழில்களை உடம்பின் மீதும் மறைத்தல் அருளல் என்பவற்றை உயிரின் மீதும் செய்கின்றான்.   இறைவன் ஆற்றுகின்ற ஐந்தொழிலாவது உயிர்களைப் பிணித்துள்ள மலத்திற்கு ஏற்றவாறு வாழும் உலகங்களில் வாழ்வதற்குத் தேவையானவற்றைத் தோற்றுவித்தும் நிற்பித்தும் நீக்கியும் மறைப்பித்தும் திருவருளை அளிப்பித்தலாகும். உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள அறியாமையைப் போக்கிக் கொள்வதற்கு வாழுங்காலத்தில் பல பிறவிகளில் செயல்கள் செய்து முதிர்ச்சி பெற வேண்டியுள்ளது. அதற்கு உடல், (தனு) கருவி கரணங்கள் (கரணம்), உலகங்கள் (புவனம்) நுகர்ச்சிப் பொருள்கள் (போகங்கள்) தேவைப்படுகின்றன. இவற்றில் அழுந்தி உழன்றே உயிர்கள் பல பிறவிகளில் தங்களுடைய அறியாமையை இறைவன் அருளால் போக்கிக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவ்வகையில் ஒவ்வொரு உயிரும் பெறவேண்டியவற்றை சீர் தூக்கி, நடுநிலைமையோடு, விருப்பு வெறுப்பு இன்றிப் பெருமான் அருளுதலையே அறத்தை அடிப்படையாகக் கொள்ளுதல் என்றனர். இதனையே, “விடைப்பாகாஎனும் வரியில் மணிவாசகர் சுருங்கக் குறிப்பிடுகின்றார்.   

       மாந்தர், தேவர், கணங்கள், அசுரர், விலங்குகள், பேய், பறவை, பாம்பு, மீன், பூச்சி, புல் பூடு, மரம் என்று எல்லா உயிர் வகைகளின் உடம்பையும் இறைவன் படைத்து, எந்த உயிர் எவ்வகைப் பிறப்பிற்கான உடலுக்குள் செல்ல வேண்டும் என்பதனை அறத்தின் அடிப்படையிலேயே உறுதி செய்து, இறைவனால் படைக்கப்படாத உயிர்களை அவற்றின் உட்புகுத்துகின்றான் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே விடைப்பாகா என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

   உயிர்களுக்குத் தேவையான பல்வேறு உலகங்களைத் தோற்றுவித்து அவற்றின் வினைக்கீடாக அவற்றை அங்கே வாழ வைக்கின்றான். அண்டங்கள், கோள்கள், விண்மீன்கள், கதி, மதி என்று பல்வேறு உலகங்களைத் தோற்றுவித்து அவற்றில் உயிர்களை அரு உடலோடும், உரு உடலோடும் வாழ விடுகின்றான். அந்தந்த உலகங்களில் வாழ்வதற்குத் தேவையான நிலம், நீர், தீ, வளி, வெளி என்று ஐம்பூதங்களைத் தோற்றுவித்து அருளுகின்றான். உயிர்கள் அவற்றின் அறியாமை மறைப்புக்கு ஏற்றவாறு இறையறிவு பெறும் வகையில் உடலில் உட்கருவிகளைப் பொருத்துகின்றான். அவை மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் மனவெழுச்சியாகும். இவை பொறுத்தப்படுவதனாலேயே உயிர்கள் இறைவன் திருவருளைத் துணைக்கொண்டு அவனை நாடி தங்களைப் பிணித்துள்ள அறியாமையைப் போக்கிக் கொள்கின்றன.

         நம் போன்ற மக்களுக்குத் தேவையான நுகர்ச்சிப் பொருள்களையும் பிற உயிர் வகைகளுக்குத் தேவையான நுகர்ச்சிப் பொருள்களையும் அறத்தின் வழி நின்று அவனின் பேர் அருள் இயல்பால் இறைவனே உணர்ந்து தானே அளிக்கின்றான். இதனைத்தான் திருவள்ளுவ நாயனாரும், “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிதுஎன்றார். அதாவது இறைவன் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது என்பதாம். மக்களாகிய நமக்கு இவ்வுலகில் நுகர்வதற்கென மனை, வீடு, மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள், பொன், பொருள், உடை, உணவு என்று இறைவனே நமக்கு நுகர்ச்சிப் பொருள்களைக் கூட்டுவிக்கின்றான். அதனை நுகரச் செய்விக்கின்றான். இதனைத்தான் மாணிக்கத் தமிழில் பாடிய மாணிக்கவாசக அடிகள், “வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீஎன்று குறிப்பிடுகிறார். அழகு தமிழில் பாடிய சுந்தரர் பெருமானோ, “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைஎன்று குறிப்பிடுகின்றார்.

         உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம் என்ற அறியாமையைச் செய்யக் கூடிய பொருளின் வலிமையைக் குறைக்கவும் அறியாமையைப் போக்கவும் இறைவன் அயனாய் நின்று படைத்த உடல், உலகம், கருவிகள், நுகர்ச்சிப் பொருள்கள் இவை யாவற்றையும் நிறுத்திக் காப்பதே காத்தல் தொழில்.

       உயிர்கள் பெற வேண்டிய உணர்வினை, அறிவினை, படிப்பினையைப் பெறும் வரையிலும் ஒரு பொருள் நம்மிடம் இருக்கும்படியாக அதனைத் தற்காத்து நிலைநிறுத்துவதே பெருமான் இயற்றும் காத்தல் தொழிலாகும். இத்தொழிலைச் செய்யுங்கால் பெருமானைத் அரி என்கிறோம். பெருமானே நம் உடல் நலத்தைக் காக்கின்றான். பெருமானே நாம் சரியான உணவு முறைமைகளைக் கொள்ளவும் நோய் நொடியின்றி நலமுடன் நிற்கவும் தோன்றாத் துணையாய் நின்று காக்கின்றான். பெருமானே வேண்டுங்காலம் வரையிலும் நம் கண் பார்வை, கைகால் விளக்கம், இதயத் துடிப்பு, குருதியோட்டம் உடற்கூறுகள் என்று அனைத்தையும் ஒவ்வொரு பிறவியிலும் வேண்டுங்காலம் வரையும் காத்து நிற்கின்றான். இவற்றையும் அறத்தினையும் அருளையும் துணையாகக் கொண்டே செய்கின்றான் என்பதனையே, “விடைப்பாகாஎன்று மணிவாசகர் குறிப்பிட்டார்.

                பெருமானே நம் மன நலனையும் நம் சித்த நலனையும் அறிவு நலனையும் நம் மனவெழுச்சியின் வேக நலனையும் காக்கின்றான். பெருமானே வெள்ளம், புயல், நிலநடுக்கம், எரிமலை, பேராழியின் சீற்றம் என்பனவற்றில் எல்லாம் இருந்து நம்மைக் காக்கின்றான். பெருமானே பெருநிலத்தினைப் பேராழி கொள்ளாமலும் பேராழியும் நீர் நிலைகளும் வற்றி வரண்டு விடாமலும் நம் பொருட்டுக் காக்கின்றான். பெருமானே நம்மைச் சுற்றியுள்ள கோள்களையும் மரஞ்செடிக் கொடிகளையும், காய் கனிகளையும், புள்ளினங்களையும் விலங்குகளையும், மீன்களையும், பூச்சிகளையும் அவ்வவ்வகை உயிரினங்களின் வாழ்க்கைத் தேவைக்கு  ஏற்ப காக்கின்றான்.

                பெருமானே நம் மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள், பணம், பொன், பொருள், வீடு என்று நம் நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் நம் இறையறிவு முதிர்ச்சிப் பெறும் வரையிலும் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து பேரூழி எனும் பேர் ஒடுக்கம் ஏற்படும் வரையிலும் அனைத்தையும் காக்கின்றான். இதனாலேயே அருளாளர் பெருமக்கள் இறைவன் செய்கின்ற பெருங் கருணைக்குக் கைமாறு செய்ய இயலாது என்பதனை அறிந்து, உணர்ந்து கண்ணீர் மல்கி நின்றார்கள். பெருமானை நன்றியினால் அன்போடு வழிபட்டார்கள். விருப்பு வெறுப்பு இன்றி அறத்தோடு நின்று தாயினும் இனியனாக அருள் செய்யும் விடைப்பாகனின் திருவடியை நாளும் வணங்குவோம் நலம் பெறுவோம்!

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக