வியாழன், 22 ஜூன், 2017

3. திருக்கோவிலுக்குச் செல்லும் முறை/ Thirukkovilukku Sellum Murai

3.  திருக்கோவிலுக்குச் செல்லும் முறை

                “புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை, வாய்மையால் காணப் படும்என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். ஒருவர் புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும். அதுபோல, அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும் என்பார். திருக்கோவில் வழிபாட்டிற்குச் செல்லும் முறையில் புறத் தூய்மையும் அகத்தூய்மையும் இன்றியமையாததாகக் குறிக்கப் பெறுகின்றன. இதனாலேயே திருக்கோவிலுக்குச் செல்லும் முன்பு வீட்டில் குளித்து உடலைத் தூய்மை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. குளித்த பின்பு தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. குளிப்பது உடலில் உள்ள புற அழுக்கினைப் போக்கி, உடல் அயர்ச்சியை நீக்கிப் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துகின்றது. குளிர்ந்த நீரில் நீராடுதல் மன அமைதியை ஏற்படுத்துகின்றது. தூய்மையான ஆடைகள் புதுத்தெம்பையும் புதுப்பொலிவையும் ஏற்படுத்துகின்றது. இது புற அளவில் நம்மைத் தயார் செய்து கொள்வதற்கு வேண்டுவதாகிறது.

                திருக்கோவிலுக்குச் செல்லும்போது தூமையான ஆடைகளை அணிந்து செல்வதோடு மட்டும் அல்லாமல் முறையான ஆடைகளை அணிவதும் முதன்மையானது. உடம்போடு ஒட்டிக் கொண்டுள்ள இறுக்கமான ஆடைகளும் அதிமெல்லிய ஆடைகளும் அரைகுறை ஆடைகளும் திருக்கோவிலுக்குச் செல்ல ஏற்றவை அல்ல! இத்தகைய ஆடைகள் திருக்கோவில் வழிபாட்டிற்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துபவை. இறுக்கமான ஆடைகள், நம் வழிபாட்டு முறைகளான, கைகளைத் தலைக்கு மேல் தூக்கி வணங்குதல், மண்டியிட்டுத் தொழுதல், தரையில் விழுந்து வணங்குதல் போன்றவற்றிற்கு இடங்கொடுக்காது.

                நம் திருக்கோவில் வழிபாட்டு முறையில் ஆண்கள் எட்டு உறுப்புக்கள் தரையில் படும்படியாக நெடுஞ்சான்கிடையாகத் தரையில் விழுந்து வழிபடுகின்ற முறையும் பெண்கள் ஐந்து உறுப்புக்கள் தரையில் படும்படியாக மண்டியிட்டு வழிபடும் முறையும் இருப்பதனால் இத்தைகைய பொருத்தம் இல்லாத உடைகள் சிக்கலை ஏற்படுத்தும். தவிர இறுக்கமான உடைகள் மன அழுத்தத்தையும் அவ்வுடைகளில் கட்டுண்டுக் கிடக்கின்ற உணர்வையும் ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும் இறுக்கமான ஆடைகள் எந்நேரத்திலும் கிழிந்து விடும் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு அல்லாமல் மற்றவரின் பார்வைப் பொருளாக நேரிடும் என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும். இது முழு மனதுடன் இறை சிந்தனையில் ஈடுபடுவதற்குத் தடையாய் அமைந்துவிடும்.

                அரைகுறையாக ஆடைகள், அத்தகைய ஆடைகளை அணிந்திருப்பவரின் கவனத்தை ஆடைகளின்பாலே செலுத்தி நிற்கும். அரைகுறையான ஆடைகளைச் சரி செய்வதிலும் அவை அளவுக்கு மீறிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதிலுமே கவனம் நிற்க, இறை சிந்தனையில் நிலைத்து நிற்பது என்பது கடினம் என்றாகிவிடும். அரைகுறை ஆடைகள், திருக்கோயில் வழிபாட்டிற்காக வருகின்றவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி அவர்களின் சிந்தனையைச் சிதற வைத்துவிடும். இது நம்மைத் திருக்கோயில் குற்றத்திற்கு ஆளாக்கி விடும். மேலும் திருக்கோயில் வழிபாட்டிற்கு வந்திருக்கின்றவர்களின் சினத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாக நேரிடும்.

                திருக்கோவிலுக்குச் செல்லுகையில் அளவிற்கு அதிகமான அணிகலன்களை அணிந்து செல்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அளவிற்கு அதிகமான அணிகலன்களை அணிந்து செல்வது வழிபாட்டிற்கு வருகின்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் திருடர்களினால் ஏற்படும் அல்லலுக்கு ஆளாகி, விலையுயர்ந்த உடைமைப் பொருள்களை இழக்க நேரிடும். கைகளை உயர்த்தினால் ஒலி எழுப்பும் கண்ணாடி வளையல்கள், நடந்தால் அதிக ஒலியை எழுப்பும் கொலுசுகள் போன்ற அணிகலன்கள் திருக்கோவிலில் மனத்தை ஒருநிலைப்படுத்த முற்படுகின்றவர்களின் முயற்சியைச் சிதைக்கும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.திருக்கோவில் இறைவனை எளிமையோடும் பணிவோடும் வழிபடுகின்ற இடம் என்ற உணர்வு ஏற்படுமாயின் அழகு குறித்த சிந்தனையும் ஆடம்பரம் குறித்த சிந்தனையும் பிறரின் கவனத்தை ஈர்க்க குறித்த சிந்தனையும் தானாக விட்டு ஒழியும்.

                திருக்கோவில்களுக்குச் செல்லும்போது கூடுமான அளவு நம் தமிழர் பண்பாட்டு உடைகளை அணிந்து செல்வதே சாலச் சிறந்தது. புடவை, பாவாடை தாவணி, வேட்டிச் சட்டை என்பவற்றை அணிந்து செல்வதனால் பார்ப்பதற்கு அழகாகவும் பண்பாட்டுடனும் விளங்கும். புடவை அணிகின்றவர்கள் உடலின் வளைவு நெளிவுகளை வெளிக்காட்டாதவாறு அணிதல் நலம். பஞ்சாபியர் உடைகளை அணிகின்றவர்களும் அதிமெல்லிய ஆடைகளை அணியாமலும் உடலோடு ஒட்டிக் கொண்டுள்ள ஆடைகளை அணிந்து திருக்கோவில் செல்லாமல் இருப்பது நலம். இதுவும் பிறரின் இறை சிந்தனையைக் கெடுத்த குற்றத்திற்கு ஆளாகாமல் நம்மைக் காக்கும். நம் முன்னோர்கள் அவர்களின் அறிவுக் கூர்மையால் ஏற்படுத்திக் கொடுத்துள்ள நம் பண்பாட்டுக் கூறுகளில் ஆடையும் ஒன்று. அதனைச் சீர்கெடாமல், தொலைத்து விடாமல், வரும் தலைமுறையினருக்குக் கருத்தாய்க் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதனை மறந்து விடக் கூடாது.

                இரவில் உறங்குவதற்கு அணியும் ஆடைகள் (மெக்சி, நைட்டி), அரைக்காற் சட்டைகள், உள் பனியன்கள், கைலிகள், டி சட்டைகள் போன்றவற்றைத் தவிர்த்து விடல் நலம். முறையற்ற ஆடைகளுடனும் பண்பற்றத் தோற்றத்துடனும் திருக்கோவில்களுக்குச் செல்லும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் திருத்த வேண்டும். அதற்குப் பெற்றோர்களும் பெரியவர்களும் முதலில் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். வளர்ந்த பெண்கள் தலை மயிரை சீராக வாறி முடிந்து, பூச்சூடி, நெற்றியில் பொட்டு இட்டு, திருநீறு போன்ற சமயச் சின்னங்களை அணிந்து சிறு பிள்ளைகளுக்கு எட்டுத்துக்காட்டாக அமைய வேண்டும். புடவை, வேட்டி அணியும் அரிய கலையைப் பெரியவர்கள் பின்பற்றத் தவறியதால் இன்று பெரும்பாலான இளைஞர்களும் இளம் பெண்களும் வேட்டி, புடவை எனும் நம் பாரம்பரிய உடையை அணியத் தெரியாத இழிவு ஏற்பட்டுள்ளது.

                முறையான ஆடைகளையும் சமயச் சின்னங்களையும் அணிந்த பின்பு திருக்கோவிலுக்குச் செல்லுமுன் வீட்டில் வழிபாடு முதலில் இயற்ற வேண்டும் எனும் முறை உள்ளது. இல்லத்தில் வழிபாடு இயற்றிய பின் திருக்கோவிலுக்குச் செல்லும்போது வழிபாட்டிற்கு உரிய பூசனைப் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் மலர், வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எண்ணெய் போன்றவற்றை எடுத்துச் செல்லல் வேண்டும். குறைந்தது மலர்களையாவது எடுத்துச் செல்ல வேண்டும். இவை அல்லாது, திருமஞ்சனத்திற்கு உரிய பால், தேன், இளநீர், கருப்பஞ்சாறு, நெய் போன்றவற்றையும் கொண்டு செல்லலாம். இவ்வாறு திருக்கோவிலுக்குச் செல்லும் போது இறைவனின் திருப்பெயரையோ, திருவைந்து எழுத்து மந்திரத்தையோ, திருமுறைகளையோ சொல்லிக் கொண்டு இறை எண்ணமாகவே திருக்கோவிலைச் சென்று அடைய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.

                இயன்ற அளவு திருக்கோவிலுக்குச் செல்லும் முறையினைப் பின்பற்றி நம் சமயத்தின் சிறப்பினையும் உயர்வினையும் நிலைநிறுத்துவோம். நம் சமயத்தினையும் பண்பாட்டினையும் காப்பாற்றுகின்ற கடப்பாடு அனைவருக்கும் உண்டு என்பதனை உணர்வோம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக